நடராஜன் கல்பட்டு

 

“சாந்தா நாழியாச்சு.  நான் கெளம்பணும் ஆபீசுக்கு.  கார் ஷெட் கதெவெத் தெற.”

“இதோ தெறக்கறேன்.”

ஷெட் கதவு திறக்கிற சத்தம் கேட்கிறது.  கூடவே சாந்தாவின் அலறலும்.  “அய்யய்யோ….. இங்கெ பாருங்க.”

“என்ன?”

“ஒரு பையன் நம்ம விட்டு வாசலுலெ கெடெக்கறான்.  யாரு பெத்த புள்ளையோ பாவம்.  உடனே இவனுக்கு வைத்தியம் பாத்துக் காப்பாத்தணுங்க.”

“கொஞ்சம் தண்ணி கொண்டா.”

செம்பில் தண்ணி கொண்டு வருகிறாள் சாந்தா.  பையன் முகத்தில் சிறிது தண்ணீர் தெளிக்க அவன் மெல்ல கண்ணைத் திறக்கிறான்.  எனக்கு போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது.  கைத் தாங்கலாக அவனைப் பிடித்துத் தூக்கி வீட்டிற்குள் அழைத்துச் சென்று மடக்குக் கட்டிலில் படுக்க வைத்தேன்.  சாந்தா ஒரு டம்ப்ளரில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள்.  அதை அவனுக்குக் கொடுத்து குடிக்கச் சொன்னேன்.

குடும்ப வைத்தியருக்கு போன் செய்து அவரை அவசரமாக வீட்டிற்கு வரச் சொன்னேன்.

“என்ன விஷயம்?  யாருக்கு என்ன ஆச்சு?” கேட்டார் டாக்டர்.

“நீங்க சட்டுனு வாங்க சொல்றேன்” என்றேன்.

நல்லவர் அவர்.  உடனே வந்தார்.  விஷயத்தைச் சொல்லி கட்டிலில் படுத்திருந்த பையனைக் காட்டினேன்.  அவனை பரிசோதித்த டாக்டர் சொன்னார், “பட்டினி மயக்கம் தான் இது.  பையன் சாப்பிட்டு இரண்டு நாளாகி இருக்கும்.  சத்தான ஆகாரம் கொடுங்க.  சரியாயிடும்.  சார் கொஞ்சம் நீங்க எங்கூட வாங்க” என்றபடி என்னை வாசலுக்கு அழைத்துச் சென்றார்.

“நீங்க என்ன காரியம் செஞ்சிருக்கீங்க?”

“ஏன்?  நல்ல காரியந்தானே செஞ்சிருக்கேன்?  ஒரு சாக இருந்த உயிரெக் காப்பாத்தி இருக்கேன்.’

“அப்பிடீன்னு நீங்க நினைக்கிறீங்க.  ஆனா போலீசு அப்பிடி நெனெக்காது அவன் ஒங்க வீட்டுள்ளெ வந்து மண்டெயெப் போட்டிருந்தான்னா அடுத்த ஆறு மாசத்துக்கு போலீசு ஸ்டேஷன், கோர்ட்டு, கேசுன்னு அலையணும் நீங்க.

நீங்க என்ன பண்ணி இருக்கணும்?  அவன் மூஞ்சிலெ தண்ணி தெளிச்சு அவன் கண்ணெத் தொறந்ததும் போலீசுக்கு போனு போட்டிருக்கணும்.  இல்லே சர்க்கார் ஆசுபத்திரி ஏம்புலன்சுக்கு போனு போட்டிருக்கணும்.  சரி நடந்தது நடந்திடிச்சு.  அவனுக்கு ரெண்டு மூணு நாளு சத்தான ஆகாரம் கொடுத்து அவன் ஒடம்பு தேறினதும் அவன் எங்கெ போகணுமோ அங்க அனுப்ச்சி வையுங்க.”

டாக்டர் போனதும் அவசர அவசரமாக கடைக்கு ஓடி ஹார்லிக்ஸ், பிஸ்கெட், ஆப்பிள், சாத்துக்குடி இவை எல்லாம் வாங்கி வந்தேன்.  சாந்தாவிடம் சொன்னேன் அவனுக்கு அப்பொப்பொ ஹார்லிக்ஸ் கரைச்சுக் குடு.  சாத்துக்குடி ஜூஸ் பிழிஞ்சு குடுன்னு.

மறு நாள் காலை அவனுக்கு ஒரு டவலும், மாற்று உடையாக எனது ஒரு அரை நிஜார், டீ ஷர்ட், புதிய பனியன், புதிய உள் டிராயர் இவைகளையும், ஒரு சோப்பும் கொடுத்து குளிக்கச் செய்தேன்.

மதிய உணவுக்கு வந்த போது பையனை விசாரித்தேன் என்ன ஏது என்று.

“எனக்கு ஊரு மதுரைங்க.  எட்டங் கிளாசு பரீட்சையிலெ ஃபெயிலாயிட்டேன்.  அப்பாருக்குத் தெரிஞ்சா அடி பின்னீடுவாருன்னு பயந்து கிட்டு நானும் இன்னும் ரெண்டு பசங்களுமா வீட்டெ விட்டு ஓடி வந்துட்டோங்க.

மெட்ராசுக்கு வந்ததும் ஒருத்தன் சொன்னான், ‘வாடா நாம விஜய வாடா போயிடலாம்.  அங்கெ எதுனா வேலெ பாத்துக்கலாம்’ னு.  சரீன்னு சென்ட்ரலு போயி விஜயவாடா வண்டிலெ தொத்திக் கிட்டோம்.  வித்தவுட்டு டிக்கெட்டுதான்.  எங்கெளெப் புடிச்ச டீடீஆரு விஜயவாடாலெ எறக்கி உட்டூட்டாரு.  டேசனுலெ பன்னெ வாங்கி சாப்டூட்டு ப்ளேட்பாரத்துலெ படுத்திருந்தோம்.

காலேலெ முளிச்சுப் பாத்தா ரெண்டு பசங்களையும் காணும்.  கூடவே என்னோட பையுந்தான்.  அதுலெதான் வெச்சிருந்தேன் ஊட்டுலெந்து யாருக்கும் தெரியாமெ எடுத்துக் கிட்டு வந்த நூத்தம்பது ரூவாயும்.

ரெண்டு நாளா சுத்தி அலயுறேன், சோறும் தின்னாமெ, எதுனா வேலெ கெடெய்க்குமான்னு.  இங்கெ இருக்குறவங்க பேசுறது எனக்குப் புரியலெ.  நான் பேசுறது அவங்களுக்குப் புரியலெ.”.

எனக்கு உள்ளூர ஒரு ஆசை.  எனக்குதான் மகன் இல்லையே.  இவனை வீட்டோடு வைத்துக் கொண்டு படிக்க வைத்தால் என்ன என்று.

“என்ன வேலையானாலும் செய்வெயா?”

“செய்வேங்க.”

“சரி அப்பொ நீ இங்கேயே இரு,  என் காரெத் தொடெ.  தோட்டத்துலெ இருக்குற புல்லெப் புடுங்கு.  செடிங்களுக்கு தண்ணி ஊத்து.”  (விட்டின் முன் புறம் 12 அடிக்கு 12 அடி அளவிலான நிலத்தில் ஒரு முசுக்கொட்டைச் செடி.  ஒரு மல்லிகை மற்றும் ஒரு அரளிச் செடி.  பின் புறம் அதே அளவிலான இடத்தில் ஒரு அவரைப் பந்தல்!)

இரண்டு நாள் கழிந்தது.  பையன் நல்ல தெம்பானான் சாந்தாவின் கவனிப்பில்.

“சார் நான் ஊருக்கே திரும்பப் போயிடலாம்னு முடிவு செஞ்சிருக்கேங்க.  ஒரு நூறு ரூவாக் குடுத்தீங்கன்னா……….”

என்னது என் மனக் கோட்டை மணல் கோட்டையாயிடிச்சா?  ஒரு நல்ல காரியம் செய்யப் போறதா நெனெச்சேனே.  சரி.  எது எப்படி நடக்கணுமோ அது அப்படி நடக்கும்.  என்னைத் தேற்றிக் கொண்டேன்.

“ஒன் கைச் செலவுக்கு முப்பது ரூவா தறேன்.  நாக்பூருலேந்து ஆரெஞ்சு எடுத்துக் கிட்டு மெட்ராஸ் போற லாரிங்க எங்க கம்பெனி பெட்ரோலு பம்புலெதான் டீசல் போட்டுக் கிட்டு கொஞ்ச நாழி தங்கீட்டுப் போவாங்க.  அவுங்க கிட்டெ ஏற்பாடு பண்ணி ஒன்னெ அனுப்பறேன்.  மெட்ராசுலேந்து மதுரைக்கு அவுங்க ஏற்பாடு பண்ணி அனுப்புவாங்க.  சரியா?”

“சரி சார்.”

இரவு சாப்பாடு முடிந்தது.  பையனுக்கு மறு நாள் வழியில் சாப்பிட நாலைந்து சப்பாத்தி செய்து நெய்யும் சர்க்கரையுமாகக் கலந்து சுருட்டி ஒரு பொட்டலம் தயார் செய்தாள் சாந்தா.

இரவு பத்தரை மணிக்கு வீட்டருகில் இருந்த பெட்ரோல் பம்புக்கு அழைத்துச் சென்று மேனேஜர் மல்லா ரெட்டியிடம் விவரத்தைச் சொல்லி பையனை ஜாக்கிரதையாக லாரியில் ஏற்றி விடச் சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பினேன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டபடி.

இரவு பன்னிரெண்டு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது.  அவசர அவசரமாகப் போய் அதை எடுத்தேன்.  ஊருலெ அம்மாவுக்கோ, இல்லே வேறெ யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போயிருக்குமோ?  கவலையோடு போனை எடுத்தால்………….

போனில் மல்லா ரெட்டி.  “சார் லாரி பதினோரு மணிக்கு வந்துது.  நான் லாரி ட்ரைவரிடம் ஏற்பாடு செஞ்சிட்டு பையனை ஒப்படைச்சீட்டு பம்புக்கு வந்தேன்.  ட்ரைவரும் பையனை லாரியிலே உகாத்தீட்டு சாப்பிட்டு வரப் போனாரு.

ட்ரைவரு பதினொண்ணரை மணிக்கு வந்தாரு.  அப்போலேந்து இங்கே பையனெத் தேடறோம்.  காணூம்.  ஒருக்கால் ஒங்க வீட்டுக்கே வந்திருக்கானோன்னு தான் போனு போட்டேன்.”

“இங்கெ வரலியே.”

“சார், பையன் பட்டினிலெ ஒங்க ஊட்டு வாசலுலெ உளுந்தது உண்மையா இருக்கும்.  அப்பால அவன் சொன்னதெல்லாம் கதெயா இருக்கும்.  வீட்டுலெ வெலெ ஒசந்த சாமானுங்க பத்திரமா இருக்கான்னு பாத்துக் கோங்க சார்.”

இன்று வரை எனக்கு அந்தப் பையன் ஓடிப் போனது ஒரு புரியாத புதிர்தான்.

 

பி.கு.  கதையல்ல இது.  நிஜம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *