அன்புத் தோழி அனுராதா ரமணன்: விமலா ரமணியின் இரங்கல் கடிதம்

3

புகழ்மிகு எழுத்தாளரான அனுராதா ரமணன்(62), சென்னையில் 2010 மே.16 அன்று மாரடைப்பால் மறைந்தார்.  சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காணரமான அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே.16 அன்று மாலை இறந்தார்.

அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக்கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார்.  ‘சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்’ உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. பற்பல விருதுகளையும் பெற்றவர்.

அனுராதா ரமணனின் மறைவுக்கு அவரின் தோழியும் எழுத்தாளருமான விமலா ரமணி இரங்கல் கடிதம் வரைந்துள்ளார். அந்தக் கடிதம் இங்கே:

==============================

==============================

அன்புள்ள அண்ணாகண்ணன் அவர்களுக்கு,

வணக்கம் பல.

அனுராதா ரமணனின் மரணம் பற்றிய செய்தியைப் படித்து மிகவும் மனம் வருந்தினேன். என் பெண் ரூபாவின் திருமணத்திற்குக் கோவை வந்திருந்தார். அதற்கு முன்பே மேட்டூரில் ஒரு நிகழ்ச்சிக்காக நான் சென்றிருந்தபோது (அவர் அப்போது மேட்டூரில் இருந்தார்), என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். அதன் பின் அவர் கதாசிரியராக அவதாரம் எடுத்தபின் பல முறைகள் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

சாவி அவர்கள் ஆரம்பித்த பத்திரிகையான சாவியில் நாங்கள் சில எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர் எழுத வேண்டி வந்தபோது, சாவி அவர்கள் வீட்டில் நாங்கள் இருவரும் ஒன்றாக உணவருந்தியது நினைவுக்கு வருகிறது. நான் மலர் மல்லிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது, அவரிடம் ஒரு சிறுகதை கேட்டு வாங்கிப் போட்ட அனுபவமும் நினைவில் நிற்கிறது. நல்ல எழுத்தாளர். காலப் போக்கில் பல கருத்து மாற்றங்கள் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. என் அன்பிற்குரிய தோழி, நல்ல சிநேகிதி… இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது.
.
.
.
அன்புத் தோழியே, என் மகள் திருமணத்திற்கு உன் குருவான சாந்தா நாராயணனுடன் நீ போட்ட ரங்கோலிக் கோலம், இன்னமும் ஆல்பத்தில் இருக்கிறது. ஆனால், வண்ணம் காட்டிய விரல்கள், இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும்போது எண்ணத்தில் வேதனை எழுகிறது.
அவரின் தந்தையாரின் அறுபதாம் ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்திருந்தபோது, நான் சென்னையில் இருந்த காரணத்தால், அவரின் வீட்டிற்குச் சென்று விருந்துண்ட நினைவுகள் எழுகின்றன.

.
.

கோவையில் நடந்த தெய்வசிகாமணி விருது விழாவில் நாங்கள் இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்…. எனக்கு உரத்த சிந்தனை அமைப்பு பரிசு தந்தபோது, என்னைப் பாராட்டிப் பேசிய என் அன்புத் தோழியே, இனிக்கின்ற நினைவுகளை எல்லாம் கண்ணீரில் கரைத்துவிட்டு, நீ எங்கே காணாமல் போய்விட்டாய்? உன் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என் ஆழ்ந்த இரங்கலை இக்கடிதம் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

அன்புடன்,
விமலா ரமணி
17.05.2010

============================================================

அனுராதா ரமணனின் மறைவுக்கு வல்லமை இணைய இதழும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

படம் : நன்றி சென்னைஆன்லைன்



பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அன்புத் தோழி அனுராதா ரமணன்: விமலா ரமணியின் இரங்கல் கடிதம்

  1. தமிழகம் ஒரு சிறந்த எழுத்தாளரை குறிப்பாக பெண் எழுத்தாளரை இழந்துவிட்டது. அவர் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *