மேகலா இராமமூர்த்தி

 

இயந்திரங்களைச் சார்ந்தே இன்றைய வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில் அலுவலக நேரம் தவிர்த்த மீதி நேரத்தையெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதிலேயும், அலைபேசியில் நண்பர்களோடு அரட்டை அடிப்பதிலேயுமே நாம் பெரும்பாலும் கழித்துவிடுகின்றோம். மடிக் கணினியில் மடியின்றி (சோம்பலின்றி) உலவிக் கொண்டிருப்பதில் இன்பம் காணத் தொடங்கிவிட்டபிறகு நாம் தூங்கும் நேரம் கூடக் கணிசமாகக் குறைந்துவிட்டது என்று ஆய்வாளர்கள் (கவலையோடு) கருத்துத் தெரிவிக்கின்றனர். வாழ்க்கைச் சூழல் இவ்வாறு மாறிவிட்டதனால் அறிவுச் செல்வங்களாம் நூல்களை வாங்கிப் படிப்பதற்கு நமக்கு நேரமே இருப்பதில்லை; அப்படியும் புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலோ நம்மில் பலர் விரும்பி வாங்குவது விரைவில் பணக்காரர் ஆவது எப்படி? வாழ்க்கையில் உடனடியாக வெற்றிகளைக் குவிப்பது எப்படி? என்பது போன்று வாழ்வின் வளங்களையும், நலங்களையும் உடனே அடைவது குறித்து எழுதப்படும் புத்தகங்களையே என்பதே கசப்பான உண்மை. பண்பட்ட நல்வாழ்விற்கு வழிகாட்டும் நம் பண்டைய இலக்கியங்கள் வாசிப்பாரற்றுத் தூசுபடிந்திருப்பதாக பதிப்பகத்தாரே தெரிவிக்கின்றனர்.

செல்வந்தர் ஆவதையும், மற்றவரை வீழ்த்தி வாழ்வில் வெற்றி பெறுவதையுமே அல்லும் பகலும் சிந்தப்பதை விடுத்துத் தனிமனித ஒழுக்கம், தன்னலமற்ற தன்மை, எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சல், நன்னெறிகளையும், ஆன்றோர் காட்டிய அற வழிகளையும் பின்பற்றி நடப்பது போன்றவை குறித்தும் நாம் சிந்திக்கத் தலைப்படுவோமேயானால் நேரிய வழியில் நடைபயின்று வாழ்வில் வெல்லலாம்.

‘தமிழர்களின் பொற்காலமாய்’த் திகழ்ந்த சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டிகளாய் இன்றும் விளங்கி நம் பண்பாட்டையும், நாகரிகத்தையும் செம்மைப்படுத்தப் பேருதவி புரிகின்றன என்றால் அது மிகையில்லை.

சிறந்த சிந்தனைச் சிற்பிகளான சங்கப் புலவர்களும், சமண முனிவர்களும், தெய்வப்புலவர் திருவள்ளுவரும், ஏனைய சான்றோரும் காலத்தை வென்றுநிற்கும் மிக உயரிய சிந்தனைகளைத் தமிழ்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்போது நாளிதழ்களிலும், வெகுஜனப் பத்திரிகைகளிலும் அதிகமாகப்  பேசப்படுகின்ற சுயமுன்னேற்றச் சிந்தனைகளும், மனவளக் கலைகளும் ஏற்கனவே நம் தமிழ்ச் சான்றோர்களால் விரிவாகச் சொல்லப்பட்டவையே.

சிறந்த வாழ்வியல் சிந்தனைகளை, சித்தாந்தங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இன்றும் திகழ்வது அறத்தையும், மறத்தையும் தன்னிரு கண்களாகப் போற்றும் ’புறநானூறு’ஆகும். அதில் நிறைந்திருக்கும் அறச் சிந்தனைகளோ கடலளவு; அவற்றிலிருந்து ஓர் கையளவே பகிர்ந்துகொள்ள முனைகின்றது இக்கட்டுரை.

வாழ்வைச் சிறப்பாக நடத்திச் செல்லவும், சமூகத்தில் மதிப்போடும், நல்ல பதவியோடும் வாழ்வதற்கும் அடிப்படைத் தேவையாக விளங்குவது கல்வியறிவே. அந்தக் கல்வியைக் கற்க வேண்டிய முறையையும், அழியாத கல்விச் செல்வத்தைப் பெற்றவன் சமூகத்தில் பெறுகின்ற சிறப்பையும் அற்புதமாக விளக்கியுள்ளது ஓர் புறப் பாடல். இப்பாடல் ’ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ என்னும் மன்னனால் இயற்றப்பட்டதாகும். சங்க நூல்களில் புலவர்களேயல்லாது புரவலர்களாகிய அரசர் பெருமக்களும் சிறந்த பல பாடல்களை இயற்றியுள்ளனர். அதற்குத் தக்கதோர் சான்றாக விளங்குகின்றது இப்பாடல்.

உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக வென்னாது அவருள்

அறிவுடை யோனாறு  அரசுஞ் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பா லொருவனும் அவன்கட் படுமே. ”  (புறம்: 183)

 

’ஆசிரியர்க்கு ஓர் துன்பம் ஏற்படும்போது ஓடிச் சென்று உதவியும்; அவருக்குத் தட்சிணையாகப் (அக்கால குருகுலக் கல்விமுறையில் குருதட்சிணை உண்டு; அதைத்தருவது மாணவர்தம் கடமை.) பொருள் கொடுத்தும்; எக்காரணம் கொண்டும் ஆசிரியர்பால் கோபம் கொள்ளாது கல்விச் செல்வத்தை மாணவர்கள் பெறவேண்டும். (ஒழுங்காகப் படி என்று சொன்னதற்காக ஓர் ஆசிரியையே சென்னையில் ஓர் மாணவன் சமீபத்தில் கொடூரமாகக் கொன்றது இங்கே நினைவுகூரத்தக்கது. நற்பண்புகளைப் பள்ளிகளும், பெற்றோரும் போதிக்கத் தவறுவதால் வரும் தீய விளைவே இது.)

பெற்ற தாயே ஆனாலும் தன் பிள்ளைகளில் கல்வியில் சிறந்தவன் எவனோ அவனையே அவளும் போற்றுவாள். அதுமட்டுமா? அரசனேயானாலும் வயதில் மூத்தவனைவிட அறிவில் மூத்தவனின் சொற்களுக்கே அவனும் மதிப்பளிப்பான். சாதி வேறுபாட்டையும் களையும் ஆற்றல் பெற்றது கல்வி. நன்கு கற்றவன் குலத்தில் தாழ்ந்தவனாயிருப்பினும், அவனிடம் கல்வி பெறுவதற்காக மேற்குலத்தவனும் அவனைப் பணிவான்என்று இப்பாடல் கல்வியின் சிறப்பை அழகாய்ப் பட்டியலிடுகின்றது. இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் இன்றைக்கும்நூற்றுக்கு நூறுபொருந்துவதாகவேயிருப்பது எண்ணி மகிழத்தக்கது. ’கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்று அவ்வை மூதாட்டியும் கல்வியின் அவசியத்தைக் கூறியுள்ளது இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

சங்கப் புலவர்களில் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றவர் நக்கீரர் என்னும் புலவர். (‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற ‘திருவிளையாடல்’ புகழ் நக்கீரரே தான்.) இவர் ‘கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றார்.  இவருடைய தந்தையார் ‘கணக்காயனாரும்’ சங்கப் பாடல்கள் சிலவற்றை இயற்றியுள்ளார். மகனாரும் தந்தையை விஞ்சும் புலமை பெற்றவராய்த் திகழ்ந்து கால வெள்ளத்தில் அழியாத அமரத்துவம் பெற்ற பாடல்களால் தமிழன்னைக்கு அணி சேர்த்துள்ளார். அனைவரும் அறிய வேண்டிய அவருடைய அருமையான பாடலொன்று சமத்துவச் சிந்தனைகளைச் சிறப்பாய் வெளிப்படுத்தியுள்ளது.

”உலகையே ஒரு குடை நிழலில் ஆளுகின்ற மன்னனாயினும் சரி; காட்டில் விலங்குகளின் பின்னே திரிகின்ற நகரத்து நாகரிகமறியாத மனிதனாயினும் சரி, உண்பது, உடுப்பது முதலியவை இருவருக்கும் பொதுவானவையே. மனித வாழ்வின் பிற தேவைகளும் அப்படியே. ஆகவே, மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை, அது தேவையுமில்லை என்கிறார் இவர்; அத்தோடு நின்றாரில்லை. செல்வம் பெற்றவர்களே! அதனை வறியவர்களுக்கு ஈந்து மகிழுங்கள்! எல்லாச் செல்வத்தையும் நாமே துய்ப்போம் என்று எண்ணாதீர்கள்! அதனால் பலவற்றை (அறம், பொருள், இன்பம்) இழக்க நேரிடும்” என்று ஈதலின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே தல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.” (புறம்: 189)  என்பது அப்பாடல்.

 

இதைத்தான் நம் வள்ளுவப் பேராசானும்,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள்: 322) என்று கூறுகிறார்.

‘Great minds think alike’ என்பது இதைத்தானோ?

மற்றொரு கருத்தாழம் மிக்க புறநானூற்றுப் பாடல் நம் சிந்தையைக் கொள்ளை கொள்வதாய் அமைந்துள்ளது. அதனையும் சற்று கவனிப்போம் வாருங்கள்.

”மெத்தப் படித்த சான்றோர் பெருமக்களே! மீன்முள் போன்ற நரைமுடியையும் சற்றும் பயனில்லாத முதுமையையும் உடையோரே! யமன் மழுவென்னும் கூரிய ஆயுதத்தோடு உங்களைப் பிடித்துக்கொண்டு போக வரும் வேளையில் நீங்கள் (செய்த தீய செயல்களை எண்ணி) வருந்திப் பயனில்லை. எனவே உங்களால் யாருக்கும் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமலாவது இருக்க முயலுங்கள்! (இது ஏதோ சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பன்ச்’ டயலாக் போல இருக்கிறது இல்லையா?!) அதுதான் எல்லாரும் விரும்புவது; அதுமட்டுமல்ல…உங்களை நல்ல கதிக்குக் கொண்டு செல்லும் வழியும் அதுதான்.” என்கின்றது பொருளாழம் மிக்க அப்பாடல்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.” (புறம்: 195)

இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் ‘நரிவெரூஉத்தலையார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ’நரி அஞ்சும் தலையை உடையவர்’ என்பது இதன் பொருள். (அப்படியென்றால் ஒருவேளை…அவருடைய தலை நாய்த்தலையாக இருக்குமோ?! என்ற ஐயமும், வியப்பும் நமக்கு ஏற்படுகிறது.) பெயர் சற்று நகைச்சுவையாக இருந்தபோதிலும் அவர் தன் பாடலில் சான்றோர்களுக்குச் சொல்லும் அறிவுரை சாமானியர்க்கும் பொருந்துவதாகவே உள்ளது. (Though he is considered as dog-headed, his principles are dogmatic!!)

புலவரின் அறிவுக் கூர்மைக்கும், பொதுநலச் சிந்தனைக்கும் சான்று பகர்கின்றது மேற்கண்ட பாடல்.

அடுத்து நம்மை ஈர்ப்பது ‘பக்குடுக்கை நன்கணியார்’ என்னும் புலவர் பெருந்தகையின் பாடலொன்று. மனித வாழ்க்கை என்னும் நாடகத்தில் நீக்க இயலாத இரு பாத்திரங்கள் (characters) இன்பமும், துன்பமுமே அல்லவா! அதைத் தவிர்ப்பதோ, தள்ளிவைப்பதோ மனிதர்களால் ஆகக்கூடியதா?

நடைமுறை வாழ்வில் நாம் காணுகின்ற துன்பத்தையும், இன்பத்தையும் அளிக்கக் கூடிய இரு நிகழ்வுகளை நம் கண்முன் ஒருங்கே அரங்கேற்றி, அச்சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளவேண்டிய வழிமுறைகளைக் கற்பிக்கும் ஓர் ’வாழ்க்கைக் கல்வி’ ஆசிரியராகவே இப்புலவர் நமக்குக் காட்சியளிக்கின்றார். நெஞ்சை நெகிழவைக்கும் அப்பாடல் நமக்கு ஓர் சிறந்த வாழ்வியல் பாடமே!

ஓரி னெய்தல் கறங்க வோரில்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்

பைத லுண்கண் பனிவார் புறைப்பப்

படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்

இன்னா தம்மவிவ் வுலகம்

இனிய காண்கித னியல்புணர்ந் தோரே.” (புறம்: 194)

”இவ்வுலகம் இனிமையானதில்லை… ஒரு வீட்டில் சாப்பறை (சாவு மேளம்) ஒலிக்க, இன்னொரு வீட்டிலோ திருமண மேளம் முழங்குகின்றது. ஒருத்தி பூக்களை அணிந்துகொண்டு கணவனோடு மகிழ்ச்சியாக இருக்கின்றாள்; இன்னொருத்தி கணவனை இழந்து கண்ணீர் சொரிய நிற்கின்றாள். இத்தகைய முரண்பாடுகளோடு இவ்வுலகைப் படைத்த நான்முகன் (பிரம்மா) பண்பில்லாதவன் என அவனைச் சாடும் புலவர், மானிடர்களே! உலகத்தின் தன்மை இப்படிப்பட்டதுதான்; இதற்காக நீங்கள் வருந்துவதில் பயனில்லை. எதையும் தாங்கும் இதயத்தோடு வீட்டின்பத்தை (சொர்க்கம்) அடைவதற்குகந்த நல்லனவற்றைச் செய்து வாழுங்கள்” என்று அறிவுறுத்துகின்றார் பக்குடுக்கை நன்கணியார். பின்பற்றத்தக்க சிறந்த அறிவுரை தானே? துன்பம் கண்டு துவளாத மனநிலை மட்டும் நமக்கு வாய்க்குமேயானால் வாழ்வில் வெற்றி பெறுவது ஒன்றும் சிரமமான செயலில்லை அல்லவா!

 இதே பொருள்பட அமைந்த குறள் ஒன்றை நாம் இங்கே சிந்திப்பது பொருத்தமுடையதாக இருக்கும்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்.” (குறள்: 379)

நல்லனவற்றைக் கண்டு மகிழ்கின்ற மனிதன், துன்பம் வரும் வேளையில் துவள்வது ஏன்? என வினவும் தெய்வப்புலவர் ’இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகவே பாவியுங்கள்’ என்றே வலியுறுத்துகின்றார் இக்குறளில்.

ஒரே பாடலில் உலகப் புகழ் பெற்ற புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனும், ஆற்றிலே செல்லுகின்ற தெப்பம் போன்றது இம்மானுட வாழ்வு என்பதை அறிஞர்களின் நூல்கள் வாயிலாய் உணர்ந்துகொண்டோம். ஆகவே பெரியோரை (அறிவிலோ, செல்வத்திலோ!) வியந்து போற்றவும் வேண்டாம்; சிறியோரை இகழவும் வேண்டாம் என அறிவுறுத்துகின்றார். எத்துணைப் பொருள் பொதிந்த பொன்மொழிகள்!!

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 192)

இதுபோன்று இன்னும் எத்தனையோ புறப் பாடல்கள் நம் மனத்தைப் பண்படுத்தி வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும், நல்லனவற்றையே செய்து நிலைத்த புகழையும், இன்பத்தையும் பெறவும் வலியுறுத்திச் செல்கின்றன. அற வழியில் பொருளீட்டி அதனைத் தாமும் துய்த்து, பிறர்க்கும் ஈந்து அதன் வாயிலாய்க் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்வதுதான் மானுட வாழ்விற்கு முறையானது என்பதனையே இப்புலவர் பெருமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் கூறிச் சென்ற நன்னெறிகளைப் பின்பற்றி நடந்தால் நம் வாழ்க்கைப் பயணம் வெற்றுப் பயணமாக இல்லாமல் பொருள் பொதிந்த வெற்றிப் பயணமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “புறம் போற்றும் அறம்!

  1. மிக அருமையான கருத்துச் செறிவுள்ள கட்டுரை. நீங்கள் சொல்வது நிஜமே. புத்தகக் கடைகளில், நீங்கள் சொல்வது போன்ற புத்தகங்களே பெரிதும் காணப்படுகிறது!!
    ///உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;///  இந்த வரிகள் முன்பே அறிந்திருந்தாலும், முழுப்பாடலைப் படிக்கும் வாய்ப்பு, இப்போது தான் கிடைக்கப் பெற்றேன்.
    ////பெரியோரை வியத்தலும் இலமே;
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 192)//////

    எத்துணை ஆழமான கருத்து!!!. நம் தமிழ் மொழியில் தான் அள்ள அள்ளக் குறையாத இரத்தினச் சுரங்கங்கள் எத்தனை!! எத்தனை!!. அவற்றை அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் காட்டி வரும் தங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை. என் மனமார்ந்த நன்றி.

  2. ஏறக்குறைய மனவளர் கட்டுரை அளவுக்கு வந்த இந்த பதிவு என்னை மிகவும் ஈர்த்தது. ‘பக்குடுக்கை நன்கணியார்’ குறிப்பும் இன்று தான் தெரிந்து கொன்டேன்.

    ////எத்தனையோ புறப் பாடல்கள் நம் மனத்தைப் பண்படுத்தி வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளவும், நல்லனவற்றையே செய்து நிலைத்த புகழையும், இன்பத்தையும் பெறவும் வலியுறுத்திச் செல்கின்றன. அற வழியில் பொருளீட்டி அதனைத் தாமும் துய்த்து, பிறர்க்கும் ஈந்து அதன் வாயிலாய்க் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்வதுதான் மானுட வாழ்விற்கு முறையானது என்பதனையே இப்புலவர் பெருமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் கூறிச் சென்ற நன்னெறிகளைப் பின்பற்றி நடந்தால் நம் வாழ்க்கைப் பயணம் வெற்றுப் பயணமாக இல்லாமல் பொருள் பொதிந்த வெற்றிப் பயணமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை./////

    கட்டுரையின் முடிவுரையில் வரும் இந்த வாசகங்கள் கட்டுரையின் மொத்த விரிவாக்கத்தையும் புரிய வைக்கிறது. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  3. நான் சொல்ல நினைத்ததை எல்லாம் பார்வதியும் தனுசுவும் முன்னரே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  அருமையான கட்டுரை மேகலா. 
    நீங்கள் தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளின் வழி சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் என்ன என்பதை எங்களுக்கு அறியத் தரலாமே.
    புறம் போற்றும் அறம்!…நல்ல தலைப்பு.
    அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றியும் பாராட்டுக்களும். 

    அன்புடன் 
    ….. தேமொழி 

  4. கட்டுரை குறித்த தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்துள்ள தோழியர் பார்வதி, தேமொழி, தோழர் தனுசு ஆகியோர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *