சு.ரவி

வணக்கம் வாழியநலம்

ஐயப்பன் பூஜை,பஜனைகளில் விநாயகர் முதல் பலதெய்வங்களின் மீது  இசைப்பாடல்கள் பாடியபின் ஐயப்பனை அழைக்கும் வரவுப் பாடல் பாடுவது மரபு. அம்மரபையொட்டி, எங்கள் குழுவினர் ஒரு வரவுப் பாடலை எழுதுமாறு பணித்தனர்.

பாடலின் தொகையறா இவ்வாறு ஆரம்பித்தது:

“புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்

புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல

நிறப்பட்டுடுத்தி…”

தொகையறா தொடரவில்லை..ஒரு வருடம் ஓடிவிட்டது..

அடுத்த வருடம், ஒரு அன்பர் வீட்டின் ஐயப்பபூஜை முடிந்து இரவு பத்துமணிக்கு ( ஸ்கூட்டரில்) வீடுதிரும்பும்போது அடையாறு இசைக்கலூரியிலிருந்து இந்திராநகர் செல்வதற்குள் புயல்வேகத்தில் பறப்பட்டெழுந்தனன் புலிவாஹனன்..

பாடல் இதோ…

MOHINI BeLuur

ராகம்: சிவரஞ்சனி

தொகையறா

புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்
புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல
நிறப்பட் டுடுத்திக் கரத்திற் சரத்தைத்

தொடுத்துப் பிடித்துப் புயத்தைச் சிலிர்த்துப்    (புறப்பட்)

பல்லவி

வருக வருக மணிகண்டனே1-அருள்

தருக தருக சிவமைந்தனே!

இருகரம் குவித்தோம்- முனையுமனம்

உருகி இங்கழைத்தோம்!                               (வருக)

 

சரணம்

அண்டமும் ககன மண்டலங்களுடன்

எண்திசைகளும் குலுங்க

சண்ட வெங்கலியும் துண்டுதுண்டுபட

சங்கதுந்துபிகள் முழங்க

செண்டை,பஞ்சமுகம்,திண்டிமப்,பறை

ம்ருதங்கம் ஆர்த்தொலி வழங்க

தண்டையுணட கழல் தஞ்சம் தஞ்சமெனத்

தொண்டரண்டிவந் திறைஞ்ச                    (வருக)

 

வலியகடுத்தையும், சிறியகடுத்தையும்

வலமிட மாகவர

புலியும்,சிறுத்தையும், தமதுகுலத்தொடு

புதர்களினூடு வர

நிலவை இழுத்திட  கரிகள் உயர்த்திய

நீண்டதுதிக்கையுடன்

உலவிவரப் பல மிருகமெழுப்பிய

உறுமல் ஒலித்துவர                              (வருக)

 

கணபதி யுடனர வரசனும், முருகனும்

களிநடனம் புரிய,

கணபண உரகமொ டழகிய பிறைபுனை

விரிசடை இறைமகிழ,

மணமலர் தவழ்குழல் அழ்கிய வடிவினள்

இதழகளில் நகைமலர,

கணகணகணவெனக் கடலென அணிவரும்

கணவொலி கூடிவர                                   (வருக)

 

அழுதையின் அதிபதி, கரிமலை பகவதி

ஆடி ஆடுவருக!

மழுமுனி அருளிய மலைவளர் பதியினை

ஆளும் ராஜன் வருக்!

சுழுமுனை வழிவிசை யுடனெழு சுடரென

ஜோதிரூபன் வருக!

புழுமுதல் சுரர்வரை உலவிட உயிர்தரும்

பூதநாதன் வருக!

 

புரவியேறி வருக!- பூதப்

படைகள்சூழ வருக!-தங்கச்

சுரிகை தாங்கி வருக்!- தீபச்

சுடரில் ஆடி வருக!

 

வருக வருக மணிகண்டனே -அருள்
தருக தருக சிவமைந்தனே!
இருகரம் குவித்தோம்- முனையுமனம்
உருகி இங்கழைத்தோம்!                               (வருக)

புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்
புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல
நிறப்பட்டுடுத்திக் கரத்திற்சரத்தைத்
தொடுத்துப் பிடித்துப் புயத்தைச் சிலிர்த்துப்    (புறப்பட்)

 

நடைவழி தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *