பட்டினத்தடிகளின் பாடல்கள் – 14ம் பகுதி

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

உடைக்கை யொருக்கி உயிரை அடைத்து வைத்த

சடக்கைச் சதமென்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடைக்கைத் தகர்த்தே உயிரை யமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே. 1.

புலால் உடலைக் காற்றால் நிரப்பி மூடி, அதில் உயிரை அடைத்து இந்த உடலை நிரந்தரமானது என்று எண்ணி இறுமாப்போடு அதில் குடியிருந்தாய்; பிறகு எமதர்மன் வந்து இந்த உடலில் நிரம்பியிருந்த உயிரைப் பறித்துக் கொண்டு போகின்ற காலத்தில், நீ அதுநாள் வரை சேர்த்து மறைந்து வைத்திருந்த பொருட்களும், செல்வங்களும் உன்கூட வராது என்பது உனக்கும் தெரியும் அல்லவா, அப்போது என்ன செய்வாய்?

தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றியிருக்கும் வினை சூழந்தனையே நெஞ்சமே. 2.

ஏ மனமே! சொல்லச் சொல்லத் தெவிட்டாத தேனைப் போன்றது சிவனுடைய ஐந்தெழுத்து மந்திரம். அப்படிப்பட்ட தித்திக்கும் தெவிட்டாத தேனை ருசிக்காமல், தேவர்கள் அருந்தும் அமிழ்தத்தையொத்த *முப்பாழாம் அதிமுக்கிய தத்துவங்களை வணங்கிப் போற்றிப் புகழாமலும் தலை வணங்காமலும், எமன் வந்து உயிரைத் தான் பாசக்கயிற்றால் கட்டிப் பற்றி இழுக்கும்போது உன்னைச் சுற்றியிருக்கும் தீவினைகள் எனும் காட்டில் அழுந்திக் கிடக்கின்றனையே.

(*முப்பாழாவன மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் ஆகியன. போதப்பாழ் என்பது ஆன்ம அறிவு அகல விளங்குதல், உபசாந்த நிலையில் பரவெளியில் இருத்தல் உபசாந்தப் பாழ். மாயைப் பாழில் தத்துவங்கள் தூய்மை அடையும்; போதப் பாழில் ஆன்மா தூய்மை அடையும்; காரிய காரண உபாதைகள் நீங்குவதால் உபசாந்தம் உண்டாகும் என்கிறது “திருமந்திரம்”. ‘தத்வமசி’ நீ அதுவாகிறாய் எனும் வாக்கின் பொருளை விளக்கும் விதத்தில் அமைந்த கருத்து. தத்+துவம்+அசி இவை ‘இரண்டு அல்லாதது” அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறானவை அல்ல என்பது. இதன் பொருள் “நீ அதுவாகிறாய்”7

மாயப்பாழும், சீவப்பாழும், உபசாந்தப் பாழும் நிலைபெற்ற பரனின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்கிறது. சிவசக்தியான அருளில் ஜீவன் ஓங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே ‘தத்வமசி’ எனும் வாக்கியத்தின் முடிவாகும்.)

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாயுற்ற முலை மாதவர் வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக் கிரைத்தோமே. 3.

ஒப்புயர்வற்ற எழுத்து பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம்; எட்டு அட்சரம் கொண்டது அஷ்டாட்சரம்; ஐம்பத்தோரு அட்சரமாகவும், சக்தியின் பீஜாக்ஷரமாகவும் விரிந்து பரவியுள்ள நம் பரமேஸ்வரனைத் துதித்துப் போற்றாமல் வஞ்சக மனமும், மயக்கும் மார்பகமும் கொண்ட பெண்களின் மாயா மோக வலையில் அகப்பட்டு அவர்களிடம் அடிமைப்பட்டுக் கீழ்ப்படிந்து மன்றாடி நின்று காலத்தை வீணடித்தோமே.

(அஞ்செழுத்து என்பது “சிவாயநம” எனும் மந்திரம். எட்டெழுத்து என்பது “ஓம்; ஆம்; அவ்வும்’ என்பதாகும், இதுவும் சிவாயநம: என்பதாகும். ஐம்பத்தோரு அட்சரம் என்பதை பிஞ்செழுத்து, சத்தியாக்ஷரமாகிய வகரம் ஆகியவைகளை குரு மூலமாக உபதேசம் பெறுதல் வேண்டும் என்கின்றனர் பெரியோர்)

அக்கறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிகநம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென எண்ணினையே நெஞ்சமே. 4.

ஓ என் நெஞ்சே! சிவனுக்கே உரிய ருத்திராக்ஷ மாலையும், கொன்றை மலர்களையும், தும்பைப் பூக்களையும், பிறைச் சந்திரனையும் தன் முடியில் சூடிய எம்பெருமான் சொக்கநாதரின் திருவடிகளே சரணமென்று விழுந்து வணங்காமல், நீ இன்னாள் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்? நான் எனது எனும் ஆணவ மலத்தோடு கூடிய உறவு முறையில் என் மக்கள், என் மனைவி, என் சுற்றம் என்று இந்த வாழ்வு என்னவோ நிரந்தரமானது என்று நம்பிக்கொண்டு இந்த உறவுகளோடு எப்போதும் இப்படியே மகிழ்ச்சியோடு உறவாடிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தாயே, சரிதானா?

ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டு வழிபாராமல்
பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டிலில் அகப்பட்டுத் துடி கெண்டை யானேனே. 5.

உலகத்து உயிர்களையெல்லாம் அருள்பாலித்து ஆண்டு அனுக்கிரகம் செய்யும் பரமகுருவான சிவபெருமானின் பேரருளைப் போற்றி வழிபட்டு அவனடியில் வீழ்ந்து வீடுபேறு பெற்று கயிலாயம் செல்ல வழி காணாமல், வாசமலர்களை அணிந்த அழகிய மாதரார்தம் பொய்மை மயக்கத்துக்கு ஆட்பட்டுத் தூண்டிலில் மாட்டிக் கொண்ட கெண்டை மீனைப் போல துடிக்கலானேனே, என் செய்வேன்.

ஏணிப் பழுவாம் இருளை அறுத்தாள முற்றும்
பேணித் தொழுங் கயிலை பேறு பெறமாட்டாமல்
காணவரும் பொருளாய்க் கண் கலக்கப்பட்டு அடியேன்
ஆணியற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே. 6.

ஓ எந்தன் மனமே! கேள். ஏணிப் படிகளைப் போல ஒன்றன் மேலொன்றாக மனத்தில் ஆணவ இருள் வளர்ந்து கொண்டிருக்க, அவற்றை முழுவதுமாக அறுத்தெறிந்து விடுபட்டு கயிலை நாதனாம் சிவபெருமானை தொழுது அடி பணிந்து பெரும்பேற்றைப் பெறமுடியாமல், உயிரையும், சேர்த்து வைத்த செல்வம் முதலான பொருளையும் நிலையானது என்ற ஆணவத்தில் அடியவனான நான் இப்போது ஆணிவேர் அறுந்த மாமரம் போல ஆகிவிட்டேனே என் செய்வேன்.

கோத்துப் பிரகாசம் கொண்டு உருகி அண்டமெல்லாம்
காத்தபடியே கயிலாயம் சேராமல்
வேற்றுருவப் பட்டு அடியேன் வெள்ளம் போல் உள்ளுருகி
ஏற்றுங் கழுவிலிருந்த பணமானேன். 7.

மனத்தில் அருள் ஒளியுண்டாகி இவ்வண்டங்களையெல்லாம் தன் கருணையினால் காத்தருளும் கயிலாசவாசியான சிவபெருமானின் திருவடிகளே சரணமென்று சென்றடையாமல், மனவேறுபாட்டோடு அடியவனான நான் மனத்தினுள் வருந்தி கலக்கமடைந்து கழுவில் ஏற்றப்பட்ட பிணம்போல காட்சி தருகின்றேனே.

நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
நிலை தொட்ட வேடன் எச்சில் தின்னானைச் சேராமல்
வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத்
தலைகெட்ட நூலதுபோல தட்டழிந்தாய் நெஞ்சமே. 8.

ஓ என் நெஞ்சே! ஊர்மெச்ச வாழ்ந்த உயர்ந்த நிலையில் இருந்த இந்த பூதவுடலைவிட்டு உயிரானது பிரிந்து செல்லும் முன்பாகவே, காளத்தி வேடனாம் கண்ணப்பன் எச்சிற்படுத்திக் கொடுத்த உணவை உண்ட அந்த சிவபிரான் கழல்களைச் சேர்ந்து உய்ய வழிகாணாமல், இப்படி வலைக்குள் சிக்கிய மான் போல பரிதவித்துத் நூற்கண்டின் நூல் நுனி எது என்றறியாமல் துழாவிடும் மனிதனைப் போல் தவிக்கின்றேனே.

முடிக்குமயிர்ப் பொல்லா முழுக் குரம்பை மின்னாரின்
இடைக்கு நடைக்கு இதங்கொண்ட வார்த்தை சொல்லி
அடிக்கொண்ட தில்லை வனத்து ஐயனே நாயனையேன்
விடக்கை இழந்த மிருகமது வானேனே. 9.

எனையாளும் தில்லையில் நடம் பயிலும் நடராசப் பெருமானே! கேவலம் நான் ஒரு நாயைப் போல அலைகின்றேனே. புழு நெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த உடலைக் கொண்ட மாதரார் கூந்தலை வர்ணித்து, இடையைக் கண்டு மகிழ்ந்து, நடையைப் பார்த்துப் பாராட்டி, மனத்துக்கு இதம் தரும் சொற்களால் அவள் மனத்தை மகிழவைத்து இறுதியில் உன் திருவடிகளை அடையாமல் வாயில் கவ்வியிருந்த மாமிசத்தை இழந்து ஏமாந்து போன மிருகமாய் ஆகிவிட்டேனே.

பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீபாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலை புகுந்த நாய்போல்
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே. 10.

எனக்கு எதிரியான என் நெஞ்சமே! இப்பூமியில் வாழும் மாந்தரெல்லாம் போற்றி வழிபடும் மதுரை சொக்கநாதக் கடவுளின் சீரான பாதங்களைப் போற்றி வழிபட்டு சிவலோகம் சென்றடையும் வழி காணாமல், வீணில் வீடுதோறும் சென்று தலைகாட்டிவிட்டு வரும் நாயைப் போல அலையவிட்டாயே நியாயமா?

(இன்னும் வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *