நாகேஸ்வரி அண்ணாமலை

நாகேஸ்வரி அண்ணாமலை

 

யாரும் யாரோடும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்ற தாராள மனப்பான்மை உள்ள அமெரிக்கச் சமூகத்திலும் திருமணம் செய்துகொண்டவுடன் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த விதியை மீறியவர்களுக்கு சமூகமும் சட்டமும் தண்டனை கொடுக்கின்றன.  கணவனாலோ மனைவியாலோ துரோகம் இழைக்கப்பட்ட மனைவியோ கணவனோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றம் எந்த விதப் பிரச்சனையும் இல்லாமல் விவாகரத்து வழங்கிவிடும்.  திருமணத்திற்கு முன் ஒருவர் மைனர்போல் வாழ்ந்திருந்த போதிலும் திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய மனைவிக்கு உண்மையாக நடந்துகொள்பவராக இருக்க வேண்டும்.

பாலுறவில் தளர்ச்சியான மதிப்பீடுகள் உள்ள அமெரிக்காவில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் விவாகரத்து செய்துகொள்ளாமல் ஒரே மனைவியோடு வாழ்ந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.    ஜனாதிபதி ரீகன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது தடவை மணம் புரிந்துகொண்டிருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இரண்டாவது மனைவியும் அவரும் ஆதர்ஷ தம்பதிகளாகக் கருதப்பட்டனர்.  அவருடைய சினிமா செல்வாக்கும் அவருக்கு இரண்டு தடவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு துணை செய்தது என்று கூறலாம்.  இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஜனாதிபதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

1992-லிருந்து 2000 வரை எட்டாண்டுகள் ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன், திருமணம் ஆகியிருந்தும், ஜனாதிபதி ஆவதற்கு முன்பே பல பெண்களோடு தகாத உறவு வைத்துக்கொண்டிருந்தார்.  அது இலைமறை காயாக இருந்தது.  அவர் ஜனாதிபதி ஆன பிறகு மோனிகா லெவின்ஸ்கியோடு தகாத உறவு வைத்துக்கொண்ட பிறகுதான் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதைப் பயன்படுத்திக்கொண்டு, அரசியலில் அவருக்கு வேண்டாதவர்கள் அவரைப் பதவியிலிருந்து விலக்க முயன்றும், மக்கள் ஆதரவு இருந்ததால், அது முடியவில்லை.  கிளிண்டனின் நடத்ததையை மக்கள் மன்னித்தது அமெரிக்க அரசியலில் அபூர்வம்.  அவர் மனைவியான ஹிலரிக்கு அரசியல் ஆசை எப்போதுமே உண்டு.  எப்படியாவது அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆகிவிட வேண்டும் என்பது அவருடைய மிகப் பெரிய குறிக்கோள்களில் ஒன்று.  அன்றே அவர் கணவனை விட்டுப் பிரிந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்கவே முடியாது.  பெண்களின் உரிமைகளுக்காகப் போராடப் பலர் இருக்கும் அமெரிக்கச் சமூகத்தில் ஹிலரி தன் கணவர் தனக்கிழைத்த துரோகத்தை மன்னிக்காமல் அவரை விட்டுப் பிரிந்திருந்தால் நிறையப் பேர் அவருக்கு வோட்டுப் போட்டிருக்க மாட்டார்கள்.  இதனால்தான் தன் சுயமரியாதையைக் கூட விட்டுவிட்டு அவர் தன் கணவனோடு இன்னும் தொடர்ந்து இருந்து வருகிறார்.  அவர் மோனிகா விவகாரத்தில் கிளிண்டனைக் கண்டித்து விவாகரத்து செய்திருந்தால் இந்த அளவிற்குக் கூட அரசியலில் வந்திருக்க மாட்டார்.

கலிஃபோர்னியா மாநில ஆளுநர் தன் வீட்டில் வேலைபார்த்த ஒரு பெண்ணோடு தகாத உறவு வைத்துக்கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டார்.  தன் பதவிக்குப் பங்கம் வந்துவிடலாம் என்பதால் தன் பதவிக் காலம் முடிவதற்கு சில மாதங்கள் இருக்கும்போது மனையிடம் அது பற்றித் தெரிவித்தார்.  இருவரும் அந்த ரகசியத்தை உலகுக்குத் தெரியாமல் வைத்திருந்து அவருடைய பதவிக்காலம் முடிந்த பிறகு அதைத் தெரிவித்தார்கள்.  அப்போதே அவர் மனைவியும் அவரை விட்டுப் பிரிந்து வாழ ஆரம்பித்தார்.  இனி தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இன்னும் சில மாதங்களில் வழக்குப் போடலாம்.  இப்படித்தான் சாதாரணமாக நடக்கும்.  இனி இந்த ஆளுநர் தேர்தல்களில் ஜெயிக்க முடியாது.

2004-லும் 2008-லும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜான் எட்வர்ட்ஸ், இவர் மனைவி இவருக்கு நான்கு வயது மூத்தவர் என்றாலும், அவரை முதலில் சந்தித்த பிறகு மற்ற எந்தப் பெண்ணையும் ‘டேட்’ பண்ணாமல் இவரையே திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்து அவரையே திருமணமும் செய்துகொண்டார்.  ஒரு பெண்ணும் ஆணுமாக இரண்டு குழந்தைகளும் பெற்றுக்கொண்டனர்.  சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பு நேரிட்டது.  அவருடைய மகன் ஒரு கார் விபத்தில் இறந்து போனான்.  வளர்ந்த ஒரு மகள் இருந்தாலும் இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் மனைவி எலிஸபெத் சில மாத்திரைகள் சாப்பிட்டு இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டார்.  மாத்திரைகள் சாப்பிட்டதன் விளைவோ என்னவோ 2004-இல் மார்பகப் புற்று நோய்க்கு ஆளானார்.  இந்தச் சமயங்களில் எல்லாம் இருவரும் ஒன்றாகத் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.  ஆனால் 2006-இல், அதாவது 2008 ஜனாதிபதி தேர்தலுக்கு அவர் தன்னைத் தயார் செய்துகொண்டிருக்கும் போது தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்குப் படம் எடுத்து உதவியாக இருந்த ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  இது வெளியே தெரிந்ததும் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வந்ததோடு அவருடைய மனைவியும் அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்.  அவர் மனைவி உயிரோடு இருந்து அவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்குள் அவர் வாழ்க்கையே முடிந்துவிட்டது.  கடைசியாக அவர் எழுதிய உயிலில் கணவரைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லையாம்.

ஒரு பெண்ணோடு பலாத்காரமாகப் பாலுறவு கொண்டால் அந்த ஆணிற்கு அமெரிக்காவில் கடுந்தண்டனை உண்டு.  ஆனால் பெண்ணிற்கும் அதில் இசைவு இருந்தது என்று நிரூபித்துவிட்டால் ஆணிற்கு எந்தத் தண்டனையும் கிடையாது.  சட்டம் இப்படி இருப்பதால்தான் சர்வதேச நிதி அமைப்பு நிறுவனத்தின் இயக்குனர், ஒட்டலில் தன் அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதை அவளுக்கும் அதில் ஒப்புதல் இருந்தது என்று நிரூபித்து ஸ்ட்ராஸ் கானைத் தப்புவிக்க அவருடைய வழக்கறிஞர்கள் முயற்சி செய்யப் போகிறார்கள்.

சாதாரண மக்களும் கணவன் மனைவிக்கோ மனைவி கனவனுக்கோ துரோகம் செய்தால் பொறுத்துக்கொள்வதில்லை.  உறவை முறித்துக்கொள்வார்கள்.  சிலர் பொறுத்துப் போகிறார்கள் என்பது உண்மைதான்.  வெளியே தெரியாமல் தகாத உறவு வைத்துக்கொளவதும் இருக்கிறது.  ஆனால் சமூக மதிப்பீட்டின்படி இது தவறு.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *