பிச்சினிக்காடு இளங்கோnew-oldimages

அருவியென அன்புமழை பொழிந்த பெற்றோர்
அரவணைத்து  மனம்குளிர வளர்த்த வர்கள்
உருவிழந்து முதுமைவந்து கொடிபி டிக்க
உள்ளத்தில் தளர்ச்சிவர உடல்ந டுங்க
கருவிகளால் துணைக்கோலால் பார்த்தும் கேட்டும்
கடத்துகிற வாழ்க்கையிலே இறுதி நாளில்
மருவுகிற குழைந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்
மரங்களைப்போல் நிழல்தந்தால் பெருமை கொள்ளும்

நீரூற்றி வளர்த்தபெரு மரங்க ளெல்லாம்
நிழல்வழங்கி அரவணைக்கும் கனிகொ டுக்கும்
யாரூற்றி வளர்த்தார்கள் பார்ப்ப தில்லை
யாரென்றும் எவரென்றும் கேட்ப தில்லை
வேரூன்றிப் போராடி வளர்ந்த பின்னே
விளைகின்ற பயன்களெல்லாம் மக்க ளுக்கே
பாருக்கே மழைவழங்கும் பசுமை கொஞ்சும்
பறவைகளும் விலங்குகளும் புசித்தும் மிஞ்சும்

நிழல்கேட்டு மரமலைதல் நீதி யாமோ
நீர்கேட்டு கடல்வாடி போக லாமோ
உழல்கின்ற மனத்தோடு பெற்றோ ரெல்லாம்
உருக்குலைந்து போவதற்கா பெற்றார் பிள்ளை
நிழலாக உடனிருந்து காக்க வேண்டும்
நிம்மதிதான் அவர்முகத்தில் மின்ன வேண்டும்
விழலுக்கு இறைத்ததென எண்ண லாமா
விதைத்ததெல்லாம் பதர்களென நோக லாமா

மனம்கனிந்து கருணையுடன் அணுக வேண்டும்
மனம்குளிர்ந்து பெற்றோர்கள் மகிழ வேண்டும்
குணமுடைய குழந்தைக ளேநிலைத்த சொத்தாம்
குன்றாத புகழுக்கும் அதுவே வித்தாம்
தனம்வேண்டாம்  தனக்குமிகு வளங்கள் வேண்டாம்
தம்மைப்பார்க்க கேட்கதம்பிள் ளைஇருக் கின்றார்
எனஎண்ணும் மனநிலையே போதும் போதும்
ஏங்காது வாழ்ந்திடுவார் நாளும் நாளும்

படத்துக்கு நன்றி

http://www.stockphotopro.com/photo_of/old/767938GDF/South_Asian_Indian_happy

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “மரங்களைப்போல்…

  1. “உழல்கின்ற மனத்தோடு பெற்றோ ரெல்லாம்
    உருக்குலைந்து போவதற்கா பெற்றார் பிள்ளை”

    அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய வரிகள்.
    சிறப்பான கவிதைக்கு நன்றி.

    ….. தேமொழி 

  2. உணர்வுப் பூர்வமான கவிதை வரிகள். இளைய சமுதாயம் நிச்சயம் படிக்க வேண்டிய கவிதை. வாழ்த்துக்கள்.

  3. சொல்லொண்ணாத் துயரமதை சொல்லிப் புரியா அவலமதை 
    தள்ளாத வயதில் தள்ளி வைக்கும் பெற்றோரின் மனக்குறையை 
    சொல்லென்னும் சுடும் நெருப்பால் உயிரோடு கொள்ளிவைத்தே 
    அல்லல் செய்யும் பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து 
    முள்ளாய்ப் போன வாழ்வும் இனியுமேனோ – எமன்
    சொல்லாமல் வந்து கொண்டுபோகும் நாளெதுவும் வரதாதோ 
    பொல்லாத உலகில் மனம் கல்லாகிப் போன மக்களுடன் 
    வாழ்வதும் இனி வீணே என்று காயமுற்ற இதயங்களுக்கு 
    இதமான ஒத்தனமே இக்கவிதை என்றுரைப்பேன்.

  4. இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர் இதனை மனதில் கொண்டால் போதும். நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள்.

  5. நீர்கேட்டு வாடிடும் கடல்கள்-
    பெற்றோர்,
    நிலைகாட்டும் கவிதை நன்று…!

  6. /**நிழலாக உடனிருந்து காக்க வேண்டும்
    நிம்மதிதான் அவர்முகத்தில் மின்ன வேண்டும்***/
    பணம் தேடி   தூரத்தில் பலர்
    மனம் பூட்டி  ஓரத்தில்  சிலர்
    பக்கமிருந்தும்   பார்க்கா உறவு
    வெட்கமிலாது  வாழும்  அறிவு
    பாரமென்று நினக்கும் சொத்தில்
    பாகம்மட்டும் கேட்கும் குழுமம்
    பாவத்தால் பெற்றவையாயினும்
    பாராட்டும் தினம் முதியோர்நாவே!

  7. பெற்றோரைப் பிள்ளைகள் எவ்வாறு பேண வேண்டும் என்பதனை மிக அழகாகக் கவிதையில் வடித்தெடுத்திருக்கும் பிச்சினிக்காடு திரு. இளங்கோ அவர்களுக்குப் பாராட்டுக்கள்!!

Leave a Reply to sathiyamani

Your email address will not be published. Required fields are marked *