புவனேஷ்வர்    

 

மகாபாரத முத்துக்கள்!…(பகுதி 5) – பாண்டியனின் வீரம்!

சென்ற நான்கு வாரங்களாக நாம் பூரிசிரவஸ் வதத்தைப் பார்த்தோம். இந்த வாரம், நாம் நம்முடைய தமிழ் தேசத்து அரசன் பாண்டியனின் வீரத்தை பார்ப்போம். ஆம். மலையத்வஜன் பாண்டியன். இவன் நம்மவனே. மலைய பர்வதத்தை தனது கொடியில் உடையவன். தென்னாட்டவன், மலைய பர்வதத்தைத் தனது கொடியில் உடையவன் என்றே வியாசர் சொல்கிறார்.

இவன் பாண்டவர் பக்கம் போரிட்டான்.

நாம் பார்க்கப் போவது பதினாறாம் நாள் யுத்தம். பதினைந்தாம் நாள் பிற்பகலில் துரோணர் பிரம்மலோகம் ஏகினார். அவர் பாஞ்சாலனால் கொல்லப்படவில்லை. சமாதி நிலையில் அமர்ந்து, அந்த உத்தமர் ஜோதி வடிவமாக சென்றார். அவர் பிரகஸ்பதியின் அவதாரம். அருச்சுனன், கண்ணன், தருமன், சஞ்சயன் மற்றும் அஸ்வத்தாமன் கண்களுக்கு மட்டுமே அவர் ஜோதியாக சென்றது புலப்பட்டது. பாஞ்சாலன் வெட்டியது அவர் விட்டுப்போன உடலை மட்டுமே.

சரி. நாம் பார்ப்பது கர்ணன் சேனாதிபதியாக அபிஷேகம் செய்யப்பட்டு போரிட்ட காலம். பதினாறாம் நாள். அருச்சுனன் அஸ்வத்தாமனோடு போரிட்டு அவனை விரட்டி விட்டு சம்சப்தகர்களை எதிர்த்து நிர்மூலம் பண்ணினான். அப்போது திடீரென்று போர்க்களத்தில் ஒரு பெரும் கூச்சல், ஆரவாரம் ஏற்பட்டது. அருச்சுனனும் கிருஷ்ணனும் என்னடா இது என்று பார்த்தனர். பார்த்தால், அங்கே யாரோ கௌரவர் படையை நாசம் பண்ணுவது புலப்பட்டது. கிட்டே போய் பார்த்தால் தெரிந்தது அது தென்னாட்டுப் பாண்டியன் என்று. தனது தேர் மேல் நின்று, சூரிய மண்டலத்தில் இருந்து கதிர்கள் வெளிப்படுவது போல, அம்புகளை எல்லா திசைகளிலும் செலுத்திக் கொண்டு, யமனே இன்னொரு உருவம் எடுத்து வந்து வாய் திறந்த அந்தகனாக போரிடுவது போல தோன்றியது. இந்திரன் அசுரர்களை அழிப்பது போல பாண்டியன் கௌரவர்களை நசித்தான். அவனது கூரிய அம்புகள் கரிகளையும், பரிகளையும் துளைத்து பூமியில் விழுந்தன. நீருக்குள் எய்த அம்பு எவ்வாறு நீருக்குள் உட்புகுமோ அது போல இரும்புக் கவசங்கள் அணிந்த எதையும் அவன் விடுத்த பலவிதமான அம்புகள் [2] துளைத்தன. அவன் முன் வந்த எதிரிகள் அவன் தேரை ஒருமுறை தான் பார்த்தனர். மறுமுறை பார்க்க அவர்கள் உயிரோடு இருக்கவில்லை. அதற்கு வாய்ப்பில்லாமல் யமன் வீட்டுக்கு விருந்தாளியாக போனார்கள்.

இப்படி சஞ்சயன் சொல்லிக்கொண்டே வருகையில் அதைக் கேட்ட திருதராஷ்டிரன் மிக்க வியந்தான். அவனுக்கு பாண்டியனைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. “சஞ்சயா, உலகப்புகழ் பெற்ற பாண்டியன் பெயரை நீ முன்னொரு முறை கூறியதாக நினைவிருக்கிறது. ஆனால் அவன் புரிந்த வீரச்செயல்கள் எதையும் நீ கூறவில்லை. இப்பொழுது சொல், அவன் வலிமை எத்தகையது? அவன் வீரம் எத்தகையது? அவன் திறமை எத்தகையது? அவன் வீரச்செருக்கு எத்தகையது?” என்று கேட்டான்.

“பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், கர்ணன், பார்த்தன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரை தனுர்வேதத்தில் கரைகண்டவர்களாக நீர் நினைக்கிறீர். ஆனால் பாண்டியனோ, அவர்களிலும் மேலாந்திறமை படைத்தவனாக பெருமிதம் கொள்ளும் இயல்பினன். இங்குள்ள எந்த அரசனையும் தனக்கு இணையாக அவன் நினைத்தானல்லன். பீஷ்மரையும் கர்ணனையும் தனக்கு நிகரானவர்களாக அவன் ஒப்புக் கொள்வதில்லை. ஏன், அருச்சுனனையும் கிருஷ்ணனையும் விட தான் எந்த விதத்திலும் தாழ்ந்து விட்டதாக அவன் எண்ணவில்லை.

பாண்டவர்களுக்கு உமது மதிகெட்ட மக்கள் இழைத்த அநீதிகளை கண்டு நெஞ்சம் பொறாதவனாய், செங்கோல் வளையாத நீதிமானான பாண்டியன்  வெஞ்சினம் மேலிட்டு, வஞ்சினமுரைத்து, கூற்றுவனே மானிட உருக்கொண்டு கொலைத்தொழில் புரிவது போல அங்கே நும் மூட மகனின் படைகளை சிதறடிக்கின்றான்.

தேர்களும் புரவிகளும் யானைகளும் காலாட்களும் நிரம்பி வழியும் அந்த சேனா சமுத்திரம், சுழிக்காற்றுப் போன்ற அம்மன்னனின் கணைகளால் துளைக்கப்பெற்று, குயவனுடைய சக்கரம்போல அங்கே சுழன்று சிதறுகிறது! கௌரவ மேகங்களை பாண்டிய புயற்காற்று சிதறடிக்கிறது! கூரிய அம்புகளை தனக்கு நாலாப்புறங்களிலும் செலுத்தி, மூடன் துரியோதனனின் படைகளை பாண்டியன் எரிக்கும் காட்சி, ஆயிரம் கதிர்களை உடைய ஞாயிறு இருளைப் போக்குவதைப் போல உள்ளது! அதோ, கரிய பெரிய மலைமுகடுகளை இடி பிளப்பது போல, அவனது அம்புகள் யானைகளின் மத்தகங்களைப் பிளக்கின்றன. யானைகளின் மேலுள்ள கொடிகளை துண்டித்து, அதன் மேலுள்ள ஏழு வீரர்களை யமாலயம் அனுப்பி, யானைகளைப் பாதுகாக்கும் வீரர்களையும் அவர்களுக்கு துணையாக அனுப்பி யானைகளையும் கொல்கிறான் பாண்டியன். குதிரை, குதிரை மேலிருப்பவன், அவன் ஆயுதங்கள் – இவை யாவையும் ஒருசேர அழிக்கிறான் பாண்டியன்! புறம் காட்டாத புலிண்டர்கள் (குறவர்கள் – முருகன் மனைவியாரான வள்ளியின் குலம்), பாலிகர்கள் (Baluchistan காரர்கள்), நிஷாதர்கள், போஜர்கள், அந்தகர்கள், தென்னாட்டவர்கள் யாரும் அவனிடம் இருந்து தப்பவில்லை! கவசமுடைந்து ஆயுதங்கள் அழிந்து அவர்கள் உயிரை விட்டனர்.” சஞ்சயன் கண்ணிழந்த அரசனுக்கு இங்ஙனம் பாண்டியனின் வியத்தகு வீர்யத்தை உரைத்தான்.

இந்நிலையில், பாண்டியனை அஸ்வத்தாமன் பார்த்தான். “சரிதான், இவனை இப்படியே விட்டால் கௌரவப் படை சற்று நேரத்துக்குள் நாசமாகி விடும் போலிருக்கிறதே! இவன்றன் தோள்வலியைத் தாங்கும் திறன் இப்படையில் யான் ஒருவனே படைத்துள்ளேன். இனியும் பொறுத்தல் பிழை” என்று பாண்டியனைக் கண்டு தன் படைகளை எண்ணி மிக அஞ்சிய அஸ்வத்தாமன், காற்றினும் கடிய தனது தேரில் பாண்டியனை நோக்கி விரைந்தான். பகைவன் ஆயினும், பாண்டியனை மெச்சிப் புகழ்ந்து போருக்கு அழைத்தான்.

க்ஷத்திரியனானவன், பகைவன் அறைகூவி அழைத்தால் மறுப்பது தகாது. படைகளோடு சேர்ந்தோ அல்லது ஒற்றைக்கு ஒற்றையாகவோ பகைவன் கூறியவண்ணம், அவன் கோரிய ஆயுதத்தோடு போர் புரிவது முறை. க்ஷத்திரிய தருமமே வடிவெடுத்தது போல வில் பிடித்து தேரேறி நின்ற பாண்டியன் அந்த அறைகூவலை மறுப்பானா?

என்ன ஆயிற்று?

அடுத்த வாரம் பார்ப்போம்!

உபரித்தகவல்:

[1] சம்சப்தகர்கள்:

யுத்தத்தில் எந்த வீரனும் வெற்றி அல்லது வீரமரணம் என்று புகுவான் ஆயினும், ஒரு குறிப்பிட்ட காரியசித்திக்காக “இன்னாரைக் கொல்லாமல் திரும்ப மாட்டோம்/இன்ன காரியத்தை செய்யாமல் திரும்ப மாட்டோம்” என்று கோரமான சபதம் பூண்டு, தங்கள் இறுதிக்கடன்களை தாங்களே செய்து கொண்டு போருள்ளுள் செல்லும் வீரர்கள் சம்சப்தகர்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட விரதம் சம்சப்தக வ்ரதம். இந்நாளில் தற்கொலைப் படையினர் உள்ளார்கள் அல்லவா? அது போல அந்நாளில் சம்சப்தகர்கள். அருச்சுனனை போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டி கௌரவர்கள் கையாண்ட ஒரு யுத்த தந்திரம் இது.

[2] யுத்தத்தில் பயன் படுத்தப்பட்ட அம்புகள் பலவிதம். அவற்றில் சில வகைகள்:

1. க்ஷூரப்ரம்: கத்தியைப் போன்ற முனையை உடைய அம்பு.

2. வத்சதந்தம்: பசுவின் பல்லைப்போல அமைந்த முனையினை உடைய அம்பு (தோசைக் கரண்டி போல என்று வைத்துக்கொள்ளலாம்)

3. நாராசம்: ஒரு கை அளவு, அதாவது இரண்டரை, மூன்று அடி நீளமுள்ள, அம்பு. (ராக்ஷசர்களின் favourite! இறுதி யுத்தத்தில் கும்பகர்ணனும், ராவணனும் ராமன் மீது எய்ததில் பெரும்பாலும் நாராசங்களே). பீமனுக்கு மிகப் பிடித்தமான அம்பு வகை. அபிமன்யுவும் சாத்யகியும் அருச்சுனனும் இவற்றை பயன்படுத்துவது உண்டு. (கவசங்களைப் பிளக்கும் அம்புகளில் இது தலையாயது)

4. விபதம்: தடித்த நீண்ட அம்புகள். (யானைகள், கவசங்கள் ஆகியவற்றின் மீது எய்ய மிகச் சிறந்தது)

5. அர்த்தசந்திர பாணம்: கூறிய பிறை வடிவிலான முனை உடைய அம்பு.

6. அஞ்சலிகம்: சற்றே, நீண்ட, வலிய, வேல் போன்ற (இலை வடிவமான) பரந்த முனை உடைய, முனையின் பக்கவாட்டிலும் மிக மிகக் கூர்மையான அம்பு. கர்ணனின் தலையை அருச்சுனன் இந்த வகை அம்பினால் தான் துண்டித்தான். சாதாரணமாக இந்த வகை அம்பினை வீரர்கள் எடுத்தவுடன் விடுப்பதில்லை. எதிராளியை மற்ற வகையான அம்புகளால் கவசம் உடைத்து, காயப்படுத்தி பலம் குன்றச் செய்து, இறுதியாக கைகளையும் தலையையும் வெட்டி விட மட்டுமே இதைப் பயன் படுத்துவது பாரத வழக்கம். நூற்றுக்கணக்கில் இந்த அஞ்சலிகங்களை சரவர்ஷமாக – அம்புமாரியாகப் பொழிந்து போரிடும் பழக்கம் கர்ணனைத் தவிர வேறு யாருக்கும் பாரதத்தில் இல்லை.

முதலில் கூறிய நான்கும் துளைக்கும் வகையான அம்புகள். கடைசியாகக் கூறிய இரண்டும் வெட்டுவதற்கான அம்புகள். வெட்டும் முனைகள் மற்ற அம்புகளில் பொருத்தப்படலாம்.

இவை இல்லாமல் நளிகங்கள் என ஒன்று உண்டு. அவை இந்நாளின் cluster bombs போல, பாதி வழியில் வெடித்து, பல பல சிறிய கூறிய ஆயுதங்களாக சிதறி, பொதுப்படையாக படைகளைத் தாக்கும். இதை தரும யுத்தத்தில் பயன்படுத்துவது இகழப்பட்டது. கெட்டுப்போன வீரர்கள், இழிந்த குணம் உடையோர் தான் இவற்றை உபயோகிப்பார்கள் எனபது அந்நாள் வழக்கு.

அம்புகள் இரும்பாலோ மூங்கிலாலோ செய்யப்பட்டன. மூன்று  கழுகு (அல்லது மயில்) இறகுகள் (fletching) கட்டப்படுவது இந்நாளிலும் வாடிக்கை. That lends stability in flight. பிரசித்தமான வீரனானால் அவன் பெயர் அம்பில் பொறிக்கப் பெறும். நெய் தடவப்பெற்று (துருப்பிடிப்பதில் இருந்து) பாதுகாக்கப்பெறும். (அதியமானை புகழ்ந்து ஔவையார் பாடும் பாட்டில் கூட, பகை அரசனின் ஆயுதங்கள் நெய் பூசப்பெற்று பளபளப்பாக விளங்குவதாக சொல்வார்).

இப்போதெல்லாம் அம்பின் பின் முனையில், notch என்று சொல்லப்படும் குழிவு இழைக்கப்படும். அது வில்லின் நாணில் அம்பினைப் பொறுத்த உதவும். இது அந்நாளிலும் இருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “மகாபாரத முத்துக்கள்!…(பகுதி 5)

  1. மகா பாரத யுத்தக் காட்சி பாண்டியனின் செருக்கு படிப்போர் மனதில் பரவசப் படுத்தும். தர்மத்தை காக்க எப்படி எல்லாம் போரிட வேண்டி இருக்கிறது.

    பகிவிற்கு நன்றிகள் சகோதரரே!

  2. எத்தகையோரும் சில நேரங்களில் அறிந்தோ..அறியாமலோ தவறுகள் செய்யக் கூடும்.ஆனாலும் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதை தருமரின் வாழ்க்கை மூலம் அறியலாம்.’தருமம் வெற்றி பெறும்’ என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி .ஆயினும் தருமத்தின் வெற்றி அவ்வளவு எளிதல்ல.அதற்கு துன்பத்தை பொறுத்துக்கொண்டு தியாகங்கள் செய்யவேண்டும் என்பதே மகாபாரதம் உணர்த்தும் செய்தி,

    அத்தகைய காவியத்தை அழகிய நடைமுறை தமிழில் எளியோனுக்கும் புரியும் படியாக வாராவாரம் திருப்பங்களை முடிவில் வைத்து படத்துவரும் புவனேஷ்வர் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    மகாபாரதத்து முத்துக்கள் என்று நீங்கள் தலைப்பு வைத்தாலும் மகாபாரதம் தரும் முத்து இவர் என்றே என்னால் சொல்ல முடிகிறது.

  3. //கௌரவ மேகங்களை பாண்டிய புயற்காற்று சிதறடிக்கிறது!//

    அருமை. போர்க்களத்தில் சுற்றிச் சுழலும் அம்புபோல தங்கள் சொல்லாட்சி சுற்றிச் சுழலுகிறது. அம்புகளைப் பற்றித் தாங்கள் கொடுத்த உபரித் தகவல்களும் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே.

  4. பெருமதிப்பிற்குரிய ஆலாசியம் அண்ணா அவர்களே,
    உண்மை. தருமத்தைக் காக்க என்றுமே போராடத்தான் வேண்டும் போலிருக்கிறது! இயற்பியலிலும் entropy (disorder) always increases, ∆S > 0 என்று தானே சொல்கிறார்கள்?
    தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி, அண்ணா.

  5. பெருமத்திப்பிற்குரிய கவிஞர் தனுசு அவர்களே,
    தங்கள் மனம் கனிந்த பாராட்டுக்கும், நீண்ட கருத்துரைக்கும் அடியேனுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.
    தங்களைப் போன்ற பெரியோர் ஆசியால் மேலும் எழுத விழைகிறேன்.

  6. மதிப்பிற்குரிய திரு. சச்சிதானந்தம் அவர்களே,
    தாங்கள் தரும் ஊக்கம் அடியேனை பெரிதும் எழுதத் தூண்டுகிறது.
    பெரும்பாலும் இங்கே வரும் உவமைகள் வியாசரே வடமொழியில் தந்தவை தான். அவற்றைத் தமிழில் தருவது மட்டுமே அடியேன் செய்வது.
    மேலும் எழுத ஆவல்.

  7. வழக்கம் போல் அருமையான வரிகளால் போர்க்களக் காட்சியை ஓவியமாகத் தீட்டியிருக்கிறீர்கள். உபரித் தகவல் ஒவ்வொன்றும் அற்புதம்!!!. தங்களின் இந்தத் தொடர், பெரிதும் போற்றப்பட வேண்டிய சேவை என்றே கருதுகிறேன். மிக்க நன்றி!!!

  8. எனது பெருமதிப்பிற்குரிய சகோதரி ஸ்ரீமதி. பார்வதி இராமச்சந்திரன் அவர்களே,
    தங்களது வாழ்த்துக்கு அடியேன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
    தங்கள் போன்ற பெரியோரின் ஆசிகளே அடியேனை மேலும் மேலும் தூண்டி எழுதப் பண்ணுகின்றன.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

Leave a Reply to புவனேஷ்வர்

Your email address will not be published. Required fields are marked *