சக்தி சக்திதாசன்

scl3 scl2 scl1

 

 

 

 

அன்பினியவர்களே !

 

வாயுபகவானின் சீற்றத்துக்கு இலக்காகி சூறாவளியினுள் சுழன்றடித்து விட்டு ஓரளவு நிலையாக நிற்கின்ற இங்கிலாந்தின் தென்பகுதியில் இருந்து மீண்டும் ஒரு மடலின் வாயிலாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இல்லங்கள் அனைத்தும் ஒளிமயமாக தீபாவளி எனும் இத்திருநாள் இதோ மிக அருகில் நெருங்கி விட்டது.

இல்லங்களின் சூழ்ந்துள்ள கருமையை மட்டுமல்ல மனித உள்ளங்களின் கருமையையும் ஓட்டிவிட அனைத்து உள்ளங்களும் ஒளிமயமாக மனிதாபிமானம் எனும் இனிய உணர்வின் அடித்தளத்தில் அனைவரது வாழ்விலும் இனிய நிகழ்வுகள் பொங்கட்டும்.

சமீபத்தில் இங்கிலாந்து தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சி மனதில் பல எண்ணங்களை அலை மோதப் பண்ணியது.

சுகாதாரம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. இச்சுகாதாரத்தைச் சரியாகப் பேணாததினால் நோய்வாய்ப்ப்படுவோர் பலர்.

நாமும் நாம் சார்ந்த இடமும் மட்டுமே எமது வாழ்க்கைக்குப் போதுமானது என்று எண்ணும் மனப்பான்மையே இன்றைய அவசர உலகத்தில் நிலவுவது போலத் தெரிகிறது.

என்னருகில் இருக்கும் குப்பையை அப்புறப் படுத்தி விட்டால் போதும் அக்குப்பை மற்றொருவர் அருகில் போய் விழுந்து அவர் அதனால் அருவருப்படைவதைப் பற்றிய கவலை எமக்கில்லை என்னும் மனப்பாங்கிலேயே பலர் நடந்து கொள்வது போன்று தென்படுகிறது.

இன்றைய இங்கிலாந்தின் தெருக்களில் காணப்படும் குப்பைகள் எப்படி அங்கே வருகின்றன ? அதற்குக் காரணம் யார்?  எனும் கேள்விகள் எழும்போது அதற்கான விடையும் தயராக எமது மனங்களினுள் இருக்கிறது.

இத்தகைய தெரு அசுத்தங்களின் பொறுப்பும் எமது தலைகளிலேயே விழுகிறது. நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டின் பிரஜைகள் நாம் வாழும் நாடு மிகவும் சுத்தமான நாடாக இருப்பது நாம் வாழும் வீட்டின் சுத்தத்தினால் நாம் எத்தனை பெருமையடைகிறோமோ அத்தகிய பெருமையை எமக்கு அளிக்க வேண்டும்.

ஆனால் அப்படி பெருமை கொள்பவர்கள் எத்தனை பேர் எனும் கேள்வி எழுந்தால் அதற்கான பதில் வேதனையைத்தான் தரும்.

இதன் காரணம் என்ன ?

சொந்த வீட்டில் வசிப்பதற்கும் வாடகை வீட்டில் வசிப்பதற்கும் இடையிலான வேறுபாடே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது.

தமது சொந்த வீடுகளில் வாழ்பவர்கள் அவ்வீட்டை சுத்தமாக எடுக்கும் முயற்சிகளை தாம் வாடகைக்கு இருக்கும் வீட்டைச் சுத்தப்படுத்துவதில் எடுப்பார்களா ?

சந்தேகமே !

இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர்தாம் வாழும் நாட்டை தமக்கு உரிமையுள்ள ஒரு நாடாக எண்ணிப்பார்பதில்லை.

இம்மனப்பான்மையை நான் பல புலம் பெயர்ந்த மக்களிடையே காண்கிறேன். தமக்கு வாழ்விடமும், வாழ்வாதரத்திற்கான வசதிகளையும் செய்து தந்த இப்புகலிட நாட்டிற்கு தமது தாய்நாட்டை விட அதிக கெள்ரவமளிக்க வேண்டிய தேவையிருந்தும் ஏதோ வாடகை வீட்டில் வாழ்வது போன்ற ஒரு மனப்பான்மையில் வாழ்வதைக் காணும்போது உள்ளத்தில் கொஞ்சம் வேதனை எழத்தான் செய்கிறது.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பிரதான சாலையில் ஒரு பக்க நடைபாதையை சாலையைத் துப்பரவு செய்யும் மாநகரத் தொழிலாளிகள் துப்பரவு செய்த அதேநேரத்தில் மறுபக்கத்தை 24 மணி நேரம் துப்பரவு செய்யாமலே விட்டு விட்டார்கள்.

விளைவு !

துப்பரவு செய்யப்படாத நடைபாதையோரம் குப்பை கூழங்களால் நிறைந்து காணப்பட்டது.

அருகில் குப்பைத் தொட்டிகள் இருக்கக்கூடியதாக குப்பைகளை நடைபாதையில் போட்டு விட்டு எதுவித அக்கறையுமில்லாமல் நடக்கும் பலரைக் காணக்கூடியதாக இருந்தது.

இச்சாலை துப்பரவிற்காக வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் வரையில் செலவு செய்யப்படுகிறது.

இதர்காகச் செலவிடப்படும் பணத்தில் சுகாதாரச் சேவையில் மேலும் எத்த்னையோ ஆயிரம் தாதிகளையும், டாக்கடர்களையும் நியமிக்கலாம்.

பாடசாலைகளின் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம். வேலையர்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை உயர்த்தக்கூடிய வகையில் அவர்களுக்குப் பயிற்சியளிக்க இப்பணத்தை உபயோகிக்கலாம்.

ஆனால் பொறுப்பர்ர தன்மையில் நாம் நடந்து கொள்வதால் எமது குப்பைகளை அகர்றுவதர்காக இப்பணம் செலவிடப்படுவது மிகவும் பரதூரமான கண்டனத்துக்குரியது என்றார் அந்நிகழ்ச்சியை நடத்தியவர்.

இதைத்தான் அழகாக எமது புரட்சித் தலைவர் தனது பாடல் ஒன்றில்,

“நாடென்ன செய்தது நமக்கு

எனக் கேள்விகள் கேட்பது எதற்கு

நீயென்ன செய்தாய் அதற்கு என

நினைத்தால் நன்மை உனக்கு ” என்றார்.

ஒரு நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் அந்நாட்டின் பாராமரிப்பில் பங்குண்டு. குறிப்பாக தமது நாட்டின் சுத்தத்தைப் பேணுவதில் நாம் ஒவ்வொருவருமே பலவிதமான் பங்களிப்புகளைச் செய்யலாம். செய்ய வேண்டியது எமது தார்மீகப் பொறுப்பு.

அனைத்து இல்லங்களிலும் ஒளிரும் தீபாவளித் தீபங்கள் அவ்வில்லங்களின் கருமையை மட்டுமல்ல மனித மனங்களில் உள்ள கருமைகளையும் விரட்டட்டும்.

என் இனிய வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *