தமிழ்த்தேனீ

“மனதால் எத்தனை பாவம் செஞ்சாலும் அது குற்றமாவதில்லை, ஆனால் அதைச் செயல் படுத்தும்போதோ  அல்லது வாயால்  சொல்லும்போதோ அது குற்றமாகிறது.”

“வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது”-

முப்பதாயிரம் ரூபாய் போட்டு அவரோட மகன் சங்கர் ஆசையாய் வாங்கிக் கொடுத்த விண்டோஸ் போன். திடீர்ன்னு காணாமப் போயிடுத்து

எங்க தேடியும் கிடைக்கலே   எப்பிடித்தான் காணாமப் போயிருக்கும் புரியலே.  எப்பவுமே எந்த ஒரு பொருளையும் எவ்வளவு ப்ரச்சனை இருந்தாலும் எவ்ளோ ஓய்ந்து போயிருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும்  அது அதுக்குரிய இடத்திலே வைக்கணும் னு எல்லாருக்கும் உபதேசம் செய்வார் சபேசன், அவரும் அப்படியே வைப்பார்

அப்படி இருக்கும்போது எப்பிடிக் காணாமப் போச்சுன்னே தெரியலே, கடைசியா  காத்தாலே  வாசற்க் கதவு வழியா வெளியே தெரிந்த அருமையான சாலையையும், மேகங்களையும்  சேர்த்து அவரோட விண்டோஸ் போன்லே புகைப்படம் எடுத்தார், அதுக்கப்புறம் கொண்டு வந்து பக்கத்திலே சோபாவிலே வெச்சிண்டு கம்ப்யூட்டர்லே வேலை செஞ்சுண்டு இருந்த்து நியாபகத்துக்கு வந்துது.

சோபாவை நகர்த்திப் பார்த்தாச்சு, அங்கே இல்லே, வீட்டுலே எல்லா இட்த்திலேயும் தேடிப் பாத்தாச்சு ,கிடைக்கலே. அன்னிக்கு சாயங்காலம் கணேசன் வந்து அவர் பக்கத்திலே உக்காந்து பேசிண்டு இருந்த்து நினைவுக்கு வந்துது, மனதிலே ஒரு எண்ணம் ஒரு வேளை  போன் நல்லா இருக்கேன்னு கணேசன் தூக்கிண்டு போயிட்டானோ அப்பிடீன்னு.  தலையை சிலுப்பிண்டு  சீ சீ அப்பிடியெல்லாம் நினைக்கக் கூடாது அப்பிடீன்னு மனசுக்கு கட்டளை போட்டாலும், மனசு என்னவோ கட்டுப்பாடில்லாமே எதை எதையோ போட்டுக் குழப்பிண்டே இருந்துது.

மனசாலே எவ்ளோ பாவம் செஞ்சாலும் அது குத்தமாறது இல்லே, ஆனா அதைச் செயல் படுத்தும்போதோ அல்லது வாயாலே  சொல்லும்போதோ அது குத்தமாயிடறது. தீயினால் சுட்ட புண்ணுன்னு வள்ளுவர் சொல்றா மாதிரி. நல்ல வேளையா வாய் திறந்து ஒரு வேளை கணேசன் எடுத்துண்டு போயிட்டானோன்னு சொல்லலே.

நான் எதையும் எல்லா நேரத்திலேயும் சரியா செய்யணும்னு நினைக்கறவன் எனக்கு இப்பிடி ஆயிப் போச்சேன்னு மனசு கெடந்து தவிச்சிண்டு இருக்கு,

ஆச்சு ஒரு வாரமா எல்லா நேரத்திலேயும் அந்த போன் நெனப்புதான்,

என்னாலே ஜீரணிக்கவே முடியலை அப்பிடீன்னு வாயை விட்டே புலம்பினார் சபேசன்.

அப்பா எவ்ளோதான் ஜாக்கிறதையா இருந்தாலும் இது மாதிரி சிலது தொலஞ்சு போறது சகஜம்தாம்ப்பா , மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க, நான் வேற புது போன் , அட்வான்ஸ் மாடல் வாங்கித் தரேன், என்றான்  சங்கர்.

ஆயிரம்தான் வேற போன் வாங்கினாலும் முப்பதாயிரம் ரூபாய் போச்சேன்னு ஒரு நெனைப்பு, அது மட்டுமில்லே எப்பவும் நாய்க் குட்டி மாதிரி ஆசையாய் அவர் கூடவே வெச்சிண்டு இருந்த போன்.

யாருக்காவது   ஏதாவது பொருள் காணாமப் போனா  சமயவரத்து மாரியம்மனிடமும்   அரைக்காசு அம்மனிடமும் வேண்டிக் கொள்வது அவர் வழக்கம், அதுக்கேத்தா மாதிரி அவர் வேண்டிண்ட உடனே அந்தப் பொருள் கிடைச்சுடும்,

அது மாதிரி வேண்டிண்டும் ஆச்சு ஆனாக் கெடைக்கலே, நிச்சயமா தெரியும் வெளியிலே எங்கேயும் தொலைக்கலே, அவரோட எண்ணுக்கு போன் செஞ்சும் பாத்தாச்சு  கண்டு பிடிக்க முடியலே, கூகிள் சர்ச்சிலே  என் போனைக் கண்டு பிடின்னு கட்டளை போட்டு  அதாலேயும்  கண்டு பிடிக்க முடியலே. தொலைபேசி இயக்கத்தில் இல்லைன்னு சொல்றது.

நான் இவ்ளோ கஷ்டப்பட்டுண்டு இருக்கேன்  ஒரு வார்த்தை அதைப் பத்தி பேசறாளா பாரு இவ, மனதுக்குள் பொறுமினார் சபேசன்.

அவ பாட்டுக்கு அவங்க கூப்புட்டு இருக்காங்க இவங்க கூப்பிட்டு இருக்காங்கன்னு நவராத்திரி கொலுவுக்கு போயிட்டு வந்துண்டே இருக்கான்னு  என்று அவருடைய மனைவி காமாக்ஷியை பத்தி  நெனைச்சு கோவம் வந்துது.

ஒரு வாரம் ஆச்சு சரி இனிமே கிடைக்காதுன்னு முடிவு செஞ்சாச்சு, படுக்கும் போது மணி பன்னிரன்டு, நல்ல தூக்கம், காலையிலே தூக்கமும் விழிப்பும் கலந்த ஒரு நிலையிலே  மனசுக்குள்ளே ஒரு நெனைப்பு இன்னிக்கு நம்மோட போன் கிடைச்சாலும் கிடைக்கும்னு , நெனைச்சுண்டே எழுந்து  வழக்கம் போல  ஸ்வாமி படத்திலே  கண்முழிச்சு  கையிக் கூப்பி விட்டு உள்ளங்கையை ஒரு முறை பார்த்துவிட்டு  திரும்பினார் சபேசன், பக்கத்தில் இருந்த  மேசையில் அவருடைய விண்டோஸ் போன் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது.

ஒரு கணம் கனவா  நினைவான்னு   புரியாமே மெதுவா கையை நீட்டி அதைத் தொட்டுப் பார்த்தார். அட உண்மையிலேயே அவரோட விண்டோஸ் போன்தான். மகிழ்ச்சியாய் எழுந்தார். அவர் மனைவி காமாக்ஷி கீழே நீங்க உக்காந்திருந்த சோபாவை நகத்திப் பார்த்தேன், அதோட அடியிலேயே இருந்துது, நீங்க எழுந்தவுடனே உங்களுக்கு சந்தோஷமா இருக்கட்டும்னுதான் உங்க பக்கத்திலே  வெச்சேன் என்றாள்.

அப்ப்டியே ஓடிப்போய் காமாக்ஷியைக் கட்டிக் கொண்டு  ஒரு முத்தம் கொடுத்தார்  சபேசன்.   தலையைக் குனிந்து வெட்கப்பட்டாள் காமாக்ஷி,

ரொம்பத் தேன்க்ஸ் காமாக்ஷி என்றார் மன நெகிழ்வுடன் சபேசன்.

ஓ மௌனமா இருந்தாலும் இவ மனசிலேயும் காணாமப் போன நம்மோட போன் உறுத்திண்டேதா இருந்திருக்குன்னு உணர்ந்து இன்னொரு முறை கட்டிக் கொண்டார் காமாக்ஷியை சபேசன்.

எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியலே காமாக்ஷி நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு நான் வாங்கித் தரேன் என்றார் சபேசன்

எனக்கு ஒண்ணும் வேணாம் நீங்க சந்தோஷமா இருக்கீங்களே அதுவே போதும்னா காமாக்ஷி.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த சபேசன் இவளுக்கு ஒரு நல்ல பட்டுப் புடவையா வாங்கித் தரணும்ன்னு  நெனைச்சிண்டார்.

இல்லே காமாக்ஷி உனக்கு நான் ஏதாவது ப்ரசன்ட் பண்றேன் அப்பின்னார்.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று வாயால் சொன்னாலும்

காமாக்ஷியின் மனதில் அவர் ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுப்பர் என்று தோன்றியது.

விண்டோஸ் போன் திரும்பக் கிடைச்சது மனதுக்கு சந்தோஷமாக இருந்தாலும் மனதுக்குள் அவர் மகன்  கவலைப்படாதீங்கப்பா நான்  அட்வாண்ச் மாடல் போன் வாங்கித் தரேன்ன்னு சொன்னது நிழலாடியது.

ஒரு வேளை இந்த போன் கிடைக்காம இருந்திருந்தா ஒரு அட்வான்ஸ் போன் வாங்கி இருக்கலாமோ அப்பிடீன்னு ஒரு நெனைப்பு மனதில் ஓடியது சபேசனுக்கு,

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர், அங்கே மனம் பேசிக்கொண்டே இருந்தது,  தாம்பத்ய ரகசியம் புரிந்து வாழ்வின் மேன்மையை உணர்த்தியது  அவர்கள் பார்வை.

 சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனக்குரங்கு!…

  1. அன்புள்ள தமிழ்த்தேனீ ஐயா!
    இன்றுதான் தங்கள் ‘மனக்குரங்கு!…’ சிறுகதையைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. மனத்தின் போக்கினை மெச்சும் வகையில் படம் பிடித்துக்காட்டிவிட்டீர்கள். கையைவிட்டுப் போன ஒரு பொருள் திரும்பக் கிடைக்கும் வரைதான் ஏக்கம் எல்லாம். திரும்பச் சிக்கிவிட்டால் மனம் வேறுமாதிரி நினைக்க விழையும் என்பதனை அற்புதமாகக் கூறிவிட்டீர்கள்.
    நானும் கைபேசியைத் தொலைத்துத் தவிப்பதில் ஒரு expert.
    தங்களது ’அஷ்டோத்திரசத’ படைப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
    வணக்கத்துடன்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *