திவாகர்

அன்புள்ள ராகிக்கு

(ராகி எனப் பெயரைக் கூப்பிடுவதை விட எழுதும்போது அவ்வளவு நன்றாக இல்லையென்று நன்றாகவே தெரிகிறது என்றாலும் ராகினி என்று உன் முழுப்பெயரையும் எழுதினால் எங்கே நீ கோபித்துக் கொள்வாயோ என்றுதான் நான் வீட்டில் உன்னை சாதாரணமாகக் கூப்பிடுவது போலவே எழுதிவிட்டேன்)

அது சரி, இருக்கட்டும், அடடா..கோபித்துக் கொள்ளாதே.. இதோ கடிதம்.. இனிமேல்தான் ஆரம்பிக்கிறேன்.

உபயக்ஷேமம். (இப்படித்தான் என் தாத்தா எனக்கு ‘கார்டு’ போடும்போது எழுதுவார், என்ன அர்த்தம் என்று கேட்காதே)

இப்பவும் உன் நலத்துக்கு அடிக்கடி கடிதம் எழுது (இதுவும் தாத்தாவின் பாணி). நிற்க! (இப்படி எழுதிவிட்டேன் என்பதற்காக நீ நிற்பதாக நான் கனவிலும் நினைக்கமாட்டேன்.. இப்படி எழுதுவதெல்லாம் ஒரு சம்பிரதாயம்)

நீ சிம்லா சென்று இன்றைய தினத்தோடு ஏழு நாட்கள் ஆகிவிட்டது. உன் அக்கா உடல்நலம் மோசமாகிவருவதால் நீ போய் மூன்றுமாதம் பணிவிடைகள் செய்வதாய்ச் சொல்லிவிட்டுப் போனவள்தான். ஆனால் இந்த ஏழு நாட்களுக்கே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டேன் என்று ஆயிரம் முறை உனக்கு என் மொபைல் போனில் சொல்லிவிட்டேன்.. இருந்தாலும் எழுத்தில் சொல்வதும் என் கடமையாக நான் கருதுவதால் இங்கே இப்படி எழுதத் தோன்றியது.

நானும் யோசித்துப் பார்த்துவிட்டேன். அதுதான் தினமும் நினைத்தாலே மொபைலில் பேசுகிறோமே, நீ சொல்லியபடி கடிதம் எல்லாம் எழுதத்தான் வேண்டுமா’ என்று நினைத்து நினைத்துப் பார்த்து ஓய்ந்து விட்டேன்.. எத்தனைதான் உன் அக்கா ஆசைப்படுகிறாளாக இருக்கட்டுமே,.. தங்கையின் புருஷன் தங்கைக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறானோ இல்லையோ என்று கவலைப்படுகிறாளே என்று வாரத்துக்கு ஒருமுறையாவது ஒரு கடிதம் என எழுதி போஸ்ட் செய்துவிடுங்கள், கடைசி காலத்தில் அவள் சந்தோஷப்படட்டும் என்று நீ சொன்னாலும், கடிதம் எழுதுவது எப்படி என்பது இப்போதெல்லாம் மறந்துபோய்விட்டது. இன்று மாலை கூட இந்தக் கடிதம் பற்றி யோசித்துக் கொண்டே கார் ஓட்டியதால், எதிரே ஒரு எருமை மாடு மீது முட்டப்போய் அது என்னை ஒரு மாதிரியாக பார்வை பார்த்துவிட்டு தப்பித்துக் கொண்டதை நான் உனக்கு மொபைலில் சொல்லவில்லைதான். மரணம் வரும்போது எல்லோருக்கும் எருமை வாகனத்தான் எதிர்வருவான் எனச் சொல்வார்கள்.. அந்த எருமைக்கு கார்வாகனத்தான் நான் எமனாகத் எதிரே தெரியப் பார்த்தேன். நல்லகாலம் எமனின் கருணை, எமன் வாகனமான எருமை தப்பித்தது. இருக்கட்டும்..

இரவு பத்து மணிக்கு இந்தக் கடிதம் எழுதுவதற்காக மேஜை முன்னால் உட்கார்ந்தேன்.. மணி இரண்டாகிவிட்டது.. இன்னமும் எனக்கு என்ன எழுதவேண்டும் என்று தெரியவில்லை. எல்லாவற்றையுமே மொபைலில் பேசிவிட்டோமே.. இன்னமும் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று பார்த்ததில் உன்னிடம் சொல்லாமல் விட்டதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். இரு இரு.. இதோ வந்துவிட்டது..

5மாடியில் சுப்பு மாமி (அந்த மாமியின் நிஜப் பெயர் கூட எனக்குத் தெரியாது.. அந்தப் சுப்புப் பையனுக்கு அம்மா என்பதால் இப்படிக் கூப்பிட்டே என்னையும் பழக்கிவிட்டாய் – உடனே அந்த மாமியின் பேர் தெரிஞ்சு உங்களுக்கு என்ன ஆகணும் என கேட்காதே, நான் ஒரு வார்த்தைக்குச் சொன்னேன் என்பதோடு நான் எவ்வளவு நல்லவன் என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகச் சொன்னேன்) சரி, விஷயத்துக்கு வருகிறேன். அந்த சுப்பு மாமியின் மூன்றாவது தங்கை அருணா நான் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவதாக அவளாகவே நினைத்துவிட்டு இரவுச் சாப்பாடாக சப்பாத்தியும் தக்காளி சட்னியுமாக வந்தாளா.. அவளிடம் நானும் வீட்டில் சப்பாத்திதான் செய்துகொண்டேன் என்று சொன்னேனா.. அவள் சப்பாத்தியை திரும்ப எடுத்துக் கொண்டு அந்தத் தக்காளிசட்னியை மட்டுமாவது சாப்பிட்டுப் பாருங்கள்’ என்று சொன்னதோடு தக்காளி சட்னியில் புதுமாதிரியாக மிளகாய்க்குப் பதிலாக மிளகும் புளிக்குப் பதிலாக எலுமிச்சையும் பிழிந்து செய்திருப்பதாகவும் சொன்னதால் அதை வாங்கிக் கொண்டேன்.. அவள் பெங்களூரில் அடிக்கடி இதைச் செய்வதாகவும் அவள் புருஷன் எப்போதெல்லாம் கோபித்துக் கொள்கிறானோ, அப்போதெல்லாம் இந்தத் தக்காளி சட்னியைக் காண்பித்தாலே போதும், பெட்டிப்பாம்பாய் சுருண்டு விடுவான் என்றும், அப்படிப்பட்ட தக்காளி சட்னியை நிறையவே எனக்குக் கொடுத்திருப்பதாயும், அடுத்தநாள் சாப்பிட்டால் இன்னமும் ருசியாக இருக்குமே என்பதால் நாளையும் சாப்பிடுங்கள் என்று அவள் தாராள மனப்பான்மையோடு பீற்றிக் கொண்டதையும் எப்படியாவது உன்னிடம் மொபைலில் சொல்லத்தான் வேண்டுமென்று நினைத்தேன்.. ஆனால் நீ அவகாசம் கொடுக்கவில்லையே.. உன் அக்காவைப் பற்றிப் பேசிப்பேசி நீ களைப்பாகக் கடைசியில் தூங்கப்போவதாகவும் காலை வரை மொபைல் அடித்து டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் என்று கட்டளையும் கூடவே போட்டதால் நான் மறுபடியும் மெனக்கெட்டு உனக்கு போன் போட்டு இந்த விஷயத்தைச் சொல்லவில்லை.

சரி, தக்காளி சட்னி விஷயத்துக்கு வருகிறேனே.. நான் அதை மட்டும் வாங்கி அவளை அனுப்பதற்காக தேங்ஸ் சொல்லிவிட்டு ருசித்துப்பார்த்து நாளைக் காலை எப்படி இருந்தது என்று சொல்கிறேன்’ என்று அவளை உடனடியாக அனுப்பப் பார்த்தேன்.. அவள் உடனே போகாமல், ’என்ன சார்.. நீங்களும் எப்பவாவது கோபப்பட்டால் உங்கள் மனைவியை இந்த தக்காளி சட்னி செய்து போடச் சொல்லுங்கள், ஒரு நிமிஷத்தில் உங்கள் கோபம் எகிறிப் போய் சாந்தமாகிவிடுவீர்கள்.. இந்த அருணா சொன்னதாக உங்கள் மனைவிக்கு சொல்லுங்கள் சார்’ என்று இலவச அட்வைஸ் ஒன்றும் கொடுத்துவிட்டுதான் மாடி ஏறினாள். (இப்படித்தான் அவள் பெயரையும் நான் தெரிந்துகொண்டேன் என்பதையும் நீ நம்பவேண்டும்)

பாவம், அவளுக்குத் தெரியாது.. நான் கோபமே படாத ஜன்மம் என்பதும், உனக்கு தக்காளி என்றாலே அலர்ஜி என்பதால் நம் வீட்டு சமையலில் தக்காளிக்கே வேலை இல்லை என்பதும், அதே சமயத்தில் இதைவிட ருசியான புதிய வகை சமையல்கள் செய்து கலக்கி வருபவள் நீ என்பதையும் எப்படி அவளுக்குத் தெரியவைப்பேன். (கலக்கி வருபவள் என்றால் வேறு ஏதாவது அர்த்தம் பண்ணிக்கொள்ளாதே). சரி, அதை விடு.. உனக்குப் பிடிக்காத அந்த தக்காளி சட்னியை எதற்கு இரண்டு வேளையும் நம் வீட்டில் வைப்பானேன் என்று ராத்திரி சாப்பிடும்போதே அத்தனையும் சாப்பிட்டு அவர்கள் கொடுத்த கிண்ணத்தையும் கழுவிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்.

தக்காளி சட்னி அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ருசியாக இல்லை என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்..எலுமிச்சை போட்டதால் ருசி அப்படி இப்படி மயக்கப்பார்த்தது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் போயும் போயும் தக்காளி சட்னியில் யாராவது எலுமிச்சை பிழிவார்களா என்ற அறிவார்ந்த கேள்வியும் எனக்கு நானே கேட்டுக் கொண்டதால் அந்த ருசி மயக்கத்திலிருந்து கொஞ்சம் வெளியே வந்தேன்.. அதுவும் பெங்களூர் தக்காளி என்பதால் கொஞ்சம் மேல் ருசிக்கு எலுமிச்சை புளிப்பு தேவை என்று போட்டிருக்கலாம் என்றும் சமாதானம் செய்து கொண்டுதான் சாப்பிட்டேன்.  இன்னமும் கேட்டால் நாளை மறுபடி இவள் கீழே இறங்கும்போது என்னைப் பார்த்துவிட்டால், இதைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்லி சமாளிக்கலாம், எப்படி மறுபடியும் வாங்காமல் இருக்கலாம் என்று ஒரு யோசனையும் கூட இந்தக் கடித விவகாரத்தோடு மூளையின் இன்னொரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் உன்னிடம் நாளை மொபைலில் போன் போட்டு அட்வைஸ் வாங்கலாம்தான்.. ஆனால் மொபைலில் மறுபடியும் ஆதியோடு அந்தமாய் இந்தத் தக்காளி சமாசாரத்தை உனக்குச் சொல்வதால் உனக்குக் கோபம் வரலாம்..ஏன் இப்படி அடுத்தவர் சாப்பாடுக்கு அலைகிறீர்கள் என்ற கிண்டல் வரலாம், ஒருவேளை ராத்திரியே ஏன் சொல்லவில்லை என்று கேள்வியும் கேட்கலாம்.. ஏன் அத்தனை சட்னியையும் ராத்திரி நேரத்திலேயே விழுங்கித் தொலைத்தீர்கள் என்று எரிச்சலாய்ப் பேசலாம், ஏதாவது வயிற்றைக் கலக்கி ஒன்று கிடக்க ஒன்று ஆனால் அந்த ராத்திரியில் எந்த டாக்டரிடம் ஓடுவீர்கள் என்று கேட்கலாம் (இப்போது வரைக்கு எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது வேறு விஷயம்).. எனக்குப் பிடிக்காத அந்தச் சட்னியை தூரக்கொட்டாமல் ஏன் ஒரு பிடி பிடித்தீர்கள் என்ற கேள்வியும் உன்னிடமிருந்து வரலாம். அதனால் நாளைக் காலையும் உன்னிடம் இந்தத் தக்காளி சட்னி விஷயமாகப் பேசப்போவதில்லை.. எனக்கு இன்னொரு விஷயமும் முக்கியம்.. அதாவது உனக்கு தக்காளி என்றாலே அலர்ஜி என்பது கூட தெரியுமென்பதால் இதைச் சொல்லி உன் எரிச்சலைக் கிளப்புவானேன்.. அதனால் இந்தக் கடிதத்தில் இந்தத் தக்காளி சட்னி விவகாரத்தினையும் முடித்துக் கொள்கிறேன்.

இந்தக் கடிதம் உனக்கு எப்போது கிடைக்குமோ தெரியாது. நான் மட்டும் நாளைக் காலையே மௌண்ட்ரோடு போஸ்ட் ஆபீஸ் சென்று போஸ்ட் செய்து விடுகிறேன். எப்படியும் இரண்டு நாளைக்குப் பிறகுதான் இந்தக் கடிதம் உனக்குச் சேரும் என்பதால் இரண்டு நாள் இதைப் பற்றி மொபைலில் பேசப்போவதில்லை.. உனக்குப் பிடிக்காத விஷயத்தை உனக்கு மொபைல் போன் போட்டுத்தான் பேச வேண்டுமா.. நீயே சொல். உனக்குப் பிடிக்காத செயலை என்றாவது நான் செய்திருக்கிறேனா?

மற்றவை ஏதாவது ஞாபகத்துக்கு வந்தாலும், மறுபடியும் இதைப் போல ஏதேனும் இடர் வந்தாலும் கட்டாயமாக அடுத்த வார கடிதத்தில் உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

எழுத மறந்துவிட்டேனே.. உன் அக்காவின் உடல்நலத்தை விசாரித்ததாகச் சொல்லவும்.

உன் அன்புள்ள கணவன்.

படத்திற்கு நன்றி: http://lorakrulak.com/2010/08/tomatoes/

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “தக்காளி சட்னி!

  1. ஹாஹாஹா, தக்காளிச் சட்னியோடு போண்டா சாப்பிட்டுக் கொண்டே இதை ரசிச்சுப் படிச்சேன். மிளகும், எலுமிச்சையும் போட்டு எப்படி இருக்கும்?  சகிக்காதுனு தான் நினைக்கிறேன். 🙂

  2. Thakkali chutney irukkattum, ivvalau, sonna pecchu kekkara kanavan arumai arumai. Manaivikku pidikathathai seyyatha nalla purushan. 

    Lovely piece full of subtle humour. The art of letter writing is indeed gone.  this one is superb.

  3. இந்த அளவுக்கு எழுத வைச்சிருக்குன்னா, … அதுவும் நல்லா இல்லைன்ற சட்னியைப் பத்தி…. ம்ஹூம்… அருணாவைப் பத்தி ஒரு பிடி பிடிக்காம உங்க மனைவி உங்களை விடப்போறதில்ல! சொ.செ.சூ. !!! அட்வான்ஸ் அனுதாபங்கள். அதைப் பத்தியும் [‘டோஸ்’ வாங்கினது] அடுத்தாப்பல எழுதுங்கோ!:))

  4. அன்பு திவாகர்ஜி  தக்காளியே புளி  அத்தோட எலுமிச்சம்பழமும் பிழிந்தால் …… அருணாவோட ஏஜ் அப்படி ! நல்ல  வேளை  மிக அழகாக மனைவிக்கு ஐஸ் வைத்து உண்மையைச் சொல்லி நல்ல பேரு வாங்கி இருப்பான் .  இந்தக்காலத்தில் கடிதம் எழுதும் பழக்கமே அழைந்துப்போய்விடுமோ என்று நினைக்கையில் நீங்கள் எழுதியது மனதுக்கு தெம்பாக இருந்தது 

  5. ரசித்துப் படித்துக் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!
    அன்புடன்
    திவாகர்

  6. மனைவிக்குப் பிடிக்காததை அவளிடம் சொல்லக்கூடாது, கேட்கக்கூடாது. இம்மாதிரி கடித்ம் மூலம் நம் குறையைச் ச்ற்று வெளிப்படுத்தலாம், மனைவி பார்க்காத வரை.
    என் சுய அனுபவத்தைப் பகிர்கிறேன். எனக்குக் கண்டந்திப்பிலி ரசம் மிகவும் பிடிக்கும், ஆனால் என் மனைவிக்கு அப்பெயரைக் கேட்டாலே அலர்ஜி. திருமணம் ஆன சில நாட்களுக்குப்பின் பிடிவாதம் பிடித்து அவளை திப்பிலி ரசம் பண்ண வைத்தேன். வேண்டாவெறுப்பாக அதனைச் செய்து அந்த பாத்திரத்தை என் முன் ’ணங்கென்று வைத்து “நீங்களே கொட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டுப் பிறந்தகம் சென்று விட்டாள். அதன்பின் கடிதம் மேல் கடிதம் எழுதி (அப்போதெல்லாம் செல்போன் – ஏன் லாண்ட்லைன் போன் கூட ஒரு அரிதான விஷயம் தான் – கிடையாது) அவளை தாஜா செய்து திரும்ப வரவழைத்தேன். அதன் பின் இன்று வரை கண்டந்திப்பிலி ரசம் கிடைக்காமல் நாக்கு செத்துக் கிடக்கிறேன்.
    அருமையான பகிர்வுக்கு நன்றி.
    அன்புடன்
    ஸம்பத்

  7. கண்டந்திப்பிலி ரசம் – சம்பத் சார் – இப்படியெல்லாம் கேட்டு வருடங்கள்  பல ஆகின்றன. என்றாலும் நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி.

    ரசித்துப் படித்தமைக்கும் நன்றி!
    அன்புடன்
    திவாகர்

Leave a Reply to ராமஸ்வாமி ஸம்பத்

Your email address will not be published. Required fields are marked *