சங்கர் ராமன்

அசலாக இருங்கள்
உங்களை யாரோடும்
ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்…
உங்கள் படைப்பின் நோக்கம்
வேறாக இருக்கும்

வித்தியாசமான மனிதர்களால் நிரம்பியது இந்த உலகம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும். “11 முட்டாள்கள் விளையாடுவத “ 11 ஆயிரம் முட்டாள்கள் உட்கார்ந்து ரசிக்கும் ஒரு சோம்பேறியான விளையாட்டு” என்று இன்று உலகமே கொண்டாடி வரும் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி விமர்சனம் செய்த ஒருவர்தான் பெர்னாட்ஷா. அவர் ஒரு தத்துவமேதை என்றே சொல்லலாம். சில தத்துவார்த்தமான பதில்களை அவரை விட வேறு யாரும் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. அவரின் விமர்சனத்திற்காக பலரும் காத்துக்கிடந்த காலம் அது… அவரையே பலரும் விமர்சித்த காலமும் அதுதான். பெர்னாட்ஷாவிற்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்ததாகக் கூறுவர். நாமெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி எங்காவது வெளியிடங்களுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்கிறோம் என்றால் என்ன செய்வோம்?… வீட்டில் உள்ள விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு சன்னல்களைப் பூட்டி விட்டு உள்ளே இருக்கும் அத்தனை கதவுகளையும் பூட்டி விடுவோம். முடிந்தால் சரியாக பூட்டியிருக்கறதா ? என்ற சந்தேகத்தால் அந்த பூட்டை இழுத்தும் பார்த்து விடுவோம். பெர்னாடஷாவிடம் இருந்த வித்தியாசமான பழக்கம் இதுதான். அவர் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது நாம் செய்வது போல எதையும் செய்யமாட்டாராம். மாறாக அனைத்து சன்னல் கதவுகளையும் திறந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவாராம். அவர் வீட்டிற்குள் இருந்தால் அத்தனை கதவுகளையும் உட்பக்கமாகப் பூட்டு போட்டு விட்டு யாராவது வந்து கதைவைத் தடடினால் மட்டுமே திறப்பாராம். வித்தியாசமான பழக்கம்தானே இது. ஒருமுறை செய்தியாளர் ஒருவர் பெர்னாட்ஷாவிடம், “ஐயா நீங்கள் எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டை பூட்டாமலும் வீட்டுக்குள் இருக்கும் போது உள்ளுக்குள்ளே பூட்டிவிடுகிறீர்களே ஏன்?” என்று கேட்டவுடன் “நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது ஏன் வீட்டைப் பூட்டுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு செய்தியாளரோ பூட்டவில்லை எனில் வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை யாராவது திருடிச் சென்று விடுவார்கள்” என்றார். பெர்னாட்ஷாவோ சிரித்துக் கொண்டே என்னை விட மதிப்புமிக்க பொருள் உயர்ந்த பொருள் என் வீட்டில் ஏதுமில்லை. அதனால்தான் நான் வெளியில் செல்லும் போது வீட்டை பூட்டுவதில்லை, என்னை திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே நான் இருக்கும் போது வீட்டை உள்ளே பூட்டி விடுகிறேன்” என்றார். திகைத்து நின்றனர் செய்தியாளர்கள். திகைத்தது செய்தியாளர்கள் மட்டுமல்ல நாமும் தானே…

உங்களைவிட மதிப்புவாய்ந்தவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தவரை காப்பியடித்து அரைநிமிடம் கூட நம்மால் வாழ்ந்துவிட முடியாது. மாற்றங்களை உங்களிடமிருந்து தொடங்குங்கள்.

உங்களைத் தவிர
வேறு யாராலும்
உங்களைப் போல வாழ்ந்திட முடியாது
என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். சிறு குழந்தைகளைப் பாருங்கள்… எவ்வளவு மகிழ்ச்சியாக வளர்கிறது. அந்த குழந்தைகளுக்கும் பல்வேறு சாயங்களைப் பூசி அவர்களின் வண்ணங்களை மாற்றியது நாம்தான். அவர்களிடம் நாம் செய்ய ஆசைப்பட்டு இயலாமல் போனவற்றையெல்லாம் நம் குழந்தைகள் மீது திணித்து நம் நகலாக மாற்ற முயற்சிக்கிறோம். அவர்களின் அசல் தன்மையினை அழித்து விடுகிறோம்.

உங்கள் குழந்தைகள்
உங்களுக்காக வந்தவர்களில்லை
உங்கள் வழியாக வந்தவர்கள்
என்ற அற்புதமான வரிகளைச் சொன்னவரை மறந்து விட்டோம்… யார் சொன்னால் என்ன?.. நல்ல வரிகள்தானே… நாம் ஆசைப்பட்டதைத்தான் நம் குழந்தைகள்தான் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை பாரதி ஏற்றியிருந்தால் இன்று அவனது கவிதைகள் உலகப் புகழ் பெற்றிருக்காது. எங்கோ ஓர் மூலையில் தந்தை சொல்படி பொறியாளர் வேலை செய்திருப்பான். ரைட் சகோதரர்களோ சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டியே தனது காலத்தை கடத்தியிருப்பார்கள். பறக்கும் விமானம் அவர்களுக்கு சாத்தியமில்லாமலே போயிருக்கும்.

“சமத்துக்கண்ணா.. இந்தா லட்டு சாப்பிடு… வெளியே கொண்டு போகாதே… இங்கேயே சாப்பிட்டுட்டு அப்புறமா விளையாடப் போகணும்..”. இந்த வசனத்தைக் கேட்டிருக்கிறீர்களா?.. நாம் எல்லோரும் அடிக்கடி கேட்கும் வசனம்தான்.. இனியும் கேட்கப்போகிறோம்… ஏனெனில் இது தொடரும் பாரம்பாரியம்தானே… என்ன கொடுக்கும் திண்பண்டத்தில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்… முறுக்கு, அதிரசம் அல்லது நவீன உலக பீட்சாவாகக் கூட இருக்கலாம். ஆனால் வார்த்தைகள் மாறுவதில்லை.

இந்த வார்த்தைகள் 130 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கத்தாவில் ஒரு வீட்டிலும் ஒலித்தது. நரேந்திரா.. நீ சொல்லும் எதையும் கேட்கவே மாட்டாயா? நீ கொண்டு போகும் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கே கொடுத்து விட்டால் உனக்காக நீ எதை வைத்துக்கொள்ளப் போகிறாய்” என்று நரேந்திரனின் தாயார் சத்தமிட நரேந்திரனோ எனக்காக இந்த உலகமே இருக்கிறது” என்றானாம். அடுத்தவருக்காக அதிகமாக உதவி செய்கிறான் என்பதால் அவருடைய பெற்றோர் அவரை ஒருநாள் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார்கள். நரேந்திரன் அசராமல் சன்னல் வழியாக ஆடைகளை வீசி ஏழைகளுக்கு எறிந்தான். அந்த நரேந்திரன்தான் பின்னாளில் விஸ்வரூபம் எடுத்த விவேகானந்தர். சிறு வயதிலிருந்த அவரது குணமே அவரின் அடையாளமாக மாறியது. அவரது குருவான இராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வாழ்ந்தவர் விவேகானந்தர். இராம கிருஷ்ணரின் நகலாக வாழவில்லை. இதனாலே இன்று விவேகானந்தரை உலகம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர்தான் விவேகானந்தர். இராமகிருஷ்ணரின் ஒரே சீடர் விவேகானந்தர் அல்ல.. அவருக்குப் பின்னால் வந்த சீடர்கள் யாரும் ஏன் விவேகானந்தர் போல ஜொலிக்கவில்லை. அவர்கள் தங்களின் தனித்தன்மையை அடையாளப்படுதிதிக் கொள்ளவில்லை. இன்னொரு இராமகிருஷ்ணராக முயற்சி செய்தார்கள்… விளைவு.. அவர்களால் தங்களின் தனித்தன்மையை அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

உலகத்தில் எந்த ஜீவராசிகளும் மற்ற ஜீவராசிகள் போல காப்பியடித்து வாழ முயற்சிப்பதில்லை. மனிதனைத்தவிர… “உங்க வீட்ல கரண்ட் இருக்கா” நமது வீட்டில் மின்சாரம் தடைபட்டவுடன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து நாம் கேட்கும் கேள்வி. அவர்கள் வீட்டிலும் மின்சாரம் இலலையென்றால்தான் நமக்கு ஒரு ஆத்ம திருப்தி. தொலைக்காட்சி பெட்டிகள் பிரபலமாகாத காலத்திலேயே பக்கத்து வீட்டில் டி.வி. இருந்தால் நமது வீட்டில் ஆண்டணாவை மாட்டி அழகு பார்த்தவர்கள் நாம்… அந்த பழக்கம்தான் இன்று வளர்ந்து கணினியாகவோ செல்பேசிகளாகவோ வளர்ந்து நிற்கிறது எனலாம். உங்கள் மனதிற்குள் அடிக்கடி சொல்லி வாருங்கள். உலகின் மிகச்சிறந்த மனிதர் நீங்கள்தான் என்று…

சாதனையாளர்களும் சிந்தனையாளர்களும் சொல்லிச்சென்ற வாசகம் ஒன்று உள்ளது
“யாரையும் பின்பற்றி வாழலாம்
எவரையும் காப்பியடிக்காதீர்கள்”

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நம்பிக்கை….. அதானே எல்லாம்!

  1. ///”உங்களைத் தவிர
    வேறு யாராலும்
    உங்களைப் போல வாழ்ந்திட முடியாது” ///

    ///“யாரையும் பின்பற்றி வாழலாம்
    எவரையும் காப்பியடிக்காதீர்கள்”///

    மிகச் சரியான வரிகள். கலை, இலக்கியம், மருத்துவம் அறிவியல் என எந்தத் துறையிலும் தந்தைக்குப் பின் தொடர்ந்து மகனோ/மகளோ அந்தத் துறையில் ஈடுபடும் பொழுது, அப்படியே காப்பியடிப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை. தொழிலைக் கற்றுக் கொண்ட பின் தனது தனித்தன்மையை வெளிப்படுத்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

    அருமையான பகிர்வு. நன்றி.

Leave a Reply to சச்சிதானந்தம்

Your email address will not be published. Required fields are marked *