வரிவடிவங்கள்–’நெவர்தலெஸ்’ சீவாகன்

0

வேணுகோபாலன்

நடாத்தூர் சீனிவாச ராகவன்! முதல்முறையாக வந்த மின்னஞ்சலைப் பார்த்தபோதுதான், எல்லாரும் விதிவிலக்கின்றி ‘சீவாகன்’ என்று அழைத்து வந்தவரின் நிஜப்பெயர் தெரிய வந்தது. தன்னை எல்லாரிடமும் ‘சீவாகன்’ என்றுதான் அவரே அறிமுகம் செய்துகொள்வார். கேட்பதற்கு வினோதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறதே என்று முதலில் கேட்பவர்கள் புருவத்தை உயர்த்துவது வாடிக்கை!

”என்  நெஜப்பேரு கொஞ்சம் நீளம் ஜாஸ்தி! அப்பல்லாம் எல்லாருக்கும் நிறைய ஓய்வு இருந்திருக்கணும். இல்லாட்டா ஒரு சின்னக்குழந்தைக்கு இவ்வளவு பெரிசா பேரு வைச்சிருப்பாங்களா?” என்று அவரே, மற்றவர்களின் வியப்பைக் கண்டறிந்தவர்போல சொல்லிச் சிரிப்பார். சீவாகனின் சிரிப்பு வசீகரமாக இருக்கும். வெற்றிலை, புகையிலை புழங்கியிராத வாயென்பதால், பற்கள் விளம்பரத்தில் காண்பிக்கப்படுபவைபோல சுத்தமாக, பளிச்சென்றிருக்கும். உதடுகள் பெண்களைப் போன்று அடர்சிவப்பாக, அதிகம் வெடிப்புகளின்றிக் காணப்படும். பெரும்பாலும் கண்ணாடியை சட்டைப்பையிலேயே வைத்திருப்பார். தலை முற்றிலும் நரைத்திருந்தபோதிலும், பின்மண்டையில் அடர்த்தியாக, சீப்பின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் படிந்து காணப்படும்.

நெற்றியின் பரப்பளவை செங்குத்தாகப் பிரிப்பதுபோல, சற்றே புருவமட்டத்துக்குக் கீழேயிருந்து தொடங்கி அவரது முன்வழுக்கை முடிந்து, மயிர்ப்பரப்பு தொடங்குமிடமிடம் வரைக்கும் துல்லியமாக ஒரு அடர்சிவப்புக்கோடு! சிரிக்கும்போது முகத்தில் தெரியும் சிற்சில சுருக்கங்களைக் கவனிக்காமல்விட்டால், அவர் ஒரு வங்கியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் இன்னும் பணிபுரிந்து கொண்டிருப்பவர் என்று சொல்வது கடினம். உடம்புவாகு அத்தனை திடகாத்திரம்!

ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒன்றுமாக இரண்டு செய்தித்தாள்களுடன் பழவந்தாங்கலில் ரயில்பிடிப்பார். வலதுபக்க மூலையிலிருக்கும் ஜன்னலோர இருக்கையில்தான் பெரும்பாலும் அமர்வார். எவரேனும் ஏற்கனவே அமர்ந்திருந்தால், அதிருப்தியுடன் புருவத்தை நெறித்துவிட்டு, வேறேதேனும் ஜன்னலோர இருக்கை கிடைக்குமா என்று பார்த்துவிட்டு, கிடைக்காவிட்டால் எவ்வளவு இருக்கைகள் காலியாக இருந்தாலும், வலதுபக்க ஜன்னலோர இருக்கை காலியாகும்வரை நின்றுகொண்டே வருவார். ”உட்காருங்களேன் சார்!” என்று யாரேனும் சொன்னால்கூட, திரும்பிப்பார்த்து ’உங்கள் கரிசனத்துக்கு நன்றி!’ என்பதுபோல ஒரு அரைப்புன்னகையை அளித்துவிட்டு, ‘இருந்தால் ஜன்னலோரம்; இல்லாவிட்டால் நின்றேதான் பயணம்’ என்று சபதம் மேற்கொண்டவர்போல, பிடிவாதமாக நின்றுகொண்டே வருவார்.

’நெவர்தலெஸ்’ – இது சீவாகன் அடிக்கடி உபயோகப்படுத்துகிற ஒரு வார்த்தை. எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், எப்படியாவது ஒரு பொருத்தமான இடத்தில் ‘நெவர்தலெஸ்’ என்ற வார்த்தையை, அபத்தமாக இல்லாமல் சொல்லி விடுவார். அதுதவிர, பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமலே பேசுவார். சொல்லப்போனால், ஆங்கிலத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டிப் பேசுவதில் அவருக்கு அலாதியான மகிழ்ச்சி ஏற்படும். சபைநாகரீகம் கருதி சில விஷயங்கள் பேசுகிறபோது, அதை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அதையே தமிழில் சொல்லியிருந்தால் எத்தனை அருவருப்பாக இருக்கும் என்று சிரித்துக்கொண்டே கேட்பார்.

”எல்லாத்துக்கும் ரொம்ப நாகரீகமா நாலு வார்த்தையைக் கண்டுபிடிச்சு வைச்சிருப்பானுங்க! என்னமோ நாள் முச்சூடும் அதை எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கப்போறா மாதிரி, அப்படியொரு பசப்பு! நேச்சர்ஸ் கால்னு சொல்லுவான்; மேக்கிங் லவ்னு சொல்லுவான்! உன்னைத் தவிர அடுத்தவனுக்குப் பத்து பைசா புரயோஜனம் இல்லாத சங்கதிக்கெல்லாம் தேடித்தேடி வார்த்தை கண்டுபிடிச்சு வைச்சிருப்பானுங்க! ஆனா, அவனைத்தான் ரொம்பவும் நாசூக்கானவன்னு நாமெல்லாம் சொல்லிட்டிருக்கோம்!”

எல்லா ரயில் நிலையங்களில் ஏறுகிறவர்களிலும் ஓரிருவராவது சீவாகனுக்குப் பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். அதில் நிறைய பெண்மணிகளும் இருப்பதுண்டு. சட்டென்று சினேகிதம் பிடிப்பதில் கெட்டிக்காரர். பக்கத்திலோ எதிரிலோ எவரேனும் உறங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தால், அவர்களை உறங்கவிடாமல் எதையாவது யாருடனாவது உரக்கப் பேசி, அவர்கள் சட்டென்று கண்விழித்து மலங்க மலங்க விழிப்பதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

”என் கணக்குப்படி ஒவ்வொரு டிரெயின்லேயும் குறைஞ்சது ரெண்டு மூணு பேராவது தூங்கிட்டு அடுத்த ஸ்டேஷன்லே கண்முழிக்கிறவங்க இருப்பாங்க!” என்று ஒரு முறை சொன்னார். “ரயில் பிரயாணத்துலேயே இப்படி அசட்டையா இருக்கிறவன், வாழ்க்கையிலே என்னத்தைக் கிழிச்சிடப்போறான்?”

கடற்கரை ரயில் நிலையம் வரைக்கும், இரண்டு செய்தித்தாள்களும் மடக்கியது மடக்கியபடியே இருக்கும். ஒரு முறைகூட பயணத்தில் அவர் வாசித்துப் பார்த்ததாக ஞாபகமில்லை. யாராவது இரவல் கேட்டாலும் தர மாட்டார். யோசித்துப் பார்த்தால், அவரிடம் செய்தித்தாள் இரவல் கேட்டு, அவர் ‘முடியாது’ என்பதுபோலத் தலையசைத்துவிட்டு, அழிச்சாட்டியமாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்த அந்த நாள்தான் அவரை முதலில் கவனித்து மனதில் பதிந்துகொண்ட நாள் என்பது புரிகிறது. ஆனால், நாளாவட்டத்தில் தினசரி அவரைப் பார்க்கப் பார்க்க, எதிர்பாராமல் ஒரு ரயில் சினேகம் உருவானபிறகு, அன்றைக்கு அவர் அப்படி நடந்து கொண்டதற்கும் ஏதாவது காரணம் வைத்திருப்பார் என்று தோன்றியது. சொல்லப்போனால், அவருடன் பேச ஆரம்பித்த சில நாட்களில், அவரிடம் காணப்பட்ட பல சுவாரசியங்களை அறிந்தபின்னர், அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டிய அவசியமேயில்லையோ என்றும் தோன்றாமல் இல்லை.

சீவாகனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயமிருந்தன. குறிப்பாக, எவரையும் அவரவர் வழியில் சென்று நட்புறவாடுகிற சாதுர்யம்.

”என்னம்மா, மெடிக்கல் ஸ்டூடண்டா?” இப்படித்தான் ஒரு நாள், எதிரே அமர்ந்திருந்த அந்த இளம்பெண்ணின் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து விசாரித்தார். அந்தப் பெண் திரும்பிப்பார்த்து, ‘ஆமாம்’ என்பதுபோலத் தலையாட்டிவிட்டு, அதற்குமேல் பேச விரும்பாதவள்போல முகம்திரும்பிக் கொண்டாள்.

”அனாடமி புஸ்தகத்தோட அப்துல் கலாம் புஸ்தகமும் படிக்கிறியாம்மா?” என்று அடுத்த கொக்கியைப் போட்டபோது, அந்தப் பெண் மீண்டும் திரும்பி, பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

”அப்துல் கலாம் டாக்டர்களுக்காக என்ன கண்டுபிடிச்சிருக்கார் தெரியுமோ?”

இப்போது அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, சீவாகனுக்குப் பக்கத்திலும் எதிரிலும் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரு திடீர் ஆர்வம் பொங்கியது. என்னவாக இருக்கும்?

”என்ன சார்?”  ‘தெரியாது’ என்று சொல்லவிரும்பாத அந்தப் பெண் வியப்புடன் கேட்டாள்.

”லாப்ரோஸ்கோபிக் சர்ஜரிக்குப் பயன்படுற ஒரு ‘கன்’ கண்டுபிடிச்சிருக்காரு தெரியுமா? அதுக்குப் பேரே கலாம் கன்!”

”இஸ் இட்?” அந்தப் பெண்ணின் பார்வையில் திடீரென்று மரியாதை அதிகரித்தது. தனக்குத் தெரிந்திராத ஒரு தகவல், இந்த ‘அங்கிளுக்கு’த் தெரிந்திருக்கிறதே என்ற வியப்பு.

’இதெல்லாம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?’ என்று யாரோ கேட்க, ’இதெல்லாம் ஊருக்கே தெரிஞ்ச விஷயம். எனக்குத் தெரிஞ்சதுலே என்ன ஆச்சரியம்?’ என்று சொல்லி, ’இந்த மனிதர் பெரிய அறிவாளி போலிருக்கிறதே’ என்று மற்றவர்களுக்கு திடீரென்று ஏற்படும் பிரமிப்பை சட்டென்று அடக்கி, நானும் மற்றவர்களைப் போலத்தான் என்று சகபயணிகளோடு தன்னையும் சட்டென்று பிணைத்துக் கொண்டுவிடுவார். மறுமுறை, அந்தப் பெண் அதே நேரத்தில், அதே ரயிலில், அதே பெட்டியில் ஏறினால், வருஷக்கணக்காகப் பழகியவளைப் போல நேராக சீவாகனுக்குப் பக்கத்திலோ, எதிரிலோ அமர்ந்து அளவளாவ ஆரம்பித்து விடுவாள்.

”நேத்து புக் எக்ஸிபிஷன் போயிருந்தேன். மொத்தம் ஐநூறு ஸ்டால்னு சொல்றா.  நெவர்தலெஸ், அதுலே ஒரு ஸ்டால்லே இருக்கிற மொத்தப்புஸ்தகங்களையும் படிக்கிறதுக்கே இந்த ஆயுசு பத்தாது! இதுலே நான் நிறையப் படிச்சிட்டேன்; உனக்கு எதுவும் தெரியலேன்னு மனுசங்க பேசறதைவிடப் பெரிய கேலிக்கூத்து இருக்குமோ?”

வயது, அந்தஸ்து எல்லாவற்றையும் தாண்டி, சீவாகனுக்கென்றே அந்த ரயில் பெட்டியில் நிறைய ரசிகர்கள். புதுக் கணினியோ, புது செல்போனோ, புதிய வாகனமோ எதுவாக இருந்தாலும் அவரிடம் வந்து சிலர் ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலான விஷயங்களுக்கு உடனடியாக அவரிடம் ஆலோசனைகள் தயாராக இருக்கும். இல்லாவிட்டால் ‘உங்க ஈ-மெயில் ஐ.டி.சொல்லுங்க! நான் பார்த்துட்டு உங்களுக்கு விபரம் அனுப்பறேன்’ என்று சொல்லுவார். அனேகமாக அன்றிரவே அவரிடமிருந்து மின்னஞ்சல் சென்றுவிடும்.

கோட்டையிலிருந்து கிளம்பியதுமே, இருக்கைகளிலிருந்து எழுந்துசென்று வாசல்பக்கமாகக் கம்பியைப் பிடித்து நிற்பவர்களைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரிப்பார் சீவாகன்.

”இது அவசரயுகம் அவசரயுகம்னு பயமுறுத்தறதுக்காகவே இப்படியெல்லாம் அனாவசியமா பதட்டப்படறா பாருங்க! இப்படித்தான் பஸ் ஸ்டாப்புலே, சினிமா தியேட்டர்லே, கோவில்லேன்னு எங்க பார்த்தாலும் தேவையில்லாம முண்டியடிக்கிறா! பீச் ஸ்டேஷன் வராமலா போயிடும்? இவங்கதான் இறங்காம இருக்கப்போறாங்களா? வேணும்னே டென்ஷன் ஆகி, நம்மளை நாமளே வருத்திண்டு, வாழ்க்கை இயந்திரமாயிடுச்சுன்னு பேசறதெல்லாம் எவ்வளவு பெரிய புரட்டு?”

சீவாகன் கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்குவதுகூட அலாதியாக இருக்கும். ரயில் முழுதாக நின்றபிறகுதான், இருக்கையிலிருந்து எழுவார். எழுந்தபின்னர் கைகளை உயரத்தூக்கி சோம்பல்முறிப்பார்; நிதானமாக இறங்கி, பிளாட்பாரத்தில் இருக்கும் பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்து, பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டுமடக்குக் குடிப்பார். பிறகு, சட்டைப்பையிலிருந்து கண்ணாடியை எடுத்து, கைக்குட்டையால் துடைத்து மாட்டிக்கொள்வார். பிளாட்பாரத்தில் பயணிகளின் நடமாட்டப் பரபரப்பு குறையும்வரைக்கும் பிடித்துவைத்த பிள்ளையார்போல அப்படியே அமர்ந்திருப்பார். ஏறக்குறைய பிளாட்பாரம் காலியானதும், மெதுவாக எழுந்து இரண்டு பேண்ட் பாக்கெட்டுகளிலும் கையை நுழைத்துக்கொண்டு, ஓரடிக்கு அரையடியாக மெதுவாக நடந்து வெளியேறுவார்.

இந்த மனிதருக்குப் பதட்டமே வராதா? எப்போதும் இப்படித்தானா?

ஒரு நாள்!

கிண்டி ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த வண்டி திடீரென்று கிறீச்சிட்டு நின்றது. வாசலருகே நின்றுகொண்டிருந்தவர்கள் பதற்றத்துடன் பேசுவதிலிருந்து, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யாரோ ஒருவர்மீது ரயில் மோதிவிட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

’அடப்பாவமே!’ என்று உச்சுக்கொட்டியபடி, தற்செயலாக சீவாகனைப் பார்த்தபோது, அவர் முகத்தில் வியர்வை துளிர்த்திருந்தது. கண்கள் லேசாகச் செருகிக்கொள்ளத் தொடங்கியிருந்தன. என்னவென்று புரிந்துகொள்வதற்குள், சட்டென்று மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார் சீவாகன். தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவுக்குக் கொண்டுவந்தபோது, மெதுவாகக் கண்திறந்து அவர் கேட்ட முதல் கேள்வி:

”டிரெயின் கிளம்பிடுச்சா இல்லே அங்கேயேதான் நிக்குதா?”

”இன்னும் கிளம்பலை சார்! என்னாச்சு சார்? ஏன் மயங்கிட்டீங்க?”

சீவாகன் பதில் சொல்லவில்லை. ஆனால், பின்னால் யாரோ ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது.

”அவரோட சம்சாரம் ரயில்லே அடிபட்டுத்தான் இறந்தாங்களாம். பழவந்தாங்கல் ஸ்டேஷன்லே….!”

*********

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *