ஜோதிர்லதா கிரிஜா

“சந்துரு சார்” என்று சுருக்கமாய் அழைக்கப்படும் தன் அலுவலர் சந்திரசேகரன் கொஞ்ச நாள்களாய்த் தன்னைப் பார்க்கிற பார்வையே சரி யில்லை என்று நளினிக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. சில ஆண்களைப் போல் அருவருப்பை உண்டாக்கும் பார்வையை அவள் மீது அவர் என்றுமே படரவிட்டவர் அல்லர்தான். ஒருகால், அம் மனிதன் தனக்கு எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வலிய விளைவித்துக்கொண்ட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுகிறாரோ என்னவோ என்னும் எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. எனினும், கடந்த சில மாதங்களாய் அவரது பார்வையில் ஒரு வேறுபாட்டை அவள் தெளிவாய்த் தெரிந்து கொண்டிருந்தாள். பார்வை தப்பானதாக இல்லாவிட்டாலும் அதில் ஓர் ஆழத்தையும் ஏதோ சொல்ல வந்து அதை ஒத்திப்போட்டுக்கொண்டு இருந்ததையும் உள்ளுணர்வாய் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு நாற்பது வயது என்பதும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் புற்று நோய்க்கு தன் மனைவியைப் பறி கொடுத்தவர் என்பதும் அந்த அலுவலகத்து ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். முப்பத்தைந்து வயதுக்குள் மனைவியைப் பறிகொடுத்துவிட்டு அதன் பின் மறுமணம் பற்றிச் சிந்திக்காமல் இருந்து வந்தவராய்த் தோன்றிய அவர் மீது எல்லாருக்குமே ஒரு மரியாதை இருந்தது. அவ்வலுவலகத்தைச் சேர்ந்த தலைமை எழுத்தர்கள், சக அலுவலர்கள் ஆகியோர் திருமண வயதில் தங்களுக்கு மகள்கள் இருந்த நிலையில் அவரை வளைத்துப் போட முயன்றது உண்டுதான்.  ஆனால், அந்த எண்ணம் தமக்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். இந்தத் தகவலும் எல்லாருக்குமே தெரியும்.

இந்த நிலையில், தன்னை அவர் அண்மைக் காலமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வித்தியாசமான பார்வை நளினியைப் பாதித்தது. அவளும் அதனால் அவர்பால் கவர்ந்திழுக்கப்பட்டாள் எனும் பொருளில் அன்று. அது அவளுக்குப் பிடிக்கவில்லை எனும் பொருளில்தான் அந்தப் பாதிப்பு இருந்தது.  வாயைத் திறந்து ஒரு மனிதர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தாத வரையில் வெறும் பார்வைக்கு என்ன விதமாய் எதிரொலிப்பது என்று அவள் மலைத்தாள். தன் மேலதிகாரியை எரிச்சலோடு திருப்பி முறைத்துப் பார்ப்பது என்பது அவளது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அப்படி யெல்லாம் ஓர் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் இளம் பெண் தன் அலுவலரை முறைத்துக்கொள்ள முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. எனவே அவர் வாய் திறந்து அந்தப் பார்வை மாற்றத்துக்கான காரணத்தைத் தாமாகவே வெளிபடுத்துகிற வரையில் பொறுமையாக இருக்க வேண்டியதுதான் என்று காத்திருப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அவள் காத்திருந்தாள்.

இவ்வாறு அவரது பார்வை மாற்றத்தை அவள் கவனிக்கத் தொடங்கியதன் பின் சுமார் ஆறு மாதங்கள் கழித்து அவள் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது.

வாய்மொழிக் கடிதங்களை வழக்கம்போல் சொன்னதன் பிறகு, “மிஸ் நளினி! உங்க கிட்ட நான் ஒரு பெர்சனல் விஷயம் பேசணும். நீங்க சம்மதிச்சா நாம வெளியே எங்கேயாவது ஓட்டலுக்குப் போய் காப்பி குடிச்சுக்கிட்டே பேசலாம். இல்லே, அதுக்கு நீங்க சம்மதிக்கல்லேன்னா, நீங்க சொல்ற எந்த எடத்துக்கும் நான் வரத்தயார்…. இல்லாட்டி, இங்கேயே கூட நான் அதைச் சொல்ல முடியும்,” என்று சன்னமாய்ச் சற்றே பிசிறடித்த தயக்கமான குரலில் கூறிய நேரத்தில் பாதி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவர் அவளை நேரடியாய்ப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டார்.

இப்படி ஒரு பேச்சை எதிர்பார்த்திருதவளாதலின், எவ்வாறு அதற்கு எதிரொலிக்க வேண்டும் என்பது பற்றி யோசித்து ஏற்கெனவே முடிவு செய்துவைத்திருந்த அவள், “என்ன சொல்லப் போறீங்க, சார்? ஓரளவுக்கு நான் ஊகிச்சேன்.  ஆனா அதை உங்க வாயிலேர்ந்து கேட்டதுக்கு அப்புறம் என் பதிலை நான் சொல்றேன்!” என்ற நளினியை அவர் சட்டென்று தலை உயர்த்தி வியப்புடன் பார்த்தார். ஏனெனில், அவள் குரலில் தேசலோ, தடுமாற்றமோ துளியும் இல்லை. அவளும் அவரை நேரடியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் வெட்கமோ, அது சார்ந்த செம்மையோ அறவே தென்படவில்லை என்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. கம்பீரம், தேவையற்றுச் சிரிக்காதிருத்தல், அளவான புன்சிரிப்பு, அடக்கமான ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றின் வாயிலாகத் தான் ஒரு மாறுபட்ட பெண் என்பதை அவருக்கு உணர்த்தியிருந்த நளினி அந்தப் பொதுமையான எதிர்ச்செயல் மூலம் அவரை மேலும் வியப்புற வைத்தாள். அவர் அவளை மரியாதையுடன் பார்த்தார்.

அவரது வலக்கையின் விரல் மேசையின் விளிம்பில் இருந்த சிவப்பு மின்விளக்கின் பொத்தானை அழுத்தியதை அவள் கவனிக்கத் தவறவில்லை. அலுவலகம் தொடர்பான கமுக்கமான கடிதங்களை வாய்மொழிகையில் அவர் அந்தப் பொத்தானை அழுத்தி அறையின் வெளியே சிவப்பு விளக்கு எரியச் செய்வது வழக்கம். அலுவலரின் அறைக்கு வெளியே சிவப்பு விளக்கு எரியும் போது யாரும் கதவைத் தட்டிவிட்டும் கூட உள்ளே வரக்கூடாது– உள்ளே வர அனுமதி கேட்கவும் கூடாது-  என்பது அலுவலக விதி.

“சொல்லுங்க, சார்!”

சந்திரசேகரனை அவளது எதிரொலி தயங்க வைத்தது. அவரது தலை தாழ்ந்துகொண்டது. என்ன முயன்றும் அவரால் அவளை நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எனினும், குரலைச் செருமிச் சரிப்படுத்திக்கொண்டு, “ நீங்களே சரியா ஊகிச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என்றார்.

“நான் ஊகிச்சேனா இல்லையான்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சார்.  நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க!”

அதன் பின் அவர் சற்றே தலை உயர்த்தி அவளை அரையாகப் பார்த்தார்: “நான் மனைவியை இழந்தவன்கிறது உங்களுக்குத் தெரியும். இல்லியா?”

“தெரியும்.”

“என் மனைவி தவறிப்போய் அஞ்சு வருஷம் ஆயிடிச்சு. எனக்குக் குழந்தைகள் இல்லேன்றதும் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.”

“தெரியும், சார்.”

“அஞ்சு வருஷமா மறுமணத்துல ஆர்வம் இல்லாமதான் இருந்தேன்.  ஆனா இப்படியே முழு வாழ்க்கையையும் கழிச்சுட முடியாதுன்னு தோணுது.. அதனால, மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறதுன்ற முடிவுக்கு வந்திருக்கேன்…”

“அது உங்க சொந்த விருப்பம். அது சரியான முடிவும்தான், சார்.”

அவள் இவ்வாறு சொன்னதும், அவரது அரைப் பார்வை ஒரு நம்பிக்கையுடன் முழுப் பார்வையானது.

“என் வயசு தெரியுமா உங்களுக்கு?”

“தெரியும், சார். வர்ற மே மாசம் உங்களுக்கு நாப்பது முடியுது. உங்க பெர்சனல் ஃபைல் என்கிட்ட தானே இருக்கு? அதனால தெரியும்.”

அவளது ஜாக்கிரதையான பதிலை அவர் தம்முள் மெச்சிக்கொண்டார்.

“உங்களுக்கு இருபத்தேழு ஆகுது. இல்லியா?”

“ஆமா.”

“பதிமூணு வயசு வித்தியாசம்.  ஆனா இன்னும் எனக்கு ஒரு நரை முடி கூடக் கிடையாது…”

நளினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை மறைக்க அவள் முயலவில்லை.

“சார்! ஒரு நிமிஷம்… உங்க ஆர்வத்துக்கு ரொம்ப நன்றி.  ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட சில விஷயங்களைச் சொல்லணும். முதல் உண்மை எனக்கு இதிலே ஆர்வம் கிடையாது…”

“அப்படிச் சொல்லாதீங்க, நளினி! உங்க மேல எனக்கு ஒரு பிடிமானம் ஏற்பட்டிருக்கு. அதை லவ்னே சொல்லலாம். என் மனைவியை நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கல்லே. அது என் அம்மா-அப்பா செஞ்சு வெச்சது…அதுக்காக நான் அவளை நேசிக்கல்லேன்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.”

“உங்க நேர்மையான பேச்சைப் பாராட்டுறேன், சார்! ஆனா, ஒரு நிமிஷம்… நான் இன்னும் பேசி முடிக்கல்லே. எங்க குடும்பத்தைப் பத்தி உங்க கிட்ட நான் பேச வேண்டியிருக்கு. நாங்க மொத்தம் அஞ்சு பேரு. நாலு பொண்ணுங்க. கடைசியா ஒரு தம்பி.  நான் மூணாவது பொண்ணு. எனக்கு அப்பா கிடையாது. எங்கப்பா செத்துப் போன போது எனக்குப் பதினஞ்சு வயசு. எனக்கு முந்தினவளுக்குப் பதினெட்டு.  எல்லாருக்கும் மூத்த அக்காவுக்கு இருபத்தொரு வயசு. கெட்ட வழக்கம் எதுவும் இல்லாத நல்ல அப்பா அவரு.  ஆனா ரொம்பப் படிக்காதவரு. ஒரு ப்ரைவேட் கம்பெனியில வாச்மேனா இருந்தவரு. அவரோட சொற்ப சம்பாத்தியத்துக்கு எங்களையெல்லாம் அவர் படிக்கவெச்சுக்கிட்டு இருந்ததே அதிகப்படி. அவர் காலமானதும் எங்களுக்கெல்லாம் கண்ணைக்கட்டிக் காட்டில விட்டது மாதிரி இருந்திச்சு. நிராதரவா உணர்ந்தோம். எங்கம்மா அப்படியே இடிஞ்சு போயிட்டாங்க. ஹார்ட் பேஷண்டாவும் ஆயிட்டாங்க. கையில சேமிப்பு எதுவும் இருக்கல்லே. இருந்த சொற்பத்துல அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம். எல்லாமே கரைஞ்சிடிச்சு. ஆனா, எல்லாருக்கும் மூத்த எங்கக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. மத்தவங்கல்லாம் படிச்சுக்கிட்டு இருந்தோம். அவளால தான் எங்க குடும்பம் அரையும் குறையுமாச்  சாப்பிட்டு வாழ்ந்திச்சு. சில நாள் ஒரு வேளைதான் சாப்பிட முடிஞ்சிச்சு. அவ வேலைக்கு வந்ததுக்கு அப்பால அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் அடுத்த அக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு இந்தக் கம்பெனியில ஸ்டெனோ வேலை கிடைச்சிச்சு. எனக்கு அஞ்சு வருஷம் செர்வீஸ் ஆகுது.  அப்ப? எங்கக்காவுக்கு இப்ப முப்பத்து மூணு வயசு ஆகுது. அவளுக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்க முடியல்லே. வரதட்சிணை வாங்குற பழக்கம் ரொம்பவே குறைஞ்சிடுச்சுன்னு பலரும் உளறிக்கிட்டு இருக்காங்க. அது பணக்காரக்குடும்பங்கள்ல தான் நடக்குது. அதனால, என்ன பிரயோசனம்? ஏழைங்களும், நடுத்தரக்குடும்பங்களும் இன்னும் இந்த வரதட்சிணைப் பேயால கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க….நீங்க என்னை லவ் பண்றதாச் சொன்னீங்க. அதை நான் தப்புன்னு சொல்லமாட்டேன்.  நீங்க லவ் பண்ற பொண்ணோட வேண்டுகோளை நிறைவேத்தி வெச்சிங்கன்னா, உங்க லவ் உண்மையான லவ்னு நான் நம்புவேன், சார். யாரை நாம லவ் பண்றோமோ அவங்களோட சந்தோஷம்தானே நம்ம குறிக்கோளாய் இருக்கணும்? இல்லியா, சார்?”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவருக்குப் புரியவே செய்தது. அவர் மேலும் மரியாதையுடனும் களங்கமற்ற அன்புடனும் அவளைப் பார்த்தவாறு இருந்தார்.

“சொல்லுங்க, சார்.”

“விஷயத்துக்கு வாங்க.”

“புரியாதவங்களுக்குத் தானே சார் விஷயத்தைச் சொல்லிட்டு இருக்கணும்? சரி. என் வாயாலே சொல்லிடறேன். என் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பு உண்மையானதாய் இருந்தா எங்க மூத்த அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்! அவளைப் பார்த்துட்டே நீங்க சம்மதமோ மறுப்போ சொல்லலாம், சார். அவ என்னை விட அழகாய் இருப்பா. ரொம்ப நல்லவ சார் எங்கக்கா. கல்யாணமே வேண்டாம்னு இருக்கா சார் அவ.  எங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் அவளோட லட்சியமாம். ஏன்னா அவளுக்கு முப்பத்து மூணு வயசு ஆயிடிச்சாம். வரிசையாத்தான் பண்ணணும்னு முனைஞ்சா எல்லாருக்குமே வயசு ஆயிடுமாம். சொல்றா! தவிர, உங்க வயசுக்கு அவ அதிகம் பொருத்தமானவ. இல்லியா, சார்?”

சந்திரசேகரன் கண்ணிமைக்காமல் நளினியைப் பார்த்தவாறு இருந்தார். முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. கடந்த ஆறு மாதகாலத்துக்கும் மேலாய் அவரது பார்வையில் தோன்றி இருந்த கள்ளம் காணாமல் போய் விட்டிருந்தது.

“நீங்க சொன்னது ரொம்பவே சரி, மிஸ் நளினி! தன் அன்புக்கு உரியவளைச் சந்தோஷப்படுத்துறதுதான் ஒரு நல்லவனோட கடமை. நான் நல்லவன்னு உங்ககிட்டேருந்து செர்ட்டிஃபிகேட் வாங்கறதுல ஆர்வமுடையவனாய் இருக்கேன், மிஸ் நளினி!”

“தேங்க்யூ, சார்! என்னிக்குப் பொண்ணு பார்க்க வர்றீங்க?”

“நீங்க இவ்வளவு சொன்னதுக்குப் பெறகு, உங்க அக்காவைப் பார்க்காமயே என் பதில் ‘யெஸ்’ தான்! ஆனா அவங்க என்னைப் பார்க்கணுமில்லே? அதானால நீங்க என்னைக்கு வரச் சொல்றீங்களோ அன்னைக்ககு வர்றேன்.”

“தேங்க்ஸ், சார்.  ஆனா மச்சினியை யாராச்சும் நீங்க, வாங்க, போங்கன்னு பன்மையில பேசுவாங்களா?”

“மாட்டாங்கதான்! ஆனா அது எங்க கல்யாணத்துக்குப் பெறகு!” என்று அவர் சிரித்த சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள்.

இருவரும் சேர்ந்து இரைச்சலாய்ச் சிரித்தது வெளியே கேட்க, கதவுக்கு அருகே முக்காலியில் உட்கார்ந்திருந்த பியூன் கந்தசாமி, “ரெட் லைட்டைப் போட்டுக்கிட்டு கூத்தடிக்கிறாங்கப்பா உள்ளே ரெண்டு பேரும்!” என்றான்.

இது பற்றி  அறியாத நளினி, “ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரணும்…” என்றாள்.

“என்ன!”

“இப்ப நாம பேசினது எதுவும் எங்க அக்காவுக்குத் தெரியவே கூடாது!”

“சொல்லவே மாட்டேன்! நானென்ன மடையனா?” என்றார் சந்திரசேகரன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அக்காவுக்குத் தெரிய வேண்டாம்!

Leave a Reply to ரேவதிநரசிம்ஹன்

Your email address will not be published. Required fields are marked *