Advertisements
வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்!

திவாகர்

நமது பாரதம் வாத விவாதங்களுக்குப் பெயர் போனது. அந்தக் காலங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் அனைத்துமே நல்ல நெறிக்கே இறுதியில் அழைத்துச் சென்றன என்பதை சமயம் சம்பந்தப்பட்ட வரலாறு படித்தோருக்கு நிச்சயமாகப் புரியும். மாணிக்கவாசகரின் புத்தபிட்சுக்களுடனான வாதம் அப்படியே எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்துள்ளது. ஆதி சங்கரராகட்டும் ராமானுஜராகட்டும், விவாதங்களில் மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டிருந்தனர். பண்டிதர்கள், ஆழ்ந்த அறிவுடையவர்கள், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவரின் சீடர்களாகவும் ஆனது பற்றிய செய்தியும் அவர்களது வரலாற்றிலிருந்து தெரிய வரும்.

இந்த விவாதங்கள் எல்லாமே ஒரு சில வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த வரம்பு மீறாதநிலையில்தான் வாதப்பிரதிவாதம் செய்தனர் என்பதை பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அறிகின்றோம். இவை பற்றிய இன்று கிடைக்கும் செய்திகள் கூட இருபக்கங்களையும் நியாயமானவர்களாகவே வர்ணித்து எழுதியுள்ளார்கள் என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும். வாதத்துக்கும் விவாதத்துக்குமே இடம் உண்டே தவிர குதர்க்க வாதத்துக்கோ பிடிவாதத்துக்கோ அங்கு இடம் இல்லை. நவீன காலத்தில் பட்டி மன்றங்களாக இவை உருவெடுத்தன என்றாலும், பட்டி மன்றங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டுமே மாறிவிட்டதாகத்தான் இன்றைய நிலையில் அவைகளைக் கவனிக்கையில் இப்படி நினைக்க வேண்டியுள்ளது.

ஒருகாலத்தில் நேருக்கு நேர் நின்று முகம் பார்த்துச் செய்யும் விவாதங்கள், இணையம் உலகத்தைச் சுருக்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் முகமறியாத விதத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கிற வசதிகள் மூலம் படித்தவர்கள் பலர் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இந்த இணைய விதத்தில் கலந்துகொள்ளும்போது பேசலாம் என்பத்யால் பல விவாதங்கள் குதர்க்க திசையில் போனாலும் நிறைய பயனுள்ள செய்திகள் அவைகள் மூலம் கிடைக்கின்றன (அதாவது நல்லவை தீயவை அறியப்படுகின்றன) என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படிப்பார்க்கையில் இந்த விவாதங்களில் பங்கு பெறுகின்ற பண்டிதரான திரு தேவராஜ் அவர்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விவரங்களும் செய்திகளும் நமக்கு, நமது எண்ணங்களுக்கு விருந்தாக அமைகின்றன என்பதை நிச்சயம் சொல்லலாம்.

சமீபத்தில் ஒரு விவாதம் – படிப்பதால் உண்மையான ராஜயோகம் கிட்டும் என்கிற விஷயம்தான். இந்த வாரம் இந்த விவாதத்தினைக் கூர்ந்து கவனித்ததில் திரு தேவ் அவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே அவரது அறிவின் முதிர்ச்சியையும், ஆழ்ந்த ஞானத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இவரது பாண்டித்யம் பற்றிப் பல இடங்களில் பார்த்ததுண்டு.

எங்கு சமூகத்துக்கென எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுகின்றதோ அது தவறு என்பதையும் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீர்திருத்த முயற்சி எடுத்தார்கள் என்பதையும் மிகத் தெளிவான ஆதார விவரங்களோடு எடுத்து வைப்பதில் திரு தேவ் அவர்களுக்கு நிகர் தேவ் மட்டுமே. சமூகம் அதுவும் கற்றவர் சமூகம் என்பது மிகவும் பண்பட்டதாக மாறவேண்டும் என்ற இவரது எண்ணம் இவரது எழுத்தில் வெளிப்படுவதாகத்தான் உணர்கின்றேன்.

சமீபத்தில் இவர் சிந்தனை ஒன்று ஒரு விவாத களத்தில் வந்து விழுந்ததை கையில் எடுத்து அவர் மொழியில் உங்களுக்காக முன் வைக்கிறேன். படிப்பின் பயன்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறார்.

“இதே வழியில்தான் என் சிந்தனையும் சென்றது. Dev2

நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு உறுதுணையாக

அமைதல் வேண்டும்; அந்த விவேகம் மலர்ச்சி பெற்று

ஞானமாகப் பரிணமிக்கும். விவேகத்தை ஊக்குவிக்காத

எவ்விதக் கல்வியும் ஆன்மிகப் புலத்துக்கு ஒவ்வாதது,

அது பெரும்பாலும் செருக்குக்கே அடிகோலும் என்பதே

நான் புரிந்து கொண்டிருப்பது. கல்வியும், செல்வமும்

மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. ”உத்தவரின்

கல்வி உதவாமற் போனது”. ஒப்புக்கொள்வோர்

ஒப்புக்கொள்ளட்டும்,”

பல விஷயங்கள், பல மேற்கோள்கள் மூலமாக பல இடங்களில் இவர் மூலம் எனக்குக் கிடைக்கின்றன. இவர் தெளிந்த ஞானம் பலருக்கு செல்கிறது என்பதே ஒரு பெரும் பயன் தானே.. இந்த வாரம் வல்லமையாளராக திரு தேவ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? பண்டிதர் தேவ் அவர்கள் ஞானச் செல்வம் பற்பலருக்கும் இன்னும் நீண்டகாலம் மென்மேலும் சென்றடையவேண்டும் என்பது என் ஆசை. வல்லமையாளரான் திரு தேவ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் வல்லமைக் குழுவினர் சார்பிலும் என் வாழ்த்துகள்.

கடைசி பாரா: திரு சத்திய மணி’யின் தீபாவளிப் பட்டாசு

வெடி வெடி வெடியென இடபுறம்

வெடியால் செவிடர்கள் வலபுறம்

புகைந்திடும் சூழல் இடபுறம்

இருமலில் இரைப்பவர் வலபுறம்

கலகலச் சக்கரம் இடபுறம்

கடனுக்கு கஞ்சி வலபுறம்

இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்

இயலாமையில் சிலர் மறுபுறம்

ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்

நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (3)

 1. Avatar

  வல்லமையாளர் தேவ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஞானானந்தம், பேரானந்தம்.

 2. Avatar

  தேவ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!

 3. Avatar

  பரிமேலழகர்  “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ”  என்பதை
  புரியும் படி  “நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு (வளர்ச்சிக்கு) உறுதுணையாக அமைதல் வேண்டும்;” 
  என்று தெளிவான உரையிட்டு வல்லமையாளராய்  பரிமளிக்கின்றார் திரு தேவ். 
  அவருக்கு எமது அன்பு கலந்த வாழ்த்துக்கள். தேர்வு செய்த திரு திவாகர் அய்யாவர்களுக்கு
  அடுத்த சபாஷ். அழகாகத் தொகுத்துள்ளார். படித்தோ பார்த்தோ கேட்டோ கற்றவை புத்தியில் ஏறியபின்  நற் செயலாகவோ  அமுத உரையாகவோ  பளீரென்று ஒரு சொட்டு தேனாய்  கொடுப்பதில் தான் புலமை. அனைவருக்கும்
  புரியும்படி சேர்ப்பதில் தான் திறமை.  மொழிக்கும் இனத்துக்கும்  நலம் சேர்க்குங்கால் பெருமை.
  எல்லாம் இன்று இணைந்திருப்பது அருமை.     ராஜயோகம் என்றவுடன்
  கல்வியா செல்வமா வீரமா……என்ற கண்ணதாசனின் பாடலின் முடிவு வரிகளை ஞாபகப்படுத்தியது.
  அனைவருக்கும் நன்றி.வாழிய வல்லமைத் தமிழ்! 

Leave a Reply to அண்ணாகண்ணன் Cancel reply