IMG_5273பூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதரு, ஆல், வேம்பு மரங்களுமாய் வீதம்பட்டிக்கும், வாகத் தொழுவுக்குமாகக் காட்சிதரும் பேரூர் வா. வேலூர். அங்கேதான் பழமன் எனும் சிறுவன் வேளாண்மைக் குடியில் பிறந்து, மக்களொடு மக்களாய் கால தேவனின் சுழலில் அடித்து வரப்படுகிறான்.

“எங்கடா போற?”

“தெய்வாத்தா கடைக்கு சோறுங்கப் போறன்டா!”

“ஏன் உங்கூட்ல யாரும் இல்லியாக்கூ?”

“ஆமாடா, எங்கப்பனுமு, அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தையில சோளம் வித்த பணத்துக்கு ஆடு வாங்கப் போயிருக்காங்க!”

”ச்சேரி, ச்சேரி, நானுமு எங்கூட்டுக்குப் போறன், எனக்குமு பசிக்குது!”

”சரிடா பெருமாளு!”

அந்த வில்வமரம் சூழ இருக்கும் வினாயகர் கோவிலடியின் ஊடாக, ‘வட்டப் வட்டப் பிள்ளையாரே, வாழைக்காயி பிள்ளையாரே, உண்ணுண்ணு பிள்ளையாரே, ஊமத்தங்காயிப் பிள்ளையாரே’ என்று பாடியவாறே தெய்வாத்தாவின் உண்டிச் சாலையை அடைகிறான் பழமன்.

“பழமு, வா கண்ணூ! என்ன கண்ணூ, உன்றப்பன் வடைகிடை வாங்கியாறச் சொல்லுச்சாக்கூ?”

“இல்லாத்தா, எங்கப்பனுமு அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தைக்கி போயிருக்காங்க. பொழுதுழுகத்தான் வருவாங்க!”

“அப்பிடியா கண்ணூ. செரி, என்னுங்கற?”

“என்னாத்தா இருக்குது?”

“கட்டுச் சோறு, எடுப்புச் சோறு, ஏகாந்த போசனம், இதுல உனக்கு என்ன வேணும்?”

“அப்பிடின்னா என்னாத்தா?”

“கட்டுச்சோறுன்னா, இதா அந்த பாக்கு மட்டையில கட்டி வெச்சுருக்குறது. எடுப்புச் சோறுன்னா, கத்திரிக்கா கொளம்புமு, புடலைங்காக் கூட்டுமு, மோரும் உங்கலாம். ஏகாந்த போசனம்ன்னா, வடை பாயாசம் எல்லாமும், நம்ப கணேசன் கொண்டாந்து பரிமாறுவாங் கண்ணூ!”

“எனக்கு அப்ப கட்டுச் சோறே போதுமாத்தா! எங்கம்மா வந்து பணந் தாறேன்னு சொல்லுச்சு!”

“டேய் கணேசா, பாரு நம்ம சரோசினி ஊட்டுப் பொன்னான் வந்துருக்குறான். வந்து என்னன்னு பாத்துக் குடு சித்த!

பசியாற கட்டுச் சோறு உண்டுவிட்டு, பெற்றோர் கூறிச் சென்றபடியே, ஊருக்குத் தென்புறமாய் இருக்கும் அவர்களது புலத்தை நோக்கிச் செல்கிறான். போகிற வழியில் கரும்பு ஆலை ஓடிக் கொண்டு இருக்கிறது. கருப்பங் கழிகளை ஆலையில் கொடுத்துப் பிழிந்து, சாற்றை உலையில் ஏற்றிக் காய்ச்சிக் கொண்டு இருந்தார்கள். பிறகு காய்ச்சின சாற்றை அச்சுப் பலகைகளில் ஊற்றினார்கள்.

அது ஆறின உடனே வெல்ல அச்சுகள் ஆயின. இதை எல்லாவற்றையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தான் பழமன். அதைக் கவனித்த வேலையாட்களில் ஒருவனான மாரி,

“கண்ணூ பழமு! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”

”இல்லீங்க, வேண்டாங்கண்ணா, எங்கம்மாக்குத் தெரிஞ்சா வையும்!”

“அட, இந்தா வந்து வாங்கி வாயில போடு. நானு உங்கம்மாகிட்டச் சொல்லிகிறேன்!”

அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே பழமன் அவ்ர்களுடைய வயல் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பூத்திருந்த பூக்களைக் கண்டதும், ரெண்டொரு பூவையும் பறித்துக் கையிலேந்தியபடியே எதையோ நினைத்தவாறு சென்று கொண்டிருந்தான்.

கவனம் அவன் செல்லும் வழியில் இல்லாதபடியால், கல்தடுக்கி அவன் தடுமாறியதில், அவனிடம் இருந்த அந்தப் பூக்கள் கை நழுவி அருகில் இருந்த ஓடையில் விழுந்து விடவே, சோகமாய்ப் பாடிச் செல்கிறான் பழமன்:

சிந்தாம சிதறாமப் பொறித்தேன் பூவே,
சித்தாத்துத் தண்ணியில போறயே பூவே,
வாடாம வதங்காம வெச்சிருந்தேன் பூவே,
வறட்டாத்து தண்ணியில போறயே பூவே!

ஓடிக் கொண்டு இருந்த காட்டாற்றில், பூக்களை நழுவவிட்ட பழமன், அந்த ஆற்றின் கரையோரமாக வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்த ஆறினாலேயே அந்த ஊர்கள் மிகச் செழிப்பு பெறுகிறது.

பள்ளம் படுகையில் தென்னந் தோப்பு இருப்பதற்கு அந்த ஆறே காரணம். அந்த ஊரில், வெயில் காலத்திலும் கூட இனிமையான தென்றல் வீசும். அதற்குக் காரணமும் அந்த காட்டாறுதான். அதில் பாயும் வெள்ளம் சத்து வாய்ந்த எருவை நாலாபுறமும் இருந்து எடுத்து வரும். இரு கரைகளிலும்,தென்னை, மா, வேம்பு, ஆல மரங்கள் எனப் பலவகையான மரங்களைக் கொண்டு, எழிலாய் செழிப்பாய் எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்டது அந்த உப்பாறு என்ற காட்டாறு. அது, வேலூரில் இருந்து, சிந்திலுப்பு, பூளவாடி, பெரியபட்டி, பப்பாளியூர் என்ற ஊர்கள் வழியாக வளைந்து நெளிந்து சென்று, இறுதியில் அமராவதியில் கலக்கிறது.

இந்த ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்த பழமன், அவர்கள் வயலுக்குச் செல்லும் இட்டேரி வந்ததும், கரையில் இருந்து இடது புறமாகப் பிரிந்து, அந்த இட்டேரியில் நடந்து சென்று கொண்டிருந்தான். சென்று கொண்டிருக்கும் போது, அந்த இட்டேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னமுத்து பழமனைக் கண்டதும், உற்சாகம் உற்றவனாய் பேச ஆரம்பித்தான்.

”பழமா, என்னடா மத்தியான சோறுண்டுட்டுப் போறயாக்கூ?”

“ஆமாங்ண்ணா, நீங்க உண்டாச்சுங்களா?”

“இல்லை, எனக்கு எங்கக்கா சாந்தாமணி ஒரு மணி வண்டி கெழக்க போனதுங் கொண்டு வருவா!”

“சரீங்ண்ணா, அப்ப நான் போய்ட்டு வாறனுங்!”

“இர்றா, நான் ஒரு கதை சொல்லுறேன், கேட்டுட்டுப் போவியாமா?”

“சராங்கமா சொல்லுங்ண்ணா, நான் போகோணும்!”

“உன்ன மாதரத்தான், ஒரு பையன் அவிங்க தோட்டத்துக்கு போயிட்டு இருந்தானாமா. அப்போ, போற வழியில ஒரு மண்ணாங்கட்டி இருந்துச்சாமா. அதைப் பாத்து இந்த பையன் கேட்டான், மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மழை வந்தா, நீ என்ன பண்ணேவேன்னு. அது சொல்ச்சாம், மழை வந்தா கரைஞ்சு போவேன்னு.

செரீன்னு கேட்டுட்டு மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, எச்செலை ஒன்னு போற வழில கெடந்துச்சாம். இவங் கேட்டானாம், எச்செலை, எச்செலை காத்தடிச்சா நீ என்ன பண்ணுவேன்னு. அது சொல்லுச்சாம், காத்தடிச்சா நான் பறந்ந்ந்து போயிடுவேன்னு.

செரீன்னு இதையுங் கேட்டுட்டு அந்த பையன் மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, ஒரு நாய்க்குட்டி ஒன்னு வாலை வாலை ஆட்டிட்டு, குழைஞ்சுட்டே இவங்கிட்ட வந்துச்சாம். அந்த நாய்கிட்டயும் இவங் கேட்டானாம், நாய்க்குட்டி நாய்க்குட்டி நீ என்ன பண்ணுவேன்னு. அதுக்கு அந்த நாய் என்ன சொல்லுச்சு தெரியுமாடா பழமா?”

“தெரிலீங்ளே, நீங்களே சொல்லுங்க!”

”அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமன் வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.

இதைக் கேட்ட பழமனுக்கு ஒரே ஏமாற்றம், முகம் எல்லாம் சிவந்து பரிதாபமாக செய்வதறியாது, கண்ணீர் சிந்தியவாறு நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த சின்ன முத்துவுக்கும் மனம் வருத்தத்தில் ஆழ்த்தியது. உடனே, சமயோசிதமாக, இட்டேரி வேலிக்குள் பொளேரெனப் பாய்ந்து, அங்கே செக்கச் செவேல் எனச் சிவந்து பழுத்திருந்த இரண்டு கள்ளிப் பழங்களையும், வேலியில் இருந்த சூரிப் பழங்களையும் பறித்து பழமனிடம் கொடுத்து, அவனை தேற்றினான்.

“இந்தாடா பழமு, இந்த ரெண்டு பழங்களையுமு உனக்கோசரமே, இவ்வளவு நாளுமு உட்டு வெச்சிருந்தேன் தெரியுமா? வாங்கிக்கடா!”

“ம்ம்ம்… ம்ம்ம்… செரீங்க…ம்ம்!”

சின்ன முத்துவும் சடாரெனச் சென்று, அங்கு குழியொன்றில் தேங்கியிருந்த தண்ணீரில் இரண்டு பழங்களையும் கழுவி வந்தான். பிறகு, அந்த இரண்டில் ஒன்றை சின்ன முத்துவின் எதிரிலேயே சுவைத்துப் பார்த்து, அது இனிக்கவும், பழமன் மனம் மாறி மகிழ்ச்சியில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறே மீண்டும் அவர்கள் வயல் நோக்கி நடையைக் கட்டினான்!

பழமுன்னாப் பழம், எங்கூரு கள்ளிப்பழம்!
எனக்காகப் பழுத்த, உப்பாத்துப் பெரியபழம்!!
வாளவாடி, பூளவாடி, காணாத கள்ளிப்பழம்!
சின்னவனே, பெரியவனே, உனக்கில்லை இந்தப்பழம்!!

சூரிப் பழங்களையும், கள்ளிப் பழங்களையும் சுவைத்தவாறு, வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் பாலகன் பழமன். சென்று கொண்டிருந்த இட்டேரியில் இருந்து பிரிந்து, சிறுகால்த் தடம் வழியாக அவ்ர்களுடைய வயலுக்குச் செல்லும் இடம் நெருங்க, அவனுள் இனம் புரியாத ஒரு அச்சம் மேலிட்டது.

அந்த அச்சம் மேலிடக் காரணம், அவன் ஆறாம்மேடுகடந்துதான் அந்த சிறுகால்த் தடத்தை அடைந்தாக வேண்டும். ஆறாம்மேடு என்றால் பாலகனுக்கு ஒரே அச்சம். அவன், ஒரு நாள் அவனுடைய அப்பாருடன் வயலுக்கு வந்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியால் அவனுடைய அப்பாருடன் வினவினான்,

“அப்பாரு, ஏன் இந்த எடத்தை ஆறாம்மேடு, ஆறாம்மேடுன்னு சொல்லிச் சொல்றாங்க?”

“அதா, அது வந்து நம்மூரு மேக்கால வளவுல இருக்குற பெருமா கோயல்ல ஆறான், ஆறான்னு, ஆறுமுகம்ங்ற அன்னக் காவடி இருந்தான். அவன் ஊருக்குள்ள அன்னக்காவடி எடுத்து சோறுண்டுட்டு, ஊர்க் கோயலுகளுக்கு எல்லாம் சேவகம் செஞ்சிட்டு இருந்தான்.”

“அன்னக் காவடின்னா என்னுங்க அப்பாரு?”

“அதா, காவடி நொகத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு குண்டாவுக, சங்கிலியில தொங்கிட்டு இருக்கும். அந்த சங்கிலியில மணியோசை சத்தம் வாற மாதர சலங்கை மணியெல்லாம் இருக்கும். அப்ப, ஆறான் ஊருக்குள்ள வரும்போது அந்த சத்தங்கேட்டு, ஊட்டை உட்டு வெளியில வந்து அவனுக்கு சோறு கஞ்சி ஊத்துவாங்க. அவனும், அந்த அன்னக்காவடியில இருக்குற குண்டாவுல அதை வாங்கி உண்டுட்டு பொழப்பு நடத்திட்டு வந்தான்!”

“செரீங்க அப்பாரு!”

”அப்பிடியிருக்க, அவன் ஒரு நாளு இந்த இட்டேரி வழியா பூரண்டா பாளையம் பரமசிவங் கோயலுக்கு போயிட்டு இருக்குறப்ப, திடீல்ன்னு இந்த எடத்துல நெஞ்சு வலி வந்து உசுரை உட்டுட்டான். அதுனால, இந்த எடத்துக்கு ஆறாம் மேடுன்னு பேரு வந்ததுடா இராசா!”

“அப்ப, ஆறானோட பேய் இங்க இருக்குமா அப்பாரு?”

“நீ தெகிரியமா இருடா…அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லடா கண்ணூ!”

இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமன். இன்றும் அவ்விதமாகவே, ஆறாம் மேட்டைக் கடந்து சிறுகால்த் தடம் வழியாக வயலுக்குள் நுழைந்தான். முதலில் வருவது, அவனுடைய பெரியப்பாவின் வயல்.

வயலுக்குள், ஒரு பெரிய வேம்பு மரம் இருக்கும். அந்த வேம்பு மரத்தடியில் நாட்ராயன் சாமியும், அந்த சாமிக்கு நேர் எதிரே ஒரு வேலும் நடப்பட்டு இருக்கும். அந்த மரத்தடியில், பெரியப்பா பண்ணையில் வேலை செய்யும் தேவராசுவின் மனைவி முத்துலட்சுமி தன்னுடைய குழந்தையை, அந்த வேப்பமரத்தில் கட்டியிருந்த தொட்டிலில் கிடத்தி தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
சீராரும் பசுங்கிளியே தெவிட்டாத தெள்ளமுதே
நேராக உறங்கிலையோ நிறையன்பு ஊக்கிலையோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

இந்த பாடலையும் கேட்டவாறே, பாலகன் பழமன் பெரியப்பாவின் வயலைக் கடந்து அவனது வயலுக்குள் செல்ல முற்பட்டான். அப்பொழுது, இவன் தலை தெரியக் கண்டதும், அவனுடைய தோட்டத்து நாய் பேச்சி ஒரே ஓட்டமும் பாய்ச்சலுமாய் இவனை நோக்கி வந்தது.

இவனுக்கு தன்னுடைய வயலுக்குள் வந்ததும் ஒரே குதூகலமும், பேச்சி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து, பிள்ளைப் பிறப்பு கண்ட தாய் போன்றதொரு உணர்வும் மேலிட்டது. அவனையறிமாலே, கீழ்க்கண்டவாறு கத்திக் கூச்சலிட்டான்,

ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்
பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்
பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி!!

தனது வயலுக்குள் மகிழ்வாய் நுழைந்த பாலகனைக் கண்டு, கூரைச் சோறு கண்ட காகம் போன்றதொரு விரைவில், அவனது செல்ல நாய் பேச்சிஓடோடி வந்தது. தன் வயலுக்குள் காலடி வைத்த குதூகலத்துடனும், தன் செல்லத்தைக் காணுகிற மகிழ்வுடனும் பேச்சியை நோக்கி குதியாட்டம் இட்டவாறு ஓடுகிறான் பழமன்.

எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமனின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே.

பேச்சியும், நாக்கை வெளித் தள்ளிக் கொண்டு, மூச்சிரைத்தவாறு தலையை மேலும் கீழும் சில முறை அசைத்து விட்டு, குடுகுடுவென அருகில் இருந்த கம்பங் காட்டிற்குள் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஒத்தைச் செருப்பைக் கவ்வியவாறு வாலை ஆட்டிக் கொண்டு வந்து, குழைந்து நின்றது. இவனுக்கோ அது கண்டு, மட்டில்லாத மகிழ்ச்சி.

“அப்பாரய்யா! அப்பாரய்யா!! காணாமப் போன உங்க செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டான் பேச்சி, உங்க செருப்பு கெடச்சிருச்சீ!” என்று கத்தியபடியே, அவனது வயலில் இருக்கும் இரட்டைச் சாய்ப்பு சாளையை நோக்கி ஓடினான். பேச்சியும் அவனுடன் ஓடியது. ஆனால் அங்கு அப்பாரய்யனைக் காணாமல் ஏமாற்றமுற்றான் பாலகன். ”என்றா பேச்சி, அப்பாரய்யனைக் காணம்?” என வினவியபடியே, தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலனிடம் சென்றான்.

“ஏனுங்க எங்க அப்பாரய்யன்?”

“கண்ணூ, அப்பாரய்யன் சிக்கல்நூத்து போன அப்பத்தாவைக் கூட்டியாறதுக்கு நம்ம சவாரி வண்டீல மயிலைகளைப் பூட்டீட்டி போயிருக்காங்க கண்ணூ. இருட்டு கட்டுறதுக்குள்ள வாறமின்னு சொல்லிட்டுப் போனாங்க!”

“ம்ம்… நேத்தைக்கு ஊருக்குள்ள வந்த அப்பாரய்யன் ஒத்தைச் செருப்பை பேச்சி கொண்டு போய் எங்கயோ போட்டுட்டான்னு சொல்லுச்சு. நாங் கேட்டதுமே, பேச்சி போயிக் காட்டுக்குள்ள இருந்த செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டானுங்ண்ணா!”

“அவன் செரியான குறும்பு கண்ணூ, வாய்க்கா மேட்டுல வாறவிங்க போறவிங்களை எல்லாம் கடிச்சிப் போடுறான்!”

“ஏண்டா பேச்சி அப்பிடியெல்லாம் பண்றே?”

“ப்ளொள், ப்ளொள்” என்று செல்லங் கொஞ்சியது பேச்சி.

“செரிச்செரி, வாடா சாளைக்கு போகுலாம்!”

“ப்ளொள்!”

“அண்ணா, நான் சாளைக்கு போயி பேச்சிக்கி சோறு போட்டுட்டு வாறன்!”

“செரி கண்ணூ, பாத்துப் போ, எல்லாம் இப்பத்தான் தண்ணி பாஞ்சி ஈரமாக் கெடக்குது!”

சிறுவன் பழமனும், செல்லப் பிராணியான பேச்சியும் வயக்காட்டில் இருந்த பொழிகளின் மீது ஓடுவதும், நடப்பதுமாக மீண்டும் சாளைக்கே திரும்பி வந்தார்கள். சாளை இரட்டைச் சாய்ப்பு கொண்டது, பக்கவாட்டில் கால்நடைகளுக்கு என ஒரு ஒத்தைச் சாய்ப்பும் இறக்கப்பட்டு இருக்கும். இவன் முன்வாசலுக்கு சென்று பார்க்கவே, முன்கதவு பூட்டப்பட்டு இருந்த்து. அது கண்டு திண்ணையின் மேல் ஏறி, மேலே உள்ள சட்ட்த்தில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து, கதைவைத் திறந்து கொண்டு சாளைக்குள் சென்றான். ஆனால், பேச்சி மட்டும் வாயிற் படியிலேயே வாஞ்சையுடன் குழைந்து கொண்டு நின்றது.

உள்ளே சென்றவன், பேச்சிக்கென்று வழமையாக வைக்கப்பட்டிருக்கும் தூக்குப் போசியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அதில், சாமைச் சோறும், மோரும் கலந்த கூழ் இருந்தது கண்டு உற்சாகமடைந்து, தூக்குப் போசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். பேச்சியும் அது கண்டு துள்ளிக் குதித்தது. நேராக பக்கவாட்டில் இருந்த சாளைக்குள் சென்று, பேச்சிக்கென வைக்கப்பட்டு இருந்த தட்டில் சாமைக் கூழை ஊற்றி, “பேச்சி வாடா, வா!” என்றழைத்தான். பின், அவனுக்குப் பிடித்த அவனுடைய நுங்கு வண்டி அங்கு இருக்க்க் கண்டு, கவட்டிக் கோலால் அதை உருட்டி விளையாட ஆரம்பித்தான் பழமன்.

பேச்சி, நாக்கால் நக்கி கூழைப் பருகுவதும், வாஞ்சையுடன் எசமானனின் அருகே வந்து வாலை ஆட்டிக் குழைவதும், மீண்டும் வந்து கூழைப் பருகுவதுமென இருந்தது. அதற்குப் பசியாறவும் வேண்டும், அதேவேளையில் வந்த எசமானனும் தோழனுமாய் ஆனவனுடனும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்.

அது கண்டு, “டே பேச்சி, நான் உன்னிய உட்டுப் போட்டு எங்கியியும் போகுலடா, போ, பூராக் கூழும் இருந்து குடிச்சிட்டு வாடா!” என்றான் பழமன். ஆனாலும், அது இவனிடம் வந்து இரண்டு சுற்று சுற்றுவதும், பிறகு கூழ்க் குடிக்கப் போவதுமாகவே இருந்தது.

இவன் சாளைக்கு முன்னால் இருந்த களத்து மேட்டில், நுங்கு வண்டியை உருட்டி விளையாடுவதில் மும்முரமானான். களத்துமேடும், அதற்கேற்றாற்ப் போல் சாணத்தால் மெழுகி, வெகுசுத்தமாக இருந்தது. மனம் முழுக்க குதூகலமே குடிகொள்ள, தென்னை மற்றும் இலவம்பஞ்சு மரங்கள் அசைந்தாட, தென்றல் தவழ்ந்து வர, இயற்கையின் வெண்சாமர வீசலில் மனம் விட்டு, பாட ஆரம்பித்தான் பழமன்.

வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி

மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி
மேடுபள்ளம் கடந்துநல்லாப் போகும் வண்டி
கல்லமுட்டா வாங்கநல்லாப் போகும் வண்டி
கவிட்டியால தள்ளநல்லாப் போகும் வண்டி

வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி

ஆத்தா பலகாரம் சுமக்கும் வண்டி
தோப்பு காயெல்லாம் சுமக்கும் வண்டி
நோம்பிக்கு சிக்கநூத்து போற வண்டி
மயிலைகூடப் போட்டி போடும் வண்டி

வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி

வண்டி ஓட்டியதில் சலித்துப் போன பழமன், தாகம் தணிக்க மீண்டும் சாளைக்குள் சென்றான். அவனது அப்பத்தா எப்போதும் வைத்திருக்கும் கம்பங்கூழ்ப் பானையைத் துழாவி, அதில் இருந்து கொஞ்சமாக கம்பந்தண்ணீரைச் சிறுதாழியில் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பும் கலந்து, பின்னர் திண்ணையில் அமர்ந்து மாந்தினான். பழமன் மாந்தும் அழகினை வாலை ஆட்டியபடியே, கண் பிறழாமல் ஒரு விதமான லயிப்பில் ஆழ்ந்து, நெகிழ்ந்து, இரசித்துக் கொண்டு இருந்தது பேச்சி!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பேச்சி

  1. கதையோடு பாட்டும் கலந்து வந்த விதம், நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டது.  இயற்கையின் இதம் ஒவ்வொரு வரிகளிலும் ஊடுபாவாய் இழையோடி கண் முன் காட்சிப் படங்களாய் விரிவது அருமை. பாசம் நிறைந்த மனிதர்களின் கதகதப்பான அரவணைப்பில், இயற்கையின் மடியில், வளர்ப்புப் பிராணியின் மீது காட்டும் கொள்ளை அன்பின் அழகில், எளிமையின் நிறைவில் எல்லாம் அடைந்த‌ செல்வச் சீமானாய் பழமன் நுங்கு வண்டியோட்டுவதற்கு முன்னால் எது இணை?. உங்கள் கதைகளைப் படிக்கக் கிடைத்ததே பெருவாய்ப்பு. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி!!

  2. தெய்வாத்தா கடையில் கட்டுச் சோறு உண்டதிலிருந்து கம்பந்தண்ணீரை உப்பு சேர்த்து திண்ணையில் அமர்ந்து பேச்சியுடன் மாந்தியது  வரை, அருமையான இயற்கை காட்சிகளையும், அன்பு மிக்க மனிதர்களையும், பாசம் நிறைந்த  பேச்சியின் நட்பு என அனைத்தையும் மண்ணின்  மணத்துடன் விவரிக்கவும்; அத்துடன் அனைவரையும் அந்தக் காட்சிகளுடன் ஒன்றும்படி எழுதவும்  பழமைபேசியால் மட்டுமே  முடியும். பாராட்டுக்கள் பழமை பேசி. நல்ல கதையினைத் தந்தற்கு நன்றி. அருமை. 

    அன்புடன் 
    ….. தேமொழி 

  3. கிராமிய வளங்களை கதையின் இடையிடையே காட்டியதும் ஆங்காங்கே பாடல்கள் வந்ததும் ரசிக்கும்படியாக இருந்தது.

Leave a Reply to தனுசு

Your email address will not be published. Required fields are marked *