நாகேஸ்வரி அண்ணாமலை

நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவற்றில் ‘நைரோபி நேஷனல் மியுசியமும்’ ஒன்று.  கிழக்கு ஆப்பிரிக்கா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்கை ஆய்வாளர்கள் தாங்கள் சேகரித்த அரும்பொருள்களை சேகரித்துவைக்க ஒரு இடத்தைத் தேடியபோது மியுசியம் ஒன்று அமைக்க அரசு முடிவு செய்தது.  முதலில் ஒரு சிறிய இடத்தில் அமைக்கப்பட்ட மியுசியம் பின்னால் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களையும் சேமித்துவைக்கப் பெரிய இடத்திற்கு மியுசியத்தை மாற்றியது.  அதுவும் போதாமல் பின் இப்போது மியுசியம் இருக்கும் இடத்தில் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டி பல பிரிவுகளாக அதை அமைத்தது.  பிரிட்டிஷ் ஆட்சியில் கென்யாவின் கவர்னராக இருந்த ராபர்ட் கோரிண்டன் என்பவரின் பெயரில் (Robert Coryndon)  கோரிண்டன் மியுசியம் என்று அழைக்கப்பட்ட இது 1963-இல் கென்யா சுதந்திரம் அடைந்தபிறகு நைரோபி நேஷனல் மியுசியம் என்ற பெயர் பெற்றது.

இது நாங்கள் தங்கியிருந்த் ஓட்டலுக்கு மிக அருகாமையில் இருந்ததால் காலை எட்டரை மணிக்கு மியுசியம் திறப்பதற்கு கொஞ்சம் முன்னாலேயே அங்கு இருந்தோம்.  காலை அதைத் திறப்பதற்கு முன் தினமும் அதைச் சுத்தம் செய்வார்கள் போலும்.  சுத்தம் செய்யும் பெண்கள் கற்களினால் ஆன தரையை வாளியையும் துடைக்கும் துணியையும் கொண்டு துடைத்துக்கொண்டிருந்தார்கள்.  வளர்ந்துவிட்ட நாடுகளில் இப்படி கைகளினால் சுத்தம் செய்ய மாட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் மெஷின்கள் இருக்கும்.

மியுசியத்தின் முகப்பில் தாயும் சேயுமான பெரிய கற்களால் ஆன சிலை நம்மை வரவேற்கிறது.  ஒரு பக்கமாக பெரிய டைனஸோர் ஒன்றின் மாதிரி இருக்கிறது.  மியுசியத்தைச் சுற்றி பல வகைத் தாவரங்கள் அடங்கிய தோட்டம் இருக்கிறது.  அதில் பல அரிய மரங்கள், செடிகள் வளர்க்கப்படுகின்றன.

மியுசியத்திற்குள் முதல் முதலாக டிக்கெட் வாங்கி நுழைந்தது நாங்கள்தான்.  மியுசியத்திற்க்குரிய நுழைவுக் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு கென்யா நாட்டவர்களை விட மிகவும் அதிகம்.  எல்லா உல்லாசப் பயண இடங்களிலும் இப்படித்தான்.  அதிக தூரம் நடந்தால் எனக்குக் களைப்பாகிவிடும் என்பதால் இம்மாதிரி அதிகம் நடக்க வேண்டிய இடங்களில் சக்கர நாற்காலி ஒன்றை மியுசியம் அதிகாரிகளிடமிருந்து இலவசமாகவோ வாடகைக்கோ எடுத்துக்கொள்வதுண்டு. இங்கும் அம்மாதிரி கேட்டோம்.  அங்கு இரண்டே நாற்காலிகள்தான் இருந்தன.  இரண்டின் சக்கரங்களிலும் போதிய காற்றழுத்தம் இல்லையென்றும் காற்றை அடைத்துத் தருவதாகவும் கூறினார்கள்.  நம் நாட்டில் சைக்கிளுக்கு காற்றடிப்பது போலவே அந்த சக்கர நாற்காலியின் சக்கரங்களுக்குக் காற்றடித்தார்கள்.  இதுவும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.  மேலைநாடுகளில் இப்படிக் கைகளால் காற்றடிப்பதைப் பார்க்க முடியாது.

இந்த மியுசியம் கென்யாவின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும், கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துச் சொல்ல அமைக்கப்பட்டது.  கென்யாவின் காடுகளில் அதிகமாகக் காணப்படும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் நகரின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.  நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் கூட ஒரு ஒட்டகச்சிவிங்கியின் மாதிரி ஓட்டலின் முன் முகப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது.  கென்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மிருகங்களின் படங்களைப் பார்க்கலாம். கென்யர்கள் தங்கள் காடுகளில் இருக்கும் இந்த விலங்கினங்களால் மிகவும் பெருமை கொண்டுள்ளார்கள்.  அதன் அடையாளமாக எல்லா இடங்களிலும் இதன் மாதிரிகளைப் பார்க்கலாம்.

மியுசியத்திற்குள் நுழைந்தவுடனேயே பெரிய யானையின் மாதிரி ஒன்று இருக்கிறது.  மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட, பிரபலமான இந்த யானை இறந்த பிறகு அதன் உடலைப் பதப்படுத்தி மியுசியத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த மியுசியத்தின் ஒரு பகுதியில் இம்மாதிரி பல primates-களின் மாதிரிகளை வைத்திருக்கிறார்கள்.  இன்னொரு பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் பறவைகளின் மாதிரிகள் இருக்கின்றன.  கென்யாவின் சரித்திரத்தை விளக்கும் காட்சிப் பொருள்கள், படங்கள் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  பிரிட்டிஷ் அரசு போட்ட கென்யா-உகாண்டா ரயில்பாதை பற்றிய விபரங்களும் ரயிலின் மாதிரிகளும் அவை சம்பந்தப்பட்ட படங்களும் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  இக்காலத்திய கலைப் படைப்புகளும் ஒரு பகுதியை அலங்கரிக்கின்றன.  முதல் மனிதன் கென்யாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.  அதற்கு ஆதாரமாக அகழ்வாராச்சியில் கிடைத்த பல அரிய பொருள்கள் ஒரு பகுதியில் இருக்கின்றன.  தனியாக ஒரு பகுதியில் பாம்பு, ஆமை போன்ற ஊரும் மிருகங்களும் வளர்க்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து கென்யாவை விடுவித்து கென்யா சுதந்திரம் கிடைக்கக் காரணமாகயிருந்த் முதல் ஜனாதிபதி ஜேமோ கென்யாட்டாவின் வாழ்க்கை வரலாறு, அவர் பிரிட்டிஷை எதிர்த்துச் செய்த சாகசச் செயல்கள் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சியை இன்னும் சில மாதங்களில் இந்த மியுசியத்தில் திறக்கப் போகிறார்களாம்.  அது சில மாதங்கள் இங்கு இயங்கிவிட்டுப் பின் மற்ற மியுசியங்களுக்கு கொண்டுபோகப்படும்.  (இந்த கென்யாட்டாவின் மகன்தான் இப்போது ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவருகிறார்.  இவர் மேல் இனப்படுகொலை வழக்கு ஹேகில் உள்ள அகில உலக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  நாட்டின் நலனுக்காகப் பல தியாகங்கள் புரிந்த ஜேமோ கென்யாட்டாவின் மகன் ஊழல் வழக்கில் ஈடுபட்டிருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஊழல் புரிந்தவர்களையும் எல்லா நாடுகளிலும் தங்களை ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் போலும்.)

கென்யாவில் பல இடங்களில் இருக்கும் மியுசியங்கள் எல்லாம் National Museums of Kenya  என்ற அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.  எல்லா மியுசியங்களிலும் சிறந்ததாகக் கருதப்படும் நைரோபி நேஷனல் மியுசியம் 1930-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மியுசியத்தில் உள்ள கழிப்பறைகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் காணப்படும் கழிப்பறைகளுக்கு ஒப்பாக மிகவும் சுத்தமாக இருக்கின்றன.  கென்யாவில் எல்லாப் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன.  அநேகமாக எல்லா இடங்களிலும் ஐரோப்பிய மாடல் டாய்லெட்டுகளும் சில இடங்களில் அவற்றோடு இந்திய மாடல் டாய்லெட்டுகளும் இருக்கின்றன.  இந்தியாவில் பொதுக் கழிப்பறைகளை உப்யோகிப்பதை நினைத்தாலே தலை சுற்றும்.  ஏன் நம்மால் அப்படிக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை?

நைரோபியில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் உகுரு (Uhuru) பார்க் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பார்க்.  உகுரு என்றால் சுவாஹிலி மொழியில் சுதந்திரம் என்று அர்த்தமாம்.  கென்யா சுதந்திரம்அடைந்த பிறகு இப்பார்க்கிற்கு இந்தப் பெயர் வந்ததாம்.  இதில் 80,000 பேர் வரை கூடலாம்.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்ற பின் இந்தப் பார்க்கிலிருந்து மக்களுக்குத் தன் கொள்கைகளை அறிவிப்பாராம்.

இந்தப் பார்க்கிற்குள்ளேயே ஒரு சிறிய ஏரி இருக்கிறது.  அதில் பார்க்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் படகு விட்டு மகிழலாம்.  சிறு குழந்தைகளை சிறுவருக்கான சிறிய கார்களில் உட்காரவைத்து இதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பூங்காவிற்குள் உளள வீதியில் தள்ளிக்கொண்டே ஓடுகிறார்கள்.  இதற்குக் கட்டணம் உண்டு.  இப்படித் தள்ளிக்கொண்டே போவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  சிறு குழந்தைகளுடைய முகங்களில் பலவகையான வர்ணம் கொண்டு சித்திரம் தீட்டுகிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.  சிறு குழந்தைகள் பலர் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.  குழந்தைகளை மட்டக் குதிரையில் உட்காரவைத்து குதிரைகளை நடத்திக்கொண்டு போகும் பொழுதுபோக்கும் உண்டு.  குழந்தைகள் அதை வெகுவாக ரசிக்கிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.

இந்தப் பார்க்குக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  இது ஏழைகள் பலருக்குப் பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது.  நாங்கள் சென்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  அன்று பார்க்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அங்கு வந்திருந்தவர்களில் பலர் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் என்று அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது.  அங்கு விற்கும் தின்பண்டங்களும் நம் நாட்டு எள்ளுருண்டை, குச்சி ஐஸ் போன்றவை.  சிறு குழதைகளுக்கான பலூனும் விற்கப்பட்டன.  கொக்கோ கோலா மாத்திரம் இதற்கு விதிவிலக்கு.  எங்கும் வியாபித்திருக்கும் இறைவன்போல் இந்த கொக்கோ கோலா மாத்திரம் உலகின் எல்லா இடங்களுக்குள்ளும் எப்படியோ புகுந்துவிடுகிறது.

கென்யாவில் நாங்கள் ஒன்றைக் கவனித்தோம்.  இம்மாதிரி எளியவர்கள் வரும் இடங்களில் கென்ய நாட்டு இந்தியர்களைப் பார்க்கவில்லை.  இந்தியர்கள் பலர் ரயில்பாதை போடும்போது அதில் வேலைபார்க்க இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசால் தொழிலாளர்களாக முதல்ல் கொண்டுவரப்பட்டார்கள்.  வேலை முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு கென்யாவிலேயே தங்க விரும்பியவர்களை தங்க அனுமதித்ததாம்.  அவர்களில் பலர் வாணிபம் செய்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். பின்னர் வணிகம் செய்வதற்கென்றே இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்தவர்களும் உண்டு. இவர்கள் கென்ய நாட்டு மக்களோடு ஒன்றிப் பழகுவதில்லை.  கல்யாண சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை.  அவர்களுடைய குடியிருப்புகள் தனியாக இருக்கின்றன.  கென்யாவின் பொருளாதாரத்தில் அவர்கள் பங்கு முக்கியமாதலால் கென்ய மக்களும் அவர்கள் மீது வன்மம் பாராட்டுவது மாதிரித் தெரியவில்லை.  ‘கென்யமக்கள் நவீனத்தொழில் பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கு முன்பாகவே அவர்கள் தொழில் நடத்தி வசதியான நிலைக்கு வந்துவிட்டார்கள்’ என்று ஒரு டாக்சி ஓட்டுனர் கூறினார்.

(தொடரும்).

நைரோபி பற்றியும் மியுசியம் பற்றியும் சில படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

Nairobi

https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

Museum

https://picasaweb.google.com/108173580006522327175/NairobiNationalMuseum?authkey=Gv1sRgCMbKkI7C59_n9wE

 

படங்கள்: மெல்லியல்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கென்யா பயணம் – 3

  1. கென்யா நாட்டைப் பற்றியும் அதன் அருங்காட்சியகம் பற்றியும் தாங்கள் விவரித்திருக்கும் விதம் அருமை. தக்க புகைப்படங்களை அங்காங்கே இணைத்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதுகிறேன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *