வெ.திவாகர்

வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண்மணி தான் புகுந்த இல்லத்துக்காக உழைக்கிறாள் என்று சொல்லவே கூடாது. மனைவி வேலைக்குச் செல்வதால் குடும்பம் பொருளாதார சிக்கல் இல்லாமல் சுகமான வசதிகளைப் பெருக்க உதவுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாமோ என்னவோ.. ஏனெனில் மனைவி என்பவள் சதா உழைத்துக்கொண்டேதான் இருக்கிறாள். கணவனின் சகல பொறுப்புகளையும் தானே சுமந்து குடும்பத்தின் மேன்மைக்குக் காரணமாகிறாள்.

சமீப காலங்களில்தான் இந்தக் குடும்பப் பெண்களின் வேலைப் பளுவைப் பலர் உணர்ந்து வருகிறார்களோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. வேலைக்குச் செல்லாமல் குடும்ப பாரத்தைச் சுமந்து அதைப் பொறுப்பாகக் கொண்டு போகும் பெண்களை ஹவுஸ் வைஃப் அல்லது ஹோம் மேக்கர் என்ற நயமான பதத்தால் பலர் விளிக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.. காரணம் பொறுப்பான முறையில் குடும்ப பாரம் சுமப்பது என்பது நிச்சயமாகக் கடினமானது. மாறிவிட்ட இந்த மாயமான நவீன வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பித்து அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஏற்படுத்தித் தருவதில் அந்தப் பெண்மணியின் பங்கு மிக மிக அதிகம்.

குடும்பப் பொறுப்பாளர் என்ற பதவியை அடைந்த பின்னர் அந்தப் பெண்ணின் அன்றாட அலுவல்களை நாம் சற்றே அலசினால்தான் தெரியும் அவர்கள் படும் பாடு. சமீபத்தில் திரு. அப்பாதுரை அவர்களின் மூன்றாம் சுழி வலைப் பூவில் நமக்காக, அந்த குடும்பப் பொறுப்பாளரின் பணிகளை சற்றுப் பட்டியலிட்டிருக்கிறார்.

இவர்கள்

அதிகாலையில் எழுந்துவிடுகிறார்கள்.

அவர்களுக்குப் பற்பசை

குளியல் துணிமணி புத்தகப்பை

ஷூ சாப்பாடு கையில் டிபன்..

அவருக்கு காலையுதவி

காப்பி

அலுவல் புறப்பாட்டுச் சேவை

சாப்பாடு கையில் டிபன்..

எல்லோருக்கும் வாசலில் நின்று

சிரித்துச் சிரித்து

முகமனும் விடையும் தருகிறார்கள்.

ஓடியாடி நின்று நடந்து

எல்லோரும் உட்கார்ந்த பின்னரே உட்காருகிறார்கள்.

வீட்டுவேலை வெளிவேலை என்று சுழல்கிறார்கள்

வழியில் காய்கறி

பால்பழம் மளிகை

சட்டைப் பித்தான்

கிழிந்த உடைக்கு ஊசி நூல்

வாங்கி வருகிறார்கள்

மொழி பாட்டு நடனம் ட்யூஷன்

கோவில் மருந்துக்கடை

என்று தினம் போகிறார்கள்.

ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும்

எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்

பெருமூச்சு விடுகிறார்கள்.

வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்

தவறான வாக்கெனினும்.

அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து

‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று

புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.

எல்லோரும் திருப்தியானதும்

எல்லாம் அடங்கியதும்

விளக்கணைத்த நள்ளிரவில்

அமைதி கலைக்காத ஓசையுடன்

தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.

தாரியா தொமித்ரொவிச் எழுதிய ‘sad women’ எனும்  கவிதையைப் பதிவாக்கியுள்ள திரு. அப்பாதுரை அந்தக் கடைசி வரிகளில் அவர்களின் உழைப்பு பற்றி கண்ணீர் வரிகளில் கவிதையாய் விவரித்திருக்கிறார். பிறருக்காக, (அவர்கள் தம் கணவர், ,குழந்தைகள் என்றே இருந்தாலும்) உழைக்கும் குடும்பப் பொறுப்பாளர்களுக்கு எமது வந்தனங்கள். உங்கள் உழைப்பு மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்குத் தணியாத ஆசை. கவிதையாய் அழகாகச் சொன்ன திரு. அப்பாதுரை அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு எம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.

தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்! – கவிநயா

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. இந்த வார வல்லமையாளர் திரு.அப்பாதுரை அவர்களுக்கும், தண்ணீர் சிக்கனத்தின் இன்றியமையாத் தன்மையை அழகாக எடுத்துரைத்த திருமதி.கவிநயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  2. அன்பிற்கு மிகவும் நன்றி, திவாகர் ஜி!
    அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்!
    பழமைபேசி, மற்றும் திரு.சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றிகள்!

  3. இவ்வார வல்லமையாளர் திரு. அப்பாதுரை மற்றும் கடைசி பத்தி சிறப்பு கவிநயாவிற்கும் வாழ்த்துக்கள். 
    அன்புடன் 
    ….. தேமொழி 

  4. வல்லமையாளர் திரு. அப்பாதுரை அவர்களுக்கு என் வாழ்த்துகள்!!! 

    வாழ்த்துகள், கவிநயா!!!

    //தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!//
    ‘I improve, India improves!’ என்று நான் ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.எழுதியது நினைவுக்கு வருகிறது. Thanks for the article! 

  5. சற்றும் எதிர்பாராத அங்கீகாரம். மிகவும் நன்றி.
    பாராட்டு தொமித்ரொவிச்சுக்குச் சேரவேண்டியது.

    (ஆ! நீங்களும் பின்னூட்டக் கணக்கு புதிர் தொடங்கிட்டீங்களா? – ஆமா, எழுத்தோட எதைக் கூட்டினா எண் வரும் – புதுக் கணக்கா இருக்குதே?)

  6. நன்றி தேமொழி!

    //‘I improve, India improves!’ என்று நான் ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.//

    நன்றாகச் சொன்னீர்கள். நன்றி மாதவன் இளங்கோ!

  7. அப்பாதுரை  கவிதையில், சிறுகதையில் என்று எங்களையெல்லாம் கட்டிப் போட்டவர். மகிழ்வாக உள்ளது 

    திரு.அப்பாதுரை, திரு.கவிநயா இருவருக்கும் வாழ்த்துகள்!

Leave a Reply to பழமைபேசி

Your email address will not be published. Required fields are marked *