பவள சங்கரி

என் பார்வையில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள்

 நூல் பெயர்: இது நிகழாதிருந்திருக்கலாம்

ஆசிரியர் : ஜி. தமிழ்ச் செல்வி

பக்கங்கள் : 88

விலை : ரூ. 80

வெளியீடு : தாரிணி பதிப்பகம்

4 ஏ – ரம்யா பிளாட்ஸ்

32 – 79 காந்தி நகர் 4வது மெயின் ரோடு

அடையார்

சென்னை – 600020

Idhu Nigazhaadhu irundhirukkalam -1

ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல

அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ

கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்

கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ

கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள்

கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே

ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை

ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே ”

கவிஞர் வாலியின் உள்ளம் உருக்கும் உன்னத காதல் கவிதை வரிகள்! கண்டதும் காதல், காணாமலே காதல், கண்டும் காணாத காதல், காத்திருப்பில் சுகம் காணும் சோகமான காதல், தோல்வியிலும் துவளாமல் துள்ளி எழும் காதல், பார்த்திருக்க பறந்து செல்லும் கைக்கெட்டா காதல் என்று காதலில் பலவகைகள் அல்லது காதலின் பல முகங்கள் கவிஞர்களின் கற்பனை ஊற்றுக்கு ஒரு வரம்.

படைப்புகள் ஒரு படைப்பாளியுடன் வாழ்ந்து, பயணித்து, உள்ளுக்குள் ஊடுறுவி, எதைஎதையோத் தேடி, எதையோ காணாததைக் கண்டுபிடித்து,  பிடித்ததை  பூப்போல மென்மையாக அள்ளி அணைத்து சேதாரம் இல்லாமல், தேன்மையிட்டு, வண்ணக் கலவையும், வட்டெழுத்தும் கொண்டு தலைவாழையிலையிட்டுப் பரிமாறிய விருந்தாயின், சுகமாகச் சுவைக்கத் தடையேது?  வார்த்தைகள் கடைவாயில் சிக்கும் கடினமான கற்கண்டாயிராமல், எளிமையாக நுண்மாண் நுழைபுலத்தினுள் புகுந்த கடியாய் இருந்தால் கசக்குமா என்ன?  கண்டதும் பற்றிக் கொள்ளும் மெல்லிய சொற்கள் சுவைகூட்டுவதும் இயல்புதானே! இப்படித்தான் கவிஞர் தமிழ்ச் செல்வியின் இது நிகழாதிருந்திருக்கலாம் நம் தூக்கத்தைத்  தொலைத்துவிடுகிறது! துக்கத்தையும் கூடத்தான்…

என் காதல் உயிர்

மலர்ந்தே இருக்க

பதிவிடுகிறேன்

என் எழுத்து கல்வெட்டுகளை

என்று தன் நிலைத்த கனவை, கலையாத கனவுகள் என்று தலைப்பிட்டு ஆரம்பிக்கிறார்.

‘காதல்’ என்பதே அந்த முதற் பார்வையில் கருவாகி,  முத்தாகி, உள்ளேயே உருண்டு, திரண்டு ஒளிவடிவாய் பிரகாசிப்பதுதானே.  ‘விழிகள் தழுவிய சிலிர்ப்பின்’ முடிவில்

 உன் கவனத்தை

என் பக்கம் ஈர்க்கவே

என் கால் கொலுசுகள்

சப்திக்கிறது.

அன்புக் காதலின் சின்னமாக கொலுவிருக்கும் இந்தக் கொலுசின் ஓசையால் ஈர்க்கப்படாத காதலன் இந்தப் புவியில் ஏது? அதற்கு இக்கவிஞர் மட்டும் விதிவிலக்கா என்ன?

தென்றலினும் மென்மையாக

உன் தீண்டல்

எங்கோ பார்த்தபடி

உரசிச் சென்றாய் என்னை!

முதல் தீண்டலின் சுகானுபவத்தை மூடி மறைக்க வல்லார் யார்?  பார்த்தும் பார்க்காதது போன்றும், தொட்டும் தொடாமலும் உரசும் கள்ளத்தனம் காதலின் இயல்பு  அல்லவா!

விடியலும் விலகலும்

ஒருசேர நிகழ

நீ விலகாமல்

கலைந்தது உறக்கத்தில்

முத்த கனவு

முதல் முத்தம் – கவிஞரின் பெருமூச்சு நம்மையும் சூடேற்றிச் செல்கிறது. காதல் என்றாலே இந்த மெல்லிய சோகம் தானே சுகத்தின் உச்சம்!

உன் கரங்களின் பிடி

தந்த இறுக்கத்தில் தான்

உன் ஆழ்ந்த காதலை

பரிமாறினாய்

முதல் அணைப்பின் சுகம் முத்தாய்ப்பாய் நிலைத்திருக்கும் மாயம், கவிஞரின் வார்த்தையில் காவியமாய் ஆகிறது.

நீ என்னருகில் இருப்பதே

உலகின் மகிழ்வு எல்லையாகிறது

விலகாதே எப்பொழுதும்

ஊடலும், கூடலும் காதலுக்குப் பாடமானாலும், அதட்டலும், அதிகாரமும்கூட இனிமையாகத்தான் இருக்கிறது கவிஞரே!

உன் மடி என் மஞ்சமாக

கற்பனையில் திளைக்கிறது

காதல் மனம்

காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்றாலும்,

காதலின் உச்சம்

நம் மன நிர்வாணம் சமர்ப்பித்தல்

என்றே சரசமாடுகிறது

நொடிப் பொழுதும்

இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும் அந்த ‘சும்மா’வும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? ஆம் வாசகரை பலவாக சிந்திக்க வைக்கிறதே.. இதுதானே இந்த கவிதையின் வெற்றி!

 

பாதுகாப்பின் உச்சமென

மிச்சம் இல்லாமல்

உறுதி சொல்கிறது

பிணைந்த கரங்கள்

உயிரோட்டமுள்ள அழகான சொல்லாடல்.

மௌனகூட்டிற்குள்

எனக்காக மட்டுமே

உனக்காக எழுதப்படும்

மடல் வடிவிது.

ஒவ்வொரு எழுத்தும்

அரும்புகளில் மலர்களாக

குவிந்து விரிவதில்

எனக்கான உயிர்ப்பின்

நெகிழ்ச்சி விரிந்து போகிறது.

விரிந்து போகும் நெகிழ்ச்சியின் உயிர்ப்பு கவிஞரின் ஒவ்வொரு வார்த்தையிலும் மலர்ந்து மணம் பரப்புகிறது.

உனை காணும் அந்த

கணம் ஒன்றில்

என் தேடுதல் முடிந்து

என் வாழ்வும்

முற்று பெறும்.

காத்திருப்பின் சுகமான ரணங்களை சுவையாக விளக்கும் கவிமொழிகள்.

நாணத்தில் தலைகவிழ

உன் முகம் மறைந்த நொடியில்

என்னைப் பற்றியதான

திட்டல் தொடர்கிறது

எனக்குள்ளே.

யதார்த்தத்தின் சுகமான சுமைகளின் நீட்சி.

நினைத்த மாத்திரத்தில்

உன் பிம்பத்தை

வடித்து  விடுகிறது மனம்

 

இந்த மனிதர்களுக்குத்

தெரியவில்லை

காதல் இல்லை

என்றால் சுரப்பியும்

நீர்த்துப் போகும் என்று.

கவிஞரின் கற்பனைக் குதிரை வெகு லாவகமாக வானில் சிறகடித்துப் பறக்கும் அற்புதக் காட்சி!

எண்ணங்களற்ற மனவெளியில்

இறக்கைகள் நீட்டி

பறப்பதான அனுபவம் தான்

நம் தனிமைத் தகர்ப்பு.

தனிமையின் தகர்ப்பு இனிமையின் வார்ப்பான வார்த்தை முத்துக்கள்!

சுமையென்று பாராமல்

சுமப்பதில் தான்

ஆழந்த அன்பு

ஆட்சி செங்கோல்

ஆகிறது.

பசுமை மலர்களின்

ஒவ்வாத  அணிவகுப்பும்

இசைவான இணைவிற்காக

இலகுவாக இமைக்கிறது

உயிர்களின் லீலைகள்.

கற்பனை வளமிக்க அழகான சொற்குவியல்கள்.

மௌனங்களும் பேசுகிறது

மந்திரமாக உள்ளுணர்வை

வழியாக்கி

வாசகரையும் தொத்திக்கொள்ளும் கவிஞரின் அனுபவ மொழிகள்.

தன் பொம்மையை

பத்திரப்படுத்தும்

குழந்தையைப் போல

என்னை பாதுகாப்பதிலேயே

உன் வாழ்வின் கணங்கள்

கடந்து போகிறது.

பெண்மையின் பரிதவிப்பை, எதிர்பார்ப்பை அழகாக எதிரொலிக்கச் செய்யும் சொல்லாடல்கள்.

விழித்து நிற்கும்

கவனத்தின் உயிர்ப்பில்

காதல் மட்டும்

காதலாக மட்டும்

வாழ்தல் மட்டும் வாழ்வின்

அர்த்தம்

காதல் மட்டுமே வாழ்க்கை, வாழ்க்கையெல்லாம் காதல்மயம் என்று வாழ்வின் அர்த்தமே காதலில்தான் உள்ளது என்பதை  இதைவிட அழுத்தமாகக் கூற இயலாது.

உணர்வின் உச்சம்

அழுகையின் மிச்சம்

கசப்பில் காழ்ப்பும்

இனிப்பிி்ற்குள் உவர்ப்புமாக

உருவகக் கூட்டமைப்பில்

நடிகையாகிறது  மனம்

பிரிவுத் துயரின் உச்சம், அக்கக்கூவின் சோக கீதங்கள்!

உன் தோளில் சாய்ந்துறங்கிய போதும்

காய்ச்சலில் சுருண்டழுத போதும்

உன் மடியில் துவண்டு கிடந்தபோதும்

தாயின் ஸ்பரிசத்தை உன்னிடம்

உணர்ந்தேன்

 உண்மையான காதலின் உச்சம்,  தாய்மைப் பாசத்தைப் பறைசாற்றும்  இன்பம்தான் அல்லவா? அதனை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் சொற்கள்.

உன்னோடு கழித்த நொடி ஏதும்

உருக்குலையவில்லை  நினைவடுக்குகளில்

பசுமை  கோர்த்து சிரிக்கிறது

உயிர்தன்மையின் சிநேகிதத்தில்

கலையாத கனவுகள்,  முதல் பார்வை,  முதல் தீண்டல், முதல் முத்தம், முதல் அணைப்பு,  விலகாதே  எப்போதும்.. நொடிப் பொழுதும், இணைந்திறுக , பற்றுதல், காதல் கருத்தரிப்பு, உன் நினைவுகள், புறக்கணிப்பு, தனிமைத் தகர்ப்பு, நமக்கான ஊடல், கொந்தளிப்பு,   என  தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதை சொல்கிறது. மொத்தத்தில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள் நாற்பதும் நம்மை காதல் உலகிற்குள் இலவசமாய் இட்டுச் செல்கிறது!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இது நிகழாதிருந்திருக்கலாம்

  1. அன்பு நிறைந்த பவளா,

    தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீட்டு அறிவிப்பை வல்லமையில் வெகு சிறப்பாகப் படத்துடன் வடித்துள்ளீர்கள். 

    பாராட்டுகள்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

    ++++++++++++++++++++

  2. மென்மை என்பது பெண்களுடன் கூடியது. காதலும் மென்மை. இந்த பெண் கவிஞர் எழுதிய காதல் கவிதைகளில் இந்த இரண்டு மென்மையின் கலப்பும் உச்சமாக உள்ளது.
    தேர்ந்தெடுத்த வரிகளில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாள்முனை கூர்போல் வார்த்தைகளில் மென்மையின் பொறி. பனித்துளியின் ஜில்லிப்பு.

    அவரது எழுதுகோலில் நிறைந்திருப்பதும் மென்மை எனும் மையோ என தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *