சு. ரவி

வணக்கம், வாழியநலம்,

 

அந்த ஒரு வருடம். விரதமிருந்த கார்த்திகை மாதத்தில் ஒருமாலைப்போதில், விரதநெறிகளுக்குப் பொருந்தாத நினைவுகளில் மனம் அலைபாய்ந்த நேரம்! எனையாளும் சபரிகிரீசனைத் தொழுது எழுந்த திருப்புகழ்…

படிக்க, (பாடிப் பார்க்க) ரசிக்க

ராகம்: பைரவி  ( பாடலும் By RAVI)

ஐயப்பன் திருப்புகழ் – 4

தனத்தனந்தன  தனதன தனதன

தனத்தனந்தன  தனதன தனதன

தனத்தனந்தன  தனதன தனதன  தனதான

மனத்துறங்கிய  நினைவுகள் அலையென

கதித்தெழுந்திட உறுதியும்   அனலினில்

உருக்குலைந்திடு  மெழுகென உருகிட                                     மதன்வீசும்

மலர்ச்சரம்பல மறுபடி  மறுபடி

துளைத்தநெஞ்சொடு துயர்தரு விளைவுகள்

சுமக்கவென்றெனை  நிலைகெட விடுவது                 முறையாமோ?

நினைப்பணிந்துநின் அழகிய பதமலர்

அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்

இருத்தி,என்பவ  வினையற  கதிபெற                                     அருள்தாராய்!

நிருத்தனம்பயில்  இறையவர் அருளிய

வரத்தையங்கவர் சிரமிசை முயலுமொர்

அரக்கனும்பட நிலவென  உருவொடு                           வருமாயன்

வனப்புபொங்கிய வதனமும் அதிலிரு

நிறைத்த அஞ்சனம்  எழுதிய விழிகளும்

நினைப்பழுந்திட அரனுறு மயலினில்                                    உருவாகி

வனத்தடங்களை  வருடிய  படிதவழ்

அலைக்கரங்களொ டுலவிடு நதிநுரை

கொழித்தபம்பையின்  எழுகரை  மிசைவளர்          மணிமார்பா!!

தனத்தனந்தன  தனதன தனவென

இடக்கை,திண்டிமம் ஒலிதர அழுதையில்

அரக்கிதுஞ்சிட அழகிய  நடமிடு                                                சபரீசா!!

தரித்தசந்தன மணமுற  இருசெவி

தமிழ்ப்பெருங்கவி  பருகிட சபரியில்

தவப்பிழம்பென வளரொளி யுடனமர்                       பெருமாளே!

(அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்

இருத்தி,என்பவ  வினையற கதிபெற அருள்தாராய்!)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *