பட்டினத்தடிகளின் பாடல்கள் – 15ம் பகுதி

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

பத்தெட்டாய் ஓரைந்தாய்ப் பதின்மூன்றையும் கடந்த
ஒத்திட்டு நின்றது ஓர் ஓவியத்தைப் போற்றாமல்
தெத்திட்டு நின்ற திரிகண்ணிக்கு உள்ளாகி
வித்திடாய் நெஞ்சே விடவும் அறியாயே. 1.

ஓ என்றன் மனமே! *முப்பத்தாறு தத்துவங்களையும் (அதாவது பத்து+எட்டு+ஐந்து+பதிமூன்று=முப்பத்திஆறு) கடந்து அதற்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் ஓவியம் போன்றவனான சிவபெருமானின் அற்புத தரிசனம் கண்டு அப்பரப்பிரம்ம ஸ்வருபத்தில் நிலைத்த இன்பத்தைக் காணாமல், உலகத்தில் சுலபமாகக் கிடைக்ககூடிய அற்ப சுகங்கள் எனும் வலையில் மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்து உன் புத்தியை அதில் விதைத்துவிட்டு நிற்கிறாயே, அதனின்றும் விலகி வாழ அறிந்து கொள்ளவில்லையே. (*சைவ சித்தாந்தத்தில் முப்பத்தியாறு தத்துவங்கள் சொல்லப்படுகின்றன, அவற்றைப் பற்றிய விவரங்களைச் சைவ சித்தாந்த நூல்களில் காணமுடியும்)

அஞ்சுடனே ஏழாகி ஐமூன்றும் எட்டும் ஒன்றாய்
மிஞ்சி யிருந்த விளக்கொளியைப் போற்றாமல்
பஞ்சிலிடு வன்னியைப் போல் பற்றிப் பிடியாமல்
நஞ்சுண்ட கெண்டையைப் போல் நான் அலைந்து கெட்டேனே. 2.

மறுபடி மீண்டும் இங்கும் அதே முப்பத்தாறு தத்துவம் பேசப்படுகிறது. அவை (5+7+(5×3)15+8+1=36) முப்பத்தியாறு தத்துவங்களைத் தாண்டி நிற்கும் அந்த ஜோதிஸ்வரூபனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், பஞ்சில் தீப்பிடித்தது போல சட்டென்று பிடித்துக் கொள்ளாமல், நஞ்சை உண்ட கெண்டை மீனைப் போல அங்குமிங்குமாய் அலைந்து கெட்டேனே.

ஊனமுடனே அடையும் புழுக்கட்டை*
மானமுடனே சுமந்து மண்ணுலகில் மாளாமல்
ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தெசம் விட்டுப்
போனது போலே நாம் போய்ப்பிழைத்தோ மில்லையே. 3.

இந்த உடல் பூவுலகின் கேடுகளையெல்லாம் செய்து சீர்கெட்டுப் போன கிருமிகள் வாழ்கின்ற கேவலமான வஸ்து. இந்த உடலை வைத்துக் கொண்டு மானம், மரியாதை இவற்றோடு வாழ்ந்து, இப்பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு போகும் இடத்துக்குப் புண்ணியத்தைத் தேடாமல், பஞ்ச பாண்டவர்கள் செல்வச் செறுக்கோடு வாழ்ந்திருந்த தேசத்தை விட்டுக் காட்டுக்குப் போய் பிழைத்தது போலே நாமும் கானகம் சென்று அந்த இறைவனை நினைந்து தவம் செய்து வாழ்ந்தோமில்லையே.

(*புழுக்களுக்கு இரையாவதும், புழுத்துப் போகும் நிலை கொண்டதுமான இந்த உடலைப் பற்றி பலரும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். யாக்கை நிலையாமை என்பது தமிழிலக்கியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மணிமேகலை காப்பியத்திலும் கூட “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது, புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது; பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்; மனித யாக்கை இது” என வரும் வரிகளை நினைவு கூரலாம்.)

ஊறையிறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை
நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை
வீறாம்புரத்தை விரும்புகின்றது எப்படி என்று
ஆறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே. 4.

கழிவுகளை உடலினின்றும் வெளியேற்றும் உப்பூரும் பாத்திரமாம் இந்த பூதவுடல் உயிர் உள்ளபோதும் அசுத்தங்களை வைத்துக் கொண்டு நாற்றமெடுக்கிறது, அதுமட்டுமல்லாமல் வண்டுகள் அழியக்கூடியதான கூடுகளைக்கட்டி அதில் புழுவினைக் கொண்டு வைத்துச் சேர்த்து பின்னர் அவை அழிக்கப்படுவதைப் போன்ற உடலை, நான் எனது எனும் அகங்காரமும் ஆணவமும் ஆட்கொண்டிருந்த இந்த உடலைப் போற்றி பாதுகாத்து வந்தது அல்லாமல் இதுபோன்ற கேடுகள் இல்லாத புண்ணித் தலங்களைப் பற்றி அறியாமல் அவற்றிலிருந்து எட்டாத தூரத்தில் இருந்துவிட்டேனே.

அரிய அரிதேடி அறியா ஒரு முதலைப்
பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
கரிய பெருவாழ்வை நம்பிக் காமத்து அழுத்தியே
அரிவாயில் பட்ட கரியது போலானேனே. 5.

அடி முடி காண்பதற்காக பிரம்மனும், ஹரியும் மேலும் கீழுமாய்ச் சென்றும் காணமுடியாத ஒப்பிலாத முதல்வனை சதாகாலமும் வழிபடவேண்டிய அந்தப் பெருஞ் சுடராம் சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வாழாமல், நிலையற்ற இந்த புவிவாழ்வை சதமென்று எண்ணிக் காம உணர்வுகளில் மூழ்கித் திளைத்து சிங்கத்தின் வாயில் அகப்பட்ட யானையைப் போல ஆகிவிட்டேனே.

தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி
மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல்
அந்தரத்தே கோலெறிந்த அந்தகன் போல் ஆனேனே. 6.

ஆகமங்களை அறிவதால் பலன் இல்லை என்று எண்ணி தவமே மேலென்று அதிலே மனம் செலுத்தி, வேதத்தை சிறப்பென்று ஓதியும் மனம் தெளிவின்றி மயங்கித் தடுமாறி, விந்து நாதத்திற்கு அப்பால் ஓங்கி நிற்கும் பெரும் ஜோதியாம் பரம்பொருளைக் காணாமல், ஆகாயத்தின் வெட்டவெளியில் கோலை எறிந்துவிட்டு அது எங்கு போனது, என்ன ஆனது எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தவித்துத் தடுமாறும் அந்தகனைப் போல ஆகிவிட்டேனே.

விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதும் பின்
சிலையார் கைவேடன் எச்சில் தின்னானைப் போற்றாமல்
அலைவாய்த் துரும்பது போல் ஆணவத்தினால் அழுங்கி
உலைவாய் மெழுகது போல் உருகினையே நெஞ்சமே. 7.

மதுரையம்பதியில் புகழ்பெற்ற பாணனான பாணபத்திரரின் இசைக்கு அடிமையானதும், பின்னர் காளத்தி வேடன் கண்ணப்பன் கொணர்ந்து தந்த எச்சில் பண்டத்தை உண்டவனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், கடல் அலையில் விழுந்த துரும்பினைப் போல் அங்குமிங்குமாய் அலைக்கழித்து நிலை தடுமாறி, ஆணவப் பேய் தலையில் அமர்ந்து கொண்ட நிலையில், நெருப்பினைக் கக்கும் உலையில் விழுந்த மெழுகு உருகுவது போல மனம் உருகித் தவிக்கின்றனையே என் நெஞ்சமே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *