புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 1

8

-மேகலா இராமமூர்த்தி

(அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரை)

சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள மேரிலாந்தில் (Maryland) நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் உரையாற்றக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்தியாவிலிருந்து வந்திருந்த அறிவுசால் தமிழறிஞர்களுக்கு இணையாக மேடையில் உரை நிகழ்த்துவதற்குக் கிடைத்த அவ்வாய்ப்பினை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே கருதுகின்றேன்.

 அம்மாநாட்டில் ‘புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் என் சொற்பொழிவு அமைந்திருந்தது. அதில் பேசப்பட்ட கருத்துக்களை நம் ’வல்லமை’ வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

mekala1           கருத்தரங்கில் பங்குபெற்ற முனைவர் சிவயோகநாதன், கவிஞர் அறிவுமதி, மருத்துவர் சரோஜா இளங்கோவன் ஆகியோரோடு நான்….        

  இனி என் உரை….

சங்க இலக்கிய நூல்களாக அறியப்படுபவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படுவது புறநானூறு. பண்டைத் தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாறுகளையும், அவர்தம் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம் போன்ற அனைத்தையுமே அறிந்துகொள்ள உதவும் ஓர் சிறந்த ஆவணமாக, காலக் கண்ணாடியாக இன்றும் திகழ்வது வீரத்தையும், ஈரத்தையும் ஒருங்கே போற்றுகின்ற புறநானூறு. மிகப் பழைய நூல்களெல்லாவற்றிற்கும் பழையதெனக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னே தோன்றிய செய்யுட்களையும் அதற்குப் பின்னே தோன்றிய செய்யுட்களையும் தன்னகத்தே கொண்டு, தமிழ் நாகரிகத்தின் தொன்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பது இந்நூல் என்பது தமிழர்களாகிய நாம் அனைவருமே பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்று.

புறநானூற்றுப் பாடல்கள் அனைத்திலுமே அரசனின் புகழும், வீரமும் கொடைத்தன்மையும், அவன் பெற்ற வெற்றிகளுமே பேசப்படுகின்றன என்ற தவறான கருத்து நம் மக்கள் மத்தியில் (பரவலாக) நிலவி வருகின்றது; அஃது உண்மையில்லை. போரின் அவலம், வாழ்வின் நிலையாமை, கையறுநிலை, கைம்மைத் துன்பம், கைக்கிளை (ஒருதலைக் காதல்), மறக்குடி மகளிரின் வீரம் போன்ற பலதரப்பட்ட செய்திகளையும் புறநானூறு பரக்கப் பேசுகின்றது என்பதே உண்மை.

சங்கப் புலவர்கள் பலர் வறுமையில் உழன்றவர்கள்தாம்; பொன்னையும் பொருளையும் வள்ளல்களிடமும் அரசர்களிடமும் பெற்றுத் தம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளவே (பெரும்பாலும்) பாப்புனைந்தனர் என்பதும் உண்மையே. ஆயினும் அரசனோ, வள்ளலோ தம்மை மதியாது, அலட்சியமாகத் தருகின்ற பொருளை/பரிசிலை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை; அதனைப் புறக்கணித்தனர். ‘வறுமையிலும் செம்மையாய்’, சுயமரியாதை மிக்கோராய், மனிதப் பண்புக்கே முதன்மை தருபவர்களாகவே இருந்திருக்கின்றார்கள் இப்புலவர் பெருமக்கள் என்பது புறநானூற்றை ஊன்றிப் படிப்போர்க்கு நன்கு புலனாகும் செய்தியாகும்.

இனி, புறநானூற்றில் புலப்படுகின்ற அரசியல் சிந்தனைகள் சில நம்  கவனத்திற்கு….

mekala2உரையாற்றும்போது……

 பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதியில் கடும் வறட்சி, தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குக்கூட நீரின்றி மக்கள் வாடுகின்ற அவலமான சூழ்நிலை. இதற்கெல்லாம் காரணம் மன்னன் மக்கள் நலனில் அக்கறை காட்டாததே என்று மக்களுக்கு மன்னன்பால் கோபம்; ஆயினும் அதனை அவனிடம் எடுத்துச் சொல்வதற்கோ அவர்களுக்குத் துணிவில்லை. ஏனெனில் அப்போது மதுரையை ஆண்டவனோ பெருவீரன்; மிக இளம் வயதிலேயே அரசுக் கட்டில் ஏறி ஆட்சி செய்யத் தொடங்கிய பெருமைக்குச் சொந்தக்காரன்.

ஏழு அரசர்களைப் (தலையாலங்கானத்துப்) போர்க்களத்தில் தனியொருவனாய் வீழ்த்தித் ’தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற அடைமொழியோடு ஆட்சி செய்பவன். எழுவரை வென்ற  இளையோனாகிய அவனுடைய போர் வெற்றியைக் கண்டு வியந்த ‘இடைக்குன்றூர் கிழார்’ எனும் புலவர் ’இச்செழியனோ இப்போதுதான் காலில் அணிந்த கிண்கிணி (ஆண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் கொலுசு) நீக்கி வீரக் கழல் அணிந்துள்ளான். இதுநாள்வரைப் பால் பருகிக் கொண்டிருந்தவன்(!) இன்றுதான் முதன்முறையாகச் சோறு உண்டான்; அவன் வெற்றி வாழ்க!’ என்று (சற்று மிகையாகத்தான்) புகழ்கின்றார்.

அத்தகைய மாவீரனிடம் பேசுவதற்கு யாரை அனுப்புவது என்று யோசித்துத் துணிவும், தமிழ்ப்புலமையும் ஒருங்கே கொண்ட புலவர் பெருந்தகையான ‘குடபுலவியனாரைத்’ தேர்ந்தெடுத்தனர் மக்கள். அவர் சொல்வன்மையும், அறிவு முதிர்ச்சியும் மிக்க தமிழ்ச்சான்றோர் ஆவார். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நெடுஞ்செழியனைக் காணச் செல்கின்றார் அவர். மன்னனிடம் செல்வாக்கு மிக்கவராய் அவர் விளங்கிய காரணத்தினால் எளிதில் அவனைக் காணக்கூடிய வாய்ப்பமைந்தது. அந்த வாய்ப்பைச் சரியாய்ப் பயன்படுத்திக்கொண்ட அவர், மிகச் சிறந்த அறிவுரைகளை அரசனுக்கு வழங்குகின்றார்.

“மன்னா! மேலுலகத்தில் நீ மறுமை இன்பத்தைப் பெற விரும்பினாலும் சரி அல்லது பகைவர்கள் அனைவரையும் ஒழித்து இந்நிலவுலகிலே நீ ஒருவனே பேரரசனாய்ப் புகழ்பெற்று வாழ விரும்பினாலும் சரி….அதற்கான தகுதி என்ன தெரியுமா? சொல்கிறேன் கேள்! ’நீரின்றி அமையா இம்மானுட வாழ்வில் உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தவர்கள் ஆவர். உணவினால் ஆனதுதானே இம்மானுட உடம்பு! உணவெனப்படுவது நிலத்தொடு கூடிய நீர். (நிலத்திலிருந்து கிடைப்பது அரிசி உணவு; பருகுவதற்கு இன்றியமையாதது நீர்; ஆகவேதான் இப்புலவர் பெருந்தகை உணவெனப்படுவது நிலத்தொடு கூடிய நீர் என்கின்றார்.) எவனொருவன் நிலத்தையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கின்றானோ அவனே இவ்வுலகத்தின் உடம்பையும் உயிரையும் ஒன்றாய் இணைத்தவன் ஆகின்றான். (போற்றத்தக்க புதிய சிந்தனை அல்லவா!).

ஆகவே, போரிலே பெருவிருப்பம் கொண்ட செழியனே! நீர்நிலைகளிலெல்லாம் நீண்ட கரையெடுத்து அந்நீரைத் தேக்கி வைப்பாயாக. அப்போதுதான் உன்னுடைய புகழும், காலத்தை வென்று நிலைத்து வாழும் என்கின்றார்.

 இப்புலவரின் அறிவுரை எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கின்றது. ‘Conservation of water resources’ என்று நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோமே, இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இப்புலவர் பாண்டிய நெடுஞ்செழியனிடம் வலியுறுத்துகின்றார். அவர் இந்த அறிவுரையை மன்னனுக்கு வழங்கி இருபது நூற்றாண்டுகள் கடந்த பின்னும்கூட அது இன்றுவரைச் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை. ஆம்…இன்றுவரை நம் தமிழகத்தில் போதிய அணைகள் கட்டப்படவில்லை. நீர் மேலாண்மையில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம் என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

அற்புதமான கருத்துக்களை அரசனுக்கு அறிவுறுத்திய ’குடபுலவியனாரின்’ அப்பாடல் இதோ..

”………………………………………………  வயவேந்தே
செல்லு  முலகத்துச்  செல்வம்  வேண்டினும்

ஞாலங்  காவலர்  தோள்வலி  முருக்கி

ஒருநீ  யாகல்  வேண்டினுஞ்  சிறந்த

நல்லிசை  நிறுத்தல்  வேண்டினு  மற்றதன்

தகுதி  கேளினி  மிகுதி  யாள

நீரின்  றமையா  யாக்கைக்  கெல்லாம்

உண்டி  கொடுத்தோ  ருயிர்கொடுத்  தோரே

உண்டி  முதற்றே  யுணவின்  பிண்டம்

உணவெனப்  படுவது  நிலத்தொடு  நீரே

நீரும்  நிலனும்  புணரி  யோரீ  ண்டு

உடம்பு  முயிரும்  படைத்திசி  னோரே

…………………………………………………………………

—————————————————————–

அடுபோர்ச்  செழிய  இகழாது  வல்லே

நிலனெளி  மருங்கின்  நீர்நிலை  பெருகத்

தட்டோ  ரம்ம  இவண்தட்  டோரே

தள்ளா  தோரிவண்   தள்ளா  தோரே. (புறம் – 18)

படித்து இன்புறவேண்டிய அருமையான பாடல் இல்லையா?

அடுத்து, ஓர் அரசன் குடிமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனைச் சற்றுக் கடுமையாகவே (அரசனுக்கு) அறிவுறுத்துகின்றார் ஓர் புலவர். அரசர்களிடம் தாம் காணுகின்ற குறைகளைப் புலவர்கள் சற்றுக் கடுமையான மொழிகளில் கூறித் திருத்த முயல்வதனைச் ‘செவியறிவுறூஉ’ என்கின்றது தமிழிலக்கிய மரபு. ஒரு சாதாரணப் புலவர் அரசனையே கண்டிக்கின்றார் என்றால் அதற்கு எத்துணை துணிச்சல் வேண்டும். அந்த வீரப்புலவர் அரசனிடம் அப்படி என்னதான் கூறியிருப்பார்?

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 1

  1. அஹா!  அற்புதம்!! அருமை!!!

    சான்றோர் அவையகத்து முந்தி அல்ல அவரோடு இருப்பதை பார்க்கும் இந்தத் தருணம் இப்படி வீட்டிருக்கும் அதை தங்களின் பெற்றோர் கண்டால் தான்  எத்தனை இன்புறுவார்கள்… வாழ்த்துக்கள் சகொதரியாரே….

    அருமையான நீர்மை நிறைந்த நேர்த்தியான உரை தொடர்ந்து வாசிக்க காத்து இருக்கிறோம் … தொடருங்கள்… பகிர்விற்கு நன்றி!

  2. நிலத்தடி நீரை சேமிக்க அரசு தவறிவிட்டு வீட்டுக்கு வீடு சேகரிக்க சொல்லும் நிலை இன்று உள்ளது. நாடு சுதந்திரத்திற்கு பின் அனையோ, குளங்களோ , நீர் தேக்கங்களோ
    இந்தியாவில் மதிய அரசோ மாநில அரசோ இன்று வரை செய்யவில்லை.

    புற நானூற்றுவழி தரும் அரசியல் சிந்தனைகள் பகுதியில் அதி முக்கியமான நீர் ஆதாரத்தை எடுத்து இன்றைய அரசியலாருக்கு முன்பாகவே அன்று “எழுவரை வென்ற ஒருவன்” என குடபுலவியனார் அவர்களால்

    ……இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
    தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
    மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
    நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!……

    என்று பாடப்பட்ட நெடுன்செழியனுக்கே நீர் சேகரிப்பு பற்றி ஆலோசனை தந்த குடபுலவியனார் அவர்களின் இன்னுமொரு பாடலையும் தந்து புறநானுறு நமக்கு தரும் அரசியல் தெளிவை எடுத்து வைத்து தொடரும் இக்கடுரையின் அடுத்த பகுதியயும் எதிர்பார்க்கிறேன்.

  3. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி நீர்வள மேம்பாட்டில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்ந்த இனம் அல்லவா நமது தமிழினம்.

    “வரப்புயர நீருயரும்,

    நீருயர நெல் உயரும்,

    நெல்லுயரக் குடி உயரும்,
    குடி உயரக் கோல் உயரும்,

    கோல்உயரக் கோன்உயர்வான்”

    இப்படி நீரின் இன்றியமையாத் தன்மையை முன்னிறுத்தி வாழ்ந்த நமது நிலை, இன்றைய அரசுகளின் தவறான அணுகுமுறைகளால் தொடர்ந்து குடிநீருக்குக் கூட அடுத்தவரை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு வந்து விட்டது.

    சரியான தருணத்தில் கட்டுரையை எழுதி உள்ளீர்கள். தங்களது ஆழ்ந்த தமிழறிவிற்கு இக்கட்டுரை ஒரு சான்று. வாழ்த்துக்கள் சகோதரி.

  4. நல்ல கட்டுரை மேகலா. மன்னன் என்றாலும் அச்சமின்றி இடித்துரைத்த பண்டையத் தமிழ் மக்களின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
    உங்கள் கட்டுரையும் புலவர்கள் அரசருக்கு கூறிய அறிவுரைகளை விவரித்துச் செல்வது மகிழ்ச்சியைத் தந்தது,அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
    நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  5. தங்கள் அமுதத் தமிழ் நடையை வாசிப்பதே பேரானந்தம். அனைவரும் போற்றிப் பாராட்டும் வகையில், இப்படியொரு உரையைத் தந்த தாங்கள் மேன்மேலும் பல சாதனைகளைச் செய்ய வாழ்த்துகிறேன். தொடர்ந்த பகுதிகளுக்குக் காத்திருக்கிறேன்.

  6. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அயோத்தியில், இலங்கையில் நீர் தேக்க`முறைகள் இருந்திருக்கின்றன. இத்தனை ஆண்டுப் பாரம்பரியத்தை சில ஆண்டுகளில் அழித்த பெருமை நமக்கு. Fie!

    புறம் காட்டும் பாரதத்தின் அரசியல் மற்றும் பாரத வாழ்வியல் உண்மைகள் ஏராளம். தங்கள் வாய்மொழியாகக் கேட்க ஆவலாக உள்ளேன். தங்கள் தமிழ் நடை ஸௌம்யம். பேஷ். அதற்கு ஒரு ஷொட்டு!

    இவண்,
    புவனேஷ்வர்

  7. இதே பாண்டியனுக்கு இன்னொரு அறிவுரை வந்தது…….. அருமையான உவமையோடு….. அவன் போரில் செய்த அட்டூழியத்தால் அல்லல் உற்ற மக்களைப் பற்றி புலவர் சொல்வார்………

  8. கட்டுரையை வாசித்துக் கருத்துரையும், பாராட்டுரையும் வழங்கியுள்ள திரு. ஆலாசியம், திரு. தனுசு, திரு. சச்சிதானதம், திரு. புவனேஷ்வர், தோழியர் தேமொழி, பார்வதி அகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

    திரு. புவனேஷ்வர் wrote //இதே பாண்டியனுக்கு இன்னொரு அறிவுரை வந்தது…….. அருமையான உவமையோடு….. அவன் போரில் செய்த அட்டூழியத்தால் அல்லல் உற்ற மக்களைப் பற்றி புலவர் சொல்வார்………//

    ஆம்..புவனேஷ்வர்! செழியனின் வீரத்தைப் பாராட்டும் அதே வேளையில் அவன் போரினால் ஏற்பட்ட அவலங்களையும் அவன் அவைக்களப் புலவர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

    கல்லாடனார் எனும் புலவர், புலியால் ஆண்மான் பற்றப்பட அதுகண்ட பெண்மான் தன் குட்டியோடு தப்பியோடி, அக்குட்டிக்குப் பால்தருவதற்காகவும் அதனைப் பாதுகாப்பதற்காகவும் வேளைப் பூவைத் தின்றுகொண்டிருந்தது என்ற செய்தியைக் கூறி உன்னால் அழிக்கப்பட்ட பகைவீரர்களின் மனைவியரும் தம் குழந்தைகளைக் காப்பதற்காகவே உயிர்வாழ்கின்றனர்; ஆகவே போரில் ஈடுபடுதலை விட்டுவிடு என்ற செய்தியைத் தன்பாடல் மூலம் மறைமுகமாக வலியுறுத்துகின்றார்.

    இதே கல்லாடனார் இன்னொரு பாட்டில் செழியனால் அழிக்கப்பட்ட வீரர்களின் மனைவியர் கைம்மையுற்றுத் தம் கூந்தலை மழித்துக் கொண்டு, மார்பில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்ததும் செழியனின் வேல் கொலைத்தொழிலை தானே நிறுத்தியது என்று கூறி அவன் போர்புரிதலை நிறுத்துதலே நலம் என்பதனை மீண்டும் வலியுறுத்துகின்றார். இதன் வாயிலாய்ப் புலவர்கள் அரசனைப் புகழ்தல் மட்டுமே செய்யாது அவன் தவிர்க்கவேண்டியவற்றையும் சேர்த்தே வலியுறுத்தி வந்துள்ளனர் என்பது நமக்குப் புலனாகின்றது.

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply to மேகலா இராமமூர்த்தி

Your email address will not be published. Required fields are marked *