இப்படியும் சில மனிதர்கள்! – 4

1

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

ரெட்டை மண்டை ‘பீஷ்மாச்சாரியார்’   கல்யாணம் முடிந்து மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை கட்டுச்சாத கூடை வைத்து ஊருக்குப் புறப்படும் வரை அதிலிருந்து எழுந்திருக்கவேயில்லை. தானே ஒரு ஆட்டோ கொண்டு வரச் செய்து அதில் ஏறிக்கொண்டு ரயில் நிலையம் போய்விட்டார். அவரைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போது திருமண நாளன்று நடந்தவற்றைப் பார்ப்போம்.

மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லாம் தயாராக இருந்தது. மகாமகக் குளத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு விநாயகர் ஆலயத்திலிருந்து மாப்பிள்ளை அழைப்பு. மிக அழகான மாப்பிள்ளை அழைப்புக் கார் ஒன்றுக்கு சாமிநாதன் ஏற்பாடு செய்திருந்தான். அந்தக் காரில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்து மின் பல்புகளாலும், மலர்ச்சரங்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வர ஏற்பாடாகி யிருந்தது. கடைசி நேரத்தில் மாப்பிள்ளை இதெல்லாம் அனாவசியம். நான் ஊர்வலம் எல்லாம் உட்கார்ந்து வரமாட்டேன். பிள்ளையார் கோயிலுக்குப் போய் புத்தாடை அணிந்து கொண்டு, அங்கு ஓர் அர்ச்சனை செய்துவிட்டு நடந்தே மண்டபத்துக்கு வந்து விடுகிறேன். இதெல்லாம் எதற்கு வீணான ஆடம்பரச் செலவு. இதையெல்லாம் நீங்கள் குறைத்திருக்கலாமல்லவா என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டார். நாங்கள் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

எல்லோரும் விநாயகர் கோயிலுக்குக் கிளம்பினார்கள். பித்தளைத் தட்டுகளில் பழங்கள், மலர், புத்தாடைகள், மாலை வகையறாக்களை எடுத்துக் கொண்டு பெண்கள் கோயிலை நோக்கிப் போனார்கள். இரண்டு பக்கத்து உறவினர்களும் அவரவர்களுக்கு நெருக்கமானவர்களோடு பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் கோயிலுக்குப் போனார்கள். சாமிநாதனின் இளைய மகன் ஓடிவந்து அப்பாவிடம், அப்பா மாப்பிள்ளைக்கு சூட் கோட் கொடுக்கும்போது ஷூஸ் கொடுக்க வேண்டுமே, ஷூ பெட்டியைக் கொண்டு வரட்டுமா என்றான். அப்போது அருகிலிருந்த மாப்பிள்ளை அதெல்லாம் வேண்டாம், இதோ இருக்கற கோயிலுக்கு ஷூ போட வேண்டாம். அப்படியே உள்ளே இருக்கட்டும் என்றார், பையனும் போய்விட்டான்.

விநாயகர் கோயிலில் அர்ச்சனை நடந்தது. மாப்பிள்ளையை உட்கார வைத்து புது சூட் கொடுத்தார்கள். அவரும் கோயிலின் பின்புறம் போய் உடைகளை மாற்றிக்கொண்டு மாப்பிள்ளை உடையில் வந்தார். அப்போது அவசர அவசரமாக ‘திவானா’ சாமிநாதனிடம் ஓடிவந்து, ஷூ எங்கே, சூட் போட்டுண்டு மாப்பிள்ளை ரெடியாயிட்டார். ஷூவைக் கொண்டு வந்து தர வேண்டாமா. இதையெல்லாம் கவனமாகச் செய்ய மாட்டீங்களா என்று பதறிக்கொண்டு பேசினாள். அருகிலிருந்த யாரோ சாமிநாதனின் மகனைப் பார்த்து, போப்பா, ஓடிப்போய் ஷூவைக் கொண்டு வந்து கொடு என்றார். அவனும் சரியென்று மண்டபத்துக்கு ஓடினான்.

சாமிநாதன் என்னைப் பார்த்தான். நான் சொன்னேன் என்னப்பா இது. ஆளாளுக்கு ஒரு உத்தரவு போடறாங்க என்று சொல்லிவிட்டு அந்த அம்மாளிடம், அம்மா உங்க பிள்ளைதான் ஷூ வேண்டாம் என்று சொன்னார். நீங்கள் வந்து இப்போ பதறறீங்க. நாங்க யார் பேச்சை எடுத்துக்கறதுன்னு மட்டும் சொல்லுங்க. அப்பத்தான் இனி நடக்க வேண்டிய காரியங்களையும் யாரையாவது ஒருத்தரைக் கேட்டுச் செய்ய முடியும் என்றேன்.

அதற்கு அந்த அம்மாள், அவன் அப்படியெல்லாம் சொல்லலை. டிரஸ் கொடுத்தா கூடவே ஷூவையும் கொடுக்கணுமா இல்லையா, அதை விட்டுட்டு ஏதேதோ பேசிண்டு நிக்கறேளே. போங்கோ, போயி ஷூவைக் கொண்டு வாங்கோ என்றாள். அதற்குள் சாமிநாதனின் மகன் ஷூவைக் கொண்டு வந்து அந்த அம்மாளிடம் கொடுத்தான். அதை அந்த அம்மாள் தன் பிள்ளையிடம் கொண்டு போய் கொடுத்துப் போட்டுக்கோ என்றாள். அதற்கு மாப்பிள்ளை நான் தான் ஷூ வேண்டாம்னு சொன்னேனே, கோயில்லே யாராவது ஷூவைப் போட்டுப்பாங்களா, இதோ இருக்கற மண்டபத்துக்கு ஷூவைப் போட்டுண்டா நடக்கணும், நான் சப்பல் போட்டுண்டே வரேன், போங்க, என்றார். அம்மாள் முகத்தில் ஏதோ வழிந்தது.

மாப்பிள்ளை மண்டபத்துக்கு நடந்தே ஊர்வலமாக வந்தார். கார் உபயோகிக்கப்படவில்லை. அதற்கு எத்தனை ஆயிரமோ செலவு! போகட்டும். சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் இருந்தது. அந்த நேரம் எல்லோரும் மண்டபத்தில் மேடை மீது உட்கார்ந்து கொண்டார்கள். ‘தில்’ மற்றும் அவரது பல உறவினர்கள் உட்கார்ந்து கொண்டு சீர் சாமான்களையெல்லாம் கொண்டு வாங்கோ, எல்லோரும் பார்க்கட்டும் என்றனர். பீஷ்மர் மட்டும் படுத்த படுக்கையாக இருந்ததால், எல்லோரும் அங்கேயே போய்விடலாம் வாருங்கள் என்று எழுந்து பீஷ்மர் படுத்திருந்த பெஞ்சுக்கு அருகில் அமர்ந்து கொண்டார்கள்.

சாமிநாதனும் அவன் மனைவியும் சீர் சாமான்கள், நகை முதலானவற்றைக் கொண்டு வந்து வைத்தார்கள். நகைகளை மிக கவனமாக ‘தில்’ பார்த்துவிட்டு அண்ணாவிடம் கொடுக்க, அவரும் அதனை கையில் தூக்கிப் போட்டு உத்தேசமாக எடை போட்டார். வெள்ளித்தட்டை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தூக்கிப் போட்டு எடை பார்த்தார். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு ரத்தம் தலைக்கேறிவிட்டது. கடையில் எடை பார்ப்பது போல சீர் கொடுத்த சாமானை இவர் எடை போட்டது அவமானப்படுத்துவது போல என்று நான் நினைத்தேன். சபையில் அத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களில் அனேகர் சம்பந்தி வீட்டார் என்பதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது.

“ஓய்! என்னய்யா எடை போட்டுப் பார்க்கிறீர், தராசு கொண்டு வந்து தரச்சொல்லட்டுமா? அந்த தட்டு எடை 900 கிராம். அதான் அப்போதே சொன்னேனே. சரியா இருக்கா இல்லையான்னு டெஸ்ட் பண்றீரா?” என்றேன்.

அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு நல்லவர், அடடா, அப்படியெல்லாம் இல்லை. சும்மா அவர் தட்டைத் தூக்கிப் பார்த்தார். எடையெல்லாம் போடலை. நீங்க கோபப்படாதீங்கோ என்றார். அப்போதும் எனக்குக் கோபம் அடங்கவில்லை. சரி எக்கேடு கெட்டுத் தொலைக்கட்டும் என்று நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

அப்போது ஃபுட் கார்ப்பொரேஷன் மணி வந்து, என்ன சார், நீங்க பாட்டுக்கு சண்டைக்குப் போயிட்டேளே, சம்பந்திக்காரா கோபிச்சுண்டா என்ன செய்யறது அப்படியென்றார்.

என்ன சார்  இது, நாகரீகமில்லாம இப்படியெல்லாம் நடந்துண்டா, தூக்கிப்போட்டு மிதிக்கணும்னு ஆத்திரம் வருது. எப்படி பொறுத்துக்கச் சொல்றீங்க என்றேன்.

சரி சரி தாலி கட்டற வரைக்கும் உங்க கோபத்தை அடக்கிக்குங்க என்று அவர் சொல்ல, கூட இருந்த மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர். எனக்கு இனி அங்கு இருந்தால் ஒவ்வொரு காரியத்திலும் கோபப்படத் தோன்றும் என்று தோன்றியதால், தாலி கட்டிய மறு கணம் வெளியேறி, கும்பேஸ்வரன் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டேன். மண்டபத்தில் சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்த பின் போகலாம் என்று அங்கிருந்த மண்டபமொன்றில் தலைக்குக் கையை வைத்துக் கொண்டு படுத்துவிட்டேன். அப்போது கோயிலுக்கு வந்த கல்யாண பார்ட்டி ஒருவர் என்ன சார் இங்க வந்து படுத்துட்டீங்க, அங்க உங்களைக் காணும்னு சாமிநாதன் தேடிண்டு இருக்கார். வாங்கோ சாப்பிடப் போகலாம் என்று என்னையும் அழைத்துக் கொண்டு வந்தார். அதன் பின் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல இருந்துவிட்டேன்.

மறுநாள் கட்டுச்சாதக் கூடை கட்டிவைத்து சம்பந்திமார்களையெல்லாம் காரிலும், வேனிலும் ஏற்றி ஸ்டேஷனுக்கு அனுப்பினோம். பீஷ்மர் மட்டும் தானே ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஏறிக்கொண்டு எங்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டார். அவர்களை ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு அப்பாடா என்று வந்து படுத்ததுதான் தெரியும், தூங்கிவிட்டோம்.

மறுநாள் காலை பத்து மணி இருக்கும் சென்னையிலிருந்து ஒரு போன் கால். சம்பந்தி ‘தில்’தான் பேசினார். அங்கே சாமிநாதன் இருக்காரா என்றார். சாமிநாதன் வெளியே போயிருக்கிறார், நான் அவர் நண்பன், என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார், நீங்கள் கட்டிக்கொடுத்த சாமானில் கல்யாணப் பாய், கைத்தடி எல்லாம் இருக்கு ஆனால் காசியாத்திரை குடை மட்டும் காணும். அது அங்கேயே இருக்கு போல இருக்கு. அதனால நீங்க வேற ஒரு குடை வாங்கி இங்க ஆத்துல வந்து கொடுத்துடுங்கோ என்றார்.

இங்கு எங்கு தேடியும் குடை கிடைக்கவில்லை. அப்போது சாமிநாதனின் பிள்ளை வந்து சொன்னான். பாய்க்குள் குடையையும் வைத்துத்தான் சுருட்டிக் கட்டிக் கொடுத்தேன். பாயைப் பிரித்துப் பார்க்கச் சொல்லுங்க. அதுக்குள்ள குடை இருக்கும் என்றான். நானும் போன் செய்து ‘தில்’லிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் பாயைப் பிரித்துப் பார்த்துவிட்டு, அடடே, ஆமாம் குடை இங்கே பாய்க்குள்ளதான் இருக்கு என்று ஒன்றுமே நடக்காதது போல பேச்சை முடித்துக் கொண்டார். நான் தலையில் அடித்துக் கொண்டேன்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இப்படியும் சில மனிதர்கள்! – 4

  1. இது கதை போலவோ, கற்பனையில் தோன்றியதாகவோ படவில்லை. உண்மை நிகழ்வுகள் எத்தனையோ? இப்பொழுதெல்லாம் நான் இறைவனிடம் கேட்பது எல்லாம் ஒன்றேதான்-”இறைவா! எல்லோருக்கும் நல்ல புத்தியைத் தா”. இதுதானே காந்தியடிகளுக்குப் பிடித்த பாடலின் ஒரு அடி: “சப்கோ சந்மதி தே பகவான்”. 

Leave a Reply to என் வி சுப்பராமன்

Your email address will not be published. Required fields are marked *