-தனுசு-

 

என் வீட்டுக்கு
வந்த நாள் முதல்
நீ
சிறைப் பறவையானாலும்….
உன் தேவை
எனக்கு படும்போதெல்லாம்
எந்த மறுப்புமின்றி
என்னை ஏற்றுக்கொள்வதால்
உன்னை
எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது

பனியின் குளிர்
மழையின் சாரல்
வியர்வை வாசம்
தெருப்புழுதி
இவைகள் என்னை தாக்கினாலும்
அவைகளுடன் உன்னை நான் நோக்கினாலும்
என் தேவை உணர்ந்து
நீயும்
மறுப்பின்றி
உன் மீது படர
எனக்கு இடம் தருகிறாய்

நான் உறங்கையிலும்
உடுத்துகையிலும்
உடன் இருந்து பார்க்கும் நீ
என்னை அலங்கரித்து அழகு பார்க்கையில்
நீ
அறியாத அந்தரங்கம்
என்னிடம் மிச்சமேதுமில்லை

உன் பள பள உடம்பை பார்க்கும் போதெல்லாம்
புஷ்பாஞ்சலி விதத்தில்
அரங்கேற்றம்
செய்யும் என் சேட்டைகள்…
இரவு
பகல்
வேறுபாடின்றி
தந்தனா ராகம் பாடி
அதை
உன்னில் ரசிக்கவும் செய்கிறது.

நான்
வெய்யிலில் கறுத்து
களைத்து வந்தாலும்
கதவை மூட
மறந்து வந்தாலும்
அசதியில் தூங்கி
கண் விழித்தாலும்
குளித்து விட்டு
புதுசாய் வந்தாலும்
அமைதியாய் இருக்கும் நீ
என்னை நிறுத்தி
மீண்டும் உன்னைப் பார்க்கவைப்பது
உன்னைத்தவிர வேறில்லை
என் முன்னாடி நிற்கும்
கண்ணடியே
என் வீட்டு நிலைக்கண்ணாடியே.

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அவள் கண்ணாடி

  1. அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி சகோதரரே!!.  கண்ணாடியை ‘அவள்’ என்று ரசித்து சுட்டியிருக்கிறீர்கள் ஆயினும்,, ஏன் சஸ்பென்ஸை தலைப்பிலேயே உடைத்துவிட்டீர்கள்?….

  2. கண்ணாடியை சிறைப் பறவையாகச் சித்தரித்திருப்பது அருமை. வாழ்த்துக்கள் திரு,தனுசு.

  3. பார்வதி இராமச்சந்திரன் wrote ///ஆயினும்,, ஏன் சஸ்பென்ஸை தலைப்பிலேயே உடைத்துவிட்டீர்கள்?….///

    ஆஹா உடைந்து விட்டதா. கண்ணாடியைக் கையாளத் தெரியவில்லை.

    நான் எதிர்பார்த்த திருப்பம் கவிதையில் என்னால் சரிவர வைக்கமுடியவில்லை.

    மிக்க நன்றி பார்வதி அவர்களே. இது போன்ற விமர்சனம் நான் எதிர்பார்க்கிறேன். அடுத்தடுத்த கவிதைகளில் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக எழுதி, தலைப்பை வைக்கிறேன். கவிதை எழுதுவது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை தலைப்பு வைப்பதில் தான் ஒரு தெளிவு கிடைப்பதில் தாமதமாகிறது.

  4. சச்சிதானந்தம் wrote //கண்ணாடியை சிறைப் பறவையாகச் சித்தரித்திருப்பது அருமை. வாழ்த்துகள் திரு.தனுசு.///

    கவிதையை ரசித்துப் பாராட்டிய நண்பர் சச்சிதானந்தம் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

Leave a Reply to பார்வதி இராமச்சந்திரன்

Your email address will not be published. Required fields are marked *