பட்டினத்தடிகளின் பாடல்கள் – 18ம் பகுதி

0

தஞ்​சை​ வெ. ​கோபாலன்

திருவிடைமருதூர்:
மென்று விழுங்கி விடாய் கழிக்க நீர்தேடல்
என்று விடியும் எனக்கு என்கோவே – நன்றி
கருதார் புரம் மூன்றும் கட்டழலாற் செற்ற
மருதா உன் சந்நிதிக்கே வந்து. 1.

நன்றி கொன்ற அரக்கர்களையும், அவர்தம் புரம் மூன்றையும் மூண்ட செந்தழலாற் எரித்த மருதூர் வாழ் அண்ணலே! சதா காலமும் வயிற்றுக்கு உணவையும், உண்டபின் விடாய் தீர நீர்தேடி ஓடும் இந்த நீச வாழ்க்கை என்று தீரும், என்று நான் உன் சந்நிதிக்கு வந்து உனக்கே ஆளாவேன் சொல்லுவீர் எனை ஆளும் என் அரசே!

திருவொற்றியூர்:
கண்டங் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுக ழொற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு. 2.

ஆலகால விடமுண்ட காரணத்தால் நீலநிறம் பாய்ந்த கண்டமும், முகத்தில் மூன்று நயனங்களும், இந்த அண்டசராசரங்களைப் போல அழகும் படைத்த தொண்டர்கள் உடலும் உள்ளமும் உருகவைக்கும் இனிமை பொருந்திய கரும்பே! கீழைக் கடற்கரையோரம் திருவொற்றியூர் அமர்ந்த பெருமானே.

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு
இடுமருந்த யான் அறிந்து கொண்டேன் – கடுவருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி. 3.

சீவடியும் புண்போன்ற ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடலுக்கு இடவேண்டிய மருந்தை நான் அறிந்து கொண்டேன். அந்த மருந்து யாதெனின், (கடு + அருந்தும் = ஆலகாலவிடத்தை உண்ட) தேவாதி தேவனான திருவொற்றியூரானின் அடியவர்கள் தினந்தினம் நடந்த பூமியில் கிடக்கும் பாததூளியே இப்பிணிக்குச் சரியான மருந்து. (இக்கருத்தையொட்டியே சில ஆலயங்களில் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அடியார்கள் நடந்த பாததூளி உடலில் பட்டுப் புனிதமடைதற்காக என்பது கருத்து)

வாவி யெல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் வெண்ணீறு
காவணங்களெல்லாம் கணநாதர் – பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி ஊர். 4.

மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும்.

திருவாரூர்:
ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்று
ஊரூர்கள் தோறும் முழலுவீர் – நேரே
உளக் குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கக் தீத்தேடு வீர். 5.

திருவாரூர் தியாகேசர் இங்கே இருக்க, எந்தெந்த ஊரிலோ திருநாள் என்று ஊரெங்கும் பறையறைவீர். அட பேதையர்களே! சித்தத்தில் உறையும் அறிவான தெய்வத்தை உணராமல், ஊமைகளே! யாராவது விளக்கு எரிந்து கொண்டிருக்க தீக்காக அலைவார்களா?

திருக்காளத்தி:
பொய்யை ஒழியாய், புலாலை விடாய், காளத்தி
ஐயரை எண்ணாய், அறம் செய்யாய் – வெய்ய
சினமே ஒழியாய், திருவெழுத்து ஐந்து ஓதாய்,
மனமே உனக்கென்ன மாண்பு. 6.

நெஞ்சே! பொய் பேசுவதை நீ விட்டபாடில்லை; மாமிச உணவுகளை உண்பதை விட்டபாடில்லை; காளத்திநாதனை நினைக்கவில்லை; தான தர்மங்களையும் செய்தபாடில்லை; துன்பம் தரும் கோபத்தையும் விட்டபாடில்லை; அதெல்லாமிருக்கட்டும் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதும் இல்லை, இவைகளையெல்லாம் கடைபிடிக்காமல் உனக்கென்ன அத்தனை கர்வம்.

காஞ்சிபுரம்:
எத்தனை ஊர் எத்தனை வீடு எத்தனை தாய் பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் – நித்தம்
எனக்குக் களையாற்றா ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட் டோ. 7.

ஏ கம்பநாதா, எகம்பநாதனே! எனக்குத்தான் எத்தனை பிறவி, அவை அத்தனையிலும் எத்தனை ஊர், எத்தனை வீடு, என்னைப் பெற்ற அன்னையர்கள் எத்தனை பேர், எனக்கிட்டழைக்க எத்தனை பெயர்கள் ஏன் என சிந்தித்தேன், ஏகம்பநாதரே! இவை அத்தனைக்கும் நான் ஆளாவது எதனால், இதெல்லாம் உனது திருவிளையாடலோ?

திருவிருப்பையூர்:
மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா. 8.

இருப்பையூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! எனக்குத்தான் எத்தனை தாயார்கள் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பெற்று மனம் சலித்தார்கள்; தீவினைகள் செய்ய அத்தனை பிறவிகளிலும் ஓடியாடியதால் நானும் கால் சலித்துப் போனேன்; என்னை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வைத்து அந்த பிரம்மனாம் நான்முகனும் கைசலித்துப் போனான்; ஐயனே! இனியும் ஒரு முறை நான் கருப்பையூர் சென்று வாசஞ் செய்து மீண்டும் பிறக்காமல் வரமருள்வாயே.

திருக்காரோணம்:
அத்தி முதல் எறும்பு ஈரான உயிர் அத்தனைக்கும்
சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகா – மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குதையா காரோண ரே. 9.

திருநாகைக் காரோணப் பெருமானே! யானை முதல் எறும்பு வரையிலான பலகோடி ஜீவராசிகளுக்கும் உணவளித்துக் காக்கும் பரமேச்வரா! ஞானத்தைத் தேடி அலையும் எனக்கும் வயிறு உண்டு, பசி உண்டு என்பதை அறியாமல் இருந்தேனே; பசிக்கொடுமை தாங்கமுடியவில்லை, அடியவனின் பாழ்வயிற்றைப் பற்றி நினைக்க வேண்டியிருக்கிறதே ஐயனே.

திருக்குற்றாலம்:
காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு. 10.

என் பாழும் உயிரை எடுத்தேக எமன் வருவதற்கு முன்பாக, கண்கள் பஞ்சடைந்து பார்வை மங்குமுன்பாக, வாயில் ஊற்றிய பால் உள்ளே இறங்காமல் கடைவாயில் வழிந்தோடுதற்கு முன்பாக, உயிர்போன என் உடல் மீது உறவும் சுற்றமும் விழுந்து அழுமுன்னே, அந்தப் பாழுடலை ஊரார் எடுத்துச் சென்று தீயிட்டுச் சுடுமுன்னே, ஓ நெஞ்சமே, திருக்குறாலநாதனை நினைத்துப் போற்றிடுவாய்.

(இன்னும் வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *