நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!

7

 

ஜோதிர்லதா கிரிஜா

 

கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும்
தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்!
பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும்
தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர்.

குடும்பத்தில் யாவர்க்கும் மூத்தவனாய்ப் பிறந்திடவே,
உயர்கல்வி பெருமாசை உடனடியாய்த் துறந்திட்டேன்:
கடும்பசியில் குடும்பத்தார் கலாங்காதி ருந்திடவே
அயர்வின்றி அலுவலகம் பலஏறி இறங்கிட்டேன்.

எனைஈன்ற தந்தைதாய் எந்தையின் தந்தைதாய்
உடன்பிறந்த தங்கை-தம்பி இவரன்றி எழுவராவர்;
எனைஎன்றும் சோற்றுக்கிவர் எதிர்நோக்கி நின்றவராய்க்
கடன்படவே வைத்திட்டார் – எனையன்றிக் காப்பரெவர்!

பாதியாய் இளைத்திட்டேன் ஏறிப் பல வாசற்படி;
இறுதியாய்க் கிடைத்ததொரு சிறுவேலை தகுதிப்படி:
ஊதியம் போதாமல் வீதிபல உலவிட்டேன்,
குருதிநிறம் குன்றிடவே பகுதிநேரம் உழைத்திட்டேன்.

என்னிரு கைகளாலே எண்ணிறந்த பணிசெய்தும்,
சம்பளம் போதவில்லை; சங்கடம் பலவாக,
பன்னிரு வயிறுகளைப் பராம ரிக்கவேண்டிப்
பம்பரமாய்ச் சுழன்றிட்டேன், பணமொன்றே குறியாக!

அழகனாம் எனைக்காணும் அலுவலக அணங்குகளின்
அகல்விழிகள் ஆர்வத்தால் அகன்றிட்ட போதெல்லாம்,
விழிகளைத் தாழ்த்திடுவேன், வீணாசை என்பதுடன்,
பகல்கனவு கண்பதனால் பயனிலை என்பதாலும்!

தங்கைகள் வரிசையிலே தாலிபெற நிற்கையிலே,
தமையனவன் குமையலாமோ துணைதேடும் ஏக்கத்தில்?
என்கைகள் பாடுபட்டு என்னதான் சேமித்தாலும்,
அமையவில்லை துணையவர்க்கு வரன்விலைதன் ஏற்றத்தால்.

பெண்களின் திருமனங்கள் ஐந்தாட்டுத் திட்டங்கள்!
மூவர்தம் திருமணங்கள் முடிப்பதற்குள் மூப்புற்றேன்;
கண்களின் கீழ்ப்புறத்தே வந்தன கரு வட்டங்கள்;
ஆவலுடன் ஆசைகளும் அற்றுப்போய் அலுப்புற்றேன்.
கன்னத்து எலும்புகளும் காதோர நரைமுடியும்
முன்புறத்து வழுக்கையுமே முடங்கிட்ட முதியோனின்
சின்னத்தைச் செத்தி யென்னைச் சேதாரப் படுத்தியதால்,
என்புறத்தே பெண்களிந்நாள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

கலியாணச் சந்தையிலே கன்னி மட்டும் நிற்பதில்லை:
கடந்தநாள் காளைஎனைப் போன்றோரும் நிற்பதுண்டு:
மலிவான மாப்பிள்ளைமார் மலியும் நாள் வருகையிலே,
முடிந்தகதை தொடர்ந்திடவே முத்தான வாய்ப்புண்டு.

பெண்களில்தான் பிறர்தமக்காய்ப் பெருந்தியாகம் புரிந்திடுவோர்
உண்டென்று உரைக்கின்ற திவ்வுலகம் முழுமையுமே;
எங்களிலும் எனையொத்தோர் எண்ணற்றோர் அறிந்திருவீர்!
விண்டுரைத்தேன் கண்டுகொள்வீர் அவர்தமது அழுகையுமே.

 

நன்றி: அமுத சுரபி

 

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!

  1. அருமையான கவிதை.
    ஆண்களின் தியாகங்கள் விளம்பரம் பெறுவதில்லை.
    பெண்களால் அவை by default என taken for granted.

    //தங்கைகள் வரிசையிலே தாலிபெற நிற்கையிலே,
    தமையனவன் குமையலாமோ துணைதேடும் ஏக்கத்தில்?//

    அக்ஷர லக்ஷம் பெறும். தங்கையை உடைய எவனும் பலதடவை படித்து, ஒருபக்கம் இறும்பூது அடைந்தாலும் மறுபக்கம் பெருமூச்சு விட வைக்கும் வரிகள்.

    எல்லாத் தங்கைகளையும் “கரைசேர்த்து” அதன் பின் தான் அண்ணன்காரன் கல்யாணம் பண்ணவேண்டும் எனபது வாஸ்தவம் ஆனால் நாத்தனார் – மன்னி/அண்ணி மனஸ்தாபம் எப்படி வரும்?

    குணம், குடும்பப் பின்னணி, நாளைய எதிர்கால வாய்ப்பு (potential) ஆகியவற்றைக் கண்டு வரன் (பெண்/மாப்பிள்ளை) கொடுக்கும் மனம் ஏனோ இன்று நம்மவர்க்கு இல்லை. பணம். வேலை. இது தான் வேண்டுமாம்.

    பெண் கேட்கையிலே professionally qualified பெண்/மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கிடுக்கிப் பிடி போடுவது. முப்பது வயசுக்கு முன்னமேயே மாசம் ஐம்பதாயிரம் எண்பதாயிரம் சம்பளம் வேண்டுமாம். கொடுமை என்னவெனில் any luggage? என்று பையனின் பெற்றோரை கூட வைத்துக்கொள்ள வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

    சரி. நான் அரற்றவில்லை.

    நல்ல கவிதை. ஒரு பெண்மணி, ஆண்களின் வழிகளை புரிந்துகொண்டு சொல்லோவியம் வடித்திருப்பது heartwarming. Indeed.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  2. ஆண்களின்… குறிப்பாக முதிர்காளைகளின் (முதிர்கன்னிகளின் எதிர்ப்பதம்) உள்ளக் குமுறலைக் கவிவெள்ளமாய்ப் பாய்ச்சியுள்ள, தமிழ்கூறு நல்லுலகு நன்கறிந்த அற்புத எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அம்மையாருக்கு என் மனம்கனிந்த பாராட்டுக்கள்!!
    கவிதை வரிகள் ஒவ்வொன்றுமே ஒளிப்பிழம்பாய்ச் சுடர்விடுவதால் எவ்வரிகளைச் சிறந்த வரிகள் என்று எடுத்துக்காட்டுவது? மொத்தத்தில் நான் மிகவும் இரசித்த ஓர் அற்புதக் கவிதை!!

  3. ////அழகனாம் எனைக்காணும் அலுவலக அணங்குகளின்
    அகல்விழிகள் ஆர்வத்தால் அகன்றிட்ட போதெல்லாம்,
    விழிகளைத் தாழ்த்திடுவேன், வீணாசை என்பதுடன்,
    பகல்கனவு கண்பதனால் பயனிலை என்பதாலும்!////

    உணர்வுகளின் ஊர்வலம் உள்ளூரும் தாபம்
    வீணான ஆசையென்று மனதிற்கு வேண்டாமென 
    ஆணை பிறப்பித்து அணைபோட்டு கொள்ளுமிந்த  
    இணையில்லா அனுமனின் கடும்தவமே!  

    அற்புதமானக் கவிதை…

    பகிவிற்கு நன்றி.

  4. //கலியாணச் சந்தையிலே கன்னி மட்டும் நிற்பதில்லை:
    கடந்தநாள் காளைஎனைப் போன்றோரும் நிற்பதுண்டு://
    நிதரிசன உண்மை. பொட்டில் அறைந்தாற்போலச் சொல்லியுள்ளீர்கள். 

  5. முதிர்காளை-ஆண்பாவம்.

    கல்யானசந்தையில் திருமனதாமதமாகும் பெண்ணுக்குக்காக வருத்தப்படும் உலகம் ஆணைக்கண்டால் கேலி பேசுகிறது.

    நல்ல கவிதை பொருத்தமான வார்த்தைகள் பாராட்டுக்கள்.

  6. திருமணச் சந்தையின் சிறுமைகளின் மறுபக்கத்தை தோலுரித்துக் காட்டும் உணர்ச்சிப் பிழம்பான கவிதை. உண்மையான உணர்ச்சிகளை கவிதையில் வெளிப்படுத்தும் பொழுது வார்த்தைகள் தடையில்லாமல் வந்து கொட்டும் என்பதை நிரூபிக்கும் கவிதை.

    வாழ்த்துக்கள்.

  7. உள்ளத்தை உருக்கும் உன்னத கவிதை!. பெரும்பாலும் ஆண்களின் தியாகம் பேசப்படுவதேயில்லை. மாறாக, ‘நெகடிவ்’ ஆன மறுபக்கமே வெளிவருகிறது. இந்தப் பகிர்வு கிட்டத்தட்ட அதற்கு ஈடு செய்வது போலவே இருக்கிறது. மிக்க நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *