இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (65)

0

சக்தி சக்திதாசன்

ramsey

அன்பினியவர்களே வணக்கம் ,
உங்களை அடுத்த மடலில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் உங்கள் முன்னே நான். விசித்திரமான சூழல் வித்தியாசமான காலங்கள் மாற்றங்களை வலுவாக அனைவர்க்குள்ளும் புகுத்துகின்றன.

மனிதர்களுடைய வாழ்க்கை முறையை நிர்ணயிக்கும் காரணிகள் , அவனின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள், அவனுடைய எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தைக் கணிக்கும் வழிமுறைகள் என்பன ஒவ்வொரு சமுதாயத்திலும் அந்நாட்டின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

இம்மென்னெடுப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஜனநாயகம் என்று சொல்லப்படும் ஒரு மனிதன் ஒரு வாக்கு என்னும் முறை சில நாடுகளிலும் , சர்வாதிகாரம் என்று தம்மைத்தாமே அந்நாட்டுக்கு அதிபர்களாக்கிக் கொள்ளும் வகையில்,  அந்நாட்டு ராணுவங்களினால் மக்களைக் கட்டுப்படுத்தும் மற்றொரு வகையுமே பிரதானமாக இன்றைய நடைமுறையில் எம்முன்னே முன்னெடுக்கப் படுகின்றன..

இம்முறைகளில் ஜனநாயகம் எனும் முறையில் நடக்கும் தேர்தல்களில் நடக்கும் தில்லு முல்லுகளைப் பற்றி நான் இங்கே கணக்கிலெடுக்கவில்லை அந்நாட்டின் அரசியல் நடப்புகளை பற்றியே குறிப்பிடுகிறேன்.

சரி இந்த வகையிலே நான் இவ்வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்த விடயத்திற்கு வருவோம்.

இங்கிலாந்து அரசியலில், அரசியல் உலகில் பொதுவாக பேசப்படும் ஜனநாயக முறையிலான வகையிலேயே தேர்தல் நடைபெற்று அரசாங்கங்கள் தெரிவாகின்றன.

இங்கிலாந்தில் 1900 ம் ஆண்டு வரை இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டு இருந்தன. அவை கன்சர்வேடிவ் கட்சியும் , லிபரல் கட்சிகளுமே யாகும். இவைகளில் கன்சர்வேடிவ் கட்சி பிரபுக்களையும் , நில முதலாளிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது லிபரல் கட்சி தாம் சுதந்திரமான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அக்கட்சியிலும் பணமுதலைகளே இருந்தார்கள்.

இதன் காரணமாக சாதாரண அன்றாடத் தொழிலாளரின் அபிலாஷைகளை முன்னெடுக்கும் வகையிலான அரசியலைப் பிரதிபலிக்கும் கட்சி இல்லை என்ற தொழிலாளரின் ஆதங்கம் 1900ம் ஆண்டு இங்கிலாந்தில் லேபர் கட்சியைத் தோற்றுவித்தது,

சாதாரண தொழிலாளர்களின் கூடுதலாக ஆரம்பித்த இக்கட்சிக்கு பலகாலங்கள் அரசாங்கம் அமைக்கும் வகையிலான ஆதரவு இருந்ததில்லை. அக்கால லிபரல் கட்சியுடன் இணைந்து அவர்களின் அரசாங்கம் அமையும் போது தமது கொள்கைகளை சிலவற்றை அதனுடன்  முன்வைப்பது ஒன்றே இவர்களது அன்றைய அரசியல் முனைப்பாக இருந்தது.

1916ம் ஆண்டளவில் லிபரல் கட்சி இரண்டாக பிளவு பட்ட போதே லேபர் கட்சியின் செல்வாக்கு மிகைப்பட்டது. அக்கட்சி தனது முதலாவது அரசாங்கத்தை 1924ம் ஆண்டு “ராம்சி மக்டொனால்ட்” என்பவரின் தலைமையில் அமைத்தது. இவர் லேபர் கட்சியின் முதலாவது பிரதமராவார்.

இங்கிலாந்தின் தொழிலாளர் யூனியன்கள்  இணைந்து அவ்விணைப்பினால் உருவானதே லேபர் கட்சியாகும். இன்றுவரை இங்கிலாந்தின் ஏதாவது தொழிலாளர் யூனியனில் மெம்பராக இருந்தால் அவர்கள் செலுத்தும் சந்தாப்பணத்தின் ஒரு பகுதி லேபர் கட்சிக்கு அளிக்கப்படுகிறது.

இது தவறு என பல காலமாக வாதிட்டு வந்த கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சாரத்தினால்,  யாராவது தொழிலாளர் யூனியன் மெம்பர் விரும்பினால் தமது சந்தாப்பணத்திலிருந்து லேபர் கட்சிக்குத் தாம் பணம் கொடுக்க விரும்பவில்லை என்று அறிவித்தால் அவர்களது சந்தாவிலிருந்து லேபர் கட்சிக்குப் பணம் செல்வதை நிறுத்தலாம் என்பது சட்ட மூலமாக்கப்பட்டது.

சரி இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்கிறீர்களா?

இன்றைய காலகட்டத்தின் அரசியல் மாறிவிட்டது. லேபர் கட்சிக்குள் தொழிலாளர் யூனியனின் ஆதிக்கம் கூடி அவர்கள் கண்மூடித்தனமான கோரிக்கைகளை முன்வைப்பதினால் நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க முடியாதிருக்கிறது எனும் வாதத்தை முன்வைக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பலம் அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு லேபர் கட்சித் தலைவர் “எட் மில்லிபாண்ட்” லேபர் கட்சியை தொழிலாளர் யூனியன்களிலிருந்து அந்நியப் படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

ஆமாம் கட்சியை ஸ்தாபித்தவர்களின் உறவைத் துண்டித்து அவர்களை அந்நியப் படுத்தும் முயற்சியில் “எட் மில்லிபாண்ட்” வெல்வாரா? இங்கிலாந்து மக்களின் மனதில் உள்ள லேபர் கட்சிக்கும், யூனியன்களுக்கு உள்ள தொடர்பின் பிரதிபலிப்பு மாறுமா?

காத்திருப்போம் காலம் விடையளிக்கும்

அடுத்த மடலில் சந்திக்கும் வரை

http://www.facebook.com/sakthi.sakthithasan

ed_66455179_66455178

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *