திவாகர்

பழந்தமிழர் உணவுகளில் கிழங்கு வகைகள் அதிகம் உண்டு. அப்படிப்பட்ட கிழங்குவகைகளில் பனங்கிழங்கு வகைகள் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் முற்றிய பனங்கிழங்கு என்பது வாய்பிளந்து வரும்போது அதன் சுவை மிக அருமையாக இருக்குமாம். அப்படிப்பட்ட முற்றிய வாய் பிளந்த பனங்கிழங்குகளை விவசாயி ஒருவன் தன் அரசனுக்குக்கொடுப்பதற்காக அரச சபைக்கு வருகிறான். சரி, ஏதோ சுவையாக பனங்கிழங்கு வருகிறது.. வாங்கிப் போட்டுக்கொண்டு நேரம் கிடைக்கும்போது சாப்பிட்டுப் போகவேண்டியதுதானே..ஆனால் இந்த ராஜாதான் தமிழ் விரும்பும் ராஜா ஆயிற்றே.. விட்டு விடுவானா அப்படியே.. உடனே தன் கவிஞர் பெருமக்களைக் கூப்பிட்டு அந்த வாய் பிளந்த பனங்கிழங்குக்கு உவமையாக ஒரு தமிழ்க் கவிதை பாடச் சொல்லிக் கேட்டுள்ளான்.

இந்த புலவர் பெருமக்களே ஒரு மாதிரியானவர்கள் போலும். நக்கீரன் வழி வந்தவர்கள்.. அதுவும் தமிழ்ப் புலவர்களல்லவா. இவர்களுக்கென கற்பனை வந்து. இவர்களாக பாடினால்தான் உண்டு. ஒருவேளை சந்திரனை, சூரியனை, அரசிளங்குமரியின் கண்களை உவமையாகப் பாடு என்றால் சபை களை கட்டியிருக்குமோ என்னவோ.. . போயும் போயும் ஒரு விவசாயி கொண்டு வந்த வாயைப் பிளந்த பனங்கிழங்குக்கு உவமை வேண்டுமாம்…தம்மால் முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி அந்த சபையில் மௌனம் காத்தனர். மன்னனுக்கும் கோபம் வந்தது.. தனக்கென ஒரு கவிதை கேட்டால் பாடமாட்டாத இவர்களெல்லாம் என்ன புலவர்களோ.

சத்திமுத்திப் புலவர் என்பவர் சோழநாட்டைச் சேர்ந்தவர். பாவம் வறுமையில் வாழும் இந்த புலவர் தன் புலமைக்கு யாராவது பரிசு தரமாட்டார்களாவென ஊர் ஊராக திரிந்து களைப்பால் இந்த அரசன் ஆளும் நாட்டுக்கு வருகிறார். இரவு வேளை.. ஒரு வீட்டின் முற்றத்தில் படுக்க இடம் கிடைக்க அங்கே படுத்துக்கொண்டு இரவைக் கழிக்க நினைப்பவர் கண்களுக்குப் பக்கத்தில் ஒரு நாரைப் பறவையும் இவருக்கு துணையாக அந்த முற்றத்தில் இருப்பது தெரிகிறது. அந்த பறவையை தன் மனைவிக்கு தூது செல்லப் பணிக்கிறார். தன் வீட்டில் தனக்காகவும் தான் கொண்டுவருவதாக சொல்லியிருக்கும் செல்வத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லச் சொல்லிப் பாடுகிறார்.

’நாராய் நாராய் செங்கால் நாராய்;
பழம்படுபனையின் கிழங்கு பிளந்தென்னப்
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்’ என்று ஆரம்பித்து கவிதை படிக்கிறார்.

அவரது அதிர்ஷ்டம் அன்று இரவு சோதனைக்காக மாறு வேடத்தில் வந்திருந்த அந்த நாட்டு அரசனின் காதுகளிலேயே இந்தப் பாடல் ஒலிக்க.. (இனிமேல் கதை புரிந்திருக்குமே)

அது சரிதான், இந்தக் கதையை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வார வல்லமையில் ஒரு அழகான நாரையைப் பற்றிய பாடல் கண்டேன். திரு சச்சிதானந்தம் அவர்கள் தன் குறவன் பாட்டுப் பகுதியில் இந்தப் பாடலை வேறு விதமாக எழுதியிருந்ததும் அந்தப் பழைய நாரைப்பாடல் நினைவுக்கு வந்தது, குறவன் பாட்டு நான் ரசித்துப் படித்து வரும் பாடல்.

வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை

பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,

பனைங் கிழங்காய் நாரை தன்,

பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்!

இந்தப் பாடல்கள் முழுவதையும் படித்த பிறகு அவரைப் பாராட்டுவது நல்லது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் நடுவில் இந்த நாரை வந்து ‘காலத்தை ஏன் வீணடிக்கிறாய் என்று கேட்பது போல பட்டது. அதுவும் மிகவும் பிடித்த சத்திமுத்திப் புலவர் பாடிய பாடல் போல பட்டதால் அவரை மிகவும் பாராட்டி இந்த வார வல்லமையாளர் விருது வழங்குகிறோம். திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கடைசி பாரா: திரு வெ. கோபாலனின் பட்டினத்தார் பாடல்களிலிருந்து

மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. இவ்வார வல்லமையாளர் நண்பர் சச்சிதானந்தத்திற்கு வாழ்த்துக்கள்.
    பலாப்பழ நாரில் வண்டுகள் மாட்டிக்கொண்டு விடுபட வழியின்றிச் சிறகடிக்க, குரங்குகள் வந்து மனிதர்களைப் போலவே செயல்பட்டு அவற்றை விடுவித்தன என்று சித்தரித்த வரிகள் மிக அழகு.

  2. இவ்வார வல்லமையாளராய்த் தெரிவு செய்யப்பட்டுள்ள ‘குறவன் பாட்டு’ புகழ் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
    பட்டினத்தார் பாடல்களைச் சுவையோடு படைத்துக் ’கடைசி பாரா’வில் இடம்பெற்றுள்ள திரு. வெ. கோபாலன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

  3. வல்லமையாளர் விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    நாரையை புரட்டல் செய்து சாப்பிட்டு சுவையறியும் கூட்டத்திற்கு முன்பு, அதன் அழகை வர்ணித்த குறவன் பாட்டு கவிஞன் வாழ்க. அந்த அழகு மிகு கவிதையும், அதன் வர்ணனையும் அருமை.

    சிறப்பு பதிவர் கோபாலன் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  4. பவளக்கூர்வாய் நாரை
    வர்ணனைக்குப் பரிசு-
    வல்லமையாளர் சச்சிதானந்தம்..
    வாழ்த்துக்கள்…!

  5. இரண்டாவது முறையாக வல்லமையாளராக தேர்வு செய்து வாழ்த்துக்களை வழங்கியுள்ள திரு.திவாகர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தொடரினைத் தொடர்ந்து படித்து ஊக்கமளித்துப் பாராட்டி வரும் நண்பர்கள் திரு.தனுசு, திரு.செண்பக ஜெகதீசன், திருமதி.தேமொழி, திருமதி.மேகலா இராமமூர்த்தி, திருமதி.பார்வதி இராமச்சந்திரன், திரு.கோதண்டராமன் ஐயா, திரு.ஆலாசியம், மற்றும் ஆசிரியர். திருமதி.பவள சங்கரி அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.

    பட்டினத்தடிகளின் பாடல்களுக்கு எளிமையாக உரைசெய்து விளக்கி வரும் சிறப்பு பதிவர் திரு.கோபாலன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  6. குறவன் பாட்டுக்கு ஒரு பாராட்டு. வல்லமையாளராகத் தேர்வு பெற்றமைக்கு ஒரு பாராட்டு.

  7. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் திரு.சச்சிதானந்தம் அவர்களே!!.. தங்களது அற்புதமான தொடரைத் தொடர்ந்து படித்து, மகிழ்ந்து வருகிறேன்.. இருமுறை வல்லமையாளர் விருது பெற்ற தங்களது வல்லமை போற்றத்தக்கது!!.. 

    பட்டினத்தடிகளின் கவிதை வரிகளைத் தந்த திரு.கோபாலன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

Leave a Reply to தேமொழி

Your email address will not be published. Required fields are marked *