-சு.ரவி

 

இன்னும் மாயை இருக்கிறது- அது

என்னில் என்னை மறைக்கிறது!

மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!

எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது.                           ( இன்னும்)

 

புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு

பொறிபறந்தாற்போல் புரிகிறது;

நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்

நிச்சய உண்மை தெரிகிறது- மனம்

சிலபோதேனோ இனிப்பை அவாவும்

சிறுமதலை போல் அலைகிறது-உடல்

பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்

பரிதவித்தேங்கிக் குலைகிறது!                            ( இன்னும்)

 

‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது

மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்

இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என

இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்

தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்

தயங்கும், தடுக்கும், தவறி விழும்!

கனவும் நனவும் கடந்த பின்னாலும்

கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்!  ( இன்னும்)

 

விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை

ஓதிய பண்டிதன் ஆனாலும்

எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை

எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்

திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை

திரும்பவும் இடிந்து பொடியாகும்

நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது

நோற்ற தவங்களை விலைபேசும்            ( இன்னும்)

 

 

ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை

ஓடாதிருக்க விலக்கில்லை

ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ

ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை

ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்

ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை

ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!

ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை    ( இன்னும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *