சச்சிதானந்தம்
அறைகூவும் கானகமும் அதில் வாழும் குறவனும் 

 

சூரியன் ஊடுருவா வீரியக் காட்டில்,

மாரியின் ஆதிக்கம் மீறிய காட்டில்,

யாரினும் இறங்காத மரமடர் காட்டில்,

குறவனும் குறத்தியும் எளிமையாய் வாழ்ந்தனர்!                                                                            22

 

முறைசாராத் தொழில்தனை முதன்முதலில் செய்தவன்,

கறைசாரா மனதோடு கானகத்தில் வாழ்பவன்,

நரைசேரா இளமையோடு குறத்தியோடு களிப்பவன்,

முறைசார்ந்து வாழ்க்கையினை முழுமையாக வாழ்பவன்!                    23

 

சமவெளிகள் புல்வெளிகள் கடந்தாக வேண்டும்,

சலசலக்கும் காட்டாற்றில் நடந்தாக வேண்டும்,

பாதைகள் பலவுண்டு காட்டுக்குள் செல்ல,

தடம்மாறிப் போகாமல் நடமாட வேண்டும்!                                                                                          24

 

காட்டாற்றின் ஆழத்தை அறிந்தாக வேண்டும்,

கடக்கின்ற முறைதன்னில் கடந்தாக வேண்டும்,

தினந்தோறும் உருமாறும் காட்டாற்றின் ஆழம்,

யுகந்தோறும் உயிர்வாழும் குறவனே அறிவான்!                                                                              25

 

இரவுநேரப் பறவைபோலக்  கூர்செவி கொண்டு,

ஒலிவரும் திசையும் தொலைவும் அறிந்து,

புலிவரும் போதும் புலன்களில் உணர்ந்து,

விலங்கினைப் போல விழிப்புடன் வாழ்வான்!                                26

 

காட்டாற்றில் நீர்பருக   வருகின்ற விலங்கினுக்கு,

இடையூறு செய்யாமல் நடையூற வேண்டும்,

சேற்றாற்றில் முதலைகள் உயிர்வாழக் கூடும்,

காற்றோடும் வேகத்தில் கடந்தாக வேண்டும்!                                                                                      27

 

ஏவுகணை வேகத்தில் தாவுகின்ற மான்கூட்டம்,

கூவுமிசைக் குரலாலே பாடுகின்ற குயில்கூட்டம்,

தீவுகளின் கூட்டம்போல் வாழுகின்ற களிற்கூட்டம்,

மேவுமனம் கொண்டிடுவர், கண்டுகேட்டுக் குறவர்கூட்டம்!                                                       28

 

வாழையடி வாழையாய் வழித்தடம் மாறாத,

யானையடிப் பாதையாய், மாறாமல் தொடர்ந்து,

ஏழையுடன் ஏழையாய், யுகம் கடந்து யுகம்யுகமாய்,

நானிலத்தில் வாழுகிறான் கானகத்துக் குறவன்!                                                                                29

 

துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,

கலவரம் பூணும் கானுருக் கண்டு!

குலவறம் காக்கும் குறவனின் மனமோ

இலகுறக் கண்டு கானினை வெல்லும்!                                                                                                      30

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குறவன் பாட்டு – 3

  1. குறவர் பெருமக்களின் வாழ்வியல் முறையினை அழகு ததும்பும் வரிகளில் அற்புதமாகத் தந்திருக்கிறீர்கள். 
    ////துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,
    கலவரம் பூணும் கானுருக் கண்டு!
    குலவறம் காக்கும் குறவனின் மனமோ
    இலகுறக் கண்டு கானினை வெல்லும்! ////

    அருமை சகோதரே!!. வாழ்த்துக்கள்.     

  2. முறைசாராத் தொழிலை முதலில் செய்து
    கறைசாரா மனத்தோடு வாழ்பவனைக் காட்டும்
    கவிஞரின் நடை சூடு பிடிக்கிறது…!

  3. கவிதைகளைப் படித்து கருத்துக்களைத் தெரிவித்த திருமதி.பார்வதி இராமச்சந்திரன் மற்றும் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.

Leave a Reply to -செண்பக ஜெகதீசன்...

Your email address will not be published. Required fields are marked *