எஸ் வி வேணுகோபாலன் 

mandela

ஆதிக்கத்தைப் புறம்தள்ளும் சிரிக்கும் கண்கள்
காலம் ஏற்றிக் கொடுத்த
வரைகோடுகளும் அழகு சேர்க்கும் முகம்
கறுப்பின் உரிமைக்காய்ப் போராடியே
வெளுத்துப் பூத்த தலை
எப்படி விடைகொடுப்போம் உயிர்ப்பின் உருவகத்திற்கு!

சிறைக்குள் விரிந்த வானத்தில்
பறந்து கொண்டிருந்த பறவையே!
இளமையின் கனவுகள், காதல், வேகம்
எந்த இயல்பான உணர்ச்சிக்காகவும்
இழக்கத் தயாரில்லை சுதந்திரத்தின் மாண்பை
விடுதலை நேரத்தில் வெளியேறிய பெருமூச்சில்
வெளிப்படவில்லை பழி தீர்க்கும் உணர்ச்சி
மன்னிப்பின் தீப்பொறியே சுடர்விட்டது
‘அவர் நாண நன்னயம் செய்தது’
உனது புதிய அரசியல் நாகரீகம்
எப்படி வழியனுப்புவோம் உயிர்த்துடிப்பின் உட்கருவை!

தொண்டு செய்து பழுத்த
எங்கள் இன்னொரு பழமே !
அதிகாரத்தின் இரண்டு முனைகளையும்
ருசித்தவன் நீ
ஆளுமையின் அடையாளம் அதிகாரத்தில் அல்ல,
கழற்றி உதறினாலும்
அது அகலாதது என்பதைக்
கற்றது உலகம் உன்னிடமிருந்து
எப்படி அஞ்சலி செலுத்துவோம் எங்கேயும் நிறைந்த வெளிச்சத்திற்கு !

கறுப்பா வெளுப்பா
ஆதிக்கக் குரலிடையே
வேறுபாடு இல்லை உனது அகராதியில்
சமத்துவ சமூகத்திற்கான உனது தீபம்
மாசற்று எரிகிறது மகத்தான குன்று ஒன்றின்மீது
பாட்டன் பூட்டனுக்கும்
கொள்ளுப் பேரன்களின் கொள்ளுப் பேரன்களுக்கும் கூட
தந்தையாக நிரந்தரமானது உனது பிம்பம்
உறுதியின் உயிர்மூச்சுக்கு எப்படி நடத்துவோம் இறுதி யாத்திரையை!

மண்டேலா ஓ எங்கள் கறுப்புக் குயிலே !
ஒடுக்கப்படுவோர்க்கு நெஞ்சுரம் புகட்டும் பெயர்ச்சொல்லே !
உலகளாவிய விடுதலை கீதத்தின் குறியீடே !
நம்பிக்கை கை விளக்கே!
அடங்க மறுத்தலை
அமைதியாகவே காட்டத் தெரிந்திருந்த அற்புதக் கனலே !
செவ்வணக்கம் தோழா உனது புகழார்ந்த வாழ்க்கைக்கு!

************

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மண்டேலா, ஓ எங்கள் கறுப்புக் குயிலே….

  1. உன்னத தலைவர் வரிசையில் இன்னுமொரு தலைவர், புகழுடல் எய்திய மண்டேலாவிற்கு வல்லமையின் சார்பில் நம் அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *