அதிகரிக்கும் தற்கொலைகள்

வாழ்வை நேசிக்கும் வழியைத் தேடி…..

எஸ் வி வேணுகோபாலன்

கடந்த ஓராண்டில் மட்டும் நமது நாட்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 445 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை எண்ணிக்கையில் பெண்களைப் போல் இரண்டு மடங்கு ஆண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், ஒரு மணி நேரத்திற்கு 15 – அதாவது நாள் ஒன்றிற்கு 371 தற்கொலைகள் நிகழ்கின்றன என்று சொல்கிறது. இதில் கூடுதல் வருத்தம் என்னவெனில், இந்தப் புள்ளிவிவரத்திலும் தமிழகம் (16,927) முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரம் (16,112), மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் (இரண்டிலும் 14,328) ஆகியவை அடுத்த இடங்களில் வருபவை. நகரங்களை வைத்துப் பார்க்கையிலும் நமது சென்னை மாநகரம் தான் முதலாவதாக இருக்கிறது. சென்னையில் 2,183 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்த நகரம் பெங்களூரு (1989) என்பதும் நோக்கத் தகுந்தது.

எண்ணிக்கையை விட வேறு சில கோணங்களில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் சமூக அக்கறை கொண்டுள்ளோர் கவனத்தைக் கோருகிறது. இந்த எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு தற்கொலை, இல்லத்தரசிகள் செய்துகொண்டது. ஆண்களைப் பொறுத்தவரையில் தற்கொலைக்கு சமூக-பொருளாதார பிரச்சனைகள் அதிக காரணம் என்றால், தனிப்பட்ட துயரங்களும், உளவியல் பிரச்சனைகளும் பெண்களின் தற்கொலைக்கு அதிக காரணிகளாக இருந்திருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டோரில் 70.3 சதவீதம் பேர் திருமணமானவர்கள்.

2002ம் ஆண்டுக்குப் பிறகு தற்கொலை எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் தான் இருந்து வருகிறது. 2011ல் 1,35,585 பேர் என்கிறது ஆவணக் காப்பகத்தின் விவரம். தொடர்ந்து அதிகமான தற்கொலைகள் நடக்கும் சில மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது.

ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் விவரங்களைக் கடந்தும் சில அம்சங்களை நோக்க வேண்டியிருக்கிறது. அண்மைக் காலமாக குடும்ப பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகள் அல்லது கடன் தொல்லைகள் காரணமாக தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கும் மனிதர்கள் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளையும் இல்லாது செய்துவிடுவதை அதிர்ச்சியோடு பார்க்கிறோம். தாள மாட்டாத நெருக்கடி காரணமாக குடும்ப மொத்தமும் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையோ, குழந்தை குட்டிகள், மனைவி ஆகியோர் கணக்கையும் தீர்த்துவிட்டுத் தாங்கள் பிறகு தங்களது வாழ்வை முடித்துக் கொள்ளும் சில மனிதர்களது விவரங்களையோ நாளேடுகள் விரிவாக வெளியிடுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், காதல் தோல்வி – தேர்வில் தோல்வி ஆகிய காரணங்கள் கூடுதலாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு அப்பால் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள், தவறான சேர்க்கை உள்ளிட்ட காரணங்களும் தற்கொலைக்கு இட்டுச் சென்றுள்ளன. தனிமை, கவனிப்பாரற்ற உளவியல் சுமை, பொருளாதார பாதுகாப்பின்மை போன்றவை காரணமாக தமது வாழ்வை முடித்தக் கொண்ட முதியோர் எண்ணிக்கையும் இந்தப் புள்ளிவிவரத்தில் கவலை அளிக்கிறது. நீண்ட கால நோயின் தவிப்பு தாளாமல் நிகழ்ந்த தற்கொலை குறித்த விவரங்களும் தரப்பட்டுள்ளன.

தற்கொலை என்பது அவரவர் பலவீனம், தனிப்பட்ட விஷயம், இவற்றை எல்லாம் எதற்கு விவாதித்துக் கொண்டு..என்று நாம் கடந்து போய்விடமுடியாது. தனிப்பட்ட விஷயம் போன்று மேலாகத் தோற்றம் அளிப்பவை பலவும் சமூக ரீதியில் உள்ளான காரணங்களைக் கொண்டிருப்பவை.

பொருளாதார சுமைகள், கடன்கள், வறுமை, பசி, பட்டினி போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கையில், இவற்றைத் தனிப்பட்ட விஷயமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? உடைந்து போகும் திருமண உறவுகள், குலைந்து போகும் பரஸ்பர நம்பிக்கை, தொடர்பற்று வாழும் சுவாரசியமற்ற வாழ்க்கை ஆகியவற்றை எப்படி எங்கோ ஒன்றிரண்டு நடப்பதாகப் புரிந்து கொள்ள முடியும் ?

வளர்ச்சி, வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் அளந்து விட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வளர்ச்சி சீரானது அல்ல என்பதையும், அந்தச் சித்திரத்திற்குள் அடங்காதவர்களது எண்ணிக்கைதான் அதிகம் என்பதையும் நாம் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. பெருகிவரும் ஏற்றத் தாழ்வுகள், ஊதியத்திடையே நிலவும் வேறுபாடு பெரும் பள்ளமாக ஆகிக் கொண்டிருப்பது, நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நடக்கும் அன்றாட வாழ்க்கை இதன் ஒரு மோசமான பிரதிபலிப்பு தற்கொலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை கவனிக்கத் தவறிவிடக் கூடாது.

எதிர்ப்புச் சக்தி அற்று வளரும் அடுத்தடுத்த தலைமுறையினர் பெரும்பாலும் தோல்வி ருசி அறியாது வாழப் பழக்கப் பட்டிருக்கின்றனர். சின்ன சறுக்கல், சிறு ஏமாற்றம் எதையும் அவர்களால் பொறுத்திட முடிவதில்லை. ஒரு கதவு மூடினால், நூறு கதவுகளைத் திறக்க முயற்சி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுள் வேர் விடுவதில்லை. உரையாடலுக்கு வழியற்ற எந்திரத்தனமான சூழல் பள்ளிப் பிள்ளைகளைக் கூட காவு வாங்கிவிடுகிறது.

மிக எளிதில் முறிந்து விழும் உள்ளங்கள் பரஸ்பரம் தங்களது சுமையை இறக்கி வைத்துக் கொள்ளக் கூட நட்பு வட்டம் உருவாக்கிக்க் கொள்வதில்லை. தங்களது ஒற்றை வழி சிந்தனை முட்டுச் சந்தில் போய் மோதிக் கொள்ளும்போது அவர்களால் நின்று நிதானித்து சிந்திக்கக் கூட முடியாத அளவு ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கிறது அவர்களது எண்ண ஓட்டங்கள். யாரையோ பழி வாங்கவோ, யாருக்கோ பாடம் கற்றுக் கொடுக்கவோ, யாரிடமிருந்தோ நிரந்தரமாக தப்பித்துச் செல்லவோ அவர்கள் தற்கொலையின் குகைக் கதவை சிரமம் எடுத்து நெம்பித் திறக்கின்றனர். மீட்சியற்ற சோர்வு மன நிலையின் வேதனை முனை அது.

எப்படியும் தாம் மட்டும் வெற்றி பெற்று விட முடியும் என்ற போலிக் கனவுகளை நவீன தாராளமயம் உற்பத்தி செய்து தருகிறது. குறுக்கு வழி தடங்களில் வண்டியை இயக்கப் பயிற்றுவிக்கிறது. போட்டி மனப்பான்மை, வெறியூட்டும் பந்தய இலக்குகள், மாய மான் துரத்தும் வேட்கை இவற்றின் போதையில் ஆழ்ந்துவிடும் மனிதர்கள் அந்த நம்பிக்கை நூலேணியின் இழைகள் இற்று அறுந்துவிடும்போது பள்ளத்தாக்கில் போய் விழ நேருகிறது. தற்கொலை உணர்வு அவர்களது மேசையில் எப்போதும் அருந்துவதற்குத் தயார் நிலையில் மூடியைத் திறந்து வைத்திருக்கும் பானமாகக் காத்திருக்கிறது.

தவறான உறவுகளோடு குற்ற உணர்வும் சேர்ந்தே வளர்கிறது. அதன் நீட்சி தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளில் சிக்கிவிடும்போது கொலைகளும், தற்கொலைகளுமே அதிலிருந்து வெளியேறும் ஒரே வழி என்று ஆகிவிடும் அபாயம் நேர்கிறது.

மனித மனங்களை ஆட்டிப் படைப்பது தற்கால சமூக பொருளாதார பண்பாட்டுச் சிக்கல்கள் என்பதை ஒரு வரியில் இப்படி சொல்லி முடித்துவிட முடியாது. பெருத்த விவாதங்களுக்கான கருப் பொருள் இந்த ஒற்றை வரியில் அடங்கியிருக்கிறது. தற்கொலை புள்ளிவிவரங்கள் மிகப் பெரும் படிப்பினையாக நமது வாசலில் வந்து நிற்கின்றன. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளின் கதி, காசு உள்ளவர்க்கே இவை என்ற உயரத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், நெறியோடு வாழ விரும்புவோரும் சரி, நெறியற்ற முறையில் எப்படியாவது இலட்சியக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்று துடிப்போரும் சரி தடுக்கி வீழ்ந்து விடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வது சிரம் சாத்தியமானது. கொள்கை மாற்றங்கள் நிகழாமல், வாழ்க்கையின் போக்கில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடமுடியாது.

தளர்ந்து விடாத உள்ளங்களை ஒரு சொற்பொழிவு நிகழ்த்தி ஏற்படுத்தி விட முடியாது. ஆனால் ஊடகங்கள், அரசு நிறுவனங்கள், ஜனநாயக அமைப்புகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்கொலை எண்ணிக்கையைக் குறைக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை சிந்திக்க முடியும். தற்கொலை உணர்வுகளுக்கு எதிரான போராட்டத்தை பல நிலைகளில் நின்று நடத்த வேண்டியிருக்கிறது.

புன்னகை தவழும் முகங்களை சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுள்ள ஒரு சமூகம் செயற்கையாகக் கூட உருவாக்க முடியாது. வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கை, கூட்டான வாழ்க்கை முறைமையில் ஈடுபாடு, பரஸ்பர கருத்து பகிர்வு, பரந்து நேசிக்கும் தோழமை உணர்வு இவற்றைப் பண்பாட்டுத் தளத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் முற்போக்காளர்களது முன்னுரிமைப் பட்டியலில் இருக்க வேண்டியிருக்கிறது. இசை தவழும் இதயங்கள், இசைவான சமூக சூழல், இனிமை பொங்கும் நேய உணர்வுகள் ஆகியவை பெருகும் உலகில் மரணங்கள் வலியின்றியும், இயல்பாகவும் நேரும்.

****************

நன்றி : தீக்கதிர்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *