தனுசு

 

என் இல்லாளிடம் சொன்னேன்
சிக்கனமாய் இருக்க
மறுக்கிறாள்
அதை எக்கணமும் கேட்க.

பெண்ணுக்குப் பகை
ஊதாரித்தனம்.
அது இந்த மண்ணுக்கும் தெரியும்
எடுத்து சொன்னால் கேட்பதில்லை
எதிர்த்து நிற்க முடியவில்லை.

சிறுகச் சிறுக சேர்த்தால்
சேமிப்பு.
அது பெருகப் பெருக
தரும் பூரிப்பு.

இவள்
பெரிது பெரிதாய்
செலவாக்கி
வீட்டை நிறைக்கும்
பைத்தியக்காரி.
இந்தக் குணத்தை
தாய்வீட்டுச் சீதனமாய்
தன்னோடு கொண்டு வந்த
கொடுமைக்காரி.

மிச்சம் பிடித்து
வாழ்வது
மெச்சத்தகுந்த வாழ்க்கை
அதை
துச்சமாய் நினைப்பது
இவளின் வாடிக்கை.

கொஞ்சம் கொஞ்சமாய்
கொடுப்பது
குடும்பத்துக்கு அழகு
கொட்டிக்கொடுப்பது
என்ன வழக்கு?

அள்ளிக்கொடுக்கும்
இந்த
அன்னபூரணியை
தள்ளிவைக்க முடியவில்லை
சொல்லிதர வாருங்கள்
சொந்தமுள்ள அண்ணன்மாரே அக்காமாரே….
குறைக்கச் சொல்லி கூறுங்கள்
அவளின்
அன்பில் தேவை சிக்கனம்!
யாரையும்
அரவணைப்பதிலும்
தேவை சிக்கனம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “என் இல்லாள்.

  1. அப்படியே இருக்கட்டும்,
    அன்பில் வேண்டாம் சிக்கனம்
    அதுதானே தேவை இக்கணம்…

    அருமை…!

  2. அளவுக்கு மீறி அன்பு காட்டுவது கூட பிரச்னை தான் சில தருணங்களில். வழக்கம் போல் கடைசி வரிகளில் ட்விஸ்ட் வைத்த ‘தனுசு பாணி’ கவிதை. அழகாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரரே!! வாழ்த்துகள்.

  3. ரசிக்கவைத்த அருமையான கவிதை. இப்படியொரு இல்லாள் அமைந்தது தங்கள் பாக்கியமன்றோ? பாராட்டுகள்.

  4. கவிதையை ரசித்த நண்பர் சென்பக ஜெகதீசன் அவர்களுக்கு நன்றிகள்.

  5. தனுசு பாணி” என்று அடைமொழி தந்து பாராட்டி கவிதையை ரசித்த சகோதரி பார்வதி அவர்களுக்கு நன்றிகள்.

  6. //இப்படியொரு இல்லாள் அமைந்தது தங்கள் பாக்கியமன்றோ?/// உன்மைதான் இந்த வகையில் நான் பெரும் பாக்கியசாலி. மணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது எனக்கு 100 க்கு 100 சரியானது. இந்த விஷயத்தில் இறைவன் எனக்கு மிகப்பெரிய கருனை காட்டியுள்ளான். இது என் மணைவியை நினைத்தே எழுதினேன்.

    ரசித்து கருத்துரைத்த மதிப்பிற்குரிய கீதா மதிவாணன் அவர்களுக்கு என் நன்றிகள்.

Leave a Reply to தனுசு

Your email address will not be published. Required fields are marked *