பார்வதி இராமச்சந்திரன்

art pi subadha kamsaகோகுலக் கண்ணன் தன் சின்னப்  பாதங்கள் பதித்து நம் இல்லங்கள்  தோறும் எழுந்தருளும் நன்னாள்  ‘ஸ்ரீஜெயந்தி’. நாடே விழாக்கோலம் பூண்டு, கண்ணன் அவதரித்த பொன்னாளைக் கொண்டாடும் தருணத்தில், சாக்தர்கள், ‘யசோதா கர்ப்ப சம்பூதாவாக’ அவதரித்த அன்னை ஸ்ரீதுர்க்கையின் திருஅவதார தினமாகவும் கோகுலாஷ்டமியைக் கொண்டாடுகின்றார்கள்.

சாக்தத்தில் தேவியும் ஹரியும் ஒன்றேதான் என்கின்ற தத்துவத்தை புராண ரீதியாகக் கூறும் போது, நாராயணனின் சகோதரி சக்தி என்று கூறுகின்றோம். தசமஹா வித்யா தேவியரே, தசாவதாரம் எடுத்து அசுர சம்ஹாரம் செய்தனர் என்றும் கூறுகிறது சாக்தம். யோகமாயா தேவியான சக்தி, கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதைக்கு மகளாக அவதரித்ததால், கண்ணனின் தங்கையாக அறியப்படுகின்றாள்.

சிறையிருந்த வசுதேவர், தேவகி தம்பதியரின் ஏழாவது கர்ப்பத்தில் ஆதிசேஷன் பிரவேசித்தார். ஸ்ரீவிஷ்ணுவின் திருவுளப்படி, யோகமாயையான மஹாமாயையின் செயலால், அந்தக் குழந்தை, வசுதேவரின் முதல் மனைவியாகிய ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்ந்தது.

கிருஷ்ணாவதாரத்திற்கு  முன்பாக, யோகமாயா தேவியை, ஸ்ரீ மஹாவிஷ்ணு, யசோதாவின் கர்ப்பத்தில் பிரவேசிக்குமாறு கூறினார். வசுதேவரால் மதுராவிற்கு கொண்டு வரப்பட்டவுடன் தேவியின் அவதார நோக்கம் நிறைவேறுமென்றும் திருவாய்மொழிந்தருளினார்.

அவ்வண்ணமே அம்பிகை யசோதாவின்  கர்ப்பத்தில் பிரவேசித்தாள். நந்தகோபரின் திருமகளாய் அவதரித்தாள். யோகமாயையின் மாயாசக்தியால் புவனமுழுதும் அந்த இரவில் ஆட்கொள்ளப்பட்டது.

வசுதேவர், கண்ணனை எடுத்துக் கொண்டு கோகுலத்தில் நுழைந்த போது, நள்ளிரவு நேரம். நந்தகோபனின் மனையை அவருக்கு எடுத்துக் காட்டும் முகமாக, சின்னக் குழந்தையாக அவதரித்திருந்த தேவி, மெல்ல அழுதாள். அழுகுரலை வைத்து, இல்லத்தை கண்டுபிடித்த வசுதேவர், திறந்திருந்த கதவுகளைக் கடந்து குழந்தையின் இருப்பிடத்தை அடைந்தார். திரிகுணாத்மிகாவான அம்பிகை, தாதியின் வடிவமும் தாங்கி, சின்னக் கண்ணனை வாங்கிக் கொண்டு, யசோதையின் பெண் குழந்தையை வசுதேவரிடம் சேர்ப்பித்தாள். வசுதேவர் மதுராவை அடைந்தார்.

தேவகிக்கு எட்டாவதாக பெண் குழந்தை பிறந்தது, கம்சனின் காதுகளை எட்டியது. ‘ஒரு வேளை இது தேவர்களின் சூழ்ச்சியோ’ என்று சந்தேகித்த அவன், பெண் குழந்தையின் கால்களைப் பற்றித் தூக்கி, அதைக் கொல்வதற்காக, கத்தியை ஓங்கினான்.

திடுமெனத் தோன்றிய பேரொளிப் பிரகாசம், சிறையை நிறைத்தது. குழந்தை வடிவம் நீங்கி, சக்ரம், சங்கம், கேடயம், கத்தி, அம்பு, வில், சூலம், தர்ஜனீ(அதட்டும் தோரணையில் ஆட்காட்டி விரல் இருப்பது) என்ற எட்டு மஹாயுதங்கள் விளங்கும் அழகிய திருக்கரங்கள் உடையவளாய், அஷ்டபுஜ மஹா துர்க்கையாகக் காட்சியளித்தாள் அன்னை. மிகுந்த கோபத்துடன், “மூடனே, உன்னைக் கொல்லப் போகிறவன், ஏற்கெனவே அவதரித்து விட்டான், உன் கொடுமைகளை நிறுத்தி, உன்னை  நீ காத்துக் கொள். உன்னை நானே கொன்றிருப்பேன். என் பாதங்களைப் பற்றியதால் விட்டு விட்டேன்” என்று கூறி விட்டு மறைந்தருளினாள். அதன் பின், மருத்கணங்களாகிய தேவர்களால் துதிக்கப்பட்டவளாக, பூமியில் கோயில் கொண்டருளினாள்.

 இவ்வாறு அம்பிகை ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கு உதவியதற்கு, முன்பொரு முறை வசுதேவர், தம் குலகுருவான கர்கமஹரிஷியின் துணை கொண்டு பராசக்தியை, பூஜித்ததே காரணம் என்று தேவி பாகவதம், ஸ்காந்த புராணம் போன்றவை தெரிவிக்கின்றன.

ஸ்ரீ துர்கா பிரபாவம், ஸ்ரீகிருஷ்ணருக்கு, மற்றொரு சமயத்திலும் துர்க்கை உதவியதை விவரிக்கின்றது.

சத்ராஜித் என்னும் மன்னன் சூரிய பகவானின் அருளால், ‘ஸ்யமந்தகம்’ என்னும் ரத்தினம் பெற்றான். அது ஒவ்வொரு நாளும், ஒருவன் தூக்கக் கூடிய சுமை எவ்வளவோ அதைப் போல் எட்டு மடங்கு பொன்னை அளிக்கும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை அதைக் கேட்டதற்கு, சத்ராஜித் தர மறுத்து விட்டான். ஒரு நாள் சத்ராஜித்தின் தம்பி ப்ரஸேனன் அதை அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அவனை ஒரு சிங்கம் கொன்றது. அந்த சிங்கத்தை, ஜாம்பவான் என்னும் கரடி வேந்தன் கொன்று, ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்றான்.

பிரஸேனனை, ரத்தினத்திற்காக ஸ்ரீகிருஷ்ணர் கொன்றிருக்கக் கூடும் என்ற அபவாதம் பரவியது. இதைச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணர், படையுடன் பிரஸேனனைத் தேடிச் சென்றார். காட்டில், இறந்த பிரஸேனனையும், அவனருகில் இருக்கும் சிங்கத்தினையும் கண்டார். அருகிலிருக்கும் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஜாம்பவானின் இருப்பிடத்தை அடைந்தார். கரடியரசனான ஜாம்பவானின் குகைக்கு வெளியே யாதவ சேனையை நிறுத்தி விட்டு, தான் மட்டும் உள்ளே சென்றார். அங்கு இருந்த ஸ்யமந்தகத்தைக் கண்டு அதை எடுக்க முயலும் போது, ஜாம்பவானுக்கும் கிருஷ்ணருக்கும் கடும் போர் மூண்டது. 27 நாட்கள் போர் நீடித்தது. இறுதியில், ஜாம்பவானுக்கு, ஸ்ரீராமாவதாரத்தை நினைவுபடுத்தினார் கிருஷ்ணர். ஜாம்பவான் மகிழ்ந்து, ஸ்யமந்தகத்தை அவரிடம் ஒப்படைத்ததோடு, தன் மகள் ஜாம்பவதியையும் மணம் செய்து கொடுத்தான்.

இதற்கிடையில், ஜாம்பவானின் குகைக்குள் கிருஷ்ணர் சென்றதும் வெளியில் காத்திருந்த யாதவ சேனையினர், பன்னிரண்டு நாட்களாகியும் கிருஷ்ணர் திரும்பாததால், அவர் ஏதோ ஆபத்திற்கு உள்ளாகிவிட்டதாகக் கருதிக் கொண்டு, வசுதேவரை அடைந்து விவரம் கூறினர்.

வசுதேவர், துக்கத்தில் மூழ்கினார். அதன் பின் தேவரிஷியான நாரதரின் ஆலோசனைப்படி, ஒன்பது நாட்கள் துர்க்கா தேவியைப் பூஜித்தார். ஒன்பதாவது நாளின் நிறைவில், ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் துவாரகையை அடைந்தார். ‘மஹாமாயா ஸ்வரூபிணியான துர்கா தேவியின் வழிபாடே தன் புதல்வனை உயிருடன் அழைத்து வந்தது’ என எண்ணி வசுதேவர் மகிழ்ந்தார். இவ்வாறு துர்கையின் பெருமை, ஸ்ரீதுர்கா பிரபாவத்தில் பேசப்படுகின்றது.

‘யோக மாயை’ என்றும் ‘மஹாமாயை’ என்றும் போற்றித் துதிக்கப்படும் ஸ்ரீதுர்க்கை, முப்பெருந்தேவியரின் ஒருங்கிணைந்த வடிவம் என்று போற்றப்படுகின்றாள்.

பராசக்தியான‌ அம்பிகை நான்கு வித சக்திகளாக இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. போக சக்தியாக பவானியும், குரோத சக்தியாக காளியும், போர்ச் சக்தியாக துர்க்கையும், புருஷ சக்தியாக விஷ்ணுவும் அருளுகிறார்கள். அதைப் போல், பராசக்தியிடமிருந்து உதித்த பஞ்ச பிரகிருதி சக்திகளுள் அந்தக‌ரணத்திற்கு அதிஷ்டாத்ரி தேவியாக இருப்பவள் துர்க்கா.

‘துர்கை’ என்ற பதத்தை சாக்த பஞ்சாக்ஷரமாகக் கூறுவதுண்டு (த,உ,ர,க,ஆ என்று பிரிக்கலாம். த என்ற எழுத்து அசுரர்களின் நாசத்தையும், உ என்ற எழுத்து விக்ந நாசத்தையும், ர என்ற எழுத்து ரோக நாசத்தையும் கஎன்ற எழுத்து பாப நாசத்தையும், ஆ என்ற எழுத்து பய நாசத்தையும் குறிக்கின்றது.).

ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி, ஸ்ரீ துர்கா ஸூக்தம் முதலான மந்திரங்களின் சக்தி அளவிடற்கரியது.

தேவி அனைத்து விதமான தவிர்க்க முடியாத துக்கங்களிலிருந்தும் தன்னை வணங்குபவரைக் காக்கின்றாள். முடிவில் பிறவிக் கடலினில் இருந்தும் தாண்டுவிக்கின்றாள்.

கோகுலாஷ்டமி தினத்தில், கண்ணனையும், கண்ணனின் தங்கையையும் பூஜித்து மகிழ்வோம்!!

=====================================================================================================

(படத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/_Gilf-Htg-us/SXhx3sPJjQI/AAAAAAAAABg/xkE5btcRQQc/s400/art+pi+subadha+kamsa.JPG)

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “கண்ணனின் தங்கை

  1. அன்பு பார்வதி துர்க்கை என்ற பதத்தின் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .எனக்கு துர்க்கை மிகவும் பிடிக்கும் .செவ்வாய் .வெள்ளி துர்கா சபதஸ்லோகி படிக்கும் வழ்க்கம் உண்டு . துர்க்கையப்பற்றி விவரமாக எழுதி அவளது அருளையும் பெற்றுவிட்டீர்கள்

  2. ‘என்னத்தவம் செய்தாய்’ வல்லமை வலைப்பூவே 
    எங்கும் நிறை பரபிரம்மத்தின் வல்லமையை 
    தாங்கியே வந்துபூத்த இப்பதிவை மலரச்செய்யவே 
    அங்கிங்கு என்றில்லாமல் எங்கும்நிறை சக்தியின் 
    சங்கொலி பரப்பிடும் கதையின் கருத்திலொன்றை…
     
    எங்களைப்போல் நீயும் யாதெனதறியாயோ- இப்புவி 
    எங்கும் தீயெனப்  பரவிடும்பெண் கொடுமைகளை 
    தங்களுக்கு இளைக்கும் வன்கொடுமைகளை -வாள் 
    கொண்டு வீழ்த்த; வீறுகொண்டு வாரீர்த்தோழியரே 
    வந்து ரௌத்திரமும் பழகுவீரே என்பததுவே!

    அநீதியை எதிர்ப்பதும் அரக்கனை அழிப்பதும் 
    அந்நியமான ஒன்றல்ல நற்குலப் பெண்களே 
    அன்னை பராசக்தி துணை இருப்பாள் என்று 
    எண்ணித் துணிந்திடுங்கள் எதிர்த்து நின்றிடுங்கள் 
    கண்களில் அனல்பொங்க கைகளை முறுக்கி 
    கண்ணெதிரே சீரும் கருநாகப் பாம்புச்சங்கினை 
    மென்று உமிழ்ந்திடுங்கள் மீதினில் உயர் 
    பெண்மை மேன்மை ஓங்கிடுமே!

    தங்களின் கட்டுரையால் விளைந்த எனது கருத்து பகிர்விற்கு நன்றிகள் சகோதரி.

  3. //திடுமெனத் தோன்றிய பேரொளிப் பிரகாசம், சிறையை நிறைத்தது. குழந்தை வடிவம் நீங்கி, சக்ரம், சங்கம், கேடயம், கத்தி, அம்பு, வில், சூலம், தர்ஜனீ(அதட்டும் தோரணையில் ஆட்காட்டி விரல் இருப்பது) என்ற எட்டு மஹாயுதங்கள் விளங்கும் அழகிய திருக்கரங்கள் உடையவளாய், அஷ்டபுஜ மஹா துர்க்கையாகக் காட்சியளித்தாள் அன்னை.//

    கம்சன் என்னதான் பாவியாக இருந்தாலும் எத்தனையோ புண்ணியமும் செய்திருக்க வேண்டும், அன்னையின் காட்சி பெறவும், கண்ணனின் கைகளால் உயிரை விடவும்.

    கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அவன் சோதரியாம் அன்னையைப் பற்றி எழுதியது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது பார்வதி. மிக்க நன்றி.

  4. கண்ணுக்குப் புலப்படாத ஒரு பொருளை, பார்ப்பவர்கள் கண்ணுக்கு இருப்பதுபோல் தோன்றச் செய்வதே மாயை என்கிறோம். மஹாசக்தி, மஹாமாயா, யோகமாயா, மஹாசக்தி, துர்கா, மஹாகாளி, மாரி, மகமாயி, மஹாமாக்யாதேவி போன்ற பெயர்களை தேவி மஹாத்மியம், தேவி பாகவதம் மற்றும் இதிகாசங்களில் படிக்கும் போது, இப்பெயர்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 

    மாஹாபாரதத்தில், மாயையையின் அருள் வேண்டி ஸ்ரீகிருஷ்ணனே ப்ரத்யங்கரா தேவியை வேண்டி பூஜை செய்ததை, கும்பகோணத்தின் அருகே ‘அய்யாவாடி’ என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கும் ப்ரத்யங்கரா தேவி கோவில் வரலாறு கூறுகின்றது. 

    வசுதேவர் குழந்தைகளை மாற்றம் செய்தபோது, மாயாவின் தயவில்தான் உலகையே மயங்கியிருக்கச் செய்ய முடிந்தது.  

    ஒரு சமயம் தேவ ரிஷி நாரதர், தன்னை மறந்து மாயாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால்தான், 60 பிள்ளைகளைப் பெற்றதாகவும், அவை அனனத்தும் 60 வருடங்களின் பெயர்களாக விளங்குவதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.

    திருமூல நாயனார் தனது திருமந்திரத்தில், மனதை ஒரு மாயா விளக்கு என்கிறார்.

    ‘துர்காதேவி அனைத்து விதமான தவிர்க்க முடியாத துக்கங்களிலிருந்தும் தன்னை வணங்குபவரைக் காக்கின்றாள், முடிவில் பிறவிக் கடலினில் இருந்தும் தாண்டுவிக்கின்றாள்’ என்று தாங்கள் எழுதியது போல், அந்தந்தக் காலக்கட்டங்களில் எவ்வித் ஆபத்துக் காலங்களின் துர்காதேவி அருள் புரிகிறாளோ, அந்தந்த காலத்திற்கு ஏற்ப தேவியின் பெயரும் விளங்கும். 

    உதாரணத்திற்கு மிகவும் துன்புறும் வேளையில் தேவியை உபாசிக்கும்போது ‘விஷ்ணுதுர்கா’ என்றும், ரிஷிகள் யோகத்தில் ஈடுபட்டிருக்கும் போது “தீபதுர்காவாக” அவர்கள் மனதில் இடம்பெற்றிருப்பாள். வனங்களைக் காப்பவள் ‘வனதுர்கா’ இப்படி பல பெயர்களில், மும்மூர்த்திகளுக்கும் உதவிய துர்கா தேவியை, தமிழ்நாட்டைவிட வங்காள நாட்டில் மிகவும் அதிதீவிரமாக வழிபடுகிறார்கள்.  

    “கண்ணனின் தங்கை”  என்ற தலைப்புக்குப் பொருத்தமான கட்டுரை, வாழ்த்துக்கள்.

  5. பெருமதிப்பிற்குரிய சகோதரி பார்வதி,
    அருமை.நீர்த்த பாலின் சாரத்தை திரட்டி ஒரு வெண்ணை உருண்டையாக்கி திரட்டி கொடுத்தது போல பல அரிய தகவல்களை தருகிறீர்கள்.
    துர்க்கை என்ற சொல்லின் அர்த்தம் அருமை. இதை யுதிஷ்டிரன் பதின்மூன்றாவது ஆண்டு அக்ஞாத வாசத்துக்கு முன் துர்கையை வழிபட்டுத் துத்திக்கையில் சொல்லுகிறான். “அனாதைகளாக இருப்பவர்களுக்கும், வனாந்திரங்களிலும் சமுத்திரத்தில் கரை தெரியாமல் தவிப்பவர்களுக்கும் தாயே நீயே கதியாக இருக்கிறாய். அதனால் தான் நீ துர்க்கை என அழைக்கப் பெறுகிறாய்” என்று “பய நாசனத்”தை சொல்லுகிறான். உபரித்தகவலாக மட்டுமல்லாமல் தாங்கள் சொன்ன தகவலுக்கு ஓர் supporting data/evidence ஆகச்சொன்னேன்.

    பணிவன்புடன்,
    புவனேஷ்

  6. எண்ணற்ற தகவல்கள். துர்க்கை அம்மன் பற்றிய பல புதிய தகவல்களை தங்களது கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன். நன்றி சகோதரி!

  7.  @திருமதி.விசாலம் அம்மா,
    தங்களது அன்பான கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றி அம்மா, ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகி பாராயணம் தரும் பலன்களை அளவிட முடியாது!!.

    @திரு.ஆலாசியம் அவர்கள்,
    கருத்துரையை அற்புதமான கவிதையாகவே வரைந்து பெருமைப்படுத்திவிட்டீர்கள். நெஞ்சார்ந்த நன்றி அண்ணா.

    @திருமதி.கவிநயா அவர்கள்,
    ////கம்சன் என்னதான் பாவியாக இருந்தாலும் எத்தனையோ புண்ணியமும் செய்திருக்க வேண்டும், அன்னையின் காட்சி பெறவும், கண்ணனின் கைகளால் உயிரை விடவும்.////
    அழகாகச் சொல்லிவிட்டீர்கள். மனமார்ந்த நன்றி.

    @திரு.பெருவை பார்த்தசாரதி அவர்கள்,
    அரிய பல தகவல்களுடன் கூடிய பின்னூட்டமிட்டு சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றி.
    ///அந்தந்தக் காலக்கட்டங்களில் எவ்வித் ஆபத்துக் காலங்களின் துர்காதேவி அருள் புரிகிறாளோ, அந்தந்த காலத்திற்கு ஏற்ப தேவியின் பெயரும் விளங்கும். ///

    ஆம்.என் வலைப்பூவில், நவதுர்கா தேவியர் குறித்த பதிவின் லிங்க் கொடுத்திருக்கிறேன். ஒன்பது விதமான துர்கா தேவியரின் பிரபாவத்தை என்னாலியன்ற அளவு தந்திருக்கிறேன்.
    http://aalosanai.blogspot.in/2013/02/nava-durga-deviyar.html
    http://aalosanai.blogspot.in/2013/02/nava-durga-deviyar-part-2-2.html

    @திரு.புவனேஷ்வர்.

    தங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் கூடிய கருத்துரைக்கும், மேலதிகத் தகவலுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

  8. கிருஷ்ணாவதாரத்தோடு நிகழ்ந்த துர்க்கையின் பிறப்பையும், அதன் சிறப்பையும் மிக அருமையான நடையில் கொடுத்திருக்கிறீர்கள். அந்தப் பெண் குழந்தையைக் கொல்வதற்காக இரு கால்களையும் சேர்த்துப் பிடித்துச் சுழற்றி அடித்துக் கொல்ல நினைத்தவனைத் தன் கால்களைப் பிடித்ததால் கொல்லாமல் விடுகிறேன் என்று சொல்லும் கருணையை என்னவென்பது? வசுதேவர் தேவகிக்கு கர்ப்பத்தில் உருவான ஏழாவது குழந்தை ரோஹிணிக்கு மாற்றப்பட்டது. அவர்தானே பலராமன்? கிருஷ்ண ஜெயந்திக்கு அளிக்கப்பட்ட நல்விருந்து கட்டுரை. உங்கள் ஆன்மீகக் கட்டுரைகள் மனதுக்கு நிறைவைத் தருகின்றன. நன்றி.

  9. /////தஞ்சை வெ.கோபாலன் wrote on 31 August, 2013, 5:19
      கிருஷ்ண ஜெயந்திக்கு அளிக்கப்பட்ட நல்விருந்து கட்டுரை. ///////

    அன்பார்ந்த ஐயா!! தங்களது பாரட்டுதல்களோடு கூடிய கருத்துரைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். தங்களது வார்த்தைகள் மேன்மேலும் எழுத எனக்கு ஊக்கமளிக்கின்றன. மிக்க நன்றி!!!

  10. தாமதமாய் பார்த்தாலும் நல்லதொரு இடுகையைத்தவறவிடவில்லை என்கிற நிறைவு ஏற்பட்டது நிறைய நல்ல விஷயங்களின் சுரங்கமாக இருக்கிறீர்களே வாழ்த்துகள்!

  11. /////தாமதமாய் பார்த்தாலும் நல்லதொரு இடுகையைத்தவறவிடவில்லை என்கிற நிறைவு ஏற்பட்டது நிறைய நல்ல விஷயங்களின் சுரங்கமாக இருக்கிறீர்களே வாழ்த்துகள்!////

    தங்களின் வார்த்தைகள் மேன்மேலும் எழுத எனக்கு ஊக்கமூட்டுகின்றன. தெரிந்த நல்ல விஷயங்களைச் சொல்வது, இறைவனுக்கு மிக அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும் என்பது எனக்குத் தரப்பட்ட  உபதேசம். இயன்றவரை நிறைவேற்றி வருகிறேன். போஸ்டிங்கை தேடிக் கண்டுபிடித்து கருத்துரைத்த தங்களுக்கு மிக்க நன்றி!

Leave a Reply to புவனேஷ்வர்

Your email address will not be published. Required fields are marked *