கோ. ஆலாசியம்

Bharathy (1)

 

 

 

 

 

 

 

 

 

 

மகாகவியின் கடைசிப் பயணம்!

இன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 92 வருடங்கள் ஆகிறது. யுகங்கள் கழிந்தாலும் அவனின் மிகச் சிறந்த எண்ணமும், சீரிய சிந்தனையும், அவனது ஒளிபடைத்தப் பார்வையில் இந்த உலகையும், மானிடத்தையும் ஒரு சேர தனது அன்பால் அணைத்து, இந்த மானுடமும் வையமும் வாழ்வாங்கு வழி கூறிச் சென்ற அந்த தீர்க்கதரிஷி நம்மை விட்டுப் பிரியவில்லை, நம்மோடு அவனது சிந்தனைகளாக வாழ்ந்தும் கொண்டிருக்கிறான்.

அந்த மகாகவியின் கடைசி நாளையும், அந்த இளஞ்சூரியனைத் தாங்கி இருந்த அவனது பூத உடல் அக்னிக்கு ஆகுதியானதையும் மீண்டும் ஒருமுறை அவனது நினைவு நாளிலே நினைத்துப் பார்ப்போம்.

அந்த நாட்களினைப்  பற்றிய நிகழ்வுகளை பாரதிப்  பிரியரும் தமிழறிஞருமான திருவாளர். ரா. அ. பத்பநாபன் அவர்கள் தொகுத்து வழங்கிய  ‘சித்திர பாரதி’ என்னும் நூலில் காணும் இப்பகுதியை நான் இங்கே பகிர்கிறேன்.

யானையின் மூலம் உயிரைக் கவராத யமன், இரண்டு மாதம் காத்திருந்து, வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்.

1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது இரத்தக் கடுப்பாக மாறியது. முதல் தேதியிலிருந்து விடுப்பில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ‘மித்திரன்’ அலுவலகத்திலிருந்து ஓர் சக ஊழியர் வந்து விசாரித்தார்.

சில தினங்களில், சரியாக செப்டம்பர் 12ஆம் தேதி திங்களன்று வேலைக்குத் திரும்புவதாகச் சொல்லி அனுப்பியுள்ளான் பாரதி. அன்றுதான் அந்த இளஞ்சூரியனின் பூத உடல் எரிகாடு சென்றது !

1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்:

“அன்றிரவு பாரதி ‘அமானுல்லா கானைப் பற்றி பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தவர். 1914-18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மாநியருக்குச் சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றிப் பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தார்கள்.  முன்னிரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்”

நெல்லையப்பர், “எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கி விட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார். “கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்” என்றும், “காலா, உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா ! சற்றே உன்னை மிதிக்கின்றேன், அட (காலா)” என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்” என்று கூறுகிறார்.

பாரதி காலமானது சரியாக இரவு 1:30 மணி. இதை நீலகண்ட பிரம்மச்சாரி, ஹரிஹர சர்மா முதலியோர் தெரிவித்துள்ளனர்.

பாரதியின் மரணச்  செய்தியைப் பொழுது விடிந்ததும்  நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டி, கிருஸ்துவப் பாதிரியாராகப்  புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் வந்தனர்.

பாரதி குடும்பத்துக்கு எப்போதும் ஆதரவுப் புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவிபுரிந்தார். “பாரதியார் உடலைக் காலை எட்டு மணிக்குத்  திருவல்லிக்கேணி (கிருஷ்ணாம்பேட்டை) மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும், லஷ்மண ஐயரும், குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம்.

பாரதியார் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்ரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.

பாரதியின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கு  முன்னர் நண்பர் சுரேந்திரநாத்  ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்” -இவ்வாறு  நெல்லையப்பர் கடைசி நாளை விவரித்துள்ளார்.

பாரதிக்குப் ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்குக் கொள்ளியிடுவது என்ற பேச்சு வந்தபோது, யாரோ நீலகண்ட பிரமச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், “என்ன, நானா? இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?” என்று மறுத்துவிட்டார்.

முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கர்மங்களைச் செய்தார். பல நூட்ட்ராண்டுக்கொருமுறை தோன்றும் அதிசய மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு மகாபுருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்துத்  தமிழுலகம் அறியவில்லை. நண்பர்களும், அறிஞர்கள் சிலருமே உணர்ந்திருந்தனர்.

தென் தமிழ்நாட்டில் 1882 டிசம்பர் 11 தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் 1921 செப்டம்பர் 12 ஞாயிறன்று, அதிகாலை 1:30 மணிக்குப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 நிரம்பவில்லை! சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன!

அடுத்ததாக ‘சித்திர பாரதியில்’ காணப் படாத; வேறொரு இடத்தில் காணப்படும் பாரதியின் கடைசி நேரக் காட்சியின் சிலக் குறிப்பு இது சற்று வேறு ஒருத் தகவலை நமக்குத் தருகிறது.

இருந்தும் ‘சித்திர பாரதியின்’ தொகுப்பாளர் இந்தத் தகவல்களைக் குறிக்கும் முன் பொதுவாக பாரதியின் கடைசி நாளன்று நண்பர்கள் யாவரும் கவலையோடு அமர்ந்திருக்க.. என்று எழுதுகிறார். அப்படிப் பார்த்தால் அதிலே இந்த நண்பரும் இருந்திருக்கலாம் என்று என்னுதளுக்கும் இடமளிக்கிறது. எனினும் நாம் மேலே செல்வோம்.

பாரதியும் சிங்காரவேலரும்.

சிங்காரவேலர் திருவல்லிகேணியில்  வசதியான மீனவக் குடும்பத்தில்  பிறந்தவர். அவர் ஹைகோர்ட்டில் வக்கீலாக இருந்தவர். புத்தரின்  மீது அதிகப் பக்திக் கொண்டவர். 22. சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அவரது இல்லம்.

1907-ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சென்றிருந்த பாரதி, வ.உ.சி, சக்கரைச் செட்டியார் ஆகியோர் சென்றிருந்தார்கள், அதன் பிறகு பாரதிக்கும் இந்த சிங்கரவேலருக்கும் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

ரஷிய புரட்சியை  வரவேற்றுப் பாடிய பாரதியை பாராட்டிய சிங்காரவேலர் இருவரும் இணைபிரியா நண்பர்களும் ஆனார்கள். இந்த பொதுவுடைமைவாதி சிங்கார வேலர் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்யானை  பாரதியை துதிக்கையால் தூக்கி எறிந்த செய்தியைக் கேட்டவுடன் பாரதியின் இல்லம் சென்று பார்த்ததோடு தினமும் அவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்து குடிக்கச் சொல்வார்.

அதுபோலத்தான் பாரதி  சுகமில்லாமல் இருந்த போது அன்றும் பாரதிக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்த போது  தன்  மடியின் மீது தலையை  இருத்தி இருந்த மகாகவியின் உயிர் பிரிந்தது என்று  சிங்காரவேலரோடு நெருங்கிப் பழகிய இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சியினைச் சேர்ந்த கே. முருகேசன் என்பவர் கூறியதாக ஒருக் குறிப்பை, ஜனசக்தி பாரதி நூற்றாண்டு விழா நிறைவுமலரில் தலையங்கம் என்று குறிப்பிட்டு வரைந்தக் கட்டுரையின் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் குறிப்பில், இவையெல்லாம் சிங்காரவேலரின் தமையனாரின் பேத்தி எம்.ஜெயபாய் அவர்களை கண்டு 23-11-1982 ல் உறுதிச் செய்யப் பட்ட செய்திகள் என்றும் குறிக்கப் பட்டுள்ளது.

சிங்காரவேலரின் கொள்கைகள் வேறு நண்பர்கள் வேறு என்றுப் பழகியவர் என்பதையும் அறிய முடிகிறது.  இவரின் நண்பர் ஹிந்துப் பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரிரங்க  ஆச்சாரியர், இவரின் கட்டுரைகளை அப்பத்திரிக்கைகளில் வெளியிட்டு இருப்பதாகவும் அறிய முடிகிறது.

இங்கே மேலும் ஒரு விசயத்தையும் கூற வேண்டும். இந்த மகாகவி பாரதி பொதுவுடைமை கொள்கையை அந்நாளில் ஏற்று ‘புரட்சி’ என்னும் புதுத் தமிழ் வார்த்தையே தமிழில் படைத்து “ஆகவென எழுந்தது பார் புரட்சி” என்று மகிழ்வோடு பாடிய பாரதியை, தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் அவனது புகழைப் பரப்பச் செய்த பெருமை அமரர். ஜீவானந்தம் அவர்களையேச் சாரும் என்பது தான் அது.

மகாகவியின்  கடைசிப் பயணம்!

செப்டம்பர் 11

நள்ளிரவுத் தாண்டி மணி

ஒன்றரை…

காலனை எட்டி உதைக்கப்
பார்த்தவன்
கால்களோடு கரங்களும்
கட்டப் பட்டதோ!

ஒரு மாமணியின் நாவது
அறுந்து போனது
புதிய கோணங்கிச் சத்தம்
நின்று போனது…
எங்கள் சுதேசிச் சூரியன்
மறைந்து போனது…

வேதாந்த ஊற்று அது
வெற்றுடம்பு ஆனது
ஐயகோ! என்ன செய்வேன்
எங்கள் மகாகவி
மண்ணை விட்டுச் சென்றானே!

பிரபஞ்ச இயக்கத்தோடு
தன் இதயத்தை
இணைத்திருந்தவனின்
இயக்கம் நின்றதே

பிரபஞ்ச மகாகவி
விரைந்து போய் விட்டான்
ஷெல்லியின் தாசன்
எத்திசைப் பறந்தானோ…

விண்ணில் பறந்தானா
இல்லை …
விடுதலை பெறும்வரை
மண்ணிலே இருக்கும்
வரமதை பெற்றானா

கனன்றுக் கொண்டிருந்த
கவிச் சூரியன்
அமைதியில் குளிர்ந்ததே
வெடிச்சிரிப்பில் விண்ணவரை
ஈர்ப்பவன் நொடிப் பொழுதில்
மறைந்தானே!

பக்கத்தில் நின்றுப்
பார்த்து கொண்டு இருந்தவர்களின்
கண்களில் எல்லாம்
கண்ணீர்ப்
பெருக்கெடுத்து ஓடுகிறது

விடியலை நோக்கி
விடுதலை வேள்வி
செய்யச் சொன்னவன்
இல்லாத காலைப் –
‘பொழுது கருப்பாகவே விடிந்தது’

இரவிலும் ஒளிர்ந்த
இளஞ்சூரியனின் மறைவு
சொல்லி விடப்பட்டது…
சொந்தமான நண்பர்களுக்கு

சொல்லொண்ணா துயரத்தோடு
வந்து சேர்ந்தனர்
மாகவியின்
நெஞ்சுக்கினியர்
துரைசாமி ஐயர்,

ஆச்சாரியார் மூவரோடு
சுரேந்திரநாத் ஆர்யா
சர்க்கரைச் செட்டியார்,
ஹரி ஹர சர்மா…

எட்டயபுரத்தான்
ஏறுபோல் நடந்த
சிங்கத்தின்…
பூத உடலை
எட்டுமணிக்கு ஏற்றி வைத்து
பாடையோடு பயணம்

சந்தனமாய் மணந்தவன்
சங்கொலி எழுப்பி
சாகாவரம் கேட்டவன்
மாந்தரெல்லாம் அமரத்துவம் பெற
ஆற்றுப் படுத்தியவன்

அமரகவியின் ஆருயிர் தங்கிய
அந்த சந்தன உடல்
இப்போது அழ்கடலாய்
அமைதியில் கிடக்கிறது.

பாரையேத் தன்கையில்
வைத்துப் பார்த்தவனின் உடல்
ஒரு பாடைக்குள்
பத்திரமாகப் படுத்துக்கிடக்கிறது

மகாகவியின் கடைசி ஊர்வலம்
கூடிப் போனவர்கள்
கொஞ்சம் அல்ல வெறும்
இருபதுக்கும் குறைவு தானாம்…

இதயம் கனக்கிறது
அநீதியின் சங்கருக்க
ஆளுக்கொரு வாள் கொடுத்தவன்
வாழ்வின் கடைசி ஊர்வலத்தில்…

என்னக் கொடுமையடா
நன்றிகெட்ட மக்கா
நாய்களுக்கே உண்டந்த
உணர்வே ஏனிப்படி
நாயினும் கேவலமாக…

நடிக்கத் தெரியாதவனின்
கடைசி ஊர்வலம்
இப்படிதானோ…

கூடவேத் திரிந்தக்-
குவளைக் கண்ணனும்
அன்புகாட்டிய லட்சுமண ஐயரும்
ஆருயிர் நண்பன் ஆர்யாவும்
பாரதியின் ஆக்கங்களை எல்லாம்
அரங்கேற்றிய நெல்லையப்பரும்

ஆளுக்கொரு பக்கமாய்
அழுதபடி
தூக்கிப் போயினரே…

பாவங்கள் ஏதும்
செய்யாதவன்
படுத்திருக்கும் பாடை அல்லவா

பாரமே இல்லாது
பூப் போல இருந்ததாம்
போய்ச்சேரும் வரை

அதனாலே எடுத்தோர்
தோளிலிருந்து
இடமாற்றம் செய்யவில்லை.

மகாகவி
இறக்கி வைக்கப்பட்டான்…
மகாத்துயரை
எப்படி இறக்கி வைப்பது?

சரேந்திரநாத் ஆர்யா வழங்கிய
பாரதியின் சுந்தர கீர்த்தி!
சில மணித்துளிகள்…

மகாகவி அருகில் நின்று
மனம் குளிர்ந்திருப்பான்!

கவிச்சூரியனால்
ஒளி பெற்ற மற்ற கோள்கள்
இப்போது இருண்டு போயின…

இடிவிழுந்த மனதில்
இன்னல்கள் கோடியாயினும்
கவிக்கோவை
கட்டைகளில் இறக்கினர்

காவியம் படைத்த
கலைச் சூரியன் மேனியில்
ஹரிஹர சர்மா
கடைசியாக தீ மூட்டினார்…

பற்றி எரிந்தது
பாரதியின் உடல்…
வேள்விப் பிரியனுக்கு
வேதங்கள் போற்றிய அத்வைதிக்கு
அக்னி யென்றால்
அத்தனைப் பிரியமோ!

பக்கத்தில் இருந்தவர்கள்
யாவரின்
பாலும் இதயங்களும்
சேர்ந்துக் எரிந்தன…

ஒளிபடைத்த கண்களை
ஓடி பாய்ந்து பெற்று
தனதுக் கண்களுக்குள்
சொருகி கொண்டது
தீயின் பிளம்பு

அச்சமில்லை
அச்சமில்லை என்று
அஞ்சாத நெஞ்சுடன் திரிந்தவனின்
நெஞ்சை தஞ்சமெனக்-
கொண்டது அந்த தீக் கொழுந்து

காவியங்களை ஓவியங்களாகத்-
தீட்டியவனின் கரங்களை
தனது கன்னங்களோடு
ஒத்திக் கொண்டது
அந்த அக்னி தேவதை

பாரத்ததை
அளந்தவன் பாதமதை
தனதாக்கிக் கொண்டு
பரதமும் ஆடிக் களித்தது
அந்த அக்னிக் கன்னி.

ஆனால்
மனிதநேயக் கடலாக
கருணையை உற்பத்தி செய்த
அவனின்
இதயத்தை மட்டும்
இறுக்கிப் பிடித்துக் கொண்டு…

ஓ ! வென்று
அழுது புலம்பியதே அந்த அக்னி…

அழுதக் கண்ணீர்
துடைக்க துடைக்க
ஆறு போல் பெருகினாலும்

நண்பர்கள் ஒருவரோடு ஒருவர்
மற்றவரின் வலிக்கு
மருந்தும் போட்டுக் கொண்டனர்…

ஆனால் அந்த
கிருஷ்ணாம் பேட்டை
மயானம் மட்டும்….
ஆனந்தக் கண்ணீர் வடித்தது !

அது ஒரு மகாகவிஞனின்…
மகாப் புண்ணியவானின்
தேகத்தை தாங்கியதால் வந்ததாம்!

பிரபஞ்ச இயக்கத்தில் கலந்தவன்
பிரபஞ்சம் உள்ளவரை அதில்
இயங்கிக் கொண்டே இருப்பான்!

இந்த மகா புருஷனின்
நினைவுகள்
காலகாலத்திற்கும்
நம்மோடு நிலைத்து நிற்கும்

வாழ்க! வளர்க! மகாகவி பாரதியின் புகழ்!!!

நன்றி::’சித்திர பாரதி’

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “மகாகவியின் கடைசிப் பயணம்!

  1. ’மகாகவியின் கடைசிப் பயணம்’ கண்களில் நீர் பெருகச் செய்துவிட்டது. அரிய தகவல்களும் அற்புதக் கவிதையும் அடங்கிய கட்டுரையை அளித்துள்ள ஆலாசியம் அவர்களுக்கு உளம்கனிந்த பாராட்டுக்களும் நன்றியும்! வாழ்க அந்த அமரகவியின் புகழ்!!

  2. அந்த மகாகவியின் இறுதி யாத்திரையில் அவருக்கு பிரேத சம்ஸ்காரம் பண்ணுவிக்கக் கூட ஆளில்லாமல் போனது அவருக்கு சங்கடமல்ல. நமக்குத்தான் அவமானம். நமக்குத்தான் வைரமானாலும் நம் கையில் கிடைத்துவிட்டால் கண்ணாடிக்கல்லாக நினைப்போமே.

    தீர்க்கதரிசி மேதைகள் என்றுமே தங்கள் வாழ்நாளில் மதிக்கப்பட்டதில்லை. ஏசுவும் சொன்னாரல்லவா? “A prophet is never honoured in his own country” என்று? இருக்கும் போது உதவ மாட்டார்கள்.

    எழுதுவதைப் படிப்பார்கள். புகழ்வார்கள். உதவி என்று போய்க் கேட்டால் முகம் சுளிப்பார்கள் அல்லது விலகிப்போவார்கள். மரியாதை கெட்டுவிடும். இது இன்று வரை நிகழும் ஒன்று.

    இன்று பாரதியை சிலாகிக்கும் இந்தியா, தமிழகம் அந்த மஹாகவி ஜீவியவந்தனாக இருந்தபோழ்து என்ன செய்தது? வாழ விட்டதா? இன்றும் பல கவிஞர்கள் இதே நிலையில் உள்ளனர். நாளையும் இருக்கமாட்டார்கள் என்று நம்புவதற்கு எனக்கு எந்த ஆதாரமும் இந்நாள் வரை கிட்டவில்லை.

    Bharathi! He was buried like a thief, a funeral hardly suiting what he really was – a jewel to his homeland.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  3. மகாகவியின் நினைவு நாளில் அவரின் இறுதி நாள் மனம் கனக்கச்செய்தது, நல்லதொரு பதிவை தந்து தன்னை பாரதியின் சீடராக அர்பனித்திருக்கும் நண்பர் ஆலாசியம் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.

    பாரதி
    லட்சுமிக்கு பிறந்த சரஸ்வதி
    சின்ன சாமிக்கு பிறந்த
    பெரியசாமி.

  4. மனம் கனத்து விட்டது. உலகின் மாபெரும் மேதைகளுக்கும் ஞானிகளுக்கும் முடிவு பெரும்பாலும் இது போலவே இருக்கிறது. தங்களது கவிதை வரிகளைப் படிக்கப் படிக்க கண்களில் கண்ணீர் பெருகி விட்டது. நண்பர் திரு.ஆலாசியம் அவர்களுக்கு என் பணிவான நன்றிகளும் வணக்கங்களும்.

  5. மகாகவிக்கு மிகச்சிறந்த கவிதாஞ்சலியைப் படைத்த ஆலாசியத்திற்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ….. தேமொழி

  6. கவிதாஞ்சலியை இங்கே சமர்பிக்க, அவனது சிந்தனையில் ஆழ வாய்ப்பளித்த வல்லமைக்கும்  அதனை அனுபவித்து வாழ்த்துக்கள் உரைத்த சகோதரசகோதரிகள் உங்கள் யாவருக்கும் எனதுநன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.  

  7. மனதை உருக்கும் வரிகள்!. கண்களில் நீர் நிரம்பியது. தங்கள் கவிதா விலாசத்தின் மேன்மையை என்ன சொல்லிப் பாராட்ட!!!!…

    ஒரு மேலதிகத் தகவலாக, கீழ்க்கண்ட சுட்டியைத் தருகிறேன். இதில் காணப்படும் கட்டுரையின் இறுதி வரிகள் சம்மட்டி போல தாக்கின. சொன்னவரும் சாமான்யப்பட்டவரல்ல.

    http://solvanam.com/?p=25560

  8. வ.உ.சி.யின் நன்றியுணர்வு தான் எத்தகையது !

    ///வாசல் வரைக்கும் வழியனுப்ப வந்தவர், இசைக்கவி ரமணன் அவர்களிடம்,
    ‘எய்யா. அந்த எட்டயப்புரத்துச் சுப்பையான்னு படிச்சேளே, சுப்பையா மாமாவப் பத்தி! கண்ணீர் வந்துட்டு. . . . எங்க குடும்பமாது வறுமைல கஷ்டப்பட்டுச்சு. ஆனா சுப்பையா மாமா குடும்பம் பட்டினில சங்கடப்பட்டுது . இருக்கும் போது சோறு போடாம இப்ப பாரதி பாரதிங்கானுவொ, சவத்துப் பயவுள்ளய! ஆத்தரமா வருதுய்யா’என்றார், எண்பது வயதைக் கடந்த பெரியவர் வ.உ. சி. வாலேஸ்வரன். – See more at: http://solvanam.com/?p=25560#sthash.7tUKTwR4.dpuf///

    உண்மையில் இதை வாசிக்கும்போது கண்கள் கலங்குகிறது… தனியொருவனுக்கு உணவில்லைஎன்றால் அப்படியொரு கொடுமை நிகழுமானால் இந்த ஜகம் தான்எதற்கு அழித்தே விடலாமே என்றவன் குடும்ப நிலையை அறிய முடிகிறது…

    ///மனதை உருக்கும் வரிகள்!. கண்களில் நீர் நிரம்பியது. தங்கள் கவிதா விலாசத்தின் மேன்மையை என்ன சொல்லிப் பாராட்ட!!!!…////

    அவன் தந்த தமிழ் அதனால் அவனை நினைக்கும் போது உணர்ச்சிப் பெருகுவதும் இயற்கை தானே. நன்றிகள் சகோதரி.

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *