கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 3

4

 

கோ.ஆலாசியம்

 

val7

குறுக்கும் நெடுக்குமான

மரச் சட்டம்…

அதன்மேலே அழகாய்

அடுக்கிப் பரப்பிய

மரச் சட்டம்…

 

மனிதன் செய்தது

மலைக்க வில்லை….

மலைத்துப் போனேன்

மரப் பாலத்தின் கீழே பார்க்க.

 

குட்டிச் சங்குகள்

கூட்டம் கூடமாய்….

அந்த

கொத்து மஞ்சரிகள்

பூத்துக் கிடந்தன

அம்மரச்

சட்டங்களின் மேலே…

 

யான் அறியேன்

அவைகள்

தத்தம் பாசையில்

சந்தபா பாடினவோ…

 

செங்கனிவாய்

முத்தம் தந்து

அவை மொத்தமும்

தத்தம் பேடையுடன்

காதலில் கூடினவோ என்றே.

val8

ஆகா!….. அருமையிலும் அருமை

இப்போது

இந்த கடலின் பரப்பு…

 

தகரமும் போய்

தாமிரமும் போய்

தகதகக்கும்

தங்கமானது…

 

காணும் போதிலே

கதகதப்புடன் அது என்

சிந்தையில் பூத்த

செவ்வந்திப் பூக்களாய் …

 

பனியில் குளித்து

பளபளக்கும்

பவள மஞ்சள் மலர்களாய் …

பரவசப் படுத்தின.

 

குளிரில் காய்ச்சிய பொன் நீரோ

இல்லை யந்த

குபேரன் கூரையிலிருந்து

கொட்டிப் பெருகி உருகியத்

தங்கக் கடல் நீரோ ….

 

இன்பக் காட்சி அது

கொள்ளை போகிய என்

நெஞ்சில் தெளித்தது பன்னீரே …

val9

சொர்க்கம் என்பதும் இது தானோ

அல்லது அதுவும்

இதற்கு நகல் தானோ

என்று வியந்தே

ஏறிட முயன்றேன் மரப் பாலத்தே…

 

மறுப்பேதும் கூறாது

அதுவரை வந்த நண்பனோ

மறுக்கலானான்…

 

மறுபடியும் நீ

திரும்பும் வரை

நானிங்கு இருக்கிறேன் என்று

மண்டியிட்டான்….

 

மறுப்பேனா

மறுப்பது உன் உரிமை

பொறுப்பது என் கடனென்று…

முன்னே சென்றேன்

நான் மட்டும்…

 

மஞ்சள் பூத்து மகிழ்ந்த வானம்

தனது கொழுநன்

கொஞ்சிக் குலாவ

 

மஞ்சம் வராது

மறைந்து போக…

கோபத்தில் சிவந்தாள்

கொழுந்திடை வைத்த பொன்போல

 

 

நல்ல வேலை…

அப்போது அங்கே

அன்பெனும் குளிர்கலந்த

வாடைக் காற்று

கோபமான வான மகளின்

கேசம் வருடி

ஆறுதல் கூறியது ….

 

அன்னையின் பாசத்தில்

நனைந்த நீளவானம்

சில்லென நீலம் பூத்தது…

val10

இப்படி

ஒவ்வொரு தருணமும்

உருமாறும் போது

அப்படியே நானும்

அத்தனை யையும்

படம் பிடித்தேன்

அழகழகாய்…

 

‘என் இனியத் தமிழ் மக்களே’

நான் படம் பிடிக்கப்

போகும் போதெல்லாம்

எனது காமிராவை யல்ல ….

 

எனது கண்மணியின் இருக்

கண்களைத் தான்

எடுத்துச் செல்வேன்

அந்தக் கண்களுக்கு மாத்திரமே

குறைகானாப் படங்களை

எடுக்கத் தெரியும்… J

 

வால்நீண்ட மீன்

முளைக்கும்

என்று

ஏங்கி காத்து இருந்த

எந்தன்

காதுகளுக்குள்ளே ….

 

சிறகுகள் வலிக்க

பறந்து வந்தக்

குளிர் காற்றுகளும்…

 

சிறு குகையினைக்

கண்டோம் என்றோ

கொஞ்சம்

இளைப்பாற

குடிபுகுந்துக் கொண்டன…

 

உதடுகள் துடிக்க

இணையாக

பற்கள் பறை அடிக்க

உடம்பு முழுவதும் ரோமங்கள்

எழுந்து புது நர்த்தனம் ஆட….

 

பயமுறுத்த

பாம்பொன்றும் இல்லாமல்

படபடக்க நான் மட்டும்

படமெடுத்தேன்

பயந்துப் போனப்

பாம்பைப் போல…..

 

பொழுது சாய்ந்து

புதுப் பெண்ணென வால்மீனவள்

புறப்பட்டு வருவாள் என்று

பொறுமையுடன்

காத்து இருந்த நான்….

 

இனி பொறுப்பது

ஒரு போதும் பயனில்லை

என்றே

இரவுகவ்விய

இனிய பொழுதின்

நீலவானத்தை ஒரு

நிழல்படம் எடுத்தேன்….

val11

வாடை காத்து

எனை…

வருத்தி தின்னும் முன்னே

 

வால்முளைத்த

மீனைக் காணாது

வால் சுருண்ட நண்பனுடன்

வந்து சேர்ந்தேன்

நான் தங்கி வசித்த வீட்டிற்கே!

 

“திரும்பி வருகையில், எதோ

ஒன்றுக்காக காத்திருப்பதுதான்

வாழ்க்கையோ

என்று தோன்றியது”

 

///அண்ணாகண்ணன் wrote on 24 March, 2013, 22:51

அழகிய அனுபவம். அந்தந்தத் தருணங்களை அசல் படங்களுடன் விளக்கியதால், கார்கில் ஜெய் கூடவே பயணித்த உணர்வு எழுகிறது. இந்தக் காட்சிகளுக்குள் கவிதை ஒளிந்திருக்கிறது. ///

 

திருவாளர். கார்கில் ஜெய் அவர்களின் படங்களில் ஒளிருந்தக் கவிதையை; திருவாளர். அண்ணாகண்ணன் அவர்கள் அனுபவித்த அந்த அழகிய கவிதையை; இதுவாக இருக்குமோ! என்றிங்கே இயம்ப வந்தேன்.

 

நன்றி: திரு. கார்கில் ஜெய்.

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 3

  1. புதுமையாய், அருமையாய் ஒரு  கவிதைக்கதை சிறப்பாக அமைந்துள்ளது. 

    அன்புடன்
    ….. தேமொழி

  2. மெலிதாய் ஒரு இழையோடி நெஞ்சில் நிற்கிறது. புதுக்கவிதையில் வந்த புதுமைக்கவிதை.

  3. அருமை நண்பரே! மொத்தக் கவிதையின் வரிகளுமே மனதை மயக்குகின்றனே எனினும்,

    “சொர்க்கம் என்பதும் இது தானோ

    அல்லது அதுவும்

    இதற்கு நகல் தானோ”

    “குளிரில் காய்ச்சிய பொன் நீரோ

    இல்லை யந்த

    குபேரன் கூரையிலிருந்து

    கொட்டிப் பெருகி உருகியத்

    தங்கக் கடல் நீரோ ….”

    போன்ற வரிகள் மிக உயர்ந்த கலைநயத்துடன் மிளிர்கின்றன! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

  4. ‘சிந்தையில் பூத்த செவ்வந்திப் பூக்களாய்..’
    வந்திடும் கவிதை நன்று…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *