சச்சின் டெண்டுல்கர் – இந்தியக் கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம்

0

சு. ரவி

SACHIN TENDULKAR

இச்சிறு  பாலகன் தான்

இந்திய  நாட்டைப் புகழின்

உச்சியில் ஏற்றிவைத்தான்

உண்மையில் கிரிக்கெட்டுக்கே

அச்சினைப் போலே நிற்பான்;

ஆணிவேர் போலே ஆவான்

சச்சினைப் போலே இங்கே

சகாப்தமாய் நிற்பார்  யாரே?

 

எத்தனை சதங்கள்? மொத்தம்

எத்தனை  ஆயிரங்கள்?

எத்தனை களங்கள் ? மற்றும்

எத்தனை சாதனைகள்?

அத்தனை  உயரம் கண்டும்

அணுவள வேனும் கருவம்

சச்சினைத் தொட்டதாகச்

சரித்திரம் சொன்ன தில்லை!

 

சாதனை நிகழ்த்தும் போதும்

சட்டென வீழ்ந்த போதும்

சோதனையாக நடுவர்

சொதப்பிடும் தீர்ப்பின்போதும்

யாதொரு சலனம் தோன்றா

ஓவியத் தலர்ந்த பூவாய்

மேதகு கம்பன்  வாக்கின்

மெய்ப்பொருள் போலே நிற்பான்!

 

கறங்கெனச் சுழலும்  மட்டை

கையிலே தாங்கும் வீரன்

விறல்மிகும் ஆட்டம் கண்டு

வியந்தவர், பந்து வீச

மறந்தவர், களத்தில் நிற்க

மருண்டவர், பந்து வீச்சைத்

துறந்தவர்,துரத்திசென்று

துவண்டவர்-எத்தனைபேர்?

 

நிருத்தனப்  பாதம்  வைத்து

நீவிளையாடி உந்தன்

குருத்திளம்   தோள்கள் மீது

குன்றெனச் சுமந்தாய்! உனபோல்

ஒருத்தரும் இருந்த தில்லை!

ஓய்வினை விருப்பம் கொண்டாய்!

வருத்தமாய்  விழிநீர் சோர

விடைகொடுக் கின்றோம்! வாழி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *