பட்டினத்தடிகளின் பாடல்கள் – 3ம் பகுதி

0

தஞ்​சை ​வெ.​கோபாலன்

திருத்தில்லை

சோறிடு நாடு, துணி தரும் குப்பை, தொண்டு அன்பரைக் கண்டு
ஏறிடும் கைகள், இறங்கிடும் தீவினை எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம் கண்டால்
ஊறிடும் கண்கள், உருகிடும் நெஞ்சம் என் உள்ளமுமே. 1.

திருநீறு பூசிய உடலோடு பொன்னம்பலத்தில் நடனமிடும் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டால் கண்கள் பனிக்கும், நெஞ்சும் உள்ளமும் உருகும், நாடு வளம் கொழித்து பஞ்சமின்றி சோறிடும், குப்பைகூட உடுக்க துணி தரும், அடியார்களைக் கண்டால் கரங்கள் இரண்டும் தலைமேல் சென்று கும்பிடும், தீவினைகள் எப்போதும் நம்மைவிட்டு நீங்கிவிடும்.

அழலுக்குள் வெண்ணெய் யெனவே உருகிப் பொன்னம்பலத்தார்
நிழலுக்குள் நின்று தவம் முஞற்றாமல் நிட்டூரமின்னார்
குழலுக்கு இசைந்த வகை மாலை கொண்டு குற்றேவல் செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேன் என் விதிவசமே. 2.

பொன்னம்பலத்தான் நடராஜப் பெருமானின் சன்னிதியில் நின்று தீயிலிட்ட வெண்ணெய் போல மனம் உருகி தவம் புரியாமல், எதிலும் குறை கண்டு வருந்திப் பழிபேசும் பொதுமைப் பெண்களின் கூந்தலில் சூட்டுதற்கென்று வகைவகையாய் மலர்மாலைகளைக் கொண்டு வந்து கொடுத்து, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துகொண்டு, நற்பயிருக்கன்றி, சுற்றிலும் முளைத்துள்ள பயனற்ற காளான்களுக்கு நீர்பாய்ச்சி வீணானென், இதனை விதிவசம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல வல்லேன்.

ஓடாமல், பாழுக்கு உழையாமல், ஓரம் உரைப்பவர் பால்
கூடாமல், வல்லவர் கூட்டம் விடாமல், வெங்கோப நெஞ்சில்
நாடாமல், நன்மை வழுவாமல், இன்றைக்கு நாளைக்கு என்று
தேடாமல், செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 3.

சிதம்பரத்தில் சிற்சபையில் ஆடும் நடராஜப் பெருமானே! வயிற்றுப்பாட்டுக்காகவும், பிழைப்புக்காகவும் அங்குமிங்குமாய் ஓடி அலையாமல், பலன் எதுவும் கிட்டாத பாழுக்கு உழைக்காமல், இடத்துக்குத் தகுந்தாற்பொல சுய நலத்தோடு மாற்றி மாற்றி பேசுபவர்களோடு கூடியிருக்காமல், நல்லதே நினைக்கும் உத்தமர்கள் கூட்டத்தை விட்டு அகலாமல், கொடுமைதரும் கோபத்தை நெஞ்சில் சுமப்பாறோடு கூடாமல், சத்திய வழியில் உறுதியோடு நிற்பவர்களை விட்டு நீங்காமல், இன்றைக்கெனவும் நாளைக்கெனவும் தேடித்தேடி பொருள் சேர்க்காமலும், உன்னுடைய அருள் செல்வத்தை எனக்கு அள்ளி அள்ளித் தரவேண்டும் ஐயா சிதம்பரநாத தேசிகனே.

பாராமல் ஏற்பவர்க்கு இல்லை எனாமல், பழுது சொல்லி
வாராமல் பாவங்கள் வந்து அணுகாமல் மனம் அயர்ந்து
பேராமல் சேவை பிரியாமல் அன்பு பெறாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 4.

குற்றம் குறைகள் கண்டுபிடித்து ஏற்றத் தாழ்வு பாராமல், ஈயென்று இரப்போர்க்கு சாக்கு போக்கு சொல்லி இல்லை என்று சொல்லாமல் தானம் கொடுத்து, அப்படி குறைகள் காண்பதால் உண்டாகும் பாவங்கள் வந்து சேராமல், நன்மை தீமை இவைகளைக் கண்டு மனம் சோர்ந்து போகாமல், பிறர்க்கு உதவும் சேவை உள்ளத்தை மறந்து கைவிடாமல், பரமேஸ்வரா! உன்னிடம் அன்பு வைத்து வணங்காதவர்களைச் சென்றடைந்து உறவு பூணாமல், இறைவா உன் பேரருள் எனும் செல்வத்தை எனக்குத் தந்திடுவாய் சிதம்பனாத தேசிகனே.

கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரம் கோள் களவு
கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 5.

உயிர்களைப் பலியிட்டுக் கொல்லாமல், அப்படிக் கொன்ற அந்த ஜீவங்களின் உடல் மாமிசத்தை உண்ணாமல், பிறரை வஞ்சிப்பது, மற்றவர்களைப் பற்றி கோள் சொல்வது, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது இவைகளைக் கற்றுக் கொள்ளாமல், சூதாடுவோரோடு கலந்து உறவாடாமல், பிறர் உரைக்கும் பொய் வார்த்தைகளைப் பொருட்படுத்திக் கேட்காமல், தோகைவிரித்தாடும் மயில் போன்ற அழகுடைய மாதரோடு மயங்கிப் பின் செல்லாமல், சிதம்பரத்து தேசிகனே எனக்கு அப்படிப்பட்ட அருட் செல்வத்தை அளித்திடுவாய் ஐயனே.

முடிசார்ந்த மன்னரும், மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமென்றே அறிவார் இல்லையே. 6.

பூவுலகை ஓகோவென ஆண்டு கொண்டிருந்த மன்னர்களும், அவரோடு இணைந்து செல்வச் செறுக்கில் கிடந்து மகிழ்ந்தோரும் முடிவில் மான்டு போய், எரியூட்டப்பட்டு ஒரு பிடி சாம்பராக ஆன செய்தியை நம் கண்ணாரக் கண்டபின்னரும், நாம் இந்த பூமியில் கிடைக்கும் இன்பமெல்லாம் வேண்டி சகல செல்வங்களோடும் வாழ விரும்புவதல்லால், பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் அந்த சிற்சபேசனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு நல்வழிக்கு உய்ய வேண்டுமென்று அறிபவர் யாரும் இங்கு இல்லையே, என் செய்வேன்?

காலை உபாதி மலம் சலமாம் அன்றிக் கட்டுச்சியில்
சாலவும் பாதி பசி தாகமாம் உன் சஞ்சிதமாம்
மாலை உபாதி துயில் காமமாம் இவை மாற்றி விட்டே
ஆல முகம் தருள் அம்பலவா! என்னை ஆண்டருளே. 7.

பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை யுண்டு கண்டத்துள் வைத்த நீலகண்டனே! காலையில் எழுந்ததும் மலஜலம் கழித்தல் எனும் கடமை, உச்சி நேரத்தில் பசியும் தாகமும் வாட்டுகின்ற நேரம், மாலை நேரம் ஆனதும் உறக்கமும், காமம் தீர்த்தலுமாம் என்று இப்படி மாறி மாறி தொழில் செய்து மாளும் என்னைக் காத்து இரட்சிக்க வேண்டும் ஐயா!

ஆயும் புகழ்த் தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்
பாயும் இடபம், கடிக்கும் அரவம்; பின்பற்றிச் சென்றால்
பேயும் கணமும் பெருந்தலைப் பூதமும் பின் தொடரும்
போய் என் செய்வாய் மனமே பிணக்காடவர் போமிடமே. 8.

பிறவி எனும் பெருங்கடலில் வீழ்ந்து நீந்தி அல்லல் பட்டு ஆற்றாது அழுதுருகும் ஏ மனமே! சர்வ லோகமும் போற்றிப் புகழும் அந்தத் தில்லை அம்பலவாணருக்கு அருகில் போவோம் என்று சென்றால், அவனைத் தாங்கி நிற்கும் ரிஷபம் இருக்கிறதே அது தன் கொம்புகளால் முட்ட வருகிறது; அவன் தலைமுடியில் படமெடுத்து ஆடுகின்ற நாகம் நம்மைக் கடிக்க வருகின்றது; அவனைப் பின்பற்றிச் செல்வோமென்றாலோ அவனைப் புடைசூழ நின்றிருக்கும் பூதகணங்களும், பேய் பிசாசுகளும் நம்மைத் துரத்திக் கொண்டு வருகின்றன. இவற்றையெல்லாம் மீறி நீ அவனைப் பின்பற்றிப் போய்த்தான் என்ன செய்யப் போகிறாய்? அவன் இருப்பிடமோ பிணங்களைச் சுட்டெரிக்கும் இடுகாடு.

ஓடும் எடுத்து, அதளாடையும் சுற்றி, உலாவி மெள்ள
வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி அற்றவர் போல்
ஆடும் அருள் கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டி தன்னை
தேடும் கணக்கென்ன காண்! சிவகாம சுந்தரியே. 9.

இடையில் துணியை அன்றோ எல்லோரும் அணிவர், ஆனால் உடுக்க துணியின்றி இடையில் புலித்தோலை அணிந்து கொண்டும், கையில் பிரம்ம கபாலத்தை பிட்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு, வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து, உற்றார் உறவு என்று எவருமில்லை யெனும்படி காட்சி தந்து இந்தத் தில்லையம்பலத்தில் ஆடுகின்ற அந்த ஆண்டியைத் தேடுவதன் இரகசியம்தான் என்ன அம்மா, சிவகாமசுந்தரி!

ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்று
மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும், முயன்ற வினை
காட்டுவிப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே. 10.

இப்பூவுலகில் படைக்கப்பட்ட உயிர்களுக்கெல்லாம் கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிர்களுக்கும் உணவளித்து ஊட்டுவிப்பவனும், அவை களைத்துப் போய் ஓய்ந்து கிடக்கும் போது அவைகளை உறங்க வைப்பானும், ஒன்றோடு மற்றொன்றை இணைத்து வாழச்செய்பவனும், அவைகளை இவ்வுலகயியலில் இயங்கச் செய்பவனும், அப்படி அவை இயங்குவதால் உருவாகும் பலங்களை உலகுக்குக் காட்டுபவனும், இரு வினைகளால் ஆகிய பாசக் கயிற்றால் அவற்றை இயங்க வைப்பவனும் ஆகிய ஒருவன் உண்டு. அவன் தான் தில்லை பொன்னம்பலத்தே ஆடுகின்ற எம்பெருமான் நடராசப் பெருமான்!

(இன்னும் உண்டு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *