திவாகர்

kamaladevi_aravindan_silk_sபொதுவாக பூக்கள் கொடுத்து வரவேற்பது என்பது தமிழரின் பண்பாடு. பூக்களின் விதம்விதமான பலன்களை நன்றாக அறிந்தவர்கள் சங்ககால தமிழர்கள். காதலியை வர்ணிப்பதில் என்றில்லாமல், வாசனைக்காகவும், பெண்களின் கூந்தலின் அலங்கரிப்பதும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுவதற்காகவும் மட்டுமல்லாமல் ஆண்களின் கழுத்துக்கும் மரியாதைக்குரியதாய் அலங்கரிக்க பூக்கள் பயன்பட்டது. ( கூந்தல் மணத்துக்குக் காரணம் ஒரு வாசனைப்பூவாக இருக்குமா என்பதாக இறைவனுக்கும் மனிதனுக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தது தமிழகத்தில் மட்டும்தான்) இப்படித்தான் என்னுடைய வம்சதாரா கதையில் சபையில் ஒரு பூச்செண்டு ஒன்று ஒரு நாட்டின் மன்னரின் முடிசூட்டுவிழாவின் போது கொடுத்ததாக எழுதியதை மிகவும் சிலாகித்து எழுதினார் டாக்டர் முனைவர் பிரேமா நந்தகுமார். பூவோடு இறைவனை அர்ச்சிக்கப்படுவது பூஜை என்பது தமிழிலிருந்துதான் ‘பூ-செய்’ என்பதாக வடமொழிக்கே சென்றிருக்கவேண்டும் என்று ஆங்கிலேயர் ஜி.ஸ்வெல், குறிப்பிட்டிருப்பதை ஆந்திர பல்கலைக்கழக தெலுங்கரான பேராசிரியர் சுந்தரம் அவர்கள் தனது ‘சிம்மாசலம்’ புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படியாகப் புகழ்பெற்ற இந்த வண்ண வண்ணப் பூக்கள் நிரப்பப்பட்ட பூங்கொத்தை அவ்வப்போது ’விசுவலாக’ இணையத்தில் கொடுத்து ஊக்குவித்துவந்த திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பற்றிதான் இந்தப் பதிவு.

வல்லமையில் வாரம் ஒரு வல்லமையாளர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது இதற்கு முன்னோடியாக கமலம் எழுதிய கட்டுரைகள்தான் நினைவுக்கு வந்தன என்பதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். கமலம் இரண்டு திராவிட பாஷைகளில் சிறந்து விளங்கும் மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு பாஷைகளில் இலக்கிய திறமை என்பது இரண்டு விதமாக நோக்கவேண்டும். சான்றோர் பலர் வடமொழி-தமிழ் என்பதிலும், ஆங்கிலம்-தமிழ் என்பதிலும் இலக்கியத் திறமை உள்ளவர்களாக இருந்தார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இரண்டு திராவிட பாஷை இலக்கியங்களில் சமமாக திறமை பெற்று விளங்குவோர் வெகு சிலரே.. அந்த வெகு சிலரில் ஒருவர் கமலம் என்பது அவரது இலக்கிய திறமைக்கு முக்கியமான சான்றுதான். ஏனெனில் கமலம் இந்த இரு மொழிகள் (தமிழ், மலையாளம்) தோன்றிய இடத்திலிருந்து பிறந்து வளர்ந்தவர் இல்லை. மலேஷிய நாட்டில் வளர்ந்து கல்வி பயின்று சிங்கையில் குடியேறியவர் என்று பார்க்கும்போது இவர் திறமையின் ஒளி இன்னும் அதிகமாகப் பளிச்சிடுவதைக் காணலாம்

எண்பதுகளில் விஸ்கி பாட்டிலைப் பேயாகப் பாவித்து சுவாரஸியமான ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தார்கள். பல நாள் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் நான். அதே போல கமலம் சமீபத்தில் எழுதிய கதை ஒன்று இன்னமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு கண்ணாடி (டிரெஸ்ஸிங் டேபிள்) பேய் ஒன்றைப் பற்றிய வித்தியாசமான கற்பனைக் கதை. . இந்த வித்தியாசமான கற்பனைகள்தான் ஒவ்வொரு எழுத்தாளரையும் காலம் கடந்து வாழச் செய்கிறது.

இன்று (15 செப்டெம்பர்) கமலம் அவர்கள் சிங்கையில் தமிழ் இலக்கியச் சேவைக்காக பாரதியார்-பாரதிதாசன் விருது பெறுகிறார்கள். இதே முகூர்த்தத்தில் நம் ‘இந்த வார வல்லமையாளராக’வும் அவருக்கு கௌரவம் செய்து பெருமை கொள்கிறோம். சிங்கை சென்றபோது ஒரு மதிய விருந்தில் மிக எளிமையான, கள்ளங்கபடமற்ற, படபடப்பான கமலத்தைக் கண்டு மகிழ்ந்தவன்.. பூச்செண்டு கொடுக்கும் மனது பூவைப் போன்று மென்மையானதாகத்தான் இருக்கும் என்றும் நினைத்தவன். இப்படிப்பட்ட சாகித்ய வல்லுநர்கள் உலகெங்கிலும் கவனிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தையும் தெரிவித்தவன். இவரைப் பற்றியும் இவரது சாகித்யத்தைப் பற்றியும் நிறைய எழுதலாம், காலம் மறுபடி வரும்போது எழுதுவோம். கமலத்துக்கு அன்பான வாழ்த்துகள்..

கடைசி பாரா: திரு ஆர்.எஸ். மணி அவர்களின் பாடலிலிருந்து

சுற்றம் என்ன, சூழல் என்ன,

நிலையானதாகுமோ?

சொந்தம் என்ன, பந்தம் என்ன

செல்லாமலே நில்லுமோ?

ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

மாறாதே இக்கோலம்

 www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. இரு மொழிஞானம் 
    எங்கள் சிங்கைச் செல்வம் 

    திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களுக்கு 

    பாரதியார் மற்றும் பாரதி தாசன் விருது 
    இவ்வார வல்லமையாலர் 
    திருவோணம் பண்டிகையென 
    மூன்று மகிழ்வான விழாவினை கொண்டு முப்பெரும் வாழ்த்துக்களை இந்தத் தருணத்திலே கூறிக் கொள்கிறேன்.

    கடைசி பாராவில் குறிப்பிடப்பட்ட வரிகளின் பிரம்மா திரு.ஆர்.எஸ்.மணி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! 

  2. தமிழ் இலக்கியச் சேவைக்காக பாரதியார் மற்றும் பாரதிதாசன் விருது பெரும் சுபவேளையில் இந்த வார வல்லமையாலராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி.கமலாதேவி அரவிந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அருமையான கவிதை வரிகளுக்கு தன் அழகான குரல்வளத்தால் உயிரோட்டம் வழங்கிய திரு.ஆர்.எஸ். மணி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துக்கள்.

  3. பொன் ஓண தினத்தன்று பொன்னான விருது பெறும் கமலம் சேச்சிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கடைசி பாராவில் இடம் பிடித்த‌ திரு.ஆர்.எஸ்.மணி அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

  4. வல்லமையாளர் கமலம் அவர்களுக்கும், ஆர்.எஸ்.மணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply to பார்வதி இராமச்சந்திரன்.

Your email address will not be published. Required fields are marked *