சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

 

இனிமையான வணக்கங்களுடன் உங்களுடன் மீண்டும் இணைகிறேன்.

சத்தியத்தை தன் வாழ்வாக்கி, தன் வாழ்வின் சோதனைகளைச் சாதனையாக்கிய உலகம் போற்றும் உன்னதத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் ஜயந்தித் தினத்தன்று இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.

எந்தவொரு நாட்டின் அதிகாரத்திலிருந்து தமது நாட்டை விடுவிக்க பாரதத் தந்தை காந்தி போராடினாரோ அந்த நாட்டின் ஒரு பிரஜையாக இன்று இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.

மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழி இன்று உலகெல்லாம் ஒரு உன்னத வழியாகப் போற்றப்படுவது வெள்ளிடை மலையாகத் தெரியாது போனாலும் இந்நாட்டின் பல ஆங்கிலேய நண்பர்களுடன் பேசும் போது அவர்மீது அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பை உணர முடிகிறது.

இன்று உலகின் பல பாகங்களில்லும் பல வழிகளில் பலநாடுகளில் யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. யுத்தங்களின் வழி அழிந்து கொண்டிருக்கும் உயிர்களின் அவலங்களைப் பார்க்கும் போதுதான் மகாத்மா காந்தி பயணித்த பாதையின் காரணம் புரிகிறது.

அவர் நாட்டின் விடுதலைக்காய் செய்த சேவை ஒருபுறமிருக்க அவரது சொந்த வாழ்க்கையின் எளிமை உலகுவாழ் மக்களுக்கே ஒரு எடுத்துக் காட்டாக அமைகிறது.

ஆனால் இன்று காந்தி காட்டியவழி இன்றைய காலகட்டத்தில் எத்தகைய வகையில் மக்களால் பார்க்கப்படுகிறது என்று சிந்தித்துப் பார்க்கும் போது விடை மிகவும் கலங்களாகத்தான் இருக்கிறது.

மகாத்மா காந்தி எனும் தனிமனிதனின் வாழ்க்கையை இந்தியச் சுதந்திரப் போராட்டம் எனும் நிகழ்விலிருந்து அந்நியப்படுத்திப் பார்க்க முடியாது.

ஆனால் வாழ்வில் அவர் கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்களே தென்னாபிரிக்காவில் வக்கீலாக இருந்த அவரை இந்தியச் சுதந்திரப் போராட்டப் பாதைக்குத் திருப்பியது.

அவரது வாழ்க்கைச் சுயசரிதமான சத்திய சோதனையிலிருந்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொள்ள வேண்டிய பல அரிய அனுபவப் பாடங்கள் உண்டு ஆனால் அதை எத்தனை பேர் இன்றைய கால கட்டத்தில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அவசரமான இன்றைய உலக்த்திலே நாம் மனிதம் பெரியதோர் வலயத்தை விட்டு எமது இனம், எமது நாடு, எமது மொழி எனும் குறுகிய வலயத்தை வரித்துக் கொண்டுள்ளோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மொழி, கலை, கலாச்சாரம் என்பனவற்றைக் கைவிட்டு விட வேண்டும் என்பதல்ல எனது வாதம். என்ன மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் மனிதர் எனும் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கிக் கொண்டு போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்களுக்கு ஏன் புகழாரம் சாத்துகிறேன் எனும் பாணியில் முகநூலில் நான் எழுதிய பதிவிற்கு ஒரு நண்பர் குறிப்பெழுதியிருந்தது என்னை ஆச்சரியத்திலாழ்த்தியது.

உண்மை எங்கிருந்தாலும், நல்லவை எங்கு நடந்தாலும், அதை இனம், மொழி, நாடு எனும் எல்லைகளுக்குட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளுவதே ஒரு மனிதனின் மனிதத்தன்மையான செய்கை என்பதே என் எண்ணம்.

கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை எமக்குப் போதிப்பதும் இதுவேதான்.

ஈழத்தில் எமது வீட்டு வரவேற்பறையில் ஆளுயர மகாத்மா காந்தி அவர்களின் உருவப் படம் ஒன்றை என் தந்தை மாட்டி வைத்திருந்தார்.

சிறுவனாயிருந்த நான் அவரிடம் ஏன் இப்படம் இங்கு மாட்டியிருக்கிறீர்கள் என்று வினவும் போது” மனிதாபிமானத்தின் அடையாளம் இது ” என்றார் என் தந்தை.

அன்றைய இளம் பிராயத்தில் இக்கூற்றின் கனம் எனக்குப் புரியவில்லை ஆனால் இன்று வயோதிபத்தின் வாசலில் நிற்கும் எனக்கு அதன் உள்ளார்த்தம் தெளிவாகப் புரிகிறது.

இந்த காந்தி ஜயந்தி தினத்தன்று நான் வரையும் இம்மடல் கூட அம்மாமனிதனுக்கு ஒரு ஆராதனையாகவே கொள்கிறேன்.

அன்பு வழி நடப்போம், அனைவரையும் நேசிப்போம்

மீண்டும் அடுத்தமடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

லண்டன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *