திருமணத்திற்குப் புதிய அர்த்தம்

1

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

நாகேஸ்வரி அண்ணாமலை

வயிற்றுப் பசியைப்  போல உடலின் தேவைகளுள் ஒன்றான உடல் பசிக்கும் தீனி போடத் தடை வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்ட அமெரிக்கச் சமூகம் அந்தப் பசி தோன்ற ஆரம்பித்தவுடனே அதற்குத் தீனி போட ஆரம்பிக்கலாம் என்ற அனுமதியையும் தன்னுடைய மக்களுக்கு வழங்கியிருக்கிறது.  இதனால் பதின்மூன்று, பதினான்கு வயதிலேயே துணை தேடுகிறார்கள்.  தங்களுக்குப் பிடித்தமான துணை என்று நினைத்தால் அப்போதே துணையோடு உடலுறவு கொள்ள ஆரம்பிப்பதிலிருந்து சில வருடங்களில் – அதாவது பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டிருக்கும் போதோ அல்லது முடித்தவுடனேயோ- கணவன் மனைவி போல் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறார்கள்.  இதன் பிறகு இருவரில் ஒருவருக்கு வேலைக்காவோ அல்லது படிப்பைத் தொடருவதற்கோ வேறு இடத்திற்குப் போகும் நிலை ஏற்பட்டால் தயங்காமல் இந்தத் துணையை விட்டுவிட்டுப் புதிய இடத்தில் இன்னொரு துணையைத் தேடிக்கொள்கிறார்கள்.  இது நிரந்தரமான உறவாக இல்லாமல் போகலாம் என்பதால், இப்படிப் பிரிய நேரிடும்போது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

பள்ளிப் பருவத்தில் துணை இல்லாமல் இருக்கும்  பெண்களை மற்றப் பெண்கள்  இந்தப் பெண்களுக்கு ஆண்களைக் கவரும் வசீகரம் இல்லை என்று  எண்ணி இழிவாக நினைக்கிறார்கள்.  ‘கன்னித்தன்மை மாறாமல் இருப்பது அப்படி ஒன்றும் வெட்கப்படக்கூடிய செயல் அல்ல (virginity is not a dirty word)’ என்று பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் விளம்பரப்படுத்தினார்கள்.  இந்தப் பிரசாரத்தை ஏற்றுக்கொள்வார் இல்லாமல் போய், இப்போது அந்த விளம்பரங்கள் எங்கும் கண்ணில் தட்டுப்படுவதில்லை.

ஆணும் பெண்ணும் திருமணமில்லாமல் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பிள்ளை பெற்றுக்கொண்டால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  இதற்கிடையில் தனது மனதிற்கு இதமான துணை (soul-mate) எது என்று தேடுவதையும் தொடர்கிறார்கள்.  அப்படி ஒரு துணை கிடைக்காமலே சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் துணை சரியில்லை என்ற முடிவிற்கு வந்து அந்தத் துணையை விட்டுப் பிரிந்தும் போய்விடலாம்.  திருமணம் என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆயிரங்காலத்துப் பயிர் இல்லை.  தனக்கு இதமான துணையோடு வாழ்க்கை நடத்த ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு சடங்குதான்.  பிடிக்காவிட்டால் அதிலிருந்தும் எளிதாக விடுபட்டுக்கொள்ளலாம்.

எனக்குத் தெரிந்த  ஒரு பெண் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறாள்.  மூன்றிற்கும் தகப்பன்மார் வேறு.  இப்போது துணை யாரும் இல்லை.  மனதிற்கு இதமான துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்கிறாள்.  இன்னொரு பெண் இரண்டு தடவை மணம் புரிந்துகொண்டவள்.  ஐந்து குழந்தைகள்.  ஐந்தும் எப்போது பிறந்தன என்று சரியாகத் தெரியவில்லை.  ஆனால் இப்போது ஒரு புத்திசாலியான ஆணைத் துணையாகத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறாள்.  இத்தனை குழந்தைகள் பெற்றுக்கொண்டபோது இருந்த இரண்டு துணைகளும் புத்திசாலிகள் இல்லை என்று தெரியவில்லையா?  அப்படித் தெரிந்தும் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று உணரவில்லையா?  இன்னொரு பெண்ணிடம் அமெரிக்கத் திருமணம் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தது அவளுக்குக் கேட்டுவிட்டது போலும்.  என்னைக் குறிப்பிட்டு “இதைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் மிகவும் திடமானவை (rigid values)” என்று கூறினாள்.  எந்த இந்தியப் பெண்ணிற்கும் இதைப் பற்றிய அவளுடைய கருத்துக்கள் தளர்ந்த கருத்துக்களாகத் ( lose values)  தோன்றும்!

இப்படிப் பல துணைகளோடு மாறிமாறி வாழ்ந்து வந்தாலும் ஒரு சமயத்தில் ஒருவரோடுதான் வாழ வேண்டும் என்ற எழுதப்படாத சட்டமும் இருக்கிறது.  அதே மாதிரிதான் திருமணத்திலும்.  ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும்போது இன்னொருவரோடு தொடர்பு வைத்துக்கொண்டால் சமூகமும் சட்டமும் அதை அங்கீகரிப்பதில்லை.  சமீபத்தில் மறைந்த பிரபல நடிகை எலிஸபெத் டெய்லர் – எட்டு முறை திருமணங்கள் செய்துகொண்டவர் – ஒரு பேட்டியில் “நான் திருமணம் செய்துகொண்ட ஆண்களோடு மட்டும்தான் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டேன் (நம்மூர் பாஷையில் சொல்வதென்றால் இவர்களுக்கு மட்டும்தான் முந்தானை விரித்தேன்). எத்தனை பெண்களால் இப்படிக் கூறிக்கொள்ள முடியும்?” என்று பெருமையாகக் கூறினார்.  ஒரு திருமணத்தை முறித்துக்கொண்டு, பின் இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து பின் அதையும் முறித்துக்கொண்டு. …இப்படி போய்க்கொண்டே இருக்கலாம்.  இதைத்தான் அமெரிக்காவில் தொடர் திருமணங்கள் (serial monogamy)  என்று குறிப்பிடுகிறார்கள்.  பல திருமணங்கள் செய்துகொள்ளலாம் என்ற வாய்ப்பு இருந்த போதிலும் பலர் முதல் திருமணம் முறிந்து இரண்டவது முறையாகத் திருமணம் செய்துகொண்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.  அதில் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் விட்டுக் கொடுக்கவும் பழகிக் கொள்கிறார்கள் என்பதும் உண்மை.

திருமணம்  செய்துகொண்டவர்கள், தேவாலயத்தில் பாதிரியார் முன்பு ‘இறப்பு எங்களைப் பிரிக்கும் வரை பிரியமாட்டோம்’ என்று சபதம் எடுத்துக்கொண்டாலும், எல்லாத் தம்பதிகளும் பிரியாமல் இருப்பதில்லை.  பிரிந்த இருவருமே தனித் தனியாக மறுபடி திருமணம் செய்துகொண்டு குழந்தைகளும் பெற்றுக்கொள்வதால்தான் ‘உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளும் சேர்ந்து விளையாடுகிறார்கள்’ என்ற சொல்லே ஏற்பட்டது.

எக்கச்சக்கமாகப் பணம் செலவழித்துத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியைப் பற்றி ஒரு பெண் “இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்துகொள்கிறார்களே, இவர்கள் திருமணம் எத்தனை நாட்கள் நீடிக்கும்?” என்று நக்கலாகச் சொன்னாள்.  வயிற்றுப் பசியைத் தாங்கிக்கொள்ளத் தேவையில்லை என்பது போல் உடல்பசியையும் தாங்கிக்கொள்ளத் தேவையில்லை என்ற கருத்து அமெரிக்காவில் பரவி இருப்பதால், திருமணத்திற்குமுன் உடலுறவு கொள்ளாத ஆணையோ பெண்ணையோ அமெரிக்காவில் பார்ப்பது அரிது என்றால் அது மிகையில்லை.  எழுபது வயதைத் தாண்டிவிட்ட ஒரு பெண் என்னிடம் “நானும் என் கணவரும் திருமணம் செய்துகொண்ட போது இருவரும் கன்னித்தன்மை மாறாமல் (both were virgins) இருந்தோம்’  என்றார்.  இவரே தன்னுடைய மகள் சிறு வயதில் இறந்துவிட்ட பிறகு மகள் வயிற்றுப் பேத்திமார்கள் பருவ வயதை எட்டியதும் பின் விளைவுகள் இல்லாத உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி என்று போதிக்க ஆரம்பித்தார்.  அமெரிக்கச் சமூகம் அவ்வளவு மாறிவிட்டிருக்கிறது!

இருந்தாலும், ஒரு ஆண் இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது; முடியாது. கல்யாணத்தில் இருக்கும்போது இன்னொரு பெண்ணையோ ஆணையோ துணையாக நினப்பதைச் சமூகம் ஏற்றுக்கொளவதில்லை. திருமணத்திற்கு முன்னும் பின்னும் நடப்பது வேறு.

எந்த வயதிலும் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பது போல் அமெரிக்காவில் திருமணம் செய்துகொள்வதற்கும் வயது வரம்பு இல்லை.  முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களும் திருமணம் புரிந்துகொண்டதாகத் தகவல் அவ்வப்போது வரும்.  இவர்கள் எழுபது, எண்பது வயதைத் தாண்டியவர்கள்.  எண்பது வயதைத் தாண்டிவிட்ட தன் தந்தை இறந்துவிட்டால் எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் தன் தாயை – இவருக்கு நிறைய செல்வம் இருப்பதால் – யாராவது திருமணம் செய்ய விரும்பினால் அவரிடம் ஏமாந்து போய் அவரைத் திருமணம் செய்துகொண்டுவிடுவாரோ என்று அவரது மகன் கவலைப்படுகிறார்.  அவர் கவலைப்படுவது, தன் தாய் ஏமாந்துவிடுவார் என்பதற்கேயன்றி திருமணம் செய்துகொள்வார் என்பதற்கல்ல.

சமீபத்தில்  ‘ஒரு விதவையின் கதை’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் ஓட்ஸ் ஒரு பேட்டியில் நாற்பத்தியேழு வருடங்களாகத் தன் கணவனோடு குடும்பம் நடத்தியதையும் 2008-இல் தன் எழுபதாவது வயதில் அவர் இறந்த பிறகு தனக்கு வாழ்வு எவ்வளவு சூன்யமாகி விட்டது என்பதையும் குறிப்பிட்டுச் சில மாதங்களிலேயே தான் மறுபடி மணம்செய்துகொண்டதையும் குறிப்பிட்டபோது, இந்தியப் பெண் என்ற முறையில், எனக்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வாழ்க்கையில் சோகத்தில் அமிழ்ந்துவிடாமல் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்பது அமெரிக்கக் கொள்கைகளில் ஒன்று.  இதுதான் அமெரிக்கா!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமணத்திற்குப் புதிய அர்த்தம்

  1. இது ஒரு கோணம். இது தான் அமெரிக்கா இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *