திவாகர்

dhivakar

“அகராதியைப் புரட்டி ‘நாய்’ என்ற பதத்திற்கு அர்த்தம் பார்க்கும்போது ‘ஒரு விலங்கு; ஞமலி; குரைக்கும் தன்மையுடைய ஒரு மிருகம்’ என்று பொருள் கொடுத்திருப்பது தெரிய வரும்”
-‘மிஸ் ஜானகி‘யில் எழுத்தாளர் தேவன்.

புஸுபுஸுவென வெள்ளைப் பஞ்சுப் பந்து போல அந்த நாய்க் குட்டி பார்ப்பதற்கு அழகாகவே இருந்தது. வாயைச் சுற்றி டிசைன் செந்திருந்தது போல இருந்த அந்தக் கறுப்பு நிறம் கூட யாருக்குமே சட்டெனப் பிடிக்கும்தான். வாசுகி தன் கையில் பிடித்தபடி என்னருகே அதைக் கொண்டு வந்தாள்.

“இப்போது சொல்லுங்க… என்ன பேரு வெக்கலாம்… ‘க்யூட்’ன்னு கூப்டலாமா…?”

“நீயே டிசைட் பண்ணிட்டு, என்னை எதுக்கு கேக்கறே? நாய்ங்களுக்கெல்லாம் இங்கிலீஷ்லதான் பேர் வெக்கணுமான்ன? ஒரு இந்தியன் பேரா கிடைக்காதா? அட்லீஸ்ட் ஒரு தமிழ்ப் பேரா வெக்கலாமே… நல்ல பூவோட பேரா வெச்சுக் கூப்பிடேன்… முல்லை.. ரோஜா…. கனகாம்பரம் வேண்டாம் இது நிறம் வெள்ளை அதனால மல்லின்னே கூப்பிடலாம்”

“அய்ய…நீங்க சொல்ற பேரெல்லாம் நம்ம ‘க்யூட்’டுக்கு சூட் ஆகாது… ஏன்னா இவன் ஆண்மகன்… அத்தோட நாய்ங்களுக்கெல்லாம் இங்கிலீஷ்ல பேர் வெச்சாதான் ஊர்ல மதிப்பே கிடைக்கும். உங்களுக்கு இதெல்லாம் ஒண்ணும் புரியாது…”

ஒரே போடாக போட்டுவிட்டு அந்த நாயையும் நலுங்காமல் கீழே விட்டு விட்டு, அவள் நகர்ந்து விட்டாள். வீட்டுக்கு வந்த நிரந்தர விருந்தாளியான ‘க்யூட்’டும் என்னை ஒரு ஒருவித எதிரி மனப்பான்மையோடு பார்த்துவிட்டு, சற்று ஓரம் கட்டியது. நான் மனசில்லாமல் ஒடுங்கிய குரலில் ஒருமுறை கூப்பிட்டுக் கூடப் பார்த்தேன்…. ஊம்ஹூம்… அது என்னைப் பார்த்த பார்வையில் ஏனோ ஏளனத்தையும் சேர்த்துக்கொண்டு, பின்னால் தன் காலால் பூமியை, பெரிய சிங்கம் ஒன்று உதைப்பது போல உதைத்துவிட்டு, வாலைக் கூட ஆட்டாமல் சற்று முன்னே கம்பீர நடை போட்டு வந்தது.. எங்கே என் மீது பாயப் போகிறதோ என்று கூட பயந்தேன்.. நல்ல காலம்…. அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

எனக்கு இப்படி என்றால் என் மாடி வீட்டில் புதிதாகக் குடியேறியிருக்கும் பரசுவின் நிலைமை இன்னமும் மோசம். பரசு என்னோடு வேலை செய்பவர். சமீபத்தில்தான் மாற்றலாகி வந்திருந்தார். என் மாடிப் போர்ஷனைத்தான் அவருக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தேன். அவர் மகன்கள் அவர்கள் சொந்த ஊரில் படித்துக் கொண்டிருந்தமையால் அவர் மனைவியும் வரமுடியாமல் போய்விட்டாலும், பரசு ஜாலியாகத்தான் பொழுதைக் கழிப்பார். உடல்நலம் சரியாகப் பேணும் அவர் தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்பவர். இந்த உடற்பயிற்சி செய்யும்போதெல்லாம், அந்தச் சமயம் பார்த்து நம் ‘க்யூட்’ அவரை வேடிக்கைப் பார்ப்பதற்காக என்றோ வேறெதற்கோ மெனக்கெட்டு மேலே சென்று அவரைப் பார்த்துக் கத்திக் குரைத்துக் கொண்டே இருக்கும். காரணமே இல்லாமல் இது குரைப்பதைப் பார்த்து ஒரு வாரத்தில் அவர் உடற்பயிற்சி செய்வதையே நிறுத்திக்கொண்டார். என்னை விட அவர் ‘க்யூட்’டை அதிகமாக வெறுத்ததற்கு இதை விட வேறு காரணம் தேவையில்லைதான்.

ஆனால் வாசுகியின் முழு சப்போர்ட் ‘க்யூட்’டுக்குதான்.

puppy dog

‘‘எதுக்கு இந்த மனுஷன் ‘க்யூட்’ வர சமயமாப் பார்த்து ‘எக்ஸர்ஸைஸ்’ செஞ்சு அவனைப் பயமுறுத்தணும்.. பாவம்.. ரொம்பவே பயந்துட்டு சப்தம் போட்டுருக்கான் போல”

“வாசுகி.. பயந்தது உன்னோட ‘க்யூட்’ இல்லே.. பரசுதான்.. இப்போ எக்ஸர்ஸைஸ் பண்றதையே முழுசா நிறுத்திட்டார் மனுஷன். இப்படி ஒரேயடியாகக் குரைச்சு ஒப்பாரி வெச்சா யார்தான் என்ன பண்ணமுடியும்..? ஏதோ நம்ம மாடில எங்காபீஸ் மனுஷன் இருந்ததாலே உன்னோட ‘க்யூட்’ தப்பிச்சது.. இன்னொருத்தனா இருந்தா அதன் தலைலே கொம்பாலேயே அடிச்சு விரட்டி இருப்பான்”

இப்படிச் சொன்னது தவறோ என்னவோ.. பழைய கால கதாநாயகி, வில்லனைப் பார்ப்பது போல அந்தப் பரசுவை அன்றையிலிருந்து இவள் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சமயம் கிடைத்தபோது பரசுவை வேறு வீடு கூட பார்க்கச் சொல்லிவிட்டாள். பாவம் பரசு.. நான் கையை நைச்சியமாகப் பிடித்து அழுத்திச் சமாதானப்படுத்தினேன்.

“நீங்க கவலைப்படாதீங்க பரசு.. இப்பல்லாம் வீடு கிடைக்கறது ரொம்ப கஷ்டம்னு எனக்குத் தெரியும். நீங்க கொஞ்சம் என்னை மாதிரியே அந்தக் குட்டி பிசாசோட அட்ஜஸ்ட் பண்ணிண்டு போங்க”

“அது சரி.. அட்ஜஸ்ட் பண்றது பத்தியெல்லாம் இல்லை.. நீங்க தப்பா நினைக்கலேன்னா நீங்க உங்க மனைவிக்கு ஒரு அட்வைஸ் கொடுங்க.. இந்த நாய் ஜன்மத்துக்கு மேக்ஸிமம் ஆயுசு 10 இல்லே 12 வருஷம்தான். நாமல்லாம் ரொம்ப அன்பா இதுங்ககிட்டே இருந்துட்டோம்னு வெச்சுக்குங்க.. அதுங்க போனவுடனே நம்மாலே தாங்க முடியாது.. அது மனுஷங்களோட இயல்புதான்.. உங்க மனைவி நாய்கிட்டே ரொம்ப அன்பு காட்டறதைக் கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லுங்க..”

பரசு சொல்வது சரிதான்.. ஆனால் வாசுகி நான் சொன்னால் கேட்கப் போகிறாளா..?

ஒரு மாதம் ஓடி விட்டது. ‘க்யூட்’ நாளொரு மேனியும் பொழுதொரு தீனியுமாக நன்றாகவே வளர்ந்து வந்தான். வாசுகியோ அந்த நாய் மீது அளவு கடந்த பாசத்தை வைத்து வளர்த்தாள். மேல்படிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் என் மகனுக்கு அடிக்கடி போன் போட்டு ‘க்யூட்’டைப் பற்றி ஆஹா.. ஓஹோ என நீண்ட புகழ் பாடி, போன் பில்லையும் என் ரத்த அழுத்தத்தையும் சேர்த்தே கூட்டினாள். அவள் நாய் மீது வைத்திருந்த அதீத பாசம், எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“வாசுகி! ஒரேயடியா இப்படி அந்த நாய் மேல இவ்வளோ அன்பு வெச்சுக்காதேடி! அப்புறம் நீ ரொம்ப கஷ்டப்படுவே..”

“என்ன பெரிய கஷ்டம்? உங்களுக்கு பொறாமை.. அதனாலதான் சொல்றீங்க…”

“என்ன பொறாமை?”

“உங்ககிட்ட ‘க்யூட்’ வரதே கிடையாதாக்கும்… பாவம்.. நேத்து நீங்களும்தான் ஜுஜூன்னு கூப்பிடறதைப் பார்த்தேனே.. எனக்கே சிரிப்பு வந்துடுத்து.. ‘க்யூட்’ எப்படிங்க உங்ககிட்ட வரும்?…”

“ஏன்டி.. நாயை ஜுஜூன்னுதானடி கூப்பிடணும்…”

“அய்யோ… அதெல்லாம் அந்தக் காலம்.. இதோ பாருங்க நான் கூப்டறேன்…. ஹய்.. க்யூட்டி…”

அவள் சற்றுப் பெரிய குரல் எடுத்துக் கூப்பிட்டதுமே எங்கேயோ மேய்ந்துகொண்டிருந்த நாய், டபக்கென ஓடி வந்து அவள் மடியில் தாவி ஒடுங்கியது. வாலைக் கூட ஆட்டி வீசியது.

“பாத்தீங்களா! என் க்யூட்டிக்கு எம்மேலே எவ்வளோ பாசம்… ஏன் ஒரு தடவை நீங்களும்தான் அப்படி கூப்பிடுங்களேன்…”

puppy dog

நானும் சப்தமாக கூப்பிட்டேன்.. அது சீண்டவே இல்லை. வாசுகி மடியில் படுத்ததால் சுகம் போலும். தலையைக் கூட திருப்பவில்லை.. மறுபடியும் சற்று மெல்லமாக, பரிதாபமாக கூப்பிட்டுப் பார்த்தேன்.. ஆர்ட் பிலிம் கதாநாயகி முகம் திருப்புவது போல மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தது.  இவன் மூஞ்சியை ஏன் பார்த்தோமோ என்பதைப் போல முகம் சுணுங்கி மறுபடியும் அவள் மடி மீது ஹாயாக ஒடுங்கிப் படுத்துகொண்டது. வாலைக் கூட ஆட்டவில்லை… ச்சே! நிஜமாகவே இன்ஸல்ட்தான்… நான் எழுந்துவிட்டேன். வாசுகி மட்டும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

ஆனால் அதே நாய், ஒருநாள் நான் மாடியறையில் பரசுவோடு ஆபீஸ் வம்புகள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களிடம் நாங்கள் கூப்பிடாமலேயே வந்தது. பின்னால் வாலை வெகு வேகமாக ஆட்டி என்னிடமும் பரசுவிடமும் வெள்ளைக் கொடி காட்டி, சமாதானம் செய்துகொண்டது போல ஏதேதோ முனகியது. பரசுதான் முதலில் போனால் போகட்டுமென அதனுடன் சமாதானம் செய்துகொள்வது போல முதன் முறையாக அதன் முதுகில் ஆறுதலாக வருடிக் கொடுத்தார்.. அந்த ஆறுதலையும் தான் ஏற்றுக்கொள்வதாக மறுபடியும் தன் பின் வாலை வேகமாக ஆட்டியது. என்னிடமும் வந்து ஏதேதோ முனகிக்கொண்டே தன் முகத்தை என் காலருகில் தேய்த்து மோர்ந்து பார்த்தது.

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நாய் உண்மையாகவே விசுவாசமான ஜன்மம்தான்.. ஒருக்கால், சோறு போடும் எஜமானியின் கணவன் என்ற முறையில் நன்றியைக் காட்ட முற்பட்டதோ என்னவோ… கீழேயிருந்து என்னைக் கூப்பிடும் வாசுகியின் குரல் கேட்டது.. நாயைத் தட்டிக் கொடுத்துவிட்டு பரசுவிடம் விட்டு விட்டு நான் கீழே இறங்கினேன்.

அங்கே ஒரே அடாவடி.. அவள் தோழி கல்யாணி இரண்டு நாய்க்குட்டிகள் சகிதம் வந்திருந்தாள்.. குளிர் பானமும் பிஸ்கட்டுகளுமாக சுறுசுறுப்பாக உபசரித்துக்கொண்டிருந்த வாசுகியைப் பார்த்ததும், என் மகன் சின்ன வயதில் அவன் பிறந்த நாளன்று தன் குட்டி நண்பர்களை அழைத்து வரும்போது அவர்களைக் கவனிக்கும் முறை நினைவுக்கு வந்தது –  அதே ஆவலோடு அவள் அந்த நாய்க் குட்டிகளையும் கவனித்து உபசரிப்பது எனக்குச் சிரிப்பைக் கொடுத்தது.

“என்னங்க! கல்யாணியோட பெட்ஸ் எவ்வளோ அழகு பார்த்தீங்களா? நம்ம ‘க்யூட்’ என்னவோ தெரியலே.. இவங்களோட ஒட்டவே மாட்டேன்ற மாதிரி வள் வள்னு கத்திட்டு மாடிக்கு ஓடியே போயிட்டான்…”

சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை என்பது அப்போதுதான் எனக்கும் புரிந்தது. ‘க்யூட்’ ரொம்பவே சமயோசித புத்தி உள்ள நாய்தான். இல்லாவிட்டால் அதுவாவது என்னையும் பரசுவையும் சீண்டுவதாவது…. கொஞ்ச நேரம் கல்யாணியோடு இவள் நாய், அவள் நாய் மற்றும் ஊர் நாய் விஷயமெல்லாம் பேசி விட்டு அவளையும் அவள் நாய்க் குட்டிகளையும் அனுப்பிவிட்டு வாசுகி என்னிடம் வந்தாள்.

“இவதான் பெரிசா பீத்திக்கிறா… என்னவோ ஸ்பெஷல் பாமரேனியனாம்.. ஏதாவது கண்றாவி மிக்ஸடா இருக்கும். ‘க்யூட்’ இவளோட நாய்ங்களை பார்த்ததும் உண்மை தெரிஞ்சு ஓடியே போயிட்டான். எனக்கும்தான் பிடிக்கலை.. ஆனா நான் அப்படி செய்ய முடியுமா?”

அலுத்துக்கொண்டாள். நான் சற்று ஆதுரத்துடன் அவளைப் பார்த்தேன். பரசு முன்பு நாய்களின் ஆயுள் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“இதோ பார் வாசுகி! நீ ரொம்பவே பாசத்தை அள்ளி தெளிக்காதே.. பரசுதான் சொன்னார், நாய்க்குட்டிக்கெல்லாம் வாழ்நாள் கம்மி.. அல்பாயுசு.. அதிகபட்சம் பத்து வருஷம் இல்ல பன்னிரண்டு வருஷம்தான். அதுக்கப்புறம் அதுங்க போயிடும்…. ரொம்ப அன்பு காட்டாம தூரமாவே நாய்ங்களைப் பழக்கி வெச்சுக்கோ.. அதுதான் உனக்கு நல்லது.”

puppy dog

“எதுக்குங்க அப்படியெல்லாம் பேசறீங்க?” என்று என்னைக் கண்டித்துவிட்டு ‘க்யூட்டி’ என்று சப்தம் போட்டு கூப்பிட்டாள். தன் இனங்கள் சென்றுவிட்டன என அதற்குத் தெரிந்துவிட்டது போலும்.. இருந்தாலும் அரக்க பரக்க வராமல் சற்று நிதானமாகவே வந்தது. வழக்கம்போல அவளைப் பார்த்து வாலை ஆட்டியது. வழக்கம்போலவே என்னை ஒரு மாதிரி ஏளனமாக பார்த்து, ஆட்டிக் கொண்டிருந்த வாலைச் சட்டென நிறுத்திவிட்டு, வாசுகி மடியில் ஏறி அவளைப் பார்த்து ஏதோ முனகியது.

‘ஏன் கண்ட கண்ட இனங்களைக் கொண்டு வந்து என்னை பயமுறுத்துகிறாய்’ என்று கேட்டு முனகியதா.. அல்லது ‘நம் இருவர் மத்தியில் இன்னும் இவன் ஏன் நிற்கிறான்’ என்பதாக முனகியதா… ஒரு மண்ணும் புரியாமல் மாடிக்குச் சென்று விட்டேன். பரசு கூட ஆச்சரியமாகச் சொன்னார். கீழே நாய்கள் வெளியே சென்றதும் அவர் மேல் எரிச்சலாக லொள்ளிவிட்டுதான் கீழே தாவி வந்ததாம். நான் சிரித்துக்கொண்டேன்.. ஆனாலும் அவரிடம் ஏதும் சொல்லவில்லை.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ‘க்யூட்’ நோய்வாய்ப்பட்டது. என்னவோ இனம் புரியாத நோய்.. இவள்தான் வெடர்னரி ஸ்பெஷலிஸ்ட்களிடம் நாயைக் காண்பித்து, தினம் ஊசி போட்டு அழைத்து வந்தாள். அப்போதும் சொன்னேன். ‘நாய்களிடம் அதிகம் அன்பு வேண்டாம்.. அவற்றுக்கு இப்படித்தான் ஏதாவது நோய் வரும்.. அதுவாக போகும்.. அல்லது வேறு ஏதாவது பெரிதாக நோய் வந்தால் நாம் மருத்துவம் பார்ப்பது கூட கஷ்டம்.. நமக்கும் மனக் கஷ்டம்.. பணக் கஷ்டம் எல்லாம் வரும்..’ என்றேன். ஆனால் அவள் கேட்கவில்லை. நாயை நன்றாகக் கவனித்தாள். அவள் கவனிப்பில் ‘க்யூட்’டின் ஏளனப் பார்வை கூட கொஞ்சம் அதிகமாகவே என் மேல் விழுந்ததையும் கண்டுகொண்டேன்.

அன்று அலுவலகத்தில் அதிக வேலை. ஜி.எம்.மின் அறையில் நானும் பரசுவும் ரொம்ப சீரியஸான டிஸ்கஷன் மத்தியில் திடீரென நெஞ்சை ஏதோ கிள்ளுவது போலச் சொன்னார் பரசு. அப்படிச் சொன்னவர், திடீரென மார்பைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தவர்தாம். கடகடவென ஹாஸ்பிடல் எடுத்துச் சென்றாலும் பயனில்லாமல் போய்விட்டது. மாரடைப்பு மிகப் பெரிதாக மிகப் பலமாக நேர்ந்துவிட்டதாம்.

இதோ… என் வீட்டு முன்னறையில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் பரசுவைப் படுக்க வைத்திருப்பதை நான் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எப்படி என்று புரியாமல் மனம் உண்மையை ஏற்க மறுத்தது. நல்ல பலசாலி, எப்போதும் உடற்பயிற்சி செய்து, நல்ல உணவு உண்டு, நல்ல பழக்கங்களோடு இருந்தவர்.. ஆனாலும்… எப்படி.. எப்படி இது நேர்ந்தது..

கண்ணீர் வழிந்தோட என் வாசுகி அப்போதுதான் உள்ளே நுழைந்த பரசுவின் மனைவியுடனும் மகன்களிடமும் கூட அழுது கொண்டே முறையிட்டாள்.

“’அல்பாயுசு ன்னு அடிக்கடி நாயைப் பத்தியே பேசுவாரே…. இவர் ஏன் இப்படி போகணும் கடவுளே…”

இன்னொன்றையும் கண்டேன். இதுநாள் வரை பரசுவை சீண்டாத ‘மிஸ்டர் க்யூட்’, அந்தக் கண்ணாடிச் சவப் பெட்டியின் மீதேறி உட்கார்ந்துகொண்டு வாலை ஆட்டிக்கொண்டே மோர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தது.

“பாரேன்.. நாய்க்குக் கூட இந்த மனுஷனை விட்டுப் பிரிய மனமே இல்லை.. இது இவர்கிட்டே ரொம்ப பாசம் வெச்சுடுத்தோ என்னவோ…”

வந்திருந்தோர் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தனர்.

==========================================

படங்களுக்கு நன்றி: http://animals.desktopnexus.com, http://www.innocentenglish.com, http://arts-wallpapers.com

பதிவாசிரியரைப் பற்றி

23 thoughts on “‘க்யூட்’

  1. க்யுட், மனதை நெகிழச்செய்த க்யூட்டான சிறுகதை. வாழ்த்துக்கள் திவாகர்ஜி. படங்கள் அதைவிட க்யூட்.

  2. நாய்க்குட்டியின் மூலம் வாசுகிக்குத் தான் ஏதோ நடக்கப் போகிறது என எதிர்பார்த்திருந்தால் அதிர்ச்சி தரும் எதிர்பாரா முடிவு. நாய் வளர்ப்பதைக் குறித்த செய்திகள் உண்மையே, எங்க மோதியை வளர்த்திருந்த கதையும் நினைவில் வந்தது.

  3. ‘க்யூட்’ ரொம்பவே சமயோசித புத்தி உள்ள நாய்தான், எங்கள் மிஸ்டர் பிக்கிள் போல. அவனுடைய நடுக்கல் புளுகிராஸ் சரணாலயத்தில்.

    என்ன தான் இருந்தாலும், பரசு காணாமல் போனதில் எனக்கு வருத்தம் தான். பலிகடாவாகிவிட்டார். அந்தோ பரிதாபம்!

  4. nalla kadhai. Naikku rosham jasthi. aanal anbukku adimai. en blackyi cute meendum ninaivu paduthiyadhu. nandri

  5. மனித மனங்களுக்குள் எத்தனை சின்னச் சின்ன அறைகள்,

    ஒவ்வொரு அறையையும் திறக்காமல் பாசம் பொறாமை ஆகிய இரண்டே அறைகளைத் திறந்து அவ்வவ் அறைகளின் அனைத்துப் பகுதிகளையும் மூன்று மனிதர்கள் வாயிலாக வெளிச்சம் போட்டுக் காட்டினீர்கள்.

    படமாக்கிய நிகழ்வுகளை நகர்த்தும் சொல்லாட்சி.

    நிகழ்வு எதிர்பார்ப்பு நாய், எதிர்பாராதது பரசு.
    பாராட்டு, வாழ்த்து.
    நன்றி

  6. திவாகர்,
    பவழத்தை அப்படியே வழி மொழிகிறேன்.. கதையும் க்யூட்,
    நடையும் க்யூட்..
    வாழ்த்துக்கள்.
    அன்பு கமலம்

  7. //. இது எப்படி என்று புரியாமல் மனம் உண்மையை ஏற்க மறுத்தது. நல்ல பலசாலி, எப்போதும் உடற்பயிற்சி செய்து, நல்ல உணவு உண்டு, நல்ல பழக்கங்களோடு இருந்தவர்.. ஆனாலும்… எப்படி.. எப்படி இது நேர்ந்தது..//

    என்னமோ நினைத்துக்கொண்டிருக்கிறோம் .ஆனால் எதுவும் நம் கையில் இல்லை என்பதை நன்கு தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்!

    க்யூட் ரொம்ப க்யூட் அள்ளியெடுத்து கொஞ்சணும் போல !

  8. Dear Divakar
    An excellent narration with a philosophical touch. Congratulations
    for your lucid language.Keep it up.
    With Wishes
    T.SATYAMURTHY
    REACH

  9. Dear Divakar
    Congratulations for your excellent narration and
    philosophical touch of the story. I wish that
    you may Write more such short story.
    with Wishes
    T.Satyamurthy

  10. உண்மையிலேயே நாம் வைக்கும் பாசத்தைவிட வாயில்லா ஜீவன்கள் என்று சொல்லப்படும் அவை வைக்கும் பாசம் உண்மையானது என்றே தோன்றுகிறது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  11. அருமையான கதை. எதிர்பார்க்காத முடிவு. எப்பொழுதும் போல் நல்ல நடை.

    தொடரட்டும் பணி.

    (பி.கு. : காரியமாகவேண்டுமானால் நாய் கூட காலைச் சுற்றும் என்பது உண்மை.)

  12. Anna, so cute. I do not have words how to appreciate. But only request, please keep writing.

  13. Cute azhagu
    Kathai azhagu, nadai azhagu
    But not able to predict the end. so sad, again cute.

  14. :-)))
    நெருநல் உளன் ……
    பாவம் பரசு!

  15. Good One Dhivakar. I liked the situational irony.Best wishes for your next….:)

  16. வித்தியாசமான கதை. எதிர்பாராத முடிவு!

Leave a Reply to சச்சிதானந்தன்

Your email address will not be published. Required fields are marked *