தேமொழி

அபிக்கு மீண்டும் வகுப்புகள் ஆரம்பித்து அதில் மூழ்கிப் போனாள்.  ரிக்கியின் நினைவுகள் வரும்பொழுது புத்தகங்களையே வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள், தலையில் எதுவும் ஏறாது.  ரிக்கி ஆயுள் காப்பீடு  எடுத்திருந்திருக்கிறான். அந்த இழப்பீட்டுத் தொகை அவளுக்குக் கிடைத்தது.  அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தும் பொழுது வீர வணக்கத்துடன் முக்கோண வடிவில் மடித்துக் கொடுக்கப் பட்ட தேசியக் கொடிக்கு ஒரு கண்ணாடி போட்ட முக்கோண வடிவ மரப்பெட்டியை வாங்கி அதில் கொடியைப் பத்திரப் படுத்தி ரிக்கியின் புகைப் படத்திற்கு அருகில் வைத்துக் கொண்டாள்.

நவம்பரில் ‘வெட்டரன்ஸ்’ நாள் (veterans day) என்னும் வீரர்கள் தினத்தில் ரிக்கியின் நினைவு அவளை அதிகம் வாட்டியது.  அவனது பெற்றோர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவர்கள் மூன்று பிள்ளைகளையுமே நாட்டுக்காக இழந்தவர்கள், அவர்களுக்கு வலி அதிகமாகத்தான் இருக்கும். ஒருமுறை அவர்களைப் போய்ப் பார்த்து வந்தாலென்ன என்று தோன்றியது. வரும் தேங்க்ஸ் கிவிங் நாளுக்கு சென்று வர விமானப் பயணச் சீட்டு ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால் ரிக்கியின் பெற்றோர்களுக்கு அவள் வருவதைத் தெரிவிக்க விரும்பவில்லை.  வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டால் மீறி போவது நன்றாக இருக்காது. திடீரெனப் போய் எதிரில் நின்றால் அவர்களால் தவிர்க்க முடியாது என்று அபிக்குத் தோன்றியது.

*

மரங்களில் இருந்து இலைகள் உதிரத் தொடங்கியது, குளிர் சிறிது சிறிதாக அதிகரித்தது. ரிக்கியின் தந்தை வில்லியம்ஸ் தனது சக்கரநாற்காலியை உருட்டிக் கொண்டு போர்ட்டிகோவிற்கு வந்தார்.  வாசலில்  இருந்த பெரிய மக்னோலியா மரங்கள் ஏதோ அலுத்து சலித்துப் போனது போல அசைவற்று நின்றது.  பெரும்பாலான வீடுகளின்  வாசலில் தேங்க்ஸ் கிவ்விங் நாள் அலங்காரம் இருந்தது.  வைக்கோல் கட்டும்,  சில சோளத் தட்டைகளும், சோளக் கொள்ளை பொம்மைகளும், வாசல் கதவில் அலங்கார மலர் வளையங்களும் அல்லது குறைந்தது ஒரு ஆரஞ்சு வண்ணப் பூசணிக்காயாவது இருந்தது.

வில்லியம்ஸ்  குளிருக்கு இதமாக இருக்க  சிவப்பு கட்டம் போட்ட ஃப்ளேனெல் முழுக்கைச் சட்டை அணிந்து, பழுப்பு கார்டுராய் கால்சராயும் அணிந்திருந்தார். மடியில்  புத்தகமும், கழுத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட படிக்கும் கண்ணாடியும் இருந்தது.  ஆனால் படிப்பில் ஆர்வம் இல்லாது வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ரிக்கியின் அம்மா இரண்டு கோப்பைகளில் சூடான மால்ட் பானமும் அதில் மார்ஷ்மல்லோ கட்டிகளை மிதக்கவிட்டுக் கொண்டுவந்தார். வில்லியம்ஸின் அருகில் இருந்த முக்காலியில் அவரது கைக்கெட்டும் தூரத்தில் கோப்பைகளை வைத்தார். தனது தோளில் போட்டு எடுத்து வந்திருந்த சால்வையை வில்லியம்ஸின் தோளில் போர்த்திவிட்டு, போர்ட்டிகோவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார்.  மனைவி வந்ததோ, அதைத் தொடர்ந்து அவர் செய்த பணிவிடைகளோ வில்லியம்ஸிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.  சிலைபோலவே இறுகிய முகத்துடன் இருந்தார்.  அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் குறைந்து விட்டது.  ஏதோ மிச்சமிருக்கும் நாட்களை கழிக்க வேண்டுமே என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டும் மனப்பான்மையில் இருந்தார்கள்.

வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது இருவர் கவனத்தையும் கவரவில்லை.  விமான நிலையத்தில் இருந்த ஊர்திகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வண்டியை அபியே ஒட்டிக் கொண்டு வந்திருந்தாள்.  வண்டியின் கதவு திறந்து சாத்தப்படும் சப்தம் கேட்டு இருவரும் ஒரு சேர  திரும்பிப் பார்த்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை அசைத்து விட்டு வண்டியின் டிக்கியில் இருந்து ஒரு பெரிய தோல் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள் அபி.  அவளைப் பார்த்து எரிச்சலடைந்த வில்லியம்ஸின் தந்தை தனது மனைவியை நோக்கித் திரும்பி, “ஏன் இந்த கறுப்பி இங்கே வந்திருக்கிறாள்? நீ ஏதும் அழைத்தாயா? என்  நிம்மதியைக் குலைக்கவே பிறந்தவள் இவள்.  ஏதேனும் பணம் அல்லது உதவி என்று கேட்டால் துரத்திவிடு, இனி இந்தப்  பக்கமே வராதே என்று எச்சரித்து விடு,” என்றார்.

அவர் பேசியது எங்கே அபியின் காதில் விழுந்துவிடுமோ என்று கலவரம் அடைந்த ரிக்கியின் அம்மா, “நான் அழைக்கவில்லை, அவள் வரப்போவது எனக்குத் தெரியாது. சரி, சரி, நீங்கள் அமைதியாக  இருங்கள். இப்படிப்  பேசுவது அவள் காதில் விழுந்தால் அவள் வருந்த மாட்டாளா? என்ன இருந்தாலும் அவள் நம் ரிக்கியை மணந்தவள் இல்லையா? நீங்கள் எதுவும் பேசாதீர்கள். அவளிடம் நானே பேசிக் கொள்கிறேன்,” என்று மெதுவான குரலில் அவரைக் கண்டித்து விட்டு  எழுந்தார்.

“ஆமாம், இவளுடன் பேச எனக்கு என்ன இருக்கிறது?” என்று முணுமுணுத்தார் வில்லியம்ஸ்.  அவரது செய்கையால் ஆயாசம் அடைந்த அவர் மனைவி அவரைக் கண்களால் அடக்கிவிட்டு வாசலுக்கு வந்தார்.

“வா, அபி. என்ன இந்தப் பக்கம் நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை.”

“மாம், நீங்கள் மிகவும் மெலிந்து  விட்டீர்கள்,”  என்று கூறிய அபி ரிக்கியின் அம்மாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.  தோளில் தொங்கிய பையை போர்ட்டிகோவின் வாசல் கதவருகில் இருந்த ஆடும் நாற்காலியில் வைத்துவிட்டு, குளிருக்காக அணிந்திருந்த அங்கியின் தலைக் குல்லாவை நீக்கிவிட்டாள்.

“மாம், திடீரென முடிவெடுத்துப் புறப்பட்டுவிட்டேன், உங்களுக்குத் தெரிவிக்க அவகாசம் இல்லாமல் போனது,” என்றவள் சக்கரநாற்காலியில்  அவளை வரவேற்காமல், வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்த வில்லியம்ஸிடம்  சென்று அவரையும் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

“உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது டாட்?”

வில்லியம்ஸ் அவளைத் திரும்பியும் பார்கவில்லை.  அதை பொருட்படுத்தாத அபி  பையைத் திறந்து அதில் ரிக்கிக்கு இராணுவ மரியாதை செய்து முக்கோணமாக மடித்து அளிக்கப் பட்ட தேசியக் கொடியை அது வைக்கப் பட்டிருந்த முக்கோண மரப்பேழையுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே சென்றாள்.  ரிக்கியின் அம்மாவும் அவளைத் தொடர்ந்தார்.

“அபி, குளிருக்கு இதமாக சூடாகக் குடிக்க ஒரு சாக்லேட் பானம் செய்து தருகிறேன்,” என்றவாறு சமையலறைக்குச் செல்லத் திரும்பினார்.

“வேண்டாம் மாம், நன்றி.  இப்பொழுதுதான் விமான நிலையத்தில் பருகினேன்,  சிரமப்பட வேண்டாம், இந்தாருங்கள் இராணுவத்தினர் தந்த தேசியக் கொடி,  ரிக்கியின் படத்திற்கு முன் வையுங்கள்,” என்று கொடுத்தாள்.

“நீயே வைத்துவிடு அபி.”

சுவரில் வரிசையாக மாட்டப் பட்டிருந்த படங்களில் இராணுவ உடையுடன்  இருந்த ரிக்கியின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, பெரிய தாத்தா, அண்ணன், அக்கா, ரிச்சர்ட் என அனைவரும் அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல இருந்தது அபிக்கு.  பொதுவாக அனைவருக்கும் ஒரு சல்யூட் வைத்தாள். அனைவரது படங்களுக்கும் கீழே அவரவர் தேசியக் கொடி இருந்தது. ரிக்கியின் படத்திற்கு முன் இருந்த இடத்தின் கீழே மட்டும்  அந்த நீண்ட ஷெல்ஃப்  பலகை காலியாக இருந்தது. அபி அவன் படதின் முன்பு கொடியை வைத்துவிட்டு மீண்டும் அவனுக்கு மட்டும் ஒரு சல்யூட் வைத்தாள்.

அவன் திடீரென படத்திலிருந்து எழுந்து வந்து, அபி அவன் மீது பானம் ஊற்றிவிடுவாள் என்பது போல அச்சப்படுவதாக பாசாங்குக் காட்டி ஓடி சிரிக்க மாட்டானா என்று தோன்றியது அபிக்கு. முதல் முறை அவனைப் பார்த்த பொழுது இருந்த அதே போன்ற அவனது தனித் தன்மையான முத்திரைச் சிரிப்புடன் படத்தில் அவன் இருந்தான். அவன் படத்துக்கு ஒரு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பிவிட்டு அபி  திரும்பினாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது.  ரிக்கியின் அம்மாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.  அபி அவர் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் வெளியே வாசலுக்கு வந்தாள்.

அவளைத் தொடர்ந்த ரிக்கியின் அம்மா, “உன் படிப்பு எப்படிப் போகிறது அபி, வரும் கோடையில் முடித்து விடுவாயல்லவா?” என்றார்.

“ஆமாம் மாம். நன்றாகப் படிக்கிறேன், வரும் கோடையில் முடித்துவிடுவேன்.”

அபி பையைக் குடைந்து அதிலிருந்து சிறியகைப்பை ஒன்றை எடுத்து அதிலிருந்த ஒரு உறையை ரிக்கியின் அம்மாவிடம் கொடுத்தாள்.

“என்ன அபி இது?” என்றவாறு பிரித்தவர் அதில் உள்ள காசோலையை எடுத்துப் பார்த்தார். அதில் பெறுனர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ் என்று குறிப்பிடப்பட்டு நாநூறு ஆயிரம் டாலர்களுக்கு தொகை நிரப்பப் பட்டிருந்தது.

அவரது கேள்விக்குறியானப் பார்வையைப் புரிந்து கொண்ட அபி, “மாம், இது ரிக்கியின் உயிர்க் காப்பீட்டுத் தொகை. எனக்குச் சேரவேண்டும் என்றுக் குறிப்பிட்டு காப்பீட்டு பத்திரம் எடுத்திருந்திருக்கிறான். அதனால் எனக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.”

“நாநூறு ஆயிரம் டாலர்களுக்கு காப்பீடா!!! இராணுவம் வழங்கும் உச்ச காப்பீட்டு அளவுத் தொகை அல்லவா இது?”

“ஆமாம் மாம்.  காப்பீடு செய்தது தெரியும், ஆனால் இந்த அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு ரிக்கி செய்திருப்பான் என்று எனக்குத் தெரியாது.”

“அதை ஏன் நீ எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறாய் அபி? அவன் உன் நலனுக்காகக் கொடுத்திருக்கிறான். அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நீ சிரமப் படக் கூடாது என்பது அவன் நோக்கமாக இருந்திருக்கிறது. அதை நீ எங்களுக்குத் தர நினைப்பது தவறு. உன் படிப்பு முடிந்ததும் படிப்புக்காக நீ வாங்கிய கல்விக்கடனை அடைக்கலாம், ஒரு வேலை கிடைக்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தைத் தள்ள உதவியாயிருக்கும். ஒரு சிறிய ஊரில் நீ வாழ  நினைத்தால் தொகையில் ஒரு பகுதியைப் போட்டு சிறிய வீடும், மற்றொரு பகுதியை மூலதனமாக வைத்து உனது திட்டப்படி ஒரு தொழிலும் தொடங்க முடியும், அதனால் உன் எதிர்கால வாழ்க்கையும் சீராக அமையும், இந்தா இதைப் பிடி. ரிக்கியின் விருப்பத்துக்கு மாறாகா நீ இதைச் செய்வதோ, அதற்கு உடன்பட்டு நாங்கள் ஏற்றுக் கொள்வதோ சரியல்ல,” காசோலையை உறையில் போட்டு மீண்டும் அவளது பையிலேயே போட்டார் ரிக்கியின் அம்மா.

“இல்லை மாம். போர் முனையில் மரணம் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் ரிக்கியும் இவ்வளவு சீக்கிரம் அவன் வாழ்வு முடிவடையும் என நினைத்திருக்க மாட்டான்.  எங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் எப்படி திட்டமிடுவானோ அது போல முன்னெச்சரிக்கையாகத் திட்டமிட்டிருப்பான் போலும்.  அவ்வாறு ஏதும் பிள்ளை பிறந்திருந்தால் நானே உங்களிடம் இந்தப் பணத்தைத் தர எண்ணாமல் அவன் குழந்தையின் நல்வாழ்விற்குத்தான் பயன் படுத்துவேன். ஆனால் நாங்கள் சிறிது காலம் போகட்டும் என நினைத்ததால் குழந்தைகளைப் பற்றிய  எங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் போய் விட்டது.  இவ்வளவு பணம் எனக்கு எதற்கு? எனக்கு படிப்பு இருக்கிறது, உழைக்கும் காலம் இன்னமும் நிறைய இருக்கிறது, ஆர்வமும் இருகிறது. அந்த மூலதனமே எனக்குப் போதும்.  என் எதிர்காலத்தை நானே எதிர்கொள்வேன். டாடும் நீங்களும் சக்கரநாற்காலியை ஏற்றி இறக்கும் ஒரு வண்டியை இதில் வாங்கிக் கொண்டால் ரிக்கி நிச்சயம் மகிழ்வான், இல்லையா?”

அபி மீண்டும் பையிலிருந்து உறையை எடுத்து ரிச்சர்டின் அம்மாவின் கையில் திணிக்க முயன்றாள். அவர் தடுத்தார்.

அபி சக்கரநாற்காலிக்கு அருகில் சென்று வில்லியம்ஸின் முன் முழங்காலிட்டு அமர்ந்தாள்.  அவர் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், பொருட்படுத்தாமல் இன்னமும் சிலை போலவே அமர்ந்திருந்தார்.  அபி அவரது சட்டைப் பையில் உரையை மடித்துச் செருகினால்.  அவரது மடி மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு “என்னை மன்னித்துவிடுங்கள் டாட்,” என்றாள்.

அவர் மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தார்.  அபி தலையை உயர்த்தி கலங்கிய கண்களுடன் மீண்டும், “என்னை மன்னித்துவிடுங்கள் டாட்.  உங்கள் பரம்பரையின் சிறப்பைத் தொடர, உங்கள்  ஆசைப்படி,  இராணுவத்தில் பணியாற்ற ரிக்கியின் வாரிசை உங்களுக்கு என்னால் கொடுக்க முடியாமல் போய் விட்டது.  இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்,” என்றவள் எழுந்து வில்லியம்ஸை ஆறுதலாக அணைத்து மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் டாட்,” என்று சொன்னாள்.

ஆடும் நாற்காலியில் இருந்த தனது தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு ரிக்கியின் அம்மாவை அணைத்து அவர் கன்னத்திலும் முத்தமிட்டாள். பிறகு வாசலைக் கடந்து திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள்.  வண்டியில் ஏறும் முன்பு  கையசைத்து, “குட் பை, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ்,” என்று கூறி வண்டியைக் கிளப்பிச் சென்றுவிட்டாள்.

அதுவரை டாட், மாம் என்றவள் சட்டேன்று யாரோ முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை அழைப்பது போல மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் என்றதிலிருந்து நீங்களும் நானும் இனி யார் யாரோ, நமக்குள் இனி எந்தத் தொடர்பும் இல்லை, இனி நீங்களே அழைத்தாலும் உங்கள் வீட்டில் நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அபி குறிப்பால் உணர்த்தியது ரிக்கியின் அம்மாவிற்குப் புரிந்தது.  தனது மகன் அன்பு செலுத்திய ஒரே உயிரும் அவர்களை விட்டு நீங்கியது புரிந்தது.  அபியின் அந்த வேதனைக்குக் காரணம் அவள் வந்த பொழுது வில்லியம்ஸ் பேசியது அவள் காதில் விழுந்து விட்டதால் என்பதும் புரிந்தது.

ஒரு தேங்க்ஸ் கிவிங் பண்டிகையில் தொடங்கிய அவளது உறவு மற்றொரு  பண்டிகை சமயத்தில் முறிந்து விட்டது.  அவர்கள் அவளை சரிவர நடத்தாவிட்டாலும் அவள் அந்தக் குடும்பத்திற்கு தனது நன்றியைக் காண்பித்து விட்டாள். ஒரு பெருமூச்சுடன், வேதனை நிறைந்த முகத்துடன் ரிக்கியின் அம்மா வில்லியம்ஸைத்  திரும்பிப் பார்த்தார்.  இதுவரை சிலை போலவே இருந்த வில்லியம்ஸ் இப்பொழுது குலுங்கிக் குலுங்கி அழுது  கொண்டிருந்தார்.

(முற்றும்)

 

 

 

படம் உதவி:
http://www.front-porch-ideas-and-more.com/image-files/thanksgiving-106.jpg
http://i.ebayimg.com/t/Flag-Display-Case-Military-Shadow-box-with-Stand-Base-for-3-X-5-flag-FC35-OAK-/24/!B8nTciQ!Wk~$(KGrHqR,!hYEze!fILZiBM3kJcVGT!~~_35.JPG

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “சிலை அழுதது – 4

  1. கதையைப் படித்துவிட்டு வில்லியம்ஸைப் போலவே நானும் அழுதேன் தேமொழி. மிகச் சிறப்பாகக் கதையை (நகர்த்தி) முடித்திருக்கிறீர்கள். அபியின் பாத்திரப் படைப்பு வெகு அருமை; தியாகச் சிகரமாக அல்லவோ மிளிர்கின்றாள்!! என் மனமார்ந்த பாராட்டுக்கள் தேமொழி! hats off to you!!

    …அன்புடன் மேகலா

  2. கதை உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மேகலா, உங்களது பாராட்டிற்கு எனது மனமார்ந்த நன்றி. 

    இன வேற்றுமை அநீதியை அடிப்படையாக வைத்து எழுதிய கதை எவ்வாறு டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் புகழ் பெற்ற உரையின் ஐம்பதாவது ஆண்டு நாளில் கதையின் நிறைவுப் பகுதி வெளிவருமாறு அமைந்தது  என்று நான் மிகவும் திகைத்துப் போய் இருக்கிறேன். 

    என்னை அறியாமலே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்தது மட்டற்ற  மகிழ்ச்சியைத் தருகிறது.

    அன்புடன்
    ….. தேமொழி 

  3. அற்புதம், தேமொழி. கண்கள் கசிய வைத்த நடை. அபியின் பாத்திரப்படைப்பு தாக சிகரம் என்றால் வில்லியம்ஸ் “கல்லுக்குள் ஈரம்”. முடித்ததில் உள்ள முத்தாய்ப்பு கிழக்கு அமெரிக்க கலாசாரத்தை செவ்வனே பிரதிபலிக்கிறது.

    மேலும் எழுதுங்கள். உங்கள் ரசிகர்கள் பட்டியலில் இன்னொரு பெயர் சேர்ந்து விட்டது (அது நானே!).

    பி. கு: Thanks Giving பண்டிகையின் பொழுது மஞ்சள் பூசணிக்காயா? அது Halloweenக்கு தானே?

    அன்புடன்,
    ….. புவனேஷ்வர்

  4. மெல்லிய சோகம் கதை முழுக்க இழைவிட்டு ஓடி இதயத்தை நனைத்தது…
    அருமையான கதை சகோதரி… பகிர்விற்கு நன்றி.

  5. பாராட்டிற்கு நன்றி புவனேஷ்வர்.

    இலையுதிர் காலத்து விழாக்களில் அந்த காலத்தைக் குறிக்கும் நிறங்களை, ஆரஞ்சு, பழுப்பு போன்றவற்றை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அப்பொழுது கிடைக்கும் பொருட்களும் அலங்காரங்களில் இடம் பெறும். பூசணிக்காய்,சோளம் போன்று அறுவடைமுடிந்து கிடைப்பவையும் அலங்காரமாக வைக்கப்  பெறும்…
    thanksgiving decoration on porch என்று கூகிளில் image search
    செய்தால்  கிடைக்கும் படங்களில் விளக்கமாகக் காணலாம் .இங்கு நான் பயன்படுத்திய படம் அவ்வாறு கிடைத்ததுதான்.

    அன்புடன்
    …… தேமொழி 

Leave a Reply to தேமொழி

Your email address will not be published. Required fields are marked *