கதை கேளு கதை கேளு கடிகாரத்தின் கதை கேளு.

2

மதுமிதா

maakadigaram-wrapper
கதை கேளு கதை கேளு கடிகாரத்தின் கதை கேளு கடிகாரக் கதையின் வழியாக காணாமல் போகின்ற‌ மடமையெனும் கதை கேளு

சிறுவயதில் சொல்லப்பட்ட கதைகள், வாசித்த கதைகள் இவையெல்லாம் ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் உளவியல் ரீதியாக செயல்பட்டு அதன் விளைவு குழந்தையினிடத்தில் பல்வேறுபட்ட ஆளுமையை வளர்க்க பலவழிகளில் உதவுபவையாக அமையும்.

மிக முக்கிய உதாரணமாக, அரிச்சந்திரனின் கதையினை முழுமையாக விரும்பி உள்வாங்கிக் கொண்டதாலேயே காந்தி வாழ்நாள் முழுக்க உண்மையே கடவுள் என்று உணர்ந்து இந்திய விடுதலைக்கு தனது வாழ்நாள் பங்கினை அளித்து மகாத்மாவாக உயர்ந்து உலகம் முழுக்க நூற்றாண்டு மனிதராகப் போற்றப்படுகிறார்.

சிறுவர்களுக்கென பஞ்சதந்திரக் கதைகள், தெனலி ராமன் கதைகள், அக்பர் பீர்பல் கதைகள், பரமார்த்தகுருவும் சீடர்களும் கதைகள், முல்லா கதைகள் போன்ற பல்வேறு வகையான போதனைகளை போகிற போக்கில் சொல்லும் பலவகையான கதைகள் தமிழில் குழந்தைகளுக்கென சொல்லப்பட்டுள்ளன. மேலும் இதிகாச கதாபாத்திரங்கள், வரலாற்றுத் தலைவர்கள் போன்றவையும் சிறுவர்களுக்கென சொல்லப்பட்டுள்ளன. காமிக்ஸ்கள் குழந்தைகளின் உள்ளத்தைக் கவருபவையாக
எப்போதும் இருந்து வருகின்றன. பலரும் பலவகைகளில் குழந்தைகளுக்கான கதைகளைத் தங்களின் பாணியில் சொல்லிவந்தனர். இருந்தும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய கதைகளுக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. இப்போது ஹாரி பாட்டர் தொடர் வரவில் ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்க குழந்தைகள் மூழ்க விரும்பும் காலக்கட்டத்தில் புது வகையான கதைகள் தமிழில், நம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

இதோ புதுவரவாக விழியன் என்னும் உமாநாத் குழந்தைகளுக்கான கதைசொல்லியாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ‘மா கடிகாரம்’ தாத்தாக்களின் தாத்தா கடிகாரம் கதை குழந்தைகள் மட்டுமல்ல நாம் அனைவருமே விரும்பி வாசிக்கும் அளவில் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.

தீமன் என்னும் சிறுவன் கதையின் நாயகன். வகுப்பில் ஆசிரியரிடம் திட்டு வாங்கும் மாணவனுக்குள் இருந்து பல்வேறு வகையான திறமைகள் வெளிப்படும் என்பதற்கு தீமன் ஒரு உதாரணம்.

தீமன் தனது தங்கையுடனும் பெற்றோருடனும் ஏலகிரி மலைக்குப் போகிறான். அங்கே அவன் சந்திக்கும் மனிதர்கள், அங்கிருந்து மாகடிகாரத்தைக் காண அவன் மேற்கொள்ளும் பயணம், அதன் மூலமாக அவன் உலகுக்கு எடுத்துக்கூறும் உண்மை இதுவே கதையின் முடிச்சு. முதல் பகுதியிலேயே தீமன் தந்தைக்காக அலமாரி செய்து கொடுப்பது சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் அவனுடைய பண்பு நலன்கள் சொல்லப்பட்டுக் கடைசிப் பகுதியில் அவனுடைய
செயல்திறனுக்கு அவன் தகுதியானவன் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கதை சுவாரஸ்யமாகத் தொடர்கிறது.

ஜப்பானிய ஒரிகாமி, ஏலகிரி மலை விபரங்கள், மரியானா அகழி, நீர்மூழ்கிக் கப்பல், மோனலோ ஆ தீவு என பல விபரங்கள் போகிறபோக்கில் சொல்லப்படுகின்றன. அனைத்தும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும், வேண்டுமென்று புகுத்தியதுபோலில்லாமலும், துருத்திக்கொண்டு தெரியாமலும் இயல்பாக சொல்லப்பட்டுள்ளது. விஞ்ஞானம் சார்ந்த உண்மைகளும், தைரியமாக தீமன் எடுக்கும் பகுத்தறிவு மிக்க முடிவும் கதைக்கு மேலும் வலுவுடன் மெருகு சேர்க்கின்றது.

மாகடிகாரம் புனைவுதான் என்றாலும் நாமும் தீமனுடன் உடன் செல்கிறோம். நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கிறோம்; மாகடிகாரம் இருக்கும் பகுதிக்குச் செல்லும் வரையிலும் பயணம் செல்கிறோம். அவனுடன் யூகலிப்டஸ் வாசனையை நுகர்கிறோம்; யானையைக் காப்பாற்றப் போகிறோம்; பயந்து சற்றே பின்வாங்குகிறோம்; ஹெர்குலஸை சந்திக்கிறோம்; கஞ்சியைக் குடிக்கிறோம்; மாகடிகாரம் நோக்கி பயணத்தைத் தொடர்கிறோம். சுனாமியைத் தோற்றுவிக்கும் கடிகாரத்தைக் கண்டு மலைத்து நிற்கிறோம். அங்கே உலகுக்கே தெரியாமல் கடிகாரத்தைப் பாதுகாக்க இருக்கும் வீரர்களைக் கண்டு வியக்கிறோம்; கடிகாரத்தில் தொங்கும் ஊசலுக்கு (பாறாங்கல்) கட்டிய கயிறு அதைத் தாங்கும் அளவில் இருக்க என்னவிதமான கயிறாக இருந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. கயிறு கனமானதாக இருந்தால்தானே அதன் எடையைத் தாங்க முடியும். அப்பேர்பட்ட கயிறு என்ன கயிறு என்று மட்டும் சொல்லியிருக்கலாம். மேலும், மலையில் சூரியோதய, அஸ்தமன காட்சிகளை இயக்கும் கடிகாரத்தின் உட்பகுதிக்கும் செல்கிறோம்; தீமனின் சாகசம் இங்கே சொல்லப்படும்போது அருகிருந்து ரசிக்கிறோம்.

மா கடிகாரத்தின் கடைசிப் பகுதி ரகசியம் என்பதாலும், கதையின் ஆசிரியர் விழியன் கதையின் முடிவில் ரகசியத்தை யாருக்கும் சொல்லிவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருப்பதாலும், அது குறித்து எதுவும் இங்கே சொல்லப்படப் போவதில்லை 🙂

மேலும் ஆசிரியர் கீழே இருக்கும் விஷயத்தில் மட்டும் அதிக கவனம் வைத்திருக்கவேண்டும்:

தீமன் யூகலிப்டஸ் வாசனையை நுகர்ந்து அந்தப் பக்கம் மரங்கள் இருக்கும் சாலைப் பகுதிக்குப் போய்வர விரும்புகிறான். அவனது தாயார் காலையில் போகலாம் என்கிறார். தந்தையார் அவன் சாலையில் தனியே காட்டுப்பாதையில் சென்று வர அனுமதி கொடுக்கிறார்.

தனியாகச் சென்றால்தான் இன்னும் நிறைய கற்றுக்கொள்வான் என நினைத்த அவனது தந்தை சென்று வர அனுமதி அளித்தார் ஆனால், இருட்டும் முன்னர் தங்குமிடம் வந்து சேருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

இதுவரையிலும் கதையின் போக்கு சரியாகவே இருக்கிறது. தீமன் ஐந்தாம் வகுப்பு மாணவன் என்பதால் பத்து வயது நிரம்பியவன் என்பதாலும், புது இடத்தில் பெற்றோர் அவனைத் தனியே அனுப்ப இன்னும் ஏதாவது அழுத்தமான காரணம் ஒரு வரியில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். முன்பே அந்தப் பாதையில் அப்பாவும் அவனும் சென்றதால் அப்பா அனுமதித்தார் போன்ற ஏதேனும் காரணம் சொல்லி வரிகள் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இதனை வாசித்தால் தனியே செல்லும் விருப்பு ஏற்படலாம். அப்போது ‘அஞ்சாமல் தனி வழியே செல்ல வேண்டாம் என்னும் கருத்தும் அவர்கள் மனதில் இருக்க வேண்டும்.

அடுத்து யானை அருகில் செல்வது. ஹெர்குலஸ் நல்லவர் என்பதால் பயம் இல்லை. தனியே செல்லும் குழந்தைகள் கடத்தப்படும் அபாயம் இருக்கும் சூழலில், குழந்தைக்கு நேர இருக்கும் அபாயம் குறித்த எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும்.

இது தவிர கதை எந்த இடத்திலும் எந்த சிக்கலுமின்றி சுவாரஸ்யமான நடையில் சொல்லப்பட்டுள்ளது. சில காட்சிகளை வாசித்துக்கடக்கும் போது இங்கே இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாமே என்னும் அவா மேலோங்குகிறது. இது விழியனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

புனைவையும் உண்மையும் எங்கே எந்த விதத்தில் கலந்திருக்கிறதென்று தெரியாதபடிக்கு கலந்தளித்த புனைவு என்னும் புது வடிவ உத்தியும், குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் அதே சமயம் பெரியோரும் ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் எழுதும் ஆற்றோட்ட நடையும் விழியனுக்கு
வாய்த்திருக்கிறது. மா கடிகாரம் சிறப்பாக வந்துள்ளது. மென்மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கதை கேளு கதை கேளு கடிகாரத்தின் கதை கேளு.

  1. நல்ல விரிவான   விவரங்களுடன் விமரிசனம்  மதுமிதா.  நீங்கள் சொல்லியிருக்கும் விதம் புத்தகம் படிக்க ஆவல் வருகிறது.சொல்லி இருப்பதால்   எல்லாவிதத்திலும் ஒரு ஜாக்கிரதை  உணர்வு இருக்கவேண்டும்  என்பதை மனதில் பதிவது போல சொல்லி இருக்கிறிர்கள்..வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *