நாகேஸ்வரி அண்ணாமலை

 

அமெரிக்காவில் வருஷத்தில் ஒன்பதரை மாதங்கள் இருந்துவிட்டு வரும் எங்களுக்கு இந்தியா வந்தவுடன் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.  அமெரிக்கர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள், இந்தியர்கள் எல்லாம் கெட்ட மனிதர்கள் என்று நான் சொல்ல வரவில்லை.  அமெரிக்காவில் உள்ள சட்டம், ஒழுங்கு இந்தியாவில் இல்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.  அமெரிக்கா உலகின் பாதுகாவலன் என்று தன்னைப் பறைசாற்றிக்கொள்வதும் தன் நலன்களுக்காக எல்லா நாடுகளையும் ஆட்டிப்படைப்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.  ஆயினும் தினசரி நடவடிக்கைகளில் ஊழல், லஞ்சம், உருட்டு, புரட்டு என்று எதுவும் இல்லாமல் இருப்பது அந்நாட்டின் மிகப் பெரிய சிறப்பு அம்சம்.  அமெரிக்காவை வெறுப்பவர்கள் கூட இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தியாவில் எங்களுக்குப் பல இடங்களுக்கும் சென்று வர வாகனங்கள் எதுவும் இல்லை.  மைசூர் போன்ற ஊர்களில் ஓரளவு பேருந்துகள் வசதி இருக்கிறது உண்மைதான் என்றாலும் அவற்றில் சென்று வர நிறைய நேரம் எடுக்கிறது.  அதிலும் சில இடங்களுக்குக் கொஞ்ச தூரமாவது நடக்க வேண்டியிருக்கிறது.  இதை விட முக்கியமான விஷயம் பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஏறி இறங்கும் பயணிகளுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதில்லை.  பயணிகள் இறங்குமுன்பும் ஏறுமுன்பும் அவர்கள் பாட்டுக்குப் பேருந்துகளை இயக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.  அமெரிக்காவில் பயணிகள் எல்லோரும் ஏறி இறங்கிப் பேருந்தின் கதவுகளை மூடிய பிறகுதான் ஓட்டுநரால் பேருந்தை இயக்க முடியும். அப்படிப்பட்ட பேருந்துகள் எப்போது இந்தியாவில் புழக்கத்திற்கு வருமோ? பேருந்தில் செல்வதால் இப்படிச் சில அசௌகரியங்கள் இருப்பதால் நாங்கள் எங்கு சென்றாலும்  ஆட்டோக்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு முறை ஆட்டோவில் ஏறும்போதும் ‘இந்த ஆட்டோ ஓட்டுநர் என்ன தில்லுமுல்லு செய்வாரோ?’ என்ற பயத்துடன்தான் பயணிக்கிறோம்.  எங்கள் ஊரான இராமநாதபுரம் மாவட்டத் தலைநகரம் என்றாலும் ஊர் சிறியதுதான்.  ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்குப் போக ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டியதில்லை.  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக இரண்டு கி.மீ. தூரம் என்றாலும் ஐம்பது ரூபாய் கேட்கிறார்கள்.  மூன்று கி.மீ. என்றால் குறைந்தது அறுபது ரூபாயாவது கேட்கிறார்கள்.  அதிலும் கொஞ்சம் லக்கேஜ் வைத்திருந்தாலும் இன்னும் அதிகமாகக் கேட்கிறார்கள்.  நகரப் பேருந்துகள் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது.  அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.  ஆட்டோக்களில் கட்டணத்தைக் குறிக்கும் மீட்டர் உபயோகத்தைக் கட்டாயமாக்கப் போகிறோம் என்று அரசு கூறி வந்தாலும் – அப்படியே அவர்கள் அதைச் செய்தாலும் – பெரிய ஊர்களில்தான் இதைச் செயல்படுத்துவார்கள்.  இராமநாதபுரம் போன்ற சிறிய ஊர்களில் அது எப்போதும் வரப் போவதில்லை.

auto-rickshaws-everywhere-you-look-mysore-india+13249552565-tpfil02aw-30079மைசூரில் நாங்கள் வசிக்கும் புறநகர்ப் பகுதி ஊரின் மையப் பகுதியிலிருந்து ஆறு மைல் தூரம் இருக்கும்.  ஊருக்குள் சென்றுவிட்டு வீடு திரும்ப எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஆட்டோ கிடைப்பது கடினம்.  சில ஆட்டோ ஓட்டுநர்கள் அவ்வளவு தூரம் வர விரும்ப மாட்டார்கள்.  சிலர் ஒன்றரைக் கட்டணம் கேட்பார்கள், ஒன்றரைக் கட்டணம் பத்து மணிக்கு மேல்தான் என்றாலும்.  ஆட்டோவில் ஏறும்போது அப்படிக் கேட்கவில்லையென்றாலும் வீடு வந்து சேர்ந்த பிறகு சிலர் அதிகம் கேட்பார்கள்.  மைசூரில் மீட்டர் போடும் முறை இருந்தாலும் நிறையப் பேர் போடுவதில்லை.  போடாமல் நம்மிடம் ஒரு தொகையைக் கேட்பார்கள்.  ஒரு முறை ஒரு ஆட்டோ ஓட்டுநர் இப்படித்தான் 30 ரூபாயைப் பேசிக்கொண்டு ஆட்டோவை ஓட்டத் தொடங்கினார்.  கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு காவலரைப் பார்த்ததும் வேகமாகப் பின்னால் திரும்பி மீட்டரைப் போட்டுக்கொண்டார்.  மீட்டர் போட்டாலும் கிடுகிடுவென்று வேகமாகப் போகும் மீட்டர்கள்தான் அதிகம்.

ஒரு முறை ஒரு இளம் ஆட்டோ ஓட்டுநரை மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு இடத்திற்குச் செல்ல அணுகினோம்.  அவர் ஆட்டோவும் புதிது.  அதில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள ஒரு ஸ்டாண்ட் இருந்தது.  அப்படி ஒன்றை அன்றுதான் நான் ஆட்டோவில் பார்த்ததால் ‘அது என்ன?’ என்று கேட்டேன்.  ஓட்டுநருக்கு அது பிடித்ததாகத் தெரியவில்லை.  ‘என்னடா இது, இந்த அம்மாள் இதைப் பற்றியெல்லாம் கேட்கிறார்கள்?’ என்று நினைத்த மாதிரித் தெரிந்தது.  ஆனால் உடனேயே நான் கேட்டதின் காரணத்தைப் புரிந்துகொண்டு ‘ஆமாம்.  புது ஆட்டோக்களில் இம்மாதிரி இருக்கிறது’ என்று பிரியமாகப் பதில் கூறினார்.  அவருடைய மீட்டரும் ஒழுங்காக ஓடியது! அன்று முதன் முதலாக சரியான கட்டணம் கொடுத்துப் பிரயாணம் செய்தோம்.

இன்னொரு முறையும் அதே இடத்திற்கு ஆட்டோவில் சென்று வந்தோம்.  இந்த முறையும் அதே கட்டணம்தான் வந்தது.  திடீரென்று மைசூர் ஆட்டோக்காரர்கள் எல்லோரும் நியாயமாக நடந்துகொள்கிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது.  ஆனால் நாங்கள் அப்படி நினைத்தது சரியில்லை என்பது போல் இன்னொரு ஆட்டோக்காரர் நடந்துகொண்டார்.  அதே இடத்திற்கு மறுபடி சென்றபோது முதல் இரண்டு ஆட்டோக்காரர்களையும் விட இவர் ஒன்பது ரூபாய் அதிகமாகக் கேட்டார்.  ‘இதே இடத்திற்கு நாங்கள் இரண்டு முறை வந்தபோது 22 ரூபாய்தானே ஆகியது.  இப்போது எப்படி 31 ரூபாய் ஆகிறது?’ என்று கேட்டோம்.   இத்தனைக்கும் மீட்டர் புது மீட்டர்.  ஆட்டோ ஓட்டுநர் சரியான பதில் எதுவும் கூறவில்லை.  ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.  நான் இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும்’என்று எங்களை அவசரப்படுத்தினார்.  இதற்கு மேல் அவரிடம் வாதாட முடியாது என்று அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.  மீட்டர் புதிதாக இருந்தால் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

ஒரு முறை எங்கள் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்றோம்.  போகும்போது கட்டணம் 35 ரூபாய் ஆனது.  ஆனால் சென்ற அதே வழியில் இன்னொரு ஆட்டோவில் வீடு திரும்பியபோது மீட்டர் கட்டணம் ரூபாய் 51 என்று காட்டியது.  எனக்குக் கோபமான கோபம்.  ‘போகும்போது இதே வழியில்தான் சென்றோம்.  35 தானே ஆயிற்று.  இப்போது மட்டும் ஏன் 51 ரூபாய்?’ என்று கேட்டேன்.  கூடவே ‘நான் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன்’ என்று கூறிக்கொண்டே ஆட்டோ எண்ணை மனப்பாடம் செய்யத் துவங்கினேன்.  மைசூரில் ஒவ்வொரு ஆட்டோவுக்கும் லைசென்ஸ் பிளேட் நம்பரைத் தவிர ஓட்டுநரை அடையாளம் காட்டும்வகையில் ஒரு தனி எண் எழுதப்பட்டிருக்கும். அதை வைத்துப் புகார் செய்யலாம். ஏன் 51 ரூபாய் ஆயிற்று என்று கேட்ட போது ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று கூறிய ஓட்டுநர் நான் புகார் கொடுக்கப் போகிறேன் என்றதும் என் கணவரிடம் 40 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டார்.

அவர் நாற்பது ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சென்ற பிறகு ஆட்டோ ஓட்டுநர்களின் நிலையையும் நான் எண்ணிப் பார்த்தேன்.  அவர் கேட்ட அதிகப்படியான பதினொருரூபாயையும் சேர்த்துக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.  அவர்களும் ஒரு நாளைக்கு என்ன சம்பாதித்துவிடப்போகிறார்கள்?  நாள் பூராவும் இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்கிறார்கள்.  இடையிடையே காத்திருக்கும்போது எவ்வளவு ‘போர்’ அடிக்கும்? என்று எண்ணினேன்.  ‘ஆனாலும்அவர்கள் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் அல்லவா?’ என்ற எண்ணமும் ஏற்பட்டது.  இருபது வருடங்களுக்கு முன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த அஸ்வத் என்னும் கன்னட எழுத்தாளர் ஞாபகம் வந்தது.  காந்திஜியை நான் நேரில் பார்த்ததில்லை.  இவர்தான் நான் அறிந்த காந்திஜி.  அவர் 1994-இல் இறக்கும்போது தன்னுடைய வீட்டையும் பதினாறு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் தன் ஒரே மகனுக்குக் கூட கொடுக்காமல் பொதுப் பணிக்காக விட்டுச் சென்றவர்.  1994-இல் பதினாறு லட்சம் என்பது இப்போது நாற்பது லட்சத்திற்கு மேல்.  ஒரு முறை நானும் அவரும் ஆட்டோவில் சென்று வந்தபோது இருட்டிவிட்டது.  ஓட்டுநர் கேட்ட தொகையை அவர் கொடுக்கவில்லை.  தானாகக் கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்து மீட்டரைப் பார்த்துவிட்டுப் பின் தொகையைக் கொடுத்தார்.  தன்னுடைய எல்லா உடமைகளையும் பிறருக்காகக் கொடுத்தாலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் நாணயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார்.  அதே போல்தான் நானும் இப்போது நடந்துகொண்டேன் என்று சமாதானம் செய்துகொண்டேன்.

ஆட்டோ ஓட்டுநர்களோடு இப்படிக் கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் சில இனிமையான அனுபவங்களும் உண்டு.

ஒரு முறை பெங்களூரிலிருந்து மைசூர் திரும்ப இரவு ஒன்பதரை மணியாகிவிட்டது.  அன்று ஆட்டோ கட்டணம் ரூபாய் நூறாவது கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தோம்.  ஆனால் மைசூர் பேருந்து நிலையத்தில் காவலர்கள் நாம் செல்லும் இடத்திற்கான கட்டணத்தை நிர்ணயித்து நம்மை ஆட்டோவில் ஏற்றிவிடஒரு கவுன்டர் இருக்கிறது. அதில் ஒரு ரூபாய் கொடுத்து ரசீது வாங்கிவிட்டால், சேரும் இடத்தில் அவர்கள் விதித்துள்ள கட்டணத்தை ஆட்டோக்காரரிடம் கொடுத்துவிடலாம்.   அன்று நாங்கள் ஆட்டோவிற்குக் கொடுத்த கட்டணம் 64 ரூபாய்தான்.  எந்த வித ஆட்சேபமும் தெரிவிக்காமல் அதைப் பெற்றுக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் சென்றுவிட்டார். முன்கூட்டிக் கட்டணத்தை நிர்ணயித்துப் பயணிப்பவர்களை ஏற்றிச்செல்லவும் பல ஆட்டோக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

இன்னொரு முறை ஊரின் மையப் பகுதியிலிருந்து வீட்டிற்கு வருவதற்காக நாங்கள் ஆட்டோவில் ஏறினோம்.  அரை மைல் தூரம் சென்றவுடன் திடீரென்று என் கணவருக்கு அந்த இடத்தில் ஏதோ சாமான் வாங்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது.  ஆட்டோ ஓட்டுநரைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லி அந்தச் சாமானை வாங்கச் சென்றுவிட்டார்.  அவர் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கடையில் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  ஆட்டோ கட்டணத்தோடு கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்.  வீட்டிற்கு வந்ததும் கட்டணம் 52 ரூபாய் ஆகியிருந்தது.  என் கணவர் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து ‘நாற்பது ரூபாய் மீதி கொடுங்கள்’ என்றார்.  அதற்கு அந்த ஓட்டுநர் ‘மீட்டர் கட்டணம் 52 தானே ஆகிறது?’ என்றார்.  ‘உங்களைக் காக்க வைத்ததற்கு வெயிட்டிங் சார்ஜ் எட்டு ரூபாயை அதிகமாக வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றதும் பிரியமாக வாங்கிக்கொண்டார்.  இப்படியும் சில ஆட்டோ ஓட்டுநர்கள்!

img_5372-1ஒரு முறை மதுரையிலிருந்து மைசூர் திரும்புவதற்காக ஆட்டோவில் மதுரை பேருந்து நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தோம்.  திடீரென்று அந்த முறை மதுரையிலிருந்து காய்கறிகள் வாங்கவில்லை என்று எனக்கு ஞாபகம் வந்தது.  சிறு வயதிலிருந்தே தென் தமிழ்நாட்டில் கிடைக்கும் காய்கறிகளைச் சாப்பிட்டுப் பழகிய எனக்கு அடிக்கடி அவற்றைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.  அதனால் தமிழ்நாடு செல்லும் போதெல்லாம் முடிந்த வரை அங்கிருந்து காய்கறிகளை வாங்கி வருவோம்.  அந்த முறை மற்ற பல வேலைகள் இருந்ததால் காய்கறிகள் வாங்கி வர வேண்டும் என்பது முழுவதுமாக மறந்துவிட்டது.  நாங்கள் ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த போது இரவு மணி எட்டு.  இதற்குப் பிறகு எங்கு போய் காய்கறிகள் வாங்குவது, அதுவும் பேருந்துநிலையத்திற்குச் செல்லும் வழியில்?  இருந்தாலும் ஆட்டோ ஓட்டுநரைக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தோம். அவர் எங்கள் ஆசையைப் புரிந்துகொண்டு,‘இவ்வளவு நேரத்திற்குப் பிறகு நாம் போகும் பாதையில் எந்த மார்க்கெட்டும் இருக்காது.  சென்ட்ரல் மார்க்கெட் திறந்திருக்கிறதா என்று வேண்டுமானால் பார்ப்போம்’ என்று எங்களை அங்கு அழைத்துச் சென்றார்.  நல்ல வேளையாக அங்கு பல கடைகள் மூடப்பட்டுக்கொண்டிருந்தாலும் சில கடைகள் திறந்திருந்தன.  அவற்றில் எங்களுக்கு வேண்டிய காய்கறிகள் கிடைத்தன.  எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.  பேருந்து நிலையம் வந்து சேர்ந்ததும் ஆட்டோ மீட்டர் காட்டிய தொகைக்கு மேல் மிகவும் அதிகமாகவே அவருக்குக் கொடுத்தோம்.  அவருக்கும் சந்தோஷம்.  நாங்கள் அதிகமாகக் கொடுப்போம் என்று தெரியாமலேயே அவர் எங்களைக் கூட்டிச் சென்றது அவரது பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையைக் காட்டுகிறது.

ஒரு முறை மைசூரில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தி நடைபாதைக் கடையில் இட்லி வாங்கினோம்.  அங்கு விற்கும் இட்லியும் சட்னியும் மிகவும் பிரசித்தம்.  அது அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தெரியாது போலும்.  என் கணவர் ஆட்டோவிலிருந்து இறங்கி இட்லி வாங்கச் சென்றதும் என்னிடம் ‘இங்கு இட்லி நன்றாக இருக்குமா?’ என்று கேட்டார்.  அவருக்கும் இரண்டு இட்லிகள் வாங்கிக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.  ஆட்டோவிலிருந்து இறங்கி என் கணவரிடம் சென்று ஆட்டோ ஓட்டுநருக்கு இரண்டு இட்லிகள் வாங்கி வருமாறு கூறினேன்.  ஓட்டுநர் மனம் நெகிழ இட்லிகளைப் பெற்றுக்கொண்டார்.

படங்களுக்கு நன்றி: http://tripwow.tripadvisor.com/slideshow-photo/indian-traffic-jam-aurangabad-india.html?sid=63718504&fid=upload_13249530337-tpfil02aw-17672

http://duncanwright.wordpress.com/2013/01/14/india-mysore/img_5372-1/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆட்டோக்காரர்கள் பலவிதம்

  1. எனது முந்தைய அகமொழியை இங்கே நினைவுகூர்கிறேன்:

    திரும்பி வரும்போது சவாரி கிடைக்காது, இரவு நேரம், மழைக் காலம், பெட்ரோல் விலையேற்றம், அசாதாரண சூழ்நிலை… எனப் பல காரணங்களால் தானி (ஆட்டோ) ஓட்டுநர்கள் பலர் அதிகக் கட்டணம் கேட்டு வந்தனர்; இப்போது, எந்நேரத்தில், எக்காலத்தில் அணுகினாலும் அதிகக் கட்டணமே நிலையாகிவிட்டது. தொலைவுமானி (மீட்டர்) இயக்குவதோ, அது ஒழுங்காய் இயங்குவதோ அரிதினும் அரிது. இதர விலையேற்றங்களைக் காட்டிலும் இது தனித்தோங்கித் தெரிகிறது. முறைப்படுத்தப்படவும் இல்லை. இவ்வளவு கொடுத்தால்தான் வருவேன் என நிர்பந்தித்து, அடுத்தவரின் அவசரத்தை, சிரமத்தைக் காசாக்குபவர் பலர். ஏழையாயினும் செல்வராயினும் அறம் பிறழ்ந்தால், அது துல்லியமாய்க் மீண்டும் வந்து தாக்கும் என்பதை இவர்கள் அறியவில்லையா? வாடகைத் தானித் தொழிலில் பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) இறங்கினால், தனித் தானிகளால் அவர்களுடன் போட்டியிட முடியுமா? அப்போது கட்டணம் குறைகிறதோ, இல்லையோ, நெறிமுறை நிச்சயம் இருக்கும். பல பெரு நிறுவனங்கள் இறங்கினால், அவர்களுக்கு இடையிலான போட்டியில் கட்டணமும் குறையும். அப்படி ஒரு நிலையை உருவாக்கினால்தான் பாடம் கற்போம் எனில் அச்சூழல் இங்கே அரும்பட்டும். (அகமொழி 65)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *