பட்டினத்தடிகளின் பாடல்கள் – 9ம் பகுதி

0

தஞ்சை வெ.கோபாலன்

 

பட்டினத்தார் பாடல்கள் – பகுதி- 9

 

நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி

ஓமங்கள், தர்ப்பணஞ் சந்தி செப மந்த்ர யோகநிலை

நாமங்கள், சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே.   1.

 

நித்ய கர்மாணுஷ்டானங்கள் என்று சொல்லி, ஸ்நான, பான, போஜன விதிமுறைகளைச் சொல்லி, நேம நிஷ்டையோடு வாழ்வதாகப் பிறர் உணரும்படி காட்டிக் கொண்டு, தினசரி வேதபாராயணம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு, ஆகம சாஸ்திரம், நியாயம் போன்ற வழிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, மாதாந்தர, அமாவாசை திதி தர்ப்பணங்கள் செய்து கொண்டு, காலை, பகல், சந்தி ஜெபம் செய்து கொண்டு, மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டு, சகஸ்ரநாமம், அஷ்டோத்தரம் என்று இறைவன் புகழைப் பாடிக் கொண்டு, நெற்றியில் சந்தனமென்ன, திருநீறு என்ன என்று பளிச்சென்று பிறர் பார்த்து அதிசயிக்க அணிந்து கொண்டு ஒவ்வொரு ஜாமத்திலும் ஆத்மார்த்தமில்லாமல் நாம் செய்யும் பூசனைகள் அனைத்தும் போலித்தனமே.

 

நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்டிலை நன்னெஞ்சமே

ஏன் இப்படி கெட்டு உழலுகின்றாய் இனி ஏதுமிலா

வானத்தின் மீனுக்கு வன்றூண்டிலிட்ட வகையதுபோல்

போனத்தை மீள நினைக்கினையே என்ன புத்தியிதே.  2.

 

எத்தனை முறை உண்மைகளை எடுத்துரைத்தாலும் ஏ மனமே! நீ கேட்பதாயில்லை. ஏன் இப்படி கெட்டு அலைகிறாய்? வானத்தில் கணக்கின்றிக் கொட்டிக் கிடக்கும் விண்மீன்களை (நட்சத்திரங்களை) பிடித்து விடவேண்டுமென்று தூண்டிலைப் போடுவதைப் போல் நடந்ததையே மீண்டும் மீண்டும் நினைத்துருகி வருந்திடுகிறாயே, என்ன புத்தியப்பா இது.

 

(மகாகவி பாரதியின் இந்தப் பாடலை நினைவில் கொள்ளுங்கள்:–

 

“சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுறை இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!

தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா!”)

 

இன்னுமொரு பாடலையும் படியுங்கள்:–

 

“சென்றதைக் கருதார், நாளைச் சேர்வதை நினையார் கண்முன்

நின்றதைப் புசிப்பார் வெய்யினிலவாய் விண் விழுது வீழ்ந்து

பொன்றின சவம் வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார்,

நன்று தீதென்னார் சாட்சி நடுவான் ஜீவன்முத்தர்”

 

அஞ்சக்கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம்

வஞ்சப் புலக்கட்டை வேரற வெட்டி வளங்கள் செய்து

விஞ்சத் திருத்திச் சதாசிவ மென்கின்ற வித்தையிட்டுப்

புஞ்சக்களை பறித்தேன் வளர்த்தேன் சிவபோதத்தையே. 3.

 

‘அஞ்சக்கரம்’ எனும் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்துக் கோடாலியைக் கொண்டு ஐம்புலன்கள் எனும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றாலும், அவை உணரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐவகையாலும் உணருகின்ற போகங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எடுத்துவிட்டு, மனத்தை வளம்பெறச் செய்து, உரமிட்டு தயார் செய்து அதில் சதாசிவம் எனும் மந்திர வித்தை விதைத்துப் பின் விளையும் களைகளை நீக்கி மனதில் சிவானந்தப் பயிரை நன்கு வளர்த்தேன்.

 

தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்

நீயாரு நானார் எனப் பகர்வார் அந்த நேரத்திலே

நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு

பாயாரு நீயும் அல்லாற் பின்னை ஏது நட்பாம் உடலே.     4.

 

உன்னைப் பெற்ற தாயாரும், சுற்றத்தாரும், தாலிகட்டி மணம் செய்த மனைவியரும் இவர்கள் எல்லாம், நீ உன் வாழ்வின் இறுதி கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இனி வேறு வழியில்லை நீ இவ்வுலக வாழ்வை நீத்திடப் போகிறாய் எனத் தெரிந்ததும், நீ யார், நான் யார் என்று விரக்தி நிலைக்கு வந்து விடுவார்கள். அந்த நேரம் பார்த்து நோய்கள் இருக்கின்றனவே, அவை உன்னை வந்து பற்றிக் கொண்டுவிடும். அந்த நோயும், நீ படுத்துக் கிடக்கும் பாயும் அன்றி பின் உனக்கும் உன் உடலுக்கும் யார் உறவு சொல்.

 

ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அருங்கிருமி

தோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டி விட்டாற்

பேயும் நடனமிடும் கடமாமென்று பேசுவதை

நீயும் அறிந்திலையோ பொருள் தேட நினைந்தனையே.     5.

 

ஏ நெஞ்சமே! இந்த உடலைப் பற்றி நன்றாக ஆய்ந்து உணர்ந்து பார்! உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஏராளமான கிருமிகள் மலிந்து கிடக்கின்றன; உடலோ கழிவுகளைத் தாங்கிய பண்டம்; இந்த உடலில் ஊசலாடும் உயிர்மட்டும் இவ்வுடலை விட்டு நீங்கி விட்டால் இதைக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவர். அந்த இடம் பேய்கள் ஆடுகின்ற மேடை என்று மக்கள் பேசுவதை நீ கேட்டதில்லையோ? அப்படிப்பட்ட இந்த உடலை வளர்க்க, இதனை வாசனை திரவியங்களிட்டு பாதுகாக்கப் பொருள் தேட நினைக்கின்றனையே, அது சரியா?

 

பூணும் பணிக்கல்ல, பொன்னுக்குத் தானல்ல, பூமிதனைக்

காணும் படிக்கல்ல, மங்கையர்க்கு அல்ல, நற் காட்சிக்கல்ல,

சேணும் கடந்த சிவனடிக்கல்ல என் சிந்தை கெட்டுச்

சாணும் வளர்க்க அடியேன் படும் துயர் சற்றல்லவே.   6.

 

என் உடலைப் பேணி பாதுகாப்பது எதற்காகத் தெரியுமா? பொன்னும், மணியுமாக இழைத்த அழகிய ஆபரணங்களை அணிந்து அலங்காரம் செய்து கொள்வதற்காக அல்ல; பொன்னும் பொருளும் தேடி செல்வச் சீமானாக விளங்குதற்கும் அல்ல; ஏராளமான நிலம் நீச்சை வாங்கிச் சேர்ப்பதற்காகவும் அல்ல, பெண்களுக்காகவும் அல்ல; ஊர் சுற்றிப் பார்த்து இயற்கை வளங்களைக் கண்டு களிக்கவும் அல்ல; அண்டங்களைக் கடந்த சிவபெருமானின் சேவடிகளைத் துதித்து வாழ்ந்திடவும் அல்ல; புத்தி கெட்டுப் போய் என்னுடைய ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காகவன்றோ நான் இத்தனை கஷ்டங்களையும் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

 

வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவர்க்கு

எட்டாத புட்பம், இறையாத தீர்த்தம் இனி முடிந்து

கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே

முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே.    7.

 

செப்புத் தகட்டில் பதிந்து வைக்காத மந்திரித்த சக்கரங்கள், வாயினால் உச்சரிக்காத மந்திரங்கள், எவர்க்கும் கிட்டாத மலர்கள், பிறர்க்கு அர்க்கியம் தராத புனித நீர்; துணியில் சுற்றிப் பெட்டியில் வைத்து மூடாத சிவலிங்க விக்ரகம்; நினைத்த காரியத்தை செய்து முடிக்காத நெஞ்சம் என்று இத்தகு நிலையில் உள்ள நிலை எதுவோ அதுவே எனது குருநாதர் எனக்கு உபதேசித்த மந்திரம்.

 

எருமுட்டை பிட்கின் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார்

கருமுட்டை புக்குக் கழல் அகன்றாய் கன துக்கமதாய்ப்

பெருமுட்டுப் பட்டவர் போல அழும் பேதையீர்! பேத்துகிறீர்

ஒருமுட்டும் வீட்டு மாநாமம் என்றைக்கும் ஓதுமினே.  8.

 

அன்பர்களே! ஒரு சொல் கேளீர்! அன்னையின் கருவில் உதித்து, அங்கு வசித்து வெளிவந்து வந்த இடத்தில் ஏராளமான துன்பங்களைப் பட்டு துக்கப்பட்டு வருந்தி அழும் பேதைகளே, நீங்கள் கலங்கி மனம் வருந்துவதால் என்ன பயன்? இந்த உடல் அழியப் போவது. அதை சிந்தை செய்வதை விட்டு மனம் தேறுவீர். எருமுட்டை எனப்படும் விராட்டி உதிர்ந்து பொலபொலவென்று கொட்டும் நிலைகண்டு யார்தான் அழுது புலம்புவார். இவ்வுடல் இருக்கும் வரைக்கும் இறைவனின் திருநாமத்தை எண்ணி வழிபட்டு மகிழ்ந்து இருப்பாயாக.

 

மையாடு கண்ணியும், மைந்தரும் வாழ்வு மனையும் செந்தீ

ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துளே

மெய்யாயிருந்து நாட்செல நாட்செல வெட்ட வெறும்

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.     9.

 

உடல் செந்தீ போன்ற ஜொலிப்போடும், மாலை நேர செவ்வானம் போன்று தோற்றமளிக்கும் சிவபெருமானே! மாயையாய் உருவான இந்த பூவுலகில் மாயை வடிவில் இங்கிருக்கும் அனைத்துமே உண்மை என நம்பும்படியாக, மாடு, மனை, வீடு, இல்லாள், பிள்ளை என்று பல வடிவில் தோற்றமளித்து, பின்னர் நாளாக ஆக மெல்ல அனைத்துமே பொய்யாய், இல்லையெனும்படியாகவும், கனவு போலவும் மெல்லக் கரைந்து போயிற்றே.

 

ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்

போயாகிலும் உண்மையைத் தெரிந்தாய் இல்லை, பூதலத்தில்

வேயார்ந்த தோளியர் காம விகாரத்தில் வீழ்ந்து அழுந்தி

பேயாய் விழிக்கின்றனை மனமே என்ன பித்துனக்கே.  10.

 

ஏ மனமே! பற்பல கலைகளை ஆய்ந்து நன்கு தேறிய தூய்மையான தவசிகளிடம் சென்றாவது வாழ்வின் உண்மையை அறிந்து கொள்ளவில்லை, அதை விடுத்து இளம் மூங்கிலைப் போன்ற தோளை உடைய அழகுப் பெண்களின் பால் உள்ள ஈர்ப்பால் விழுந்து, அதிலேயே மூழ்கி பேய்போல விழிக்கின்றாயே. உனக்கு என்ன பைத்தியமா?

 

(மேலும் வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *