அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 5

4

கீதா சாம்பசிவம்

geetha sambasivamகொஞ்சம் அலைச்சல், அதனால் வந்த உடல்நலக்கேடுனு தாமதம் ஆகிவிட்டது. அப்படி ஒண்ணும் யாரும் படிக்கிறதாத் தெரியலைனாலும், இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது?? இங்கே அதற்குள் என்ன என்னவோ நடந்துட்டது. அதிலே முக்கியமானது எங்க வீட்டிலே எனக்கு உதவிக்கு வரும் பெண்மணியின் முதுகில் விழுந்த அரைச் செங்கல்லும், தோட்டம் சுத்தம் செய்ய வந்த மனிதருக்கும், என் கணவருக்கும் தலையில் விழவிருந்த கான்க்ரீட் பாறைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. நேற்று மதியம் அங்கே செண்ட்ரிங் பிரிக்கையிலே பலகை இங்கே எங்க வீட்டு ஏ.சி. கம்ப்ரெஸர் மேலே விழுந்து கீழே விழுந்தது. நல்ல வேளையா நாங்க கொஞ்சம் சுதாரிச்சுக்கொண்டோம். அந்தப் பக்கம் நடமாட்டம் வைச்சுக்கலை. மேலும் சின்னக் குழந்தைகளும் தற்சமயம் இல்லை. என்றாலும் முன்பெல்லாம் அங்கே தான் துணிகளைக் காயப் போடுவோம். இப்போ அதுக்கு முடியலை.

இத்தனைக்கும் எங்க வீட்டின் சுவருக்கும், எங்க காம்பவுண்டின் சுவருக்கும் இடையே நாலடிக்கும் மேல் இடைவெளி விட்டிருக்கோம். ஆனால் எங்க காம்பவுண்டிலிருந்து அந்தக் குடியிருப்புகள் கொஞ்சம் கூட இடைவெளியின்றி ஒரே ஒருத்தர் நடமாட மட்டும் இடம் விட்டு உடனே ஆரம்பிக்கிறது. அவங்களுக்குக் காற்று?? வெளிச்சம்??? அதெல்லாம் பத்திக் கவலைப்பட்டால் எப்படிங்க காசு பண்ண முடியும்?? கிட்டத்தட்ட  மூவாயிரம் சதுர அடியே இருக்கும் ஒரு மனைக்கட்டில் எட்டுக் குடியிருப்புகள் வருகின்றன. கீழே இரண்டு, முதல் மாடியில் மூன்று, இரண்டாம் மாடியில் மூன்று. ஐந்து அல்லது ஆறு பேர் குடியிருந்த இடத்தில் ஒரு வீட்டிற்குக் குறைந்தது நான்கு பேர் என வைத்துக்கொண்டால் கூட 32 பேர் இருப்பாங்க. யோசிச்சுப் பாருங்க.

இதிலே என்ன பிரச்சினை என்றால் தினம் தினம் அங்கிருந்து விழும் கான்க்ரீட் கழிவுகள், அரைச் செங்கல்கள், மணல் குப்பைகள், அதோடு அவங்க உடைக்கும்போது விழும் துகள்கள் என ஒரே குப்பை. சுத்தம் செய்யக் கூப்பிட்டால் ஒரு நாள் வந்து செய்யறாங்க. அப்புறம் யாருமே வருவதில்லை. தினம் தினம் சொல்ல வேண்டி இருக்கு. அது ரொம்பக் கூச்சமா இருக்கிறது. அவங்க மேஸ்திரி, மானேஜர்னு எல்லார் கிட்டேயும் சொல்லிப் பார்த்தாச்சு. சொன்ன அன்று மட்டும் யாரானும் வந்து ஒரு தள்ளுத் தள்ளுவாங்க. இந்த மட்டும் நம்மைத் தள்ளலையேனு நினைச்சுட்டு, மறுநாள் நான் சுத்தமாய்ப் பெருக்கி எடுப்பேன். வேலை செய்யற அம்மாவுக்குப் பயம், எங்கேயானும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சுன்னா?  அதோட அவங்க வரதும் மதியம் நாலு மணிக்கு. பக்கத்திலே மும்முரமா வேலை நடக்கும் சமயம். அதனால் நான் காலையிலே ஆளில்லாத சமயமாப் பெருக்குவேன். அந்தக் கட்டடம் கட்டும் கம்பெனியின் சொந்தக்காரர் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. அவரோட தொலைபேசி எண்ணும், அலுவலகமும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு.

flats

ஒரு மாமரமும் வாழை மரமும் சுத்தமாய் உயிரை விடும் நிலையில் இருக்கின்றன. அவங்க கிட்டே சொன்னால் மரத்துக்கு ஏம்மா இப்படி அடிச்சுக்கறீங்கனு சொல்றாங்க! ஆனால் நாம் பேசுவதோ சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம்? எப்படி மேம்படுத்தலாம்?? மரங்களை அழிக்காமல் இருக்கணும், மரங்களை நட வைக்கணும் என்றெல்லாம் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் நம்முடைய சொந்த மனையைக் கேவலம் சில லட்சங்களுக்காக விற்றுவிட்டுச் சூரியனின் வெம்மையையும், மழைக் குறைவையும், நீர்ப் பற்றாக்குறையையும் நிரந்தரமாகப் பெற்றுக்கொள்கிறோம். பணம் கொடுத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பது சிலர் கேள்வி. பணம் கொடுத்தால் விவசாயமே நடக்காமல், விவசாய நிலங்களே இல்லாமல் அரிசி எப்படி வரும்?? காய்கனிகளுக்கான தோட்டங்களே இல்லாமல் அவை எப்படி வரும்?

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் என்பார்கள் சிலர். வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் வெளிநாட்டிலோ கலாசாரம் நம்மைவிட மோசம் என்றெல்லாம் சொல்கிறோமே தவிர, அங்கே ஒரு மரத்தின் ஒரு சின்னக் கிளை கவனக் குறைவால் உடைந்தால் கூட நம் செலவில் ஒரு மரக்கன்றை வாங்கி நட்டு, அது ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரை அதற்கான செலவை நாம் ஏற்கவேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பை இஷ்டத்திற்குக் கட்ட முடியாது. கட்டுவதற்கென நிலம் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். குடிநீர் முதல், அடுப்பு வசதி, அவன் வசதி, பாத்திரம் தேய்க்கும் டிஷ் வாஷர், இன்னும் சில வீடுகளில் துணி துவைக்கும் மிஷினும் சேர்ந்தே வரும். இப்படி அனைத்து வசதிகளும் கட்டாயமாய்ச் செய்து தர வேண்டும். அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்போருக்கெனச் சில சட்ட திட்டங்களும் உண்டு. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

வீடுகள் கட்டுகையில் பகலிலே ஒன்பது மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும், மாலை நான்கு மணியிலிருந்து வெளிச்சம் இருக்கும் வரையிலும் தான் கட்ட முடியும். சில இடங்களில் நான்கு, ஐந்து மணிக்கே இருட்டத் தொடங்கி விடும். அதோடு கூட இரவானால் ஒன்பது மணிக்கு அப்புறமாய்ச் சத்தம் செய்து கொண்டோ, உடைத்துக்கொண்டோ, ஜேசிபி போட்டுத் தோண்டிக்கொண்டோ இருக்க முடியாது. குடியிருப்போர் சங்கம் போலீசுக்குப் போய்விடும். அதன் பின்னர் கட்டடம் கட்டுவோருடைய குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் அவங்க வீடு கட்டும் லைசென்ஸே ரத்துச் செய்யப்படும். ஆனால் நம் நாட்டிலோ???  புலம்பல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கோ?? கொஞ்சம் பொறுங்க.

(தொல்லைகள் தொடரும்…..

=====================================

படத்திற்கு நன்றி: http://estates.sulekha.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 5

  1. நம்ம நாட்டில் போலிசுக்குப் போனா, ‘இதுக்கெல்லாம் புகார் கொடுத்தா எப்படி? பக்கத்துக்கு வீட்டுக்காரன்களோட அனுசரிச்சு போங்க’ன்னு சொல்லுவாங்க.

  2. //அப்படி ஒண்ணும் யாரும் படிக்கிறதாத் தெரியலைனாலும், இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது??//

    நான் ஒருத்தன் படிக்கறேன்

  3. இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது?

    => அதானே! கேக்க வருத்தமாத்தான் இருக்கு. ஒரு பாயிண்ட். மனிதனுக்கு தன் இனத்தின் மீதே ஏன் இந்த அதர்ம குணம்? உங்கள் மாதிரி இன்னல் படுபவர்களுக்கு ஊடகங்கள் உதவி செய்யணும்.

  4. குடு…குடு… ஜக்கம்மா….
    குடு…குடு… ஜக்கம்மா….

    உங்க வீட்டு செங்கல் ஒடஞ்சி கீழே விழப்போகுது….
    கான்க்ரீட் பாறை தலை மேல விழப்போகுது….
    முழிச்சுக்கோ….
    ஜக்கம்மா சொல்றா…

    உங்க வீட்டு வரைபடம் இம்புட்டு க்ளியரா கொடுத்துட்டீங்களே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *