விசாலம்

 

‘ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன் மேல ஓடம் போல வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே’ ஆஹா என்ன அருமையான வரிகள் இது போல் வாழ ஆசைதான். ஆனால் இது சுலபமாகவா இருக்கிறது. சம்சார சாகரத்தில்  ஆசை என்ற அலைகள் அதன் மேல் வாழ்க்கை என்ற ஓடம் அதை நாம் ஓட்டவேண்டும். கடல் அலைகள் மெதுவாக மனதுக்கு இதமாகவா வருகின்றன! இல்லையே! அவை தன் இஷ்டப்படி வந்து  கரையில் வந்து மோதிவிட்டு செல்கின்றன அதில் வாழ்க்கை ஓடம் ஓட்டவேண்டுமென்றால்? நானும் பல ஆசைகளை மனதில் சுமந்தபடி என் வாழ்க்கை ஒடத்தை ஓட்டியபடி ஐம்பதாவது வருடத்தில் நுழைந்து விட்டேன் என்னையும்  பல ஆசை அலைகள் வந்து மோதின, சிறு வயதில் என் பெற்றோர்கள் அதை ஓட்ட பல ஆசைகள் எனக்கு நிறைவேறின. ஆனால் என் திருமணம் பின் என் பல ஆசைகளை எனக்கு தியாகம் செய்ய வேண்டி வந்தது.

எனக்கு சிறு வயதிலிருந்தே மழை  பெய்யும் போது நனைய பிடிக்கும் வீட்டிலும் ஷவரில் தலையைக்காட்டி பூத்தூவல் போல் நீர் விழுவதை மிகவும் ரசிப்பேன்.என் வீட்டில் பெரியம்மா அத்தை போன்றவர்களின் ஷஷ்டியப்தபூர்த்தியின் போது  அவர்கள் தலையில் குடத்தில் பூஜை செய்த நீரை சல்லடையைப்பிடித்தபடி கணவர்மார்கள் விடுவார்கள். சில்லென்று அவர்கள் தலையில் அதுவிழ அவர்கள் உடலைச்சிலிர்த்துக்கொண்டு மிகப்பெருமையுடன், ஒரு புனித சடங்காக அதைப்பெற்றுக்கொள்வார்கள். எனக்கு அதைப்பார்க்க மிக ஆசை. அந்தக்காட்சியைப்பார்த்த பின்னர் எனக்கும் இது போல் என் கணவர் என் தலையில் தண்ணீர் விடும் நாளை நினைத்து மகிழ்வேன். இந்தச்சிறுவயது ஆசை என்னைத் தொடர்ந்தது. திருமணமும் நடந்தது. எனக்கு எல்லோருடைய பிறந்த நாட்கள். திருமண நாட்களைக்கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும் என்னுடையதையும் சேர்த்துத்தான். என் சகோதர, சகோதரிகள் நெருங்கிய உறவினர்கள். பாசம் கொட்டும் நணபர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகளைத்தெரிவிப்பதில் என் மனதுக்கு அப்படி ஒரு ஆனந்தம் ஏற்படும். ஆனால் என் கணவரோ அதற்கு நேர் எதிர்விரோதம். என்ன! பிறந்த நாள் வரும் போகும் இதை எதற்கு கொண்டாட வேண்டும்?  என்பார். திருமண நாளைக்கொண்டாட நினைத்தால், நான் தான் மாட்டிக்கொண்டுவிட்டேனே என்றும், அந்த பயங்கர நாளை ஞாபகப்படுத்தாதே என்றும் ஜோக் அடித்தபடி நகர்ந்துவிடுவார். என்ன இவர்! ஒரு பெண்ணின் உணர்ச்சிகளைப்புரிந்துக்கொள்ளாமால்,என்று நினைத்தபடி என் ஆசைகளுக்கு ஒரு கடிவாளம் போட்டுக்கொள்வேன். என் மேல் பாசம் அதிகம் இருந்தும் அவர் அதை ஒரு பொழுதும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். கோபம் அடிக்கடி வந்து விடும் .ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பது போல்  பல நல்ல குணங்களும் இருக்கும். நான் என் பிறந்த நாளிலோ அல்லது திருமண நாளிலோ அவரிடமிருந்து அன்பான வாழ்த்துகளை எதிர்ப்பார்ப்பேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் .அதற்காக நானும் விடுவதில்லை. காலையில் ஒரு கோயிலுக்குச்சென்று ஈசனிடம் பிரார்த்தித்து ஈசனின் வாழ்த்துகளை வேண்டுவேன். இது வரை அவர் எனக்கு ஏதேனும் வகையில் என்னை வாழ்த்தி அவரது தரிசனம் தந்துவிடுவார். சில சமயம் அந்தச்சிலையிலிருந்து பூக்கள் விழும் .சில நேரம் பூஜை செய்யும் சாஸ்திரிகள் நான் கேட்காமலே மல்லிகைச்சரம் ஒன்றை அளிப்பார். சில நேரங்களில் பாண்டிச்சேரி அன்னையிடமிருந்து பிளெஸ்ஸிங் பேக்கட் வரும். எப்படியோ இதில்  என் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடையும்.

முதன் முதலாக நான் தாய்மை அடைந்த போது எனக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது எதனால் என்று சொல்லட்டுமா?  ஆம் எனக்கும் சீமந்தம் வரும்.அந்த நிகழ்ச்சியில் என் கணவர்  என் தலையில் பூஜை செய்து வைத்திருக்கும் குடம்  நீரை என் தலையில்  விடும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமே என்றுதான். நீ சரியான குழந்தைதான்” என்று என் அம்மா சிரித்ததும் ஞாபகம் வருகிறது .என் கணவர் முதலில் மறுத்து விட்டார். பின்னர்  பிறக்கப்போகும் குழந்தையின் நலனைக்குறித்து பல பெரியவர்கள் எடுத்துரைக்க ஒப்புத்துக்கொண்டார்  அன்று நடந்த இந்த நிகழ்வு என் மனதில்  இன்றும் பசுமையாக இருக்கிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு இன்று வரை அது போல் வேறு ஒன்றும் நடக்கவில்லை பொறுமையாக சஷ்டியப்த பூர்த்திக்கு காத்திருந்தேன். அறுபது வயதில் சாந்தி செய்துக்கொள்ள வேண்டும் என்று பல உறவினர்கள் எடுத்துரைத்தும் மறுத்துவிட்டார். அந்த சான்ஸும் போச்சு. திருமணம் முன் பல நாடகங்களில் நடித்தும்  வயலின் .வாய்ப்பாட்டு என்றும் பல நிகழ்ச்சிகள் கொடுத்து வந்த நான் தில்லிக்கு புதுமணப்பெண்ணாக நுழைந்தேன். மிகவும் வித்தியாசமான வாழ்க்கை   என் கலைகளெல்லாம் மூட்டைக்கட்டி வைக்கும் நிலை.என் ஆசைகளுக்கும் ஒரு நங்கூரம். என்ன செய்வது வாழ்க்கை என்ற ஓடம் அமைதியாகப்போக வேண்டுமென்றால் புகுந்தவள் பல தியாகங்கள் செய்ய வேண்டும். 1950 வரை பிறந்தவர்கள் நிலை இப்படித்தான் அநேகமாக இருந்திருக்கும். கணவன் முன்னே செல்ல நாலடி பின்னே நடக்கும் மனைவி என்ற நிலை. இதற்கு ஓரிண்டு விதிவிலக்கு இருக்கலாம் .விட்டுக்கொடுக்கும் தன்மை. பொறுமை, மன்னிப்பு என்ற குணங்கள் இருந்தால் தான் கடைசிவரை  சம்சாரம் என்ற வண்டியை  ஓட்ட முடியும். நடுநடுவே வண்டிச்சக்கரம் மக்கர் செய்து ஓட மறுத்தாலும் அதை எப்படியாவது ரிப்பேர் செய்து வண்டியைத் தொடர்ந்து ஓட்ட வேண்டும் என்ற நிலை அந்தக்காலத்திலிருந்து என் ஜெனரேஷன் வரை தொடருகிறது    ஆனால் இப்போது இருக்கும்  சூழ்நிலையை [generationgap] பார்த்தால் மனதில் ஜீரணிக்கமுடியவில்லை.

போன வருடம் என் ரேய்க்கி ஹீலிங்கில் ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் திருமணம்ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது ஆனால் இருவரும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் வலுத்து என்னிடம் வந்தனர். இதன் காரணத்தைத் தனித்தனியே நான் அவர்களைக்கேட்டேன். அவர்கள் சொன்ன  காரணத்தைக்கேட்டால் எல்லோருக்குமே சிரிப்புத்தான் வரும் . அவர்கள் காதலிக்கும் போது காதலன் முட்டை ஆம்லேட் தின்னமாட்டேன் என்று அவளிடம் சத்தியம் செய்தானாம். ஆனால் ஒரு ஆறுமாதம் கழித்து சத்தியத்தை மீறி வீட்டில் ஆம்லெட் செய்தானாம். இது தான் காரணம் இந்தச்சின்ன சண்டை வலுத்து டைவர்ஸ் வரை போய் நின்றது. இந்தக்கால நிலை இப்படி இருக்கிறது. இந்தச்சின்ன விஷயத்திற்கே பொய் சொன்ன கணவரை நான் எப்படி நம்புவது?” என்று வாதாடினாள் அந்தப்பெண் என் பாட்டி காலத்தில் தன் கணவன் எதிரே அமர்ந்து கூட பேசாமல் கணவரது பெயரைக்கூட சொல்லாமல்  கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை மனதிலே கொண்டு அவர் சேவைக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை நடத்தினர். அங்கு ஆண் பெண் உறவு மிகப்புனிதமாகக்கருதப்பட்டது.   அதற்கு அடுத்த கட்டத்தில் கணவரின் கருத்துக்களைகேட்டு நடுநடுவே தன் கருத்துக்களையும் சொல்லும் தைரியம் வந்திருந்தாலும் கடைசியில் கணவரின் கருத்தே செல்லுபடியானது. வீட்டுக்குத்தலைவர் ஆன அவரைக்கண்டு அவர் குழந்தைகளும் நடுங்கும் .மூன்றாவது கட்டத்தில் பெண்ணும் நன்கு படித்து ஆணுக்கு சமமாக வெளியில் வேலை செய்ய ஆரம்பித்தாலும், தன் கணவர் மீது மதிப்பும் ,மரியாதையும் கொண்டு வீட்டு வேலைக்கும் முதலிடம் கொடுத்து வந்தாலும் நடுநடுவே தனது கருத்துக்களைச்சொல்லி அவருக்கு புரிய வைத்து அவர் பெயரையும் தயக்கமில்லாமல் சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் வந்தது. நாலாவது கட்டத்தில் இருவரும் சரிக்க்கு சமம் என்று வீட்டு வேலைகளிலும் பங்கு  போட்டுக்கொண்டு செய்ய அங்கு  ஒரு விதமான தன்முனை பிரச்சனை தலைத்தூக்கி எடுத்தது  ஐந்தாவது கட்டம் தற்போது பார்க்கும் கட்டம் கணவர் கணவனாகி   பின் அவனது பெயர் வந்து “ஏண்டா லேட், எங்கேடா போயிருந்தே” என்று கேட்கும் அளவுக்கு முன்னேறிவிட்டது. இந்தக்கட்டத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மிகக்குறைந்து ஈகோ அதிகமாகி இரண்டு வருடங்கள் ஆவதற்குள் டைவர்ஸில் வந்து முடிகிறது .இன்னும் சொல்லப்போனால்  திருமண பந்தமே இல்லாமல் ஒரு துணை தேவை என்ற நிலை வர தலைப்பட்டிருக்கிறது. இது போல் பல விளம்பரங்கள் பார்த்தேன்.

சரி என் கதைக்கு வருகிறேன் .வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி என் ஐம்பதாவது வருட திருமண நாள் வருகிறது {golden jubiilee}. இதற்காவது என் கணவர் கொண்டாட ஒப்புத்துக்கொள்ள வேண்டுமே, செய்வாரா தெரியவில்லை ஆனால் குழுவில் இருக்கும் சகோதர சகோதரிகள். மகன், மகள்கள் எல்லோரும் என்னை வாழ்த்தி குஷிப்படுத்தி விடுவீர்கள் என்ற நம்பிக்கை. தேய்ப்பிறை சந்திரன், வளர்ப்பிறை சந்திரன் போல் உடல் நலமும்  ஒரு நிலையில் இல்லை. ஆகையால் நீங்கள் வாழ்த்தி அனுப்பும் நற்றலைகள் எனக்கு நல்ல பாசிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “‘ஆசையே அலைப்போல’

  1. ஐம்பதாவது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா.  

    அன்புடன்
    ….. தேமொழி 

  2. கணவனை வாடா போடா எனபது பரவாயில்லை. உயிருக்குள் கலந்த கணவனை, மனசுக்குள் மரியாதை இருந்து, அப்படி பாசமாக அழைத்தால் என்ன? புரிந்து கொள்ள பிரயத்தனம் பண்ணாத கணவனை மனசுக்குள் மரியாதை இழந்து பேருக்கு “வாங்க போங்க” என்று மரியாதை காட்டுவதில்தான் சாரமுண்டோ? மனைவியிடம் நட்பையும் பாசத்தையும் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். போலி/வெளிப்படையான மரியாதையை அல்ல.

    (மனைவி மனசிலிருந்து அந்த மரியாதை சிலருக்கு கிடைக்கும். அதை அடைந்தவன் கொடுத்து வைத்தவன்.)

    நம் துணை நமக்காக கஷ்டப்படுகிறார், த்யாகம் செய்கிறார் என்கிற போது “ஆஹா, நாம் இவருக்கு முக்கியம்” என்ற சந்தோசம் ஏற்படுகிறது. சின்ன வயசில் (இப்போதும் கூட) அம்மாவிடம் “என்னமோ போல இருக்கும்மா, ஜுரம் வர்றா மாதிரி இருக்கும்மா” என்று சொல்லி, அம்மா கரிசனத்தோடு கொஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கும் வளர்ந்த குழந்தைகள் (பையன்கள், பெண்கள் ரெண்டும் தான்) உண்டு.

    இன்றைய தன்முனைப்பு வாழ்வியல் (individualism) என்னமோ புரியவில்லை. மனைவி/கணவன் என்பவள் வெளியில் நடமாடும் உயிர் அல்லவோ? தியாகம் இருபக்கமும் செய்யப்பட வேண்டியது.

    “மடந்தையோடும் எம்மிடை நட்பு” என்று சொன்னது தமிழ்க் கிழவன். சக்ய பாவம். உலக வழக்குக்காக கணவன் தலைமையில் அடங்கி இருப்பது போல “காட்டிக் கொண்டாலும்” வாஸ்தவத்தில் மனைவியும் கணவனும் நெஞ்சம் ஒருமித்த நண்பர்களாக இருத்தலே உத்தம தம்பதிகள் செய்வது என நினைக்கிறேன். (ராமனுக்கு அறிவுரை சொன்னாளே சீதை, தண்டகாரண்யத்தில்? அதை ராமனும் பாராட்டி பூரித்து மகிழ்ந்தானே!).

    குழந்தையோ கிழவியாரோ, ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு தாய் உண்டு. ஒருத்தனால் தாயாகப் பார்க்கப்படுபவள், (யாராக இருப்பினும்) அவனுக்குத் தாயாகவே மாறுகிறாள். மனைவிக்குள்ளும் ஒரு தாயை பார்ப்பவன், இனி இழப்பதற்கு எதுவுமற்ற பாக்யசாலி. பெற்ற தாயையே மதிக்காதவன் எல்லாம் இருந்தாலும் எதையுமே அடையாத மூர்க்கன்.

    உடலின் வளர்ச்சி போல இவை உறவின் வளர்ச்சிகள். அதன் அதன் அடுத்த கட்டம் பழம் பழுப்பது போல நிகழ வேண்டும். நாமாக தடி கொண்டு பழுக்க வைத்தால் வெம்பி விடும்.

    சரி. இருபத்தி எட்டு வயசு பிரம்மச்சாரி இதற்கு மேலே இதைப்பற்றிப் பேசக்கூடாது அல்லவோ? உம்மாச்சி கண்ணைக் குத்திடும் (அவன் குத்தினா கண்ணு திறக்கும்) 🙂 :).

    ஐம்பதாவது பிறந்தநாள் காணும் விசாலம் அம்மையாருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்த வயதில்லை.

    பணிவன்புடன்
    புவனேஷ்வர்

  3. அம்மா அவர்களுக்கு ஐம்பதாவது திருமண நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply to புவனேஷ்வர்

Your email address will not be published. Required fields are marked *