அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு

9

மேகலா இராமமூர்த்தி

வட அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு (Washington D.C.) அருகிலுள்ள மேரிலாந்தில் (Maryland) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இருநாட்களும் நடைபெற்ற முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு பரவலாக அமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது. அம்மாநாட்டு நிகழ்வுகள் குறித்துச் சுருக்கமாக நம் ‘வல்லமை’ வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். இனி மாநாட்டிற்குள் செல்வோம் வாருங்கள்!

மேரிலாந்திலுள்ள “கல்சுரல்  ஆர்ட்ஸ் சென்டரில்’ ஆகஸ்ட் 31, 2013 அன்று சரியாக மதியம் 2 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் புறநானூற்று மாநாடு இனிதே தொடங்கியது. சுமார் 500 பேர் அமர்வதற்கான இடவசதி கொண்டது இந்த அரங்கு. தமிழன்னையை வாழ்த்தியபின் குழந்தைகளுக்கான ‘புறநானூறு – ஒப்புவித்தல் போட்டி’ நடைபெற்றது. புறநானூற்றுப் பாடல்கள் பத்தினை மனப்பாடமாகச் சொல்லிச் சிறுகுழந்தைகள் பரிசுகளைத் தட்டிச் சென்றது உள்ளம் கவர்ந்தது.

null

புறநானூற்று மாநாட்டுப் பதாகை

அதனைத் தொடர்ந்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். இம்மாநாட்டிற்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது அவருடைய முயற்சியும், ஆர்வமுமே எனலாம். கடந்த நான்காண்டுகளாகப் புறநானூற்றுப் பாடல்களை அமெரிக்கத் தமிழர்கள் அனைவருக்கும் பயிற்றுவித்ததோடல்லாமல், அதற்குப் புதிய எளிய உரை ஒன்றையும் வரைந்த சாதனையாளர் அவர்.

null

முனைவர் மருதநாயகம், முனைவர் பிரபாகரன் மற்றும் முனைவர் முருகரத்தினம் (இடமிருந்து வலம்)

அடுத்துப் புறநானூறு குறித்தச் சிறப்புக் கருத்தரங்கிற்கான முதல் அமர்வு (first panel) நடைபெற்றது. இதனைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.

இவ்வமர்வில் முனைவர் திரு. சங்கரபாண்டி அவர்கள் ‘சங்க காலத்தில் சாதி – புதிய ஆய்வு முடிவுகள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் திரு. சிவயோகநாதன் அவர்கள் ‘அஞ்சாமை புலவரின் உடமையடா’ என்ற தலைப்பிலும், மருத்துவர் திருமதி. சரோஜா இளங்கோவன் அவர்கள் ’புறநானூற்றில் சமூக விழிப்புணர்வு’ என்ற தலைப்பிலும், மென்பொருள் பொறியாளர் திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்கள் ’புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இச்சொற்பொழிவுகள் அரங்கில் நிறைந்திருந்த மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது அவர்கள் அடிக்கடி எழுப்பிய கரவொலிகளால் நன்கு புலனானது.

null

முனைவர் சங்கரபாண்டி (உரை நிகழ்த்துபவர்), முனைவர் சிவயோகநாதன், மருத்துவர் சரோஜா இளங்கோவன் மற்றும் மென்பொருள் பொறியாளர் மேகலா இராமமூர்த்தி (இடமிருந்து வலம்)

இரவு உணவு இடைவேளைக்குப் பின் இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருந்த தலைமை விருந்தினர், முனைவர் திரு. மருதநாயகம் அவர்களின் பேருரை இடம்பெற்றது. ’புறநானூறு போற்றும் வாழ்வியல் நெறிகள்’ என்ற பொருளில் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பானதாக இருந்தது எனலாம். நம் சங்க இலக்கியத்தைக் கிரேக்க மற்றும் ரோம இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவர் நிகழ்த்திய பேருரை பல புதிய தகவல்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலக சகோதரத்துவக் கோட்பாடு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலுமே பேசப்படவில்லை என்று முடித்து அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிக்கொண்டு போனார் அவர்.

அடுத்த நிகழ்வாகவும் முதல்நாள்  மாநாட்டின் இறுதி நிகழ்வாகவும் அமைந்தது, ‘புறநானூற்றுப் பாடல்களுடன் முத்தமிழ் முழக்கம்’ என்ற பெயரில் வந்த இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த முத்தமிழ் நிகழ்ச்சி. அதுவே அன்றைய விழாவின் மணிமகுடமாய்த் திகழ்ந்த நிகழ்ச்சியுமாகும். பள்ளிப் பிள்ளைகள் பலர் இணைந்து ‘தகடூரான் தந்த கனி’ என்ற பெயரில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கித் தமிழ்ப் புலவரைச் சிறப்பித்த வரலாற்றைச் சுவைபட மேடையில் நடித்துக் காட்டினர்.

null

‘புறநானூற்றுப் பாடல்களுடன் முத்தமிழ் முழக்கம்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி..

அடுத்துத் ’தலை கேட்டான் தம்பி’ என்ற பெயரில் குமண வள்ளலின் வரலாறு அரங்கேறியது. குமணனின் தம்பி இளங்குமணன் அண்ணனிடமிருந்து ஆட்சியைப் பறித்துகொண்டதோடல்லாமல் ’அவன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பத்தாயிரம் பொன் பரிசு’ என்றுவேறு அறிவித்தான். அவ்வேளையில் தமிழ்ப்புலவர் ஒருவர் குமணனைக் கண்டு பரிசில் பெறுவதற்காக அவன் தங்கியிருந்த கானகத்திற்குச் செல்கின்றார். புலவருக்கு ஏதும் கொடுக்கவியலாத நிலையில் இருந்த குமணன் ’தன் தலையை வெட்டித் தம்பியிடம் கொடுத்துப் பரிசு பெற்றுச் செல்க!’ என்று வாளைப் புலவரிடம் நீட்டிய காட்சி காண்போர் கண்களில் நீர்மல்கச் செய்தது.

அடுத்து இடம்பெற்றது ‘கவரி வீசிய காவலன்’ என்ற தலைப்பில் தமிழ்ப்புலவர் மோசிகீரனார்க்குச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசித் தமிழைப் பெருமைப்படுத்திய வரலாறு. நிகழ்ச்சியின் முடிவில் அரங்கத்தினரின் கரவொலி விண்ணைப் பிளந்தது என்றால் மிகையில்லை.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கின. ’புறநானூற்றில் எனக்குப் பிடித்த பாடல்’ என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் அவர்களுக்குப் பிடித்த புறநானூற்றுப் பாடலையும் அதற்கான காரணத்தையும் தங்கள் மழலைக் குரலில் கூறி அனைவரையும் மகிழ்வித்தனர். ’கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே’ எனத்தொடங்கும் ’ஒக்கூர் மாசாத்தியார்’ என்ற பெண்பாற் புலவரின் புறப்பாடலையே தங்கள் விருப்பப் பாடலாகப் பல குழந்தைகள் குறிப்பிட்டனர்.

அடுத்து மாணவர்களுக்கான ‘புறநானூறு – வினாடிவினாப் போட்டி’  நடைபெற்றது. அதில் பங்குபெற்ற குழந்தைகள் புறநானூற்றிலிருந்து கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்குக்கூடச் சிறப்பாய் பதிலளித்து அரங்கத்தை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

null

மாணவர்களுக்கான ‘புறநானூறு – வினாடிவினாப் போட்டி’

அடுத்ததாக, புறநானூற்றுக்  கருத்தரங்கின் இரண்டாவது  அமர்வு (second panel) தொடங்கியது. அதில் பேராசிரியர் முருகரத்தினம் அவர்கள் ‘புறநானூறு பேசும் வாழ்வியல் விழுமியங்கள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் அறிவுநம்பி அவர்கள் ‘புறநானூறு – பலதுறைப் பேழை’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் வாசு. அரங்கநாதன் அவர்கள் ‘உவமைகள் வழிச் சங்கத் தமிழகம்’ என்ற தலைப்பிலும் தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள். இவ்வமர்வை முனைவர் மருதநாயகம் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.

பின்பு, புறநானூற்று ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ’மாநாட்டு மலர்’ ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்த முக்கிய நிகழ்வுகளாக மற்றுமொரு புறநானூற்றுக் கருத்தரங்கம் மற்றும் சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அம்மையாருடன் ஓர் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன. வேறு யாருடைய உதவியும் இல்லாமல் தாம் தனியாகவே சங்கத்தமிழ் நூல்கள் பன்னிரண்டை இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதாகத் திருமதி. வைதேகி அவர்கள் தெரிவித்தது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அவருடைய முயற்சியையும், ஆர்வத்தையும் விழாவைக் காண வந்திருந்தோர் பலரும் பாராட்டினர். உண்மையிலேயே போற்றத்தக்க அரும்பணிதானே இது!

அதற்கடுத்தபடியாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்  பிரபாகரன் அவர்கள் ‘புறநானூறு காட்டும் தமிழ்ச் சமுதாயம்’  என்ற பொருளில் சிறப்புச்  சொற்பொழிவாற்றினார். திருக்குறளோடு புறநானூற்றை ஒப்பிட்டு அவர் வழங்கிய அவ்வுரை மிகச் சிறப்பாகவும், சுவையாகவும் அமைந்திருந்தது.

நாட்டிய நாடகம் ஒன்று அடுத்து  அரங்கேறி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றது. தன் தந்தையையும், பின்பு கணவனையும் போரில் இழந்த பெண்ணொருத்தி மீண்டும் ஒலிக்கின்ற போர்ப்பறை முழக்கத்தைக் கேட்டு வீரம் கொண்டு தன் இளம் புதல்வனையும் போருக்குச் செல் என்று அனுப்புவதை மையக்கருவாகக் கொண்டிருந்தது அந்நாடகம்.

பின்பு மாலை 4 மணியளவில்  புறநானூற்றில் பல்லூடக (multi-media) வினாடிவினா ஒன்று நடைபெற்றது; இஃது பெரியவர்களுக்கானது. ‘கடையெழு வள்ளல்கள் அணி’ மற்றும் ‘மூவேந்தர் அணி’ என்ற இரண்டு அணிகள் இவ்வினாடிவினாப் போட்டியில் பங்கேற்றன. இறுதியில் ‘கடையெழு வள்ளல்கள் அணி’ பரிசினைத் தட்டிச்சென்றது (வென்ற அவ்வணியில்தான் நானும் இடம்பெற்றிருந்தேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே).

null

புறநானூற்றில் பல்லூடக வினாடிவினா (பெரியவர்களுக்கானது)

பின்பு தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் ‘புறநானூற்றில் முதியோள் சிறுவர்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். திரைத்துறையைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பழகுவதற்கு மிகவும் இனியவராகவும், எளியவராகவும் திரு. அறிவுமதி திகழ்ந்தார் என்பதனை இங்கு நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

இரவு உணவு இடைவேளைக்குப் பின்பு ’அமரர் கல்கி’ அவர்கள் எழுதி இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ‘சிவகாமியின் சபதத்தை’ நாட்டிய நாடகமாக அரங்கேற்றினர்.

null

’சிவகாமியின் சபதம்’ நாட்டிய நாடகத்திலிருந்து….

மிகச் சிறப்பான முறையிலே அமைக்கப்பட்டிருந்த காட்சிகள், நாட்டியங்கள், பங்கேற்ற கலைஞர்களின் தேர்ந்த நடிப்பு எல்லாமும் சேர்ந்து அந்நிகழ்ச்சியை அனைவரும் பிரமிக்கும்வண்ணம் மாற்றியிருந்தன. விழாவைக் காணவந்திருந்தோர் யாவரும் இந்நாட்டிய நாடகத்தை வெகுவாக இரசித்து மகிழ்ந்தனர் என்று சொல்லவும் வேண்டுமோ!!

இவ்வாறு இரண்டு நாள் நிகழ்வுகளை உள்ளடக்கிய முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு ’வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்’, மற்றும் ’வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு’ (FeTNA) ஆகியவற்றின் சீரிய தலைமையிலும், உழைப்பிலும் தமிழ்கூறு நல்லுலகே வியந்து பாராட்டும் ஓர் வெற்றி மாநாடாய்த் திகழ்ந்தது எனில் மிகையில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு

  1. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கு நன்றி மேகலா.சென்றுவர வாய்ப்பில்லாதவர்களுக்கு நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள உதவினீர்கள்.
     
    ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு. பிரபாகரன் அவர்களின் புறநானூற்றுப்பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன் .
    மிகவும் எளிமையாக வழங்கியிருந்தார்.
    http://puram1to69.blogspot.com (Blog by Dr. R. Prabhakaran)
    http://puram400.blogspot.com (Blog by Dr. R. Prabhakaran)

    அடுத்து “புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்”
    கட்டுரையையும் பகிர்ந்து கொள்ளுங்க ள்.
    நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி 

  2. ”இம்மாட்டும் எங்கள் உயிரோட்டம் இருப்பது
    செம்மார்ந்த நினதனறிவுச் செழுமையாலே

    எம்மாட்டும் நாங்களுமை மறக்க மாட்டோம்
    அம்மே! என்னாட்டில்யாம் வாழ்ந்திடிலும்”

    அருமையான விழாவைப் பற்றிய அழகானத் தொகுப்பு!

    முதற்கண் நன்றி!

    அங்கே சமைக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளை / அறிஞர் பெருமக்களின் பேருரைகளை அதன் ஒலி  வடிவம் இருப்பின் பகிர வேண்டுகிறேன். அது சாத்தியமில்லாது போகின் தயவு செய்து அதன் சாரமதை இங்கே பகிர வேண்டுகிறேன்.

    நன்றிகள்  சகோதரியாரே! 

  3. ///ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு. பிரபாகரன் அவர்களின் புறநானூற்றுப்பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன் .
    மிகவும் எளிமையாக வழங்கியிருந்தார்.
    http://puram1to69.blogspot.com (Blog by Dr. R. Prabhakaran)
    http://puram400.blogspot.com (Blog by Dr. R. Prabhakaran)////

    சகோதரி தங்களின் பின்னூட்டம் என்னை ஆற்றுப் படுத்தியது மிக்க நன்றி!

  4. புறநானுறு என்றாலே என் நினைவுக்கு வருபவர்கள் கபிலரும், பாரியும்.தொகுத்தவர் யாரென்றே தெரியாத ஒரு தொகுப்பு.சேர, சோழ,பாண்டிய காலத்திலிருந்து உருவானது என்ற ஒரு குறிப்போடு மட்டுமே நம்மிடம் இருக்கும் இந்த புறநானுறு மட்டுமே போதும் நம் தமிழின் பலத்திற்கு.

    இக்காலத்தில் புலவர்களுக்கு அடுத்தே அரசர் இருந்தார் என்பதற்கு இக்கால புலவர்களின் பாடல்களில் அரசனை அவன் இவன் என்றே குறிக்கப்பட்டிருக்கும். அதாவது தமிழே முன்னிலை படுத்தப்பட்டிருக்கும். அத்தகைய புறநானுறுக்கு ஒரு மாநாடு நடத்திய அமெரிக்க வாழ் மக்களுக்கும் அதனை சிரத்தைக்கொண்டு வல்லமைக்கு தந்த மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் நன்றி.

    பொதுவில் வெளி நாடுகளில் வாழும் நம் இதியர்கள் தங்களின் விசேஷ நாட்களை மட்டுமே விழாவாக கூடி நடத்துகிறார்கள், அப்படியில்லாமல் இது தமிழுக்காக நடந்த விழா, நடத்தப்பட்ட விழா எனும் போது பெருமையாக உள்ளது. தமிழகத்திலேயே கல்வி விஷயத்தில் ஆங்கிலமோகம் உச்சத்தில் இருக்கும்போது ஆங்கில நாட்டில் தமிழை
    அறிவுப்போட்டியாக, வினாடி வினாவாக ஆடல் பாடலாக நடத்தி வளரும் இளம் தலைமுறையிடம் தமிழையும் சேர்த்தே வளர்க்கிறார்கள்.

    வண்ணத்தூறலாக வந்த படங்களும் அருமை. பாராட்டுக்கள்.

  5. நிகழ்ச்சியைத் தாங்கள் விவரிக்கும் விதத்திலேயே நானும் இந்த நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பைப் பெய முடியவில்லையே என்ற ஏக்கமே மனதிற்குள் வந்துவிட்டது. திரு.ஆலாசியம் அவர்கள் கோரியது போல மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளைப் பகிந்து கொள்ளமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாநாட்டு மலரை இந்தியாவில் பெற்றுக் கொள்ள ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் தெரியப் படுத்தவும்.

  6. கட்டுரையைப் படித்துக் கருத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    Alasiam G wrote //அங்கே சமைக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளை / அறிஞர் பெருமக்களின் பேருரைகளை அதன் ஒலி வடிவம் இருப்பின் பகிர வேண்டுகிறேன்.//

    சச்சிதானந்தம் wrote //மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளைப் பகிந்து கொள்ளமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாநாட்டு மலரை இந்தியாவில் பெற்றுக் கொள்ள ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் தெரியப் படுத்தவும்.//

    கட்டுரைகள் ஒலிப்பதிவாக/காணொளியாக எனக்குக் கிடைத்தால் ‘வல்லமை’யில் பகிர்கின்றேன். மாநாட்டு மலர், விழாவிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. அது ‘online’ இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அதன் முகவரியைத் தெரியப்படுத்துகின்றேன்.
    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்!

  7. மாநாடு பற்றி அறிந்திருந்தும் வர இயலாத சூழ்நிலை. உங்களைச் சந்திக்கும் அருமையான வாய்ப்பையும் இழந்து விட்டேன் போலிருக்கிறதே 🙁 நிகழ்ச்சிகளை அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் உரையையும் வாசிக்க ஆவலுடன்…

  8. மீண்டுமொரு வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் சந்திப்போம் கவிநயா. தங்கள் பாராட்டுரைக்கு நன்றி!

  9. தங்கள் கூடவே இருந்து மாநாட்டில் பங்கேற்றது போல் உணர்ந்தேன். மிக அருமையான தொகுத்தளித்திருக்கிறீர்கள். திரு.ஆலாசியம் அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். பகிர்வுக்கு  மனமார்ந்த நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *