தஞ்சை வெ.கோபாலன்

Govinda Dikshidarதஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர் காலம் முழுவதும் இருந்து பிறகு ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள்Mahamaham tank சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டிமுடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

Patteeswaram templeகும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

வரலாற்றில் புகழ்பெற்ற எந்தவொரு நகரமும் ஒரு நதிக்கரையில் அமைந்ததாக இருக்கும். தஞ்சாவூர் பழம்பெரும் நகரமாக இருந்தபோதும், காவிரிக் கரையில் அது இல்லை; வடவாறு எனும் சிறிய ஆற்றின் கரையில் இருக்கிறது. அதனால்தான் நாயக்கர் காலத்திலும், பின்னர் வந்த மராத்தியர் காலத்திலும் தஞ்சை அரசர்களின் ஆளுமைக்குள் இருந்த கலைஞர்கள், வேத விற்பன்னர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோர் இங்கிருந்து சிறிது தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவையாற்றில் குடியிருந்திருக்கின்றனர். அப்படி தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்வதானால் அவர்கள் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆற்றையும் கடந்து செல்ல படகுகளை நம்பியிருக்க முடியுமா? இவற்றின் மீது பாலங்களைக் கட்டியதும் இவர்கள் காலத்தில்தான். இப்பொழுதுதான் இவற்றில் சில பாலங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கின்றன, குறிப்பாக திருவையாறு காவிரிப் பாலம், குடமுருட்டி பாலம், வெண்ணாற்று பாலம், வெட்டாறு பாலம் இவை புதிதாகக் கட்டப்பட்டு விட்டன.

காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள்,Ramasamy koil அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர்.

Ramasamy koil Uthsavar“மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது” என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். “அத்வைத வித்யா ஆச்சார்ய” என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் “சங்கீத சுதாநிதி” எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல “திருவையாறு புராணம்” சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான “ரகுநாத பூபால விஜயம்”, “ரகுநாத விலாஸ நாடகம்”, “சாஹித்ய ரத்னாகரம்” ஆகியவை.Tirupalaithurai temple and Granary

இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் “சதுர்தண்டி பிரகாசிகா” எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார்.

இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

  1. ///கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார்.///

    ஒளி பெற்ற மகான்களின் ஒப்பற்ற செயல்கள் காலகாலமாக நின்று உலக ஷேமத்திற்கு உபயோகமாக இருக்கிறது.

    கர்மயோகிகள் இவர்கள். இப்படிப் பட்ட ஒரு கர்ம யோகி நம் காலத்தில் வாழ்ந்த நமது காமராஜர் அவர்களையும் அதன் வழி நிறுத்திப் போற்றலாம்.

    மக்களின் நலனையே பெரிதென்றுப் போற்றிய மகான்களும், மாமனிதர்களும் என்றென்றும் காலத்தோடு வாழ்கிறார்கள்.

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

  2. மிக அருமையான பகிர்வு!. காலங்கள் தாண்டி நிலைத்து நிற்கும் நற்காரியங்கள் பல செய்தவர் பற்றிய தகவல்கள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து புகழ் பெற்ற  இத்தகைய மஹான்கள் தோன்றிய புண்ணிய பூமியில் பிறப்பதற்கே கொடுத்து வைத்திருக்கிறோம் எனத் தோன்றுகிறது. மிக்க நன்றி ஐயா!!

Leave a Reply to பார்வதி இராமச்சந்திரன்.

Your email address will not be published. Required fields are marked *